ஆர்.எஸ்.எஸ்.-இன் தமிழக உருவமான இந்து முன்னணியை தமிழகத்தில் உருவாக்கியவரும், தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து கிரிமினல்களுக்கும், ரவுடிக் கும்பல்களுக்கும் தனது அமைப்பில் அரசியல் அடைக்கலம் கொடுத்தவருமான ராமகோபாலன் கடந்த 30-09-2020 அன்று கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

தமிழகத்தில் 1980-ம் ஆண்டு மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மக்கள் இசுலாமிய மதத்திற்கு மாறவிருப்பதாக அறிவித்தனர். அபோது அங்கு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை நைச்சியமாக சமாதானம் ஆர்.எஸ்.எஸ் முயற்சித்தது.

தமிழகத்தில் கம்யூனிச இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் உருவாக்கி வைத்திருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபை மீறி இங்கு தனது ஆதிக்கத்தை செலுத்த முடியாத ஆர்.எஸ்.எஸ். கும்பல், வெவ்வெறு வகைகளில் தனது கால்களைப் பரப்ப முயற்சித்தது.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு ஏற்ற வகையில் தமிழ் பெயரில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புதான் இந்து முன்னணி. 1940-கள் முதல் ஆர்.எஸ்.எஸ்.இல் தீவிரமாகச் செயல்பட்டுவந்த இராம. கோபாலன் 1980-ம் ஆண்டில் இந்து முன்னணியை உருவாக்கினார்.

இந்து முன்னணி உருவாக்கப்பட்ட பின்னர், அந்தப் பெயரிலேயே தமிழகத்தில் பல இடங்களில் கலவரங்களை  முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ். கும்பல். 1982-ல் ராமநாதபுரம், மண்டைக்காடு ஆகிய பகுதிகளில் பல்வேறு கலவரங்களை முன்னின்று நடத்தியது.

மண்டைக்காட்டில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சிறு சிறு முரண்பாட்டையும் அங்கிருந்தே ஊதிப் பெருக்கி அங்கு அதுவரை உடன்பிறப்பாய் பழகிவந்த இந்து – கிறிஸ்தவ மக்களிடையே பெரும் கலவரமாய் உருவாக்கியது. 90-களின் இறுதியில் நடந்த கோவை கலவரத்திற்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டது இந்து முன்னணிக் கும்பல்தான்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரத்தின் முகப்பு.

1993-ம் ஆண்டு ம.க.இ.க. தலைமையில் திருவரங்கம் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமம் கிராமமாக கூட்டம் போட்டு,  “நக்சல்கள் பிடியில் நமது இந்து கோவில்கள் சென்று விடும். இந்துக்களாகிய நாம் இதனைத் தடுக்க வேண்டும்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி.

ம.க.இ.க-விற்கு பாகிஸ்தானில் இருந்து ரூபாய் 90 இலட்சம் பணம் கைமாறியதாக அவதூறு பரப்பியது இந்து முன்னணி கும்பல். அதையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் ஆதரவுடன் கருவறையில் நுழைந்து இந்தக் கும்பலின் முகத்தில் கரியைப் பூசினர் தோழர்கள்.

நாடு முழுவதும் இந்து பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ். தாம் மேற்கொண்ட மதக் கலவரங்களை தமிழகத்தில் அரங்கேற்ற முயற்சித்தது இந்து முன்னணி. அதில் கணிசமான வெற்றியும் பெற்றது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பெரும் இயக்கமாக எடுத்துச் சென்று, தமிழகம் முழுவதும் இந்து முசுலீம் கலவரத்தைத் தூண்டியது இந்து முன்னணி. பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது இசுலாமியர்கள் செல்லும் பகுதி வழியாக எடுத்துச் செல்வது, இசுலாமிய மதத்திற்கு எதிராக கோசமிடுவது போன்ற வேலைகளின் மூலமாக இந்து – முசுலீம் மக்களிடையே பரஸ்பர வெறுப்பை விதைத்தது.

கடந்த 2010-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ‘இந்து’ மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி  வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மதுரை பட்டர்கள் வழக்குப் பதிவு செய்த சமயத்தில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, கருவறை நுழைவுப் போராட்டத்தின் பிதாமகனாகிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மாலையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களைக் கடுமையாகத் தாக்கியது இந்து முன்னணிக் கும்பல். போராடியவர்கள் யாரும் முசுலீம் அல்லது கிறிஸ்தவ மாணவர்கள் அல்ல; அனைவரும் இந்துக்கள்தான்.  இந்துக் கோவிலின் கருவறைக்குள் நுழைய ‘இந்து’ முறைப்படி சமஸ்கிருத மற்றும் தமிழ் மந்திரங்களையும் கற்றறிந்த ‘இந்து’ மாணவர்களை ‘இந்து முன்னணி’ ஏன் தாக்க வேண்டும் ? யார் இந்துக்கள் என்பதும் யாருக்காக இந்த “இந்து முன்னணி” என்பதும் அன்று பல்லிளித்தது.

படிக்க :
♦ முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
♦ அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்

இத்தகைய சனாதன ‘இந்து’ கொள்கைகளுக்காக இந்தக் கிரிமினல் கும்பலுடன் இணைவதற்கு எந்த ‘இந்து பக்தர்களும்’ தயாராக இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் புகலிடமாக இந்து முன்னணி செயல்பட்டது.

அத்தகைய ரவுடிகளின் புகலிடத்தில், முன்விரோதம், கள்ளக் காதல், கடன் தொல்லை, ரியல் எஸ்டேட் தகாராறு ஆகியவற்றிற்காக படுகொலைகளும், தற்கொலைகளும் நிகழ்வது இயல்புதானே. அத்தகைய படுகொலைகளை, ‘இந்து’த் தலைவர்கள் மீதான தாக்குதலாகக் காட்டி பல்வேறு கலவரங்களை கடந்த பத்தாண்டுகளில் நடத்தியுள்ளது. இதற்கு “பிரியாணி அண்டா” இழிபுகழ் கோவைக் கலவரமே சாட்சி.

அதுமட்டுமல்ல, 2017-ம் ஆண்டு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரியலூரில் தலித் சிறுமி நந்தினி மீதான கொடூரமாக பாலியல் வன்முறை மற்றும் கொலை கிரிமினல் இந்து முன்னணியின் செயலாளர்தான். இது குறித்து விரிவாக துப்புதுலக்கி அம்பலப்படுத்தியது வினவு.

♦ நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
♦ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டி பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், இந்து – கிறிஸ்தவ – முசுலீம் மக்களுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைத்ததில் இந்து முன்னணியின் பங்கு முதன்மையானது. அத்தகைய அமைப்பின் நிறுவனர் இறந்ததில் நமக்கும் வருத்தம் தான்.

அன்னார் தமிழகத்தில் நடத்திய கலவரங்களுக்கு, மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் முன்னர் நிரந்தர பெயில் வாங்கி தப்பித்துக் கொண்டாரே என்பது தான் நமது வருத்தம் எல்லாம் !

சரண்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க