பெண்களுக்கு எதிரான வன்முறை : கொரோனாவைவிட பெரிய தொற்று!

கொரோனா இரண்டாம் அலை, ஊரடங்கு, வாழ்வாதாரம் இழப்பு, ஆக்சிஜன் தடுப்பூசி தட்டுப்பாடு என அடுத்தடுத்தப் பிரச்சனைகள் விரட்ட நாம் ஓடிக் கொண்டே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும் பலாத்காரமும் நிரந்தரமான தீர்வுவில்லாதப் பிரச்சனையாகவே நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது.

இவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான் அசாமில் “தற்கொலை” என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் வன்முறை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் படுகொலை.

படிக்க :
♦ “ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்ட அந்தச் சிறுமி அசாம் மாநிலம் ஆங்கிலோங் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினத்தவர். பி.ஜே.பி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த அசாம் மாநிலத்தில், இன்றும் பல பகுதிகளில் பழங்குடியின குழந்தைகளின் கல்விமுறையானது பக்கத்து ஊரில் ஏதாவது ஒரு பணக்கார உயர்சாதியினரின் வீட்டில் பணியாளராகச் சேர்ந்து அங்கேயே தங்கிப் படிக்கும் பின்தங்கிய நிலையில்தான் தொடர்ந்து வருகிறது.

2018-இல் இருந்து நான்கு ஆண்டுகளாக நாகோனில் ஒரு பார்ப்பன வீட்டில் வேலை செய்து வந்த தற்போது கொலை செய்யப்பட்ட அச்சிறுமி ஒரு முறைக்கூட தன் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படாமல் தொலைபேசியில் மட்டுமே வீட்டாருடன் பேசி வந்துள்ளார்.

திடீரென்று ஒரு நாள் அவள் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக வீட்டு முதலாளிகள் அச்சிறுமியின் வீட்டிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், இக்கதையை அச்சிறுமியின் குடும்பத்தாரும் அந்த பார்ப்பனர்களின் பக்கத்து வீட்டார்களும் நம்ப தயாராக இல்லை. அவள் பகலில் தீக்குளித்திருந்தால் அவளது அழுகை குரல் தங்களுக்கு கேட்டிருக்கும் என்றும், அந்த சிறுமியை முதல் நாள் இரவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு மறுநாள் உடலை அவளது முதலாளிகள் எரித்து விட்டனர் என்று கூறுவதோடு அவள் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் என்றும் சந்தேகிக்கின்றனர்.

மற்றொருபுறம் போலீசுதுறையும் தன் பங்கிற்கு தன்னால் முடிந்த அக்கிரமங்களை அரங்கேற்றியுள்ளது. மகளின் உடலை பார்க்க பெற்றோரை அனுமதிக்காது அலைக்கழித்தது, பிரேத பரிசோதனை அறிக்கையை தராமல் ‘சிறுமி கர்ப்பமாக இல்லை’ என்பதை மட்டும் வலியுறுத்தி, எப்போதும் போல ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே போலீசுதுறை செயல்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்களில் பரவும் வரை பிரேத பரிசோதனை முடிவை கூட தராமல் வைத்திருந்த போலீசுதுறையினர் இறுதியாக சிறுமியின் முதலாளிகளான மூவரைக் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற வெளியூருக்குச் சென்று படிக்கும் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை இயல்பானது என்ற நிலை உருவாகி, அவர்கள் கொல்லப்படும் போது மட்டுமே அது பேசுபொருளாக மாறும் அளவிற்கு அப்பகுதி மக்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். “எதனிலிருந்து மீண்டுவரப் படித்தோமோ, அதை செய்தால் தான் கல்வி கிடைக்கும்” என்ற பரிதாபமும் அச்சமும் மிகுந்த சூழலில்தான் அப்பகுதி குழந்தைகள் வளர்கின்றனர்.

சாதி மத வெறிக்கும் பெண்களுக்கு எதிரான செயல்களுக்கும் இருப்பிடமாக மாறிவரும் உத்தரப் பிரதேசத்தில் நாட்டையே உலுக்கிய ஹத்ராஸில் நடந்த சம்பவம் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு. தலித் இளம்பெண் ஒருவரை ஆதிக்க சாதியினர் நால்வர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவள் நாக்கை அறுத்து, முதுகெலும்பை உடைத்து, கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். சிகிச்சைப் பலனின்றி இறந்த அந்த பெண்ணின் உடலை பெற்றோருக்கே தெரியாமல் எடுத்து எறித்துவிட்டு “அவளுக்கு பாலியல் வல்லுறவே நடைபெறவில்லை” என்று பிரேத பரிசோதனை அறிக்கை தந்தது போலீசுதுறை. பிறகு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட போதுதான் ‘ஊர் உலகிற்கே தெரிந்த உண்மை அவர்கள் வாயிலிருந்தும் வந்தது’.

அதே ஹத்ராஸில் தன் பெண்ணிற்கு பாலியல் சீண்டல் தந்தவருக்கு எதிராக பதிவு செய்த வழக்கை திரும்ப பெறாததால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் அவனிஷ் ஷர்மா என்ற அப்பாவித் தந்தை.

இதுபோல், 2020 அக்டோபரில் ஒரு இளம்பெண்ணுக்கு நடந்த மிருகத்தனம் காஷ்மீர் பள்ளத்தாக்கையே உலுக்கும் வகையில் அமைந்தது. போதிய பாதுகாப்பு இல்லாமையால் காஷ்மீரில் பெண்களை கல்லூரிக்கே அனுப்ப முடியாத அவலநிலை அங்கு தலைவிரித்தாடுகின்றது.

கணவனின் விருப்பமின்றி வேலைக்குச் சென்றதால் பட்டபகலில் டெல்லியில் தன் கணவனாலேயே குத்தி கொள்ளப்பட்டார் நீலு என்ற இளம்பெண். இறந்த பிறகும் 25 முறை அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொண்டே இருந்தான் அந்த மிருகம். ஆனால், அவர்களின் அருகில் செல்லவோ கல்லெடுத்து எரியாவோ கூட யாரும் முற்படாததுதான் மிகவும் பரிதாபகரமானது.

அவ்வளவு ஏன்?  2019-ல் பொள்ளாச்சியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்ததல்லவா. அதன் பின்பு இன்றளவும் தமிழகத்தில் பல பகுதிகளில் பெண் சிசுக்கொலை அரங்கேறிக் கொண்டுதானே வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று சிசுக்கொலை நடந்துள்ளது.

இதில் கேலிக்கூத்தான விஷயம் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு பெண்கள் தான் காரணம் என்று அவர்கள் மீதே பழியை சுமத்துவது தான்.  பாலியல் அத்துமீறல்களுக்கு பெண்கள் அணியும் ஆடைதான் காரணம், ‘அந்தப் பொண்ண யாரு அந்த நேரத்துல வெளிய சுத்த சொன்னா’ என்று பல அவதூறுகள் அப்பெண்யே குற்றவாளியாக்குகிறது. இது அப்பட்டமான ஆணாதிக்க மனோநிலையன்றி வேறல்ல.

போதாததற்கு இச்சமூக பிரச்சனைகலெல்லாம் ஏதோ தனிநபர் பிரச்சனையாகவே பார்க்கப் படுகின்றது. ஆனால், தனிநபர் பிரச்சனை என்றே இங்கொன்று இல்லை என்பதனை இச்சமூகம் ஏற்க மறுக்கின்றது.

படிக்க :
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

பெண்களை படிக்க வைக்காமல் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்வது, பெண்களுக்கு பாதுகாப்பு தருவது, தங்கள் குடும்பத்திற்கு ஏற்ப அவர்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பது, பெண்களுக்கு தொலைபேசி தராமல் இருப்பதெல்லாம் பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல. இதெல்லாம் பெண்கள் மீது மேன்மேலும் தொடுக்கப்படும் அநீதியே.

பெண்களுக்கெதிரான இந்த பார்ப்பனிய – ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தூக்கியெறியும் திசையில் போராடாமல் இத்தகைய அநீதிகளுக்கு விடிவு காண முடியாது. .


துலிபா
செய்தி ஆதாரம் : caravanmagazine.in

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க