உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த பட்டியலின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உ.பியை ஆளும் சாமியார் ஆதித்யநாத்துக்கு, இந்தியாவை ஆளும் மோடி உள்ளிட்ட சங் பரிவாரங்களைத் தவிர அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. சாட்சியங்களை அழிக்கும் வகையில், அவசர அவசரமாக உயிரிழந்த பெண்ணின் உடலை ஆதித்யநாத் அரசு எரித்துவிட்டது. ராம ராஜ்ஜியத்தின் புனிதம் சிதைந்துவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக, ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த மாநில அரசு.
உ.பி. பாஜக அரசின் பொய் அறிக்கையை உண்மை என நிரூபிக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மால்வியா, பாதிக்கப்பட்ட வெட்டி – ஒட்டப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களாக பரப்பினார். இப்படி மூன்று வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண் பேசியுள்ளதை எழுத்து வடிவில் தந்துள்ள த வயர் இணையதளம். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவதை சட்டம் தடைசெய்துள்ளதால், அதிகாரப்பூர்வ செயல்முறை மூலம் அவரது பெற்றோர் அல்லது உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல், அந்த வீடியோக்களை சட்டப்பூர்வமாக ஊடகங்களால் காட்ட முடியாது. ஆனால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற ஆதித்யநாத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கூற்று மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ‘நர்கோ பகுப்பாய்வு’க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு அய்யோகித்தனமானது என்பதை அந்த ஆதாரங்கள் காட்டுகின்றன.
படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
இந்த வீடியோக்களை யார் படம்பிடித்தார்கள் அல்லது எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. குற்றம் நடந்த நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பற்றி அந்தப் பெண் பேசவில்லை என்ற ‘கருத்தை ’ உருவாக்க உலவ விடப்பட்டுள்ள மூன்று வீடியோக்களில் இரண்டு வீடியோக்களை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ட்விட்டரில் வெளியிட்டிருந்தாலும், ஹத்ராஸ் பெண்ணின் வாக்குமூலமும் வீடியோ உரையாடலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகின்றன . மூன்றாவது வீடியோ, பின்நாளில் மருத்துவமனை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் விவரிக்கும் குற்றத்தின் தன்மை குறித்தும் அதில் சந்தேகம் எழவில்லை.
செப்டம்பர் 22-ம் தேதி அந்த பெண், மாஜிஸ்திரேட் முன் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், நான்கு ஆண்களை தாக்குதல் நடத்தியவர்கள் என அடையாளம் காட்டியதாகவும் கூறினார். உ.பி. காவல்துறை அந்த அறிக்கையை குறைத்துக் காட்ட முயலும்வகையில், அவர் காவல்நிலையம் சென்ற செப்டம்பர் 14-ம் தேதி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை என்கிறது. இரண்டு வீடியோ ஆதாரங்கள் – செப்டம்பர் 14 அன்று சந்த்பா காவல் நிலையம் மற்றும் ஹத்ராஸில் உள்ள ஒரு உள்ளூர் கிளினிக்கில் எடுக்கப்பட்ட வீடியோவில் உ.பி. போலீசின் கூற்று முற்றிலும் முரணானதாக காட்டுகிறது.
வீடியோக்கள் திடீரெனத் தொடங்கி முடிவடைகின்றன என்பதும் இவை அந்தப் பெண் சொன்னவற்றின் ஒரு பகுதி, முழுமையான பதிவுகள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் வீடியோக்கள் தன்னிச்சையாக சுருக்கப்பட்டிருந்தாலும் அல்லது திருத்தப்பட்டிருந்தாலும் கூட, பாலியல் பலாத்காரத்தைப் பற்றி பேசியது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரின் பெயர்களை காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அந்தப் பெண் சொன்னதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. பாலியல் வன்முறை வழக்கில் செய்யப்பட்ட கட்டாய தடயவியல் பரிசோதனை கிடைக்கவில்லை. செப்டம்பர் 22 வரை இது நடத்தப்பட்டது – அதாவது குற்றம் நடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு – அந்த நேரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விந்தணு ஆதாரங்களை பாலியல் வன்முறைக்கு பிறகான ஒன்றிரண்டு நாட்களில் மட்டுமே பெற முடியும். மேலும், பாலியல் வன்முறை வழக்குகளில் விந்தணு ஆதாரம் கட்டாயமும் இல்லை.
பாஜகவின் அமித் மால்வியா வெளியிட்ட வெட்டி ஒட்டப்பட்ட முதல் வீடியோவில் அந்தப் பெண்ணிடம் யார் உன்னுடைய கழுத்தை நெறித்தார்கள் எனக் கேட்கப்படுகிறது. அவர், வலியுடன் துடித்துக்கொண்டே, ‘அவன் என்னை கட்டாயப்படுத்தினான், அவனை தடுத்தேன்’ என்கிறார்.
‘அவன் ஏன் உன் கழுத்தை நெறித்தான்?’
இந்த முறை சற்று தெளிவான குரலில், ‘அவன் என்மீது அழுத்திய போது, நான் தடுத்ததால்’
‘எதை வைத்து கழுத்தை நெறித்தான்?’
‘அவன் கைகளால்.’
‘வேறு எங்கெல்லாம் அடிபட்டிருக்கிறது? எனக் கேட்கிறது ஆண் குரல்
‘கழுத்து, தொண்டை…’ என சொல்லும்போது அவருடைய வலியை வீடியோ உணர்த்துகிறது.
அப்போது நாக்கை காட்டு என தாய் சொல்கிறார், பெண் நாக்கை நீட்டுகிறார்.
இரண்டாவது வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ‘சந்தீப் இதைச் செய்தான்’ என சொல்கிறார். ஏன் இதைச் செய்தான் எனக் கேட்கும்போது, நாங்கள் புல் சேகரிக்கப்போயிருந்தோம்…அப்போது அவன் என்னை அங்கு கொண்டு சென்றான். அவன் என்னிடம் கட்டாயப்படுத்தினான். நான் மறுத்தேன். என் கழுத்தை நெறித்தான்’ என்கிறார். ஏற்கனவே உங்களுக்கிடையே பிரச்சினை இருந்ததா என்ற கேள்விக்கு ஆம் என பதில் சொல்கிறார் அந்தப் பெண்.
மூன்றாவது வீடியோ அலிகர், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து பட்டை ஒன்றை அணிந்திருப்பது, வெண்டிலேடர் போன்ற ஒன்றை முகத்தில் அணிந்திருப்பதும் தெரிகிறது. எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்டபெண் ‘மேலும் ஒரு முறை’ என்கிறார். ஆண் குரல், ‘அவர்கள் மேலும் ஒரு முறை உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?’ எனக் கேட்கிறது.
‘ஆமாம்… அந்த சகோதரர்கள்’ என்கிறார். அதோடு அந்த வீடியோ முடிகிறது.
நியூஸ் லாண்ட்ரி இணையதளத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த பேட்டியில், தன் மகள் உடலில் உடையின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறித்தும், அவருடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது குறித்து கூறுகிறார்.
பாஜக அரசு எவ்வளவுதான் மூடி மறைக்கப்பார்த்தாலும் இது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை என்பது உறுதியாகியுள்ள நிலையில், கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் பாஜக தலைமையில் சங் பரிவார கும்பல், ஆதிக்கசாதி வெறிகும்பலுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறது. காஷ்மீர் ஆசிபா ரேப்பிஸ்டுகளுக்காக போராட்டம் நடத்திய இழிபுகழ் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என நிரூபிக்கும் வகையில் உலகமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு’ நீதிகேட்டு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !
பாதிக்கப்பட்ட குடும்பத்தை யாரும் அணுகிவிடக்கூடாது என்பதற்காக ஹத்ராஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதெல்லாம் மற்றவர்களுக்குத்தான், சங் பரிவாரங்களுக்கு இல்லை. உள்ளூர் பாஜக தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏவுமான ராஜ்வீர் பல்வான் ஏற்பாடு செய்திருந்த இந்தப் ‘போராட்டத்தில்’ பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ், கர்ணி சேனா, சில சாதி அமைப்புகள் பங்கேற்றன. கைதான ஆதிக்கசாதி கும்பலின் குடும்பத்தினர் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பாஜக பிரமுகர் வீட்டின் முன் கூடி ‘நீதி’ கேட்டு ‘போராடி’யுள்ளனர்.
அப்போது அவர் பேசியது, ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ள சிபிஐ விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. “உண்மை விசாரணையில் வெளிவரும். ஹத்ராஸில் இத்தகைய கொடூரமான வன்கொடுமை நடந்ததாக பொய்யாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் இந்த சம்பவம் குறித்த உண்மை வெளிப்படும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் போதைப்பொருள் பகுப்பாய்வு அல்லது பொய்-கண்டறிதல் சோதனையை எடுக்க மறுப்பது குறித்தும் அவர் ‘கவலை’ தெரிவித்தார்.
‘ரேப்’ஐ கொண்டாடும் மனுவின் புதல்வர்கள் அல்லவா? ரேப்பிஸ்டுகளுக்காகத்தான் போராடுவார்கள். என் மகள் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் எனக் கூறினார், அவர்களை போதைப்பொருள் பரிசோதனை செய்யச்சொல்வார்கள். ‘புல் அறுக்கும்போது தடுக்கி விழுந்து, பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது, நாக்கு தானாகவே வெட்டிக்கொண்டது’ என ராம ராஜ்ஜியத்தின் சிபிஐ அறிக்கை வெளியாகும்.
கலைமதி
நன்றி : த வயர், நியூஸ் லாண்ட்ரி