சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

“எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”

சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

பெத்னதா (”ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.

“இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”

பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (”பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.

“இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.

“ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். ”எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”

விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.

கட்டாயத் தானியக் கொள்முதல்* பற்றியும், விவசாயிகளின் கடிய நிலைமை பற்றியும் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. லெனினது சொந்த அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டன. விவசாயிகள் கடிதங்களின் பொழிப்பு வீணாகப் போகவில்லை என்று நான் விரைவில் உறுதி கொண்டேன். கட்சியின் 10-வது காங்கிரசில் லெனின் சமர்ப்பித்த கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக உணவுப் பொருள் வரி விதிப்பது பற்றிய அறிக்கையைக் கேட்ட நான் விவசாயிகளின் கடிதங்களை லெனின் இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.

அதிலிருந்து பெத்னதாவின் ஒழுங்கான அறிக்கைகள் தமக்குக் கிட்ட வேண்டும் என்று விளதீமிர் இலீச் கோரினார். விளதீமிர் இலீச் நுணுக்கி நுணுக்கி எழுதிய ஒரு துண்டுக் காகிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை அப்படியே கீழே தருகிறேன்.

“26.1.1922.
தோழர் கர்பீன்ஸ்கி!

பின்கண்டவை பற்றி எனக்குச் சுருக்கமாக (அதிகபட்சம் 2-3 பக்கங்கள்) எழுத மாட்டீர்களா? விவசாயிகளிடமிருந்து பெத்னதா பத்திரிகைக்கு எத்தனை கடிதங்கள் வந்திருக்கின்றன? முக்கியமாக (குறிப்பாக, முக்கியமாக), புதியதாக இக்கடிதங்களில் என்ன இருக்கிறது? அவர்கள் மனநிலை எப்படி? முக்கியமான பிரச்னை என்ன?

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை (அடுத்தது 15.3.1922) இத்தகைய கடிதங்கள் நீங்கள் எழுத முடியுமா?

அ. கடிதங்களின் சராசரி எண்ணிக்கை
ஆ. மனநிலை
இ. மிக முக்கியமான பிரச்சனை.

கம்யூனிச வாழ்த்துக்களுடன்,
லெனின்”

அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த விளதீமிர் இலீச் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார். தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

 

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க விசேஷ தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்து விட்டு பதட்டத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, விளதீமிர் இலீச்சைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவிவிட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார்.

“தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!”

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்படையும் விளதீமிர் இலீச் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

விளதீமிர் இலீச் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்ததும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும் கூட விளதீமில் இலீச் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

படிக்க : டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

வரவேற்பறையில் ஒருநாள் பின்கண்ட சம்பவம் நடந்தது. வந்தவர்களில் ஒருவர் திடீரென்று குதித்தெழுந்து மிகவும் பதற்றத்துடன் சொன்னார்:

“தோழர் லெனின், இதெல்லாம் என்ன?! அவர்கள் எங்களை முன் போலவே கசக்கிப் பிழிகிறார்கள், கசக்கிப் பிழிகிறார்கள்!”

விளதீமிர் இலீச்சுக்கு ஒன்றும் பிரியவில்லை.

“இவான் ரதியோனவிச், அமைதி கொள்ளுங்கள். என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் என்பது யார்?”

“யார் என்கிறீர்களா? எங்கள் கிராம சோவியத்துக் காரர்கள்! அநியாய வரிகள் தண்டி எங்களை வாட்டி வதைக்கிறார்கள்!”

“அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”

“நாங்கள்தான். வேறு யார்?…”

“வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”

“அப்படி முடியுமா என்ன?”

“முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் விஷயம், இவான் ரதியோனவிச்!”

இத்தகைய உரையாடல்களுக்குப் பின்பு அவசியமான சந்தர்ப்பங்களில் உடனடியாக ஆணைகள் பிறப்பித்தார் விளதீமிர் இலீச். தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நடந்த உரையாடல்களில் கிடைத்த தகவல்கள் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகத் திகழ்ந்திருக்கின்றன.

– கர்பீன்ஸ்கி
“லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” – நூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க