ரலாற்றை ஆக்குபவர்கள் மாபெரும் தனிநபர்களே, அதிலும் முதன்மையாக அதிகாரப் பதவியில் உள்ள அரசர்களும் மந்திரிகளுமே என்ற கருத்தை திரளான பாமரமக்கள் போலவே ஆதர்சவாத வரலாற்று அறிஞர்களும் ஆதரித்து வந்தார்கள். இன்றும் ஆதரித்து வருகிறார்கள். கீழிருந்து அதிகாரத்தின் உச்சத்துக்கு உயர்ந்துவிட்ட மாண்புமிக்க புரட்சி வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப் பட்டால், இந்தத் தலைவர்களின் மேதை, ஆற்றல், தந்திரம், திறமை இவையே புரட்சிக்குப் பெருமளவு காரணம் என்று கூறவும் அவர்கள் தயங்குவதில்லை.

மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு எவரது விருப்பாற்றலையும் சாராத மாபெரும் சமூக நிகழ்முறைகளையே காரணமாகக் காட்டுகிறார்கள். இந்த நிகழ்முறைகள் முடிவாகப் பார்க்கையில் வர்க்கங்களின் போராட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களையே பொருத்திருக்கின்றன என்றும் வர்க்கங்களின் ஒப்பு வலிமையும் அவை அடைய விரும்பும் குறிக்கோள்களும் எந்த குறித்த காலத்திலும் சமூக உற்பத்தியில் அவை ஆற்றும் பங்கினுள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.

மார்க்ஸீயம் மாபெரும் தனிநபர்களுக்கு வரலாற்றில் எவ்விதப் பங்கையும் அளிக்க மறுக்கிறது மாபெரும் தனி நபர்கள் நிலவுவதையே அது ஏற்கவில்லை என்று இந்த விளக்கம் காரணமாகச் சிலர் முடிவு கட்டிவிடுகிறார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

மார்க்ஸியத்தின் பெயரே ஒரு மாபெரும் மனிதரின் பெயரிலிய தோன்றியுள்ளது. அப்படியிருக்க மார்க்சியம் மாபெரும் மனிதர்கள் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது விசித்திரமா இருக்கும் அல்லவா?

இல்லை, மார்க்ஸிய வரலாறும் இன்னும் சிறப்பாக மார்க்சிய நடைமுறையும் தனிநபர்பால் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. எந்த நபரையும் மிகச் சிறு பொறுப்புள்ள பதவியில் கூட அமர்த்துவதற்கு முன்னால் நமது கட்சியின் மத்தியக் கமிட்டி அவரது ஆற்றல், ஒழுங்கமைப்புத் திறனின் தன்மை ஆகியவற்றின் நோக்கிலிருந்து அவருடைய தனித்தன்மையை மிக ஆழ்ந்த கவனத்துடன் ஆராய்கிறது.

மார்க்சியவாதிகள் தற்செயல் நிகழ்ச்சிகளை நம்புபவர்கள் அல்ல. புரட்சியைச் செயற்கையாக உண்டாக்க முடியாது. அது தானாகவே தோன்ற வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதே சமயம், புரட்சி ஒழுங்கமைப்பு அற்றதாக, தாறுமாறானதாக இருக்க முடியும், அல்லது திட்டமிட்ட தடத்தில் பெருமளவுக்கு இயக்கப்படுவதாகவும், அதில் பங்கு கொள்வோர் எல்லாருடையவும் அறிவினால் இல்லாவிடினும் அதை ஒழுங்கமைக்கும் முன்னணியினரின் அறிவினால் ஒளியுறுத்தப்படுவதாகவும் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். புரட்சிகர வர்க்கம் என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றல், இதில்தான் அடங்கியுள்ளது.

அதாவது அது ஒழுங்மைப்புக்குச் சிறப்பாக இசைகிறது, தன் இடையிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களை அதிக எளிதாகத் தோற்று விக்கிறது. உதாரணமாகக் குடியானவர்களிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் தனியாகப்பிரித்துக் காட்டுவது இந்த ஆற்றல்தான்.

பாட்டாளிவர்க்கமே ஒழுங்கமைக்கும் வர்க்கம் ஆகும். முதலில் அது நாட்டை வென்று பெற வேண்டியிருந்தது, இப்போது அதைச் சீரமைக்க வேண்டியிருக்கிறது…. இத்தகைய வேலையை ஒரு தலைமை அலுவலகம் இன்றி அதனால் நிறைவேற்ற முடியாது. எல்லாப் புறங்களிலுமிருந்து வரும் விவரங்களைத் திரட்டி தொகுப்பதும் பரஸ்பரம் இசைவுள்ள உத்தரவுகளை எல்லாப் புறங்களுக்கும் அனுப்புவதும் இந்த அலுவலகத்தின் பணி. எல்லா மிக மதிப்புள்ள அனுபவங்களும் இங்கே திரட்டப்படும். செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் இங்கே தெளிவாக வரையறுக்கப்படும். இன்னும் விவரமாகப் பார்த்தால், தவிர்க்க இயலாதவாறு பல பணியாளர்கள் கொண்ட இந்த அலுவலகத்தை முழுமையாக முறைப்படுத்துவதற்கு ஒன்றிணைக்கும்

அறிவும் ஒன்றிணைக்கும் உளத்திண்மையும் தேவை. இத்தகைய அறிவுக்குச் சட்டப்பூர்வமாக அதிகாரம் எதுவும், அரசன் அல்லது சர்வாதிகாரிக்கு உள்ளது போன்ற அதிகாரம் எதுவும் இராது. ஆனால் வளமான அனுபவம், தன்னடக்கம், ஊடுருவி நோக்கும் அறிவுக் கூர்மை ஆகியவை காரணமாகக் கிடைத்துள்ள மதிப்பு அதற்கு இருக்கும்.

மக்களது புரட்சி அதுவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டிருந்த ஜன சமுதாயத்தின் பெருத்த படிவுகளை மேல்மட்டத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த மக்களுக்கிடையே உயர் மேதை வாய்ந்த குறித்த தொகை நபர்கள் தேர்வு முறையில் மேல் வருவார்கள் என்று இயல்பாகவே எதிர்பார்க்கலாம்.

இத்துடன் புரட்சி இயக்கம் இன்னும் மறைமுகமாகவே இருக்கும்போது, அதற்குத் தலைமை வகிப்பவர்கள் மிகச் சிறந்த செயல்முறையான, வெல்லமுடியாத துணிவு வாய்ந்தவர்கள்; மறைமுக நடவடிக்கைகள், கடும் போராட்டம் என்னும் கண்டிப்பான பள்ளியில் பயின்று கீழிருந்து மேலே உயர்ந்தவர்கள் என்பதையும் சேர்த்துக்கொண்டீர்களானால் விரிவான புரட்சி பெருத்தத தலைவர்களைத் தோற்றுவிக்காமல் ஏன் இருக்க முடியாது என்பதற்கு உரிய விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை. எனவே, இத்தகைய புரட்சிக்கு, உயர்ந்த அரசியல் மேதையும் அசாதாரண உறுதி வாய்ந்த இயல்பும் கொண்டவர்கள் தலைமை தாங்குவார்கள் என்பதை முன்னுரைக்க முடிந்திருக்கும்.

நமது கட்சியின் தலைவராக ஒரு மாண்புயர் மனிதர் விளங்குவது தற்செயல் அல்ல. இது இவ்வாறு நிகழ்ந்தே தீர வேண்டியிருந்தது. அவரது மேதைகளின் பெருமையும் அவரது விருப்பாற்றலின் அசையா உறுதியும் நமது புரட்சியின் விரிவையும் பேரளவையும், சிறப்பாக அதன் பிரதான இயக்கு சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் முன்கண்டறியாப் பண்புகளையுமே பிரதிபலிக்கின்றன.

அ. லுனச்சார்ஸ்க்கிய்

(குறிப்பு : அ.வ. லுனச்சார்ஸ்க்கிய் (1875 – 1933) – அகாதமிசியன், சோவியத் பண்பாட்டுத் துறையில் சிறந்த செயலாற்றியவர். தமது 17-வது வயதில் சோசல் – டெமாக்ரடிக் ஸ்தாபனத்தில் சேர்ந்தார். ‘வ்பெர்யோத்’ (மன்னே), ‘பரோலித்தாரிய்’ (பாட்டாளி) என்னும் போல்ஷ்விக் செய்தித் தாள்களில் வி.இ. லெனினது தலைமையில் உடன் உழைத்தார். அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் ருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிஸக் குடியரசின் கல்வித்துறை மக்கள் கமிஸாராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

லுனச்சார்ஸ்க்கிய் தலைசிறந்த சொற்பொழிவாளர், கட்டுரையாளர். ருஷ்ய, மேற்கு ஐரோப்பிய இலக்கிய வரலாற்று ஆசிரியர். பல நாடக நூல்களும் சோவியத் இலக்கியம் பற்றிய சிறந்த விமர்சன நூல்களும் இயற்றியவர்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க