லகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் எழுச்சிகள் நட்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எழுச்சிகள் ஏகாதிபத்தியங்களால் தீனி போட்டு வளர்க்கப்படும் என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்பட்டாலும், பல இடங்களில் அரசின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளாகவே தன்னியல்பாக நடக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் பற்றியெறிந்த போராட்டங்கள் தான்.

ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன்னியல்பாக எழுச்சி கொள்ளும் மக்களை தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்த முடியாத பகைமை இருப்பதை உணரச் செய்வது என்பது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக செய்ய முடியும். இந்த சமூக அமைப்புமுறை குறித்த சமூக விஞ்ஞானப் பார்வையையும் உணர்வையும் பெருந்திரளான மக்களிடம் ஏற்படுத்தும் போது மட்டுமே, இந்த எழுச்சிகள் ஒரு முழுமையான விஞ்ஞானப் பூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்லும்.

ரசியாவில் தன்னியல்பான எழுச்சிகளின் பின்னால் வால்பிடித்துச் சென்ற பொருளாதாரவாதிகளுக்கு தோழர் லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் பதிலளித்துள்ளார். அன்றைய சமூக ஜனநாயகவாதிகளிடம் இருந்த, “தன்னியல்பான எழுச்சிகளை வழிபடும் போக்கை” கண்டித்து அவர் எழுதியுள்ள பகுதியை இங்கே தருகிறோம் !

– வினவு

மக்களின் தன்னியல்பும் – சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்

 அ. தன்னியல்பான எழுச்சியின் தொடக்கம் 

 1890-களின் மத்தியிலே மார்க்ஸியத்தின் தத்துவங்களில் எவ்வளவு முழுமையாக ருஷ்யாவின் படித்த இளைஞர்கள் சிந்தனையைப் புதைத்திருந்தார்கள் என்று முந்தைய அத்தியாயத்தில் சுட்டிக்காட்டினோம். அதே காலத்தில் 1896-ல் நடந்த புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிற்போரைத் தொடர்ந்து வந்த வேலை நிறுத்தங்கள் அதேபோன்ற பொதுவான தன்மையைப் பெற்றன. அவை ருஷ்யா முழுவதிலும் பரவி, புதிதாக விழிப்புற்றுவரும் மக்கள் இயக்கத்தின் ஆழத்தைத் தெளிவாகக் காட்டின. ஆகவே, நாம் ”தன்னியல்பான அம்சத்தைப்” பற்றிப் பேசுவதானால் இந்த வேலை நிறுத்த இயக்கத்தைத்தான் தன்னியல்பானதாக முதலில் கருதவேண்டும். ஆனால் தன்னியல்பில் எத்தனையோ வகை உண்டு.

ருஷ்யாவில் 1870-களிலும் 1860-களிலும் (19-ம் நூற்றாண்டின் முற்பாதியிலுங்கூட) வேலை நிறுத்தங்கள் நடந்தன; அவற்றைத் தொடர்ந்து ”தன்னியல்பாக” இயந்திரங்களை உடைப்பது போன்றவையும் நடந்தன. இந்தக் “கலவரங்களோடு” ஒப்பிட்டால் 1890-களின் வேலை நிறுத்தங்களைக்கூட ”உணர்வுப் பூர்வமானவையாக” வர்ணிக்கக் கூடும், அந்த அளவுக்கு அவை அக்காலத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் சாதித்த முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. ”தன்னியல்பான அம்சம்” என்பது கருவடிவத்திலே இருக்கும் உணர்வைக் காட்டுவது தவிர வேறில்லை என்று இது புலப்படுத்துகிறது.

படிக்க :
♦ பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
♦ கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?

ஆதிநிலைக் கலவரங்களுங்கூட ஓரளவுக்கு உணர்வு விழிப்படைவதை வெளியிடுகிறது. தொழிலாளிகள் தம்மை ஒடுக்கிவருகிற அமைப்புமுறை நிலையானது என்கிற நீடூழிக்கால நம்பிக்கையை இழந்துவந்தார்கள், அதிகாரிகளுக்கு அடிமைபோல் பணிந்து போவதைத் திட்டவட்டமாகக் கைவிட்டுக் கூட்டான எதிர்ப்பின் அவசியத்தை – புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள் என்று சொல்ல மாட்டேன் – உணர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஆனபோதிலும், இவை – போராட்டத்தின் இயல்பிலே இருந்ததைவிட நிராசையையும் வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியையும் வெளியிடும் வெடிப்புகளின் இயல்பிலே இருந்தன.

1890-களின் வேலை நிறுத்தங்கள் எவ்வளவோ பெரிதான உணர்வின் மின்வெட்டுகளை வெளிப்படுத்தின. திட்டவட்டமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன, சரியான நேரம் பார்த்து வேலை நிறுத்தம் துவங்கப்பட்டது, வேறு இடங்களிலிருந்து அறியப்பெற்ற வழக்குகளும் எடுத்துக்காட்டுகளும் விவாதிக்கப்பட்டன என்றவாறு. கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன. ஆனால் முறைமையுள்ள வேலை நிறுத்தங்கள் கரு வடிவத்திலுள்ள, கரு வடிவத்தில் மட்டுமே உள்ள, வர்க்கப் போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலை நிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களே, இன்னமும் சமூக-ஜனநாயகப் போராட்டங்களாக இல்லை. அவை தொழிலாளிகள் முதலாளிகளிடையே மூண்டு வரும் பகைமைகளைக் குறித்தன; ஆனால் தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத பகைமை இருப்பதைத் தொழிலாளிகள் உணர்ந்திருக்கவில்லை, உணரமுடியவுமில்லை – அதாவது, அவர்களின் உணர்வு இன்னமும் சமூக ஜனநாயகவாத உணர்வாக இல்லை. இந்த அர்த்தத்திலே, 1890-களின் – வேலை நிறுத்தங்களை ”கலவரங்களோடு” ஒப்பிடும்போது மாபெரும் முன்னேற்றத்தைக் குறித்த போதிலும் வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன.

பீட்டர்ஸ்புர்க் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே–அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபு மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது.1*

ஆனால் சோஷலிஸத்தின் தத்துவம் மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட தத்துவங்களிலிருந்து வளர்ந்ததாகும்; சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்ஸும் எங்கெல்ஸும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள். அதேபோல், ருஷ்யாவில், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான வளர்ச்சியோடன்றி முற்றிலும் சுதந்தரமாகவே சமூக-ஜனநாயகவாதத்தின் தத்துவார்த்த சித்தாந்தம் உதித்தது; புரட்சிகரமான சோஷலிஸ்டுப் படிப்பாளிப்பகுதியினரிடையே ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் ஒரு இயல்பான, தவிர்க்க வியலாத விளைவாக அது உதித்தது. விவாதத்திலிருக்கும் காலப்பகுதியான 1890-களின் நடுவில் இந்தச் சித்தாந்தம் ”உழைப்பாளர் விடுதலைக்” குழுவின் முழுதும் வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடல்லாமல் ருஷ்யாவில் பெரும்பான்மையான புரட்சிகரமான இளைஞர்களைத் தன் பக்கம் ஏற்கெனவே கவர்ந்திருந்தது.

எனவே, உழைக்கும் மக்களின் தன்னியல்பான விழிப்பும், அவர்கள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கும் உணர்வு பூர்வமான போராட்டத்துக்கும் விழித்தெழுதலும், சமூக-ஜனநாயகத் தத்துவத்தை ஆயுதமாகப்பூண்டு தொழிலாளர் பக்கம் வரத் துடிக்கும் புரட்சிகரமான ஓர் இளைஞர் கூட்டமும் ஒருங்கே இருந்தன. இது சம்பந்தமாக, அடிக்கடி மறக்கப்படுகிற (ஒப்பு நோக்கில் அரிதாக அறியப்பட்டுள்ள) ஒரு விஷயத்தைக் கூறுவது குறிப்பாக முக்கியமாகும் : அதாவது அக்காலப்பகுதியின்  முந்திய சமூக-ஜனநாயகவாதிகள் ஆர்வத்தோடு பொருளாதாரக் கிளர்ச்சி நடத்தி வந்தார்கள் என்றபோதிலும் (அன்று கையெழுத்துப்படியிலேயே இருந்து வந்த கிளர்ச்சி பற்றி எனும் சிறு நூலில் இருக்கும் உண்மையிலே பயனுள்ள குறிப்புகள் இந்த நடவடிக்கைக்கு வழிகாட்டி வந்தன) அது ஒன்றே தமது பணி என்று அவர்கள் கருத வில்லை.

படிக்க :
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

மாறாக, துவக்கத்திலிருந்தே பொதுவாக மிகவும் தொலைவீச்சுள்ள வரலாற்றுப் பணிகளையும், குறிப்பாக எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பணியையும் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத்துக்குக் கொடுத்திருந்தார்கள். இப்படித்தான், 1895 இறுதியில், செயின்ட் பீட்டர்ஸ்புர்க் சமூக-ஜனநாயகவாதிகளின் குழு (இது “பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழுவை”2* – நிறுவியது) ரபோச்சியே தேலோ என்கிற பெயர் கொண்ட பத்திரிகையின் முதல் இதழைத் தயாரித்தது. அவ்விதழ் அச்சேறத் தயாராயிருந்த சமயத்தில் 1895 டிசம்பர் 8-ம் நாள் இரவில் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனதோலி அலெக்ஸேயெவிச் வானேயிவ் 3* வீட்டை போலீஸார் சோதனையிட்டு அதைக் கைப்பற்றினர். எனவே ரபோச்சியே தேலோவின் முதல் இதழ் உலகத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கவேயில்லை. இவ்விதழின் தலையங்கக் கட்டுரை (ஒரு வேளை முப்பதாண்டுகள் கழித்து யாராவது ஒரு ருஸ்காயா ஸ்டரினா4* இதை போலீஸ் பிரிவின் நூற்காப்பிடத்தில் தேடியெடுக்கலாம்)

ருஷ்யாவில் பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளை உருவரை செய்து அரசியல் சுதந்தரம் சாதித்துக் கொள்வதைத் தலைமையில் வைத்தது. அவ்விதழில் ‘நமது அமைச்சர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்கிற தலைப்புள்ள கட்டுரையும் இருந்தது; அது துவக்க நிலைக் கல்விக் குழுக்களைப் போலீஸ் நசுக்குவதைப் பற்றியதாகும். மேலும், செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கிலிருந்தும் ருஷ்யாவின் வேறு சில பகுதிகளிலிருந்தும் வந்த கொஞ்சம் கடிதப் போக்குவரத்தும் (எடுத்துக்காட்டாக, யாரஸ்லாவல் மாநிலத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது5* பற்றி ஒரு கடிதம்) இருந்தது. இதுவே 1890-களின் ருஷ்ய சமூக – ஜனநாயகவாதிகளின் ‘முதல் முயற்சி”.

என் நினைப்பு தவறில்லை என்றால் அது வெறுமே ஒரு உள்ளூர்ப் பத்திரிகையாகவோ, ”பொருளாதாரவாத’ பத்திரிகையாகவோ இருக்கவில்லை; எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் புரட்சி இயக்கத்தோடு வேலை நிறுத்த இயக்கத்தை ஒன்று படுத்துவதையும் சீர்திருத்த எதிர்ப்புள்ள பிற்போக்கான கொள்கையால் ஒடுக்கப்படும் அனைவரையும் சமூக-ஜன நாயகவாதத்தின் பக்கம் கொண்டுவந்து விடுவதையும் குறிக்கோளாக வைத்திருந்தது. அக்காலத்திய இயக்கத்தின் நிலையைப்பற்றிக் கடுகளவேனும் அறிந்திருந்த யாரும் சந்தேகிக்க முடியாது.

லெனின்

தலைநகரின் தொழிலாளர்களும் புரட்சிகரமான படிப்பாளிப்பகுதியினரும் ஆர்வத்தோடு இப்பத்திரிகையை வரவேற்றிருப்பார்கள், விரிவான விற்பனை கிடைத்திருக்கும் என்று. அந்த முயற்சியின் தோல்வி வெறுமே காட்டியது இதுதான்: அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளுக்குப் புரட்சிகரமான அனுபவமும் நடைமுறைப் பயிற்சியும் இல்லாத காரணத்தால் அவர்கள் அன்றைய உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமற்போயினர். செயின்ட் பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்6* விஷயத்திலும், குறிப்பாக ரபோச்சயா கஸேத்தா, 1898 வசந்தகாலத்திலே நிறுவப்பெற்ற ருஷ்யச் சமூக-ஜன நாயகவாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கை7* ஆகியவற்றின் விஷயத்திலும் இதையே சொல்லித் தீரவேண்டும்.

இந்த ஆயத்தமின்மைக்காக அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளைப் பழிக்கக் கனவிலும் நினைக்க மாட்டோம், உண்மைதான். ஆனால் அந்த இயக்கத்தின் அனுபவத்திலிருந்து பயன்பெறும் பொருட்டும் அதிலிருந்து நடைமுறைக்கான படிப்பினைகளை எடுத்துக்கொள்ளும் பொருட்டும் அந்தந்தக் குறைபாட்டுக்குரிய காரணங்களையும் குறிபொருளையும் நாம் முழு நிறைவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, 1895-98 காலப்பகுதியிலே தீவிரமாகப் பணியாற்றிவந்த சமூக-ஜனநாயகவாதிகளில் ஒரு பகுதியினர் (ஒருக்கால் பெரும்பான்மையினராகவும் இருக்கலாம்) அக்காலத்திலேயே, “தன்னியல்பான” இயக்கத்தின் துவக்கத்திலேயே, ஒரு மிக விரிவான வேலைத்திட்டத்தையும் செயல் துடிப்புள்ள தாக்குமுறைக் கொள்கையையும் முன்வைப்பது சாத்தியம் என்று நியாயமாகவே கருதினார்கள் என்கிற விஷயத்தை நிலை நாட்டுவது மிக முக்கியம்.8*

புரட்சியாளர்களில் பெரும்பான்மையினருக்குப் பயிற்சியின்மை முற்றும் இயல்பான நிகழ்வுத்தோற்றமே, அது எந்தக் குறிப்பான அச்சங்களையும் எழுப்பியிருக்கமுடியாது. பணிகளைச் சரிவர வரையறுத்தவுடன், அவற்றை நிறைவேற்றத் திரும்பத்திரும்ப முயல்வதற்கான சக்தி மட்டும் இருந்திருந்தால், தற்காலிகமான தோல்விகள் அரைகுறையான துரதிர்ஷ்டங்களே. புரட்சி அனுபவமும் அமைப்புத் திறனும் பெறக்கூடிய விஷயங்களே, — அவற்றைப் பெறுவதற்கு விருப்பம் இருந்தால் போதும், குறைபாடுகளைக் கண்டு கொண்டால் போதும்; புரட்சிகரமான நடவடிக்கையில், குறைபாடுகளைக் கண்டு கொள்வதே அவற்றைப் போக்கிக்கொள்வதில் பாதிக்குமேல் வந்து விடுவதாகும்.

ஆனால், இந்த உணர்வு மங்கத் தொடங்கிய போது (மேலே குறிப்பிட்ட குழுக்களின் உறுப்பினர்களிடையே இவ்வுணர்வு கொழுந்துவிட்டபடியே இருந்தது), குறைகளை நிறைகளாகக் கருதத் தயாராயுள்ள, தன்னியல்பின் முன் தாம் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவதற்கு ஒரு தத்துவார்த்த அடிப்படையைப் புனைவதற்குக் கூடி முயல்கிற, பேர்வழிகளும்–சமூக-ஜனநாயகவாதப் பத்திரிகைகளும் கூட தோன்றியபோது, அரைகுறையான துரதிர்ஷ்டமாக இருந்தது முழு துரதிர்ஷ்டமாகிவிட்டது. இந்தப் போக்கிலிருந்து முடிவுகள் எடுக்கும் தருணம் வந்துவிட்டது; இதன் உள்ளடக்கம் ”பொருளாதாரவாதம்” என்று பிழையாகவும் மிகக் குறுகலாகவும் இனங்குறிக்கப்படுகிறது.

*_*_*_*

குறிப்புகள் :

1* சிலர் நினைக்கிற மாதிரி, தொழிற்சங்கவாதம் ”அரசியலை” முற்றாக விலக்குகிறதில்லை. தொழிற்சங்கங்கள் எப்போதுமே கொஞ்சம் அரசியல் (ஆனால் சமூக-ஜனநாயகவாத வகைப்பட்டதல்ல) கிளர்ச்சியும் போராட்டமும் நடத்திவந்துள்ளன. தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக-ஜனநாயகவாத அரசியலுக்கும் உள்ள வேற்றுமையை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.

2* ”பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழு”  – 1895 இலையுதிர்காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்புர்க் நகரத்தில் நிறுவப்பெற்ற ஒரு சட்டவிரோதமான அமைப்பு. வி. இ. லெனின், அ. அ. வானேயிவ், பி. க. ஸபரோழெட்ஸ், கி. ம. கிரிழிழனோவ் ஸ்கி, ந. க. குருப்ஸ்கயா, யூ. ஓ. மார்த்தவ் முதலியோர் இதை நிறுவினர். ”போராட்டக் குழு” சுமார் இருபது மார்க்ஸியத் தொழிலாளர் வட்டங்களை இணைத்திருந்தது. அதன் பணிகள் அனைத்தும் மத்தியத்துவம், கண்டிப்பான கட்டுப்பாடு கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு நடந்தன. பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டத்தையும் ஜாராட்சியை எதிர்த்து நடக்கும் அரசியல் போராட்டத்தையும் இணைத்த வகையிலே அது தொழிலாளி வர்க்க இயக்கத்தை வழிநடத்தி வந்தது . லெனின் சொன்னதுபோல, இக்குழு தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான கட்சிக்குக் கருவாக இருந்தது.

1895 டிஸம்பரில், லெனினையும் பிற “போராட்டக் குழுத்” தலைவர்களையும் ஜார் அரசாங்கம் சிறைப்படுத்தி சைபிரியாவுக்கு நாடுகடத்தியது. “பொருளாதாரவாதக் ”கருத்துக்களை ஆதரித்துப் பேசிய ‘இளைஞர்கள்” என்று சொல்லப்பட்டவர்கள் வசம் குழுத் தலைமை சிக்கியது.

3* அ. அ. வானேயிவ் காசநோயால் 1899-ல் கிழக்கு சைபீரியாவில் காலமானார்; நாடு கடத்தப்படுமுன் சிறையில் தனிக்கொட்டடியில் வைக்கப்பட்டிருந்தபோது இந்நோய்க்கு ஆளானார். எனவே தான் மேற்சொன்ன செய்தியை வெளியிடலாம் என்று நினைத்தோம். அந்தச் செய்தி உண்மையே என்று உத்தரவாதமளிக்கிறோம், ஏனெனில் அ. அ. வானேயி வுடன் நெருங்கி நேரடியாகப் பழகிவந்த நபர்களிடமிருந்து கிடைக்கிற செய்தி அது.

4*  “ருஸ்காயா ஸ்டரினா” (ருஷ்யப் பழங்காலம்) – வரலாற்று விஷயங்களைக் கவனிக்கும் மாதப் பத்திரிகை. 1870 முதல் 1918 வரை செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கில் வெளியிடப்பட்டது. ருஷ்ய அரசுக்கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முக்கியமானவர்களின் நினைவுகள், நாட்குறிப்பேடுகள், குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றையும் பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் பெரிதும் (கவனித்து) அதில் வெளியிடப்பட்டன.

5* 1895 ஏப்ரல் 27 (மே 9)-ல் யாரஸ்லாவல் நகரிலிருந்த ஒரு பெரிய நெசவாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது. ஆலை நிர்வாகம் புகுத்திய புதிய கூலி விகிதங்கள் கூலியைக் குறைத்ததால் 4000-க்கு மேலான தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் கொடியமுறையில் நசுக்கப்பட்டது.  இவ்வேலை நிறுத்தத்தைப் பற்றி லெனின் ஒரு கட்டுரை எழுதினார், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை.

6* ”பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்” (செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளர் பத்திரிகை) -”செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்டக் குழுவின்” பத்திரிகை. இரண்டு இதழ்கள் வெளிவந்தன; முதல் இதழ் ருஷ்யாவில் 1897 பிப்ரவரியிலும் (ஜனவரி என்று போடப்பட்டிருந்தது), இரண்டாம் இதழ் ஜினீவாவில் 1897 செப்டம்பரிலும் வெளியிடப்பட்டன.

7* முதலாம் ரு. ச. ஜ. தொ. கட்சிக் காங்கிரஸின் ஆணைக்கிணங்கவும் ரு. ச. ஜ. தொ. க. மத்தியக் குழுவின் சார்பாகவும் 1898-ல் வெளியிடப்பட்ட “ருஷ்ய சமூக-ஜனநாயக வாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கையை” இது குறிக்கிறது. அரசியல் சுதந்தரத்துக்காகவும் யதேச்சாதிகாரமுறையைத் தூக்கியெறிவதற்காகவும் போராடுவதை ருஷ்ய சமூக-ஜனநாயகவாதத்தின் முதன்மையான பணியாக இவ்வறிக்கை வகுத்துத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுப் பணிகளுடன் அரசியல் போராட்டத்தை இணைத்தது.

8* “1890-களின் இறுதியாண்டுகளிலே இருந்த சமூக-ஜனநாயகவாதிகளின் நடவடிக்கைகள் பால் பகைமைக் கண்ணோட்டத்தை இஸ்க்ரா எடுத்துக்கொள்கிறதிலே, சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான நிலைமைகள் அக்காலத்தில் இல்லாதிருந்ததை அது புறக்கணிக்கிறது” என்று பொருளாதாரவாதிகள்” தமது “ருஷ்ய சமூக-ஜன நாயகவாதப் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதத்தில் (இஸ்க்ரா , இதழ் 12) கூறுகின்றனர். “நிலைமைகள் இல்லை” எனும் வன்கூற்று உண்மைக்கு நேர் மாறானது என்று மேலே சொன்ன விஷயங்கள் காட்டுகின்றன. 1890-களின் இறுதியில் மட்டுமின்றி மத்தியிலுங்கூட சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான எல்லா நிலைமைகளும் – தலைவர்களின் போதிய பயிற்சி நீங்கலாக மற்றெல்லா நிலைமைகளும் இருந்தன, சித்தாந்திகளும் தலைவர்களுமாகிய நமக்குப் போதிய பயிற்சி இருக்கவில்லை என்று மனந்திறந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக – “நிலைமைகள் இல்லை” என்பதின் மீது, எந்தச் சித்தாந்தியாலும் இயக்கத்தைத் திசை திருப்பிவிட முடியாத பாதையை நிர்ணயிக்கிற பொருளாயத சூழ்நிலையின் பாதிப்பின் மீது, முற்றாகப் பழி சுமத்திவிட “பொருளாதாரவாதிகள் முயல்கிறார்கள். இது தன்னியல்பின் முன் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவது தவிர வேறென்ன”, சித்தாந்திகள் தமது சொந்த குறைபாடுகளின் மீது மோகம் கொண்டிருப்பது தவிர வேறென்ன?

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க