டந்த ஏப்ரல் 11 அன்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருச்சி நகரின் மையப் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி மறியல் போராட்டம் நடத்தினர். போலீசின் அச்சுறுத்தல்களை மீறி பல மணி நேரம் நீடித்தது இந்தப் போராட்டம்.

 

கல்லூரியை மூடிவிட்டால் போராட்டத்தை நிறுத்தி விடலாம், விடுமுறைக் காலம் என்றால் போராட்டம் நடக்காது என்ற அரசாங்க தந்திரங்களையெல்லாம் மீறி, சமூக ஊடகங்கள் வழியே தகவல் பரப்பி, சில மணி நேரங்களிலேயே நூற்றுக் கணக்கானவர்களைத் திரட்டிய அற்புதமான அந்தப் போராட்டம் போலீசின் ஆத்திரத்தைத் தூண்டியதில் வியப்பில்லை.

20 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் நேற்று அவர்களுக்கு பிணை உத்தரவு பெற்றனர். இன்று காலை 9 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வரும் மாணவர்களை வரவேற்க அவர்களது பெற்றோர்களும், மாணவர்களும், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர்களும் வழக்கறிஞர்களும், ம.க.இ.க. கலைக்குழுத் தோழர்களும் சிறை வாசலில் திரண்டிருக்கின்றனர்.

போலீசாரும் வந்திருக்கின்றனர். அந்த 20 மாணவர்களில் இரண்டு முஸ்லீம் மாணவர்கள் மீது மட்டும் (பீர் முகமது, முகமது அஜிம்) மீண்டும் ஒரு பொய்வழக்கு போட்டு, சிறை வாசலிலேயே கைது செய்வதற்குத் தயாராக நிற்கின்றனர். சதித்தனமான இந்த கைது நடவடிக்கைக்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது.

சாலை மறியல் செய்யும் மாணவர்கள்.

இந்து முஸ்லிம் கிறித்தவர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் மாணவ சமுதாயம் தமிழகத்தின் பொதுக்கோரிக்கைக்காக மோடி அரசை எதிர்த்துப் போராடுகிறது. இதனை மத ரீதியில் பிளவு படுத்துவதும் தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுமே பா.ஜ.க.- வின் நோக்கம். ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது பின் லாடன் படத்தை கொண்டு வந்தார்கள் என்று பொய்யாக ஒரு காட்சியை காட்டி ஓ.பி.எஸ். சட்ட மன்றத்தில் பேசியதை தமிழகம் மறக்கவில்லை.

அன்று, ‘’மாணவர்கள் தோழர் என்று யாரோடாவது பேசினால், போலீசுக்கு சொல்லுமாறு’’ அறிவிப்பு கொடுத்த கோவை நகர காவல் ஆணையர் அமல்ராஜையும் யாரும் மறக்கவில்லை. இன்று அவர்தான் திருச்சி நகர ஆணையர்.

தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியினர், தமிழ் மக்களின் போராட்டத்தை பிளவு படுத்தவும் திசை திருப்பவும் எத்தகைய சதி வேலைகளிலும் ஈடுபடுவார்கள். அதற்கு துணை நிற்பதற்கும் எடுபிடி வேலை செய்வதற்கும் எடப்பாடி அரசும், போலீசு உயர் அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள்.

இது ஏதோ இரண்டு மாணவர்களுக்கு நடக்கும் அநீதி அல்ல. தமிழகத்தைப் பிளவு படுத்த நடக்கும் சூழ்ச்சி. எல்லாக் கட்சியினரும் இதனைக் கண்டிக்கவேண்டும். மாணவர்கள் இதற்கு எதிராகப் போராடவேண்டும். இந்து மதவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாகத் திகழ வேண்டும்.

பீர்முகமது, முகமது அஜிமின் கைதுக்கு எதிராகப் போராடுவோம்.

– மருதையன்,
பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க