ன்று  திரும்பிய பக்கம் எங்கும் பாலியல் வன்புணர்வுச் செய்திகளே இந்திய ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக `கற்பழிப்பு` எனும் சொல் பல ஊடகங்களால் பயன்படுத்தபடும் போக்கு இன்றும்  காணப்படுகின்றது.

உண்மையில் Rape  என்பதன் பொருள் `சட்டத்திற்குப் புறம்பான புணர்வு` {unlawful sexual intercourse   }   என்பதேயாகும்.  எனவே கற்பழிப்பு என்ற சொல் இங்கு பொருந்தாதது மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்டவரையே மீண்டும் ஒரு முறை பாதிப்பது போலுள்ளது  . எடுத்துக்காட்டாக:  பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண்ணை “கற்பழிக்கப்பட்டவள்” எனவும்,  குற்றம் புரிந்த ஆணை அழைக்கும் போது “கற்பழித்தவன்” எனவும் அழைக்கின்றோம் எனக் கொண்டால்;  இங்கு இரு சொல்லாடல்களும் குறிப்பது பெண்ணின் கற்பு(?) அழிந்தது பற்றியதேயாகும்.  மேலும் பின்வரும் இரு செய்திகளைப் பாருங்கள்.

  1. `மூன்று வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை`
  2. `பசு மாட்டைக் கற்பழித்த கயவன் கைது`
    {அடையாளங்களை மறைப்பதற்காக செய்தித் தலைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன}

இங்கு முதலாவது செய்தியில் உலகினையே சரிவரப் புரிந்து கொள்ள முடியாத குழந்தைக்கு இத் தலைப்புப் பொருந்துமா! இரண்டாவது செய்தியில் பசு மாட்டுக்குக் கூட கற்பு வந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல, எந்தவொரு பாலியல் வல்லுறவினைக் குறிக்கவும் `கற்பழிப்பு` என்ற சொல் பொருந்தாது.

இதனை விளங்கிக் கொள்வதற்கு,  கற்பு என்ற தமிழ்ச் சொல்லின் பொருளினை விளங்கிக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

 கற்பு என்றால் என்ன?

கற்பு என்பது உடல் சார்ந்ததா அல்லது உள்ளம் சார்ந்ததா என்ற வாதம் பல காலமாக இருந்து வருகின்றது.  கற்பு என்ற சொல் தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
: (தொல்காப்பியம் கற்பியல் 140)

கற்பெனப்படுவது உடலியல் புணர்ச்சிக்காக ஆணையும் பெண்ணையும் பெரியோர் ஒருவருக்கொருவர் கொடுப்பதாகக் கொள்ளலாம்.  தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய  இளம்பூரணர் தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

எனவே தொல்காப்பியத்தின் படியே கற்பு என்பது மனதோடு தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதல்ல எனத் தெளிவாகின்றது.  இதே சொல்லுக்கு அடுத்து  பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உரை எழுதிய  நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரான இந்த உரை விளக்கத்திலும், கற்பு உடலுடன் தொடர்பு படவில்லை.  கற்பு என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் கொடுக்கும் விளக்கத்தினை முழுமையாக அறிய, `களவு` என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் என்ன விளக்கம் கொடுக்கின்றது எனப் பார்க்க வேண்டும்.

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுந் போழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதன் மறையோர் ஆறே”
: (செய்யுளியல், 178)

மேலுள்ள பாடலில் இயற்கையான புணர்ச்சியாக களவொழுக்கமே கூறப்படுகின்றது. எனவே இத்தகைய குடும்ப அமைப்புக்குப் புறம்பான ஒரு ஒழுக்கத்திலிருந்து, குடும்ப முறைக்கு மாறும் ஒரு செயல்முறையின் போதே `கற்பு` என்ற சொல் முதன் முதலில் தோன்றுகின்றது.

வேர்ச்சொல் விளக்கம் :-

கற்பு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் `கல்` (படி =learn) என்ற தொழிற் பெயரேயாகும் .  இன்னொரு வகையில், கற்பு என்ற சொல்லினை `கற்றதைப் பின்பற்று` என்றும் சொல்லலாம். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி குடும்பம் நடத்தக் கற்றுக்கொள்வதே கற்பு எனலாம்.  பின்வரும் கம்ப ராமாயணப் பாடலினைப் பாருங்கள்.

‘பெறுவதன்முன், உயிர் பிரிதல் காண்டியால்
மறுவறு கற்பினில் வையம் யாவையும்
அறுவதி னாயிரம் ஆண்டும், ஆண்டவன்
இறுவது கண்டு, அவற்கு இரங்கல் வேண்டுமோ?”
: {கம்பரா. கிளைகண். 72}.

இங்கு `மறுவறு கற்பினில்` என்பதன் பொருள் `குற்றமற்ற கல்வி கேள்விகளால்` என்றே பொருள் கொள்ளப்படுகிறது.  எனவே கற்பு என்பது குடும்ப வாழ்க்கை முறையினைக் கற்றுக் கொள்ளும் ஒரு ஒழுக்கமே என்பது தெளிவாகின்றது.

குடும்பம் என்ற அமைப்பு முறை மனிதனின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல் என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை யாதெனில் இந்த அமைப்பு முறை பெண்களின் சமத்துவத்தினைப் பாதித்தது என்பதுமாகும். எனவேதான் பிற்காலத்தில் கற்பு பற்றிய அறிவுரைகள் யாவுமே பெருமளவுக்குப் பெண்களை நோக்கியே இருந்தது. அதே வேளை பெண்களுக்குக் குழந்தைகளைப் பேணுவதில் குடும்ப முறை ஓரளவுக்கு உதவியாகவுமிருந்தது, ஏனெனில் குடும்ப அமைப்புத் தோன்ற முன்னர் குழந்தைகளைப் பேணும் பொறுப்பு முற்று முழுதாகப் பெண்களையே சார்ந்து இருந்தது (பொருள் சார்ந்த பொறுப்பும் பெண்களையே சார்ந்து இருந்தது). இந்த நிலையில் குடும்ப அமைப்பு முறையினை ஏற்படுத்துவதில் பெண்களின் விருப்பம் ஒப்பீட்டு ரீதியில் ஆண்களைக் காட்டிலும்  அதிகமாகவிருந்தது {இதனைப் பல சங்க காலப் பாடல்களில் காணலாம்}. இதனாலேயே பின்வரும் குறள் உட்படப் பல குறள்களில் பெண்களுக்கே `கற்பு`  வலியுறுத்தப்படுகின்றது.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்”
-(குறள் 54)

இந்த குடும்ப அமைப்பு முறையே பிற்பட்ட இடைக் காலத்தில் வைதீக மதக் கொள்கைகளுடன் இணைந்து பெண்களின் கல்வி, பொருளியல் உரிமைகளைப் பறித்து வீட்டிற்குள் முடக்கியது.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !

கற்பு என்பதற்கு இடைக்கால ஔவையார் கொன்றை வேந்தனில் சிறப்பான விளக்கத்தினை வழங்கியிருந்தார் {இந்த ஔவை சங்ககாலப் புலவரான ஔவையிலிருந்து வேறுபட்டவர்}.

“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை”
{கற்பு எனப்படுவது யாதெனில் முன் பின் முரண்படாது வாக்கு மாறாது நடந்து கொள்ளுதலாகும்}

இதற்கு அடுத்த வரியான   ” காவல் தானே பாவையர்க்கு அழகு`”என்ற வரி கூட, கொடுத்த `சொற்களைக் காவல் காப்பது பெண்களுக்கு  அழகு` என்ற பொருளிலேயே இடம்  பெறுகின்றது.

எனவேதான் பழந்தமிழ் நூல்கள் எதுவுமே கற்பு என்பதனையும் கன்னித்தன்மை இழத்தல் என்பதனையும் எங்குமே தொடர்புபடுத்தவில்லை என அடித்துக் கூறலாம்.  மிகவும் பிற்பட்ட காலத்திலேயே இவ்வாறு கற்பினைப் பெண்களின் உடலுடன் தொடர்புபடுத்தி, ஆணாதிக்க சமூகம் புரளி கிளப்பிவிட்டது.  இதனை முறியடிக்கவே பாரதியார் பின்வரும் பாடலினைப் பாடியிருப்பார்.

“கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”
(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)

முடிவுரை :-

கற்பு என்ற சொல்லானது மனதுடன் தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதன்று. எனவே கற்பழிப்பு என்றால் குறித்த ஆளினால் தனக்குத் தானே மேற்கொள்ள முடியுமே தவிரப் பிறரால் அது முடியாது ; ஏனெனில் கற்பு மனதிலேயே உண்டு.  எனவே பிறரால் மேற்கொள்ளப்படும் வன்புணர்வினை;  பாலியல் வல்லுறவு / வன்புணர்வு / பாலியல் வன்முறை போன்ற சொற்களால் அழைக்க வேண்டுமே தவிர, `கற்பழிப்பு` என்ற சொல்லால் அன்று. இது மொழி சார்ந்த வேண்டுகோள் மட்டுமன்றி, சமூக அறம் சார்ந்த வேண்டுகோளுமாகும்.

வி.இ.குகநாதன்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க