விடுமுறையோ முடியப் போகிறது. தோழர் லெனினோ, விரைவில் கடமையாற்ற மீண்டும் வரப்போகிறார். இந்த நேரத்தில் “தோழர் லெனினுடைய விடுமுறையைப் பற்றி” எழுத வேண்டுமா? இது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. இதுமட்டுமல்ல; என்னுடைய மனப்பதிவுகளோ அநேகம்; அவையோ மதிப்பிடற்கரியவை. பிராவ்தாவின் ஆசிரியர் குழு கேட்பதைப்போல இவற்றை ஒரு சுருக்கமான குறிப்பாக எழுதுவது முற்றிலும் விவேகமானதல்ல. இருந்தாலும், நான் என்ன செய்வது? ஆசிரியர்கள் வலியுறுத்துவதால், நான் எழுதத்தான் வேண்டும்.

ஓய்வுறக்கமில்லாமல், நாட்கணக்கில் தொடர்ந்து போர் முனைகளில் செயல்பட்ட பழம்பெரும் போராளிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. போர்முனையிலிருந்து திரும்ப வரும் அவர்கள் நிழல்களைப் போன்ற தோற்றத்துடன் இருப்பார்கள்; மரம் சாய்ந்தது போல விழுவார்கள். அப்படியே நாள் முழுவதும் தூங்கி விடுவார்கள். புத்துணர்வு பெற்று, புதிய போர்களுக்கான ஆர்வத்துடன் எழுவார்கள். என்னசெய்வது? போரிடாமல் அவர்களால் “வாழ முடியாதே!” ஆறு வார காலமாகப் பார்க்காமல் இருந்துவிட்டு, ஜூலை மாதத்தில் லெனினைப் பார்க்கப்போனபோது, அவரைப் பற்றி எனது மனதில் எழுந்த எண்ணமே இதுதான். களைப்பூட்டும் இடையறாத போர்களுக்குப் பின்னர், ஏதோ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, அந்த இளைப்பாறலால் புத்துணர்வு பெற்ற பழம்பெரும் போராளியைப் போல அவர் தோன்றினார். அவர் புத்துணர்வோடும்

நோயிலிருந்து மீண்டவராகவும் காணப்பட்டார். ஆனால், மிதமிஞ்சிய உழைப்பாளனுடைய, அளவற்ற களைப்பினுடைய ரேகைகள் அவரது முகத்தில் காணப்பட்டன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

“பத்திரிகைகளைப் படிக்க எனக்கு அனுமதியில்லை. நான் அரசியல் பேசவே கூடாதாம். மேசை மீது ஒரு துண்டுக் காகிதம் இருந்தால்கூட, நான் அதைப் பார்க்காமல் எச்சரிக்கையுடன் தவிர்த்து விடுகிறேன். ஒருவேளை அது பத்திரிகையாக இருந்தால் என்னவாகும்? கட்டுப்பாட்டை மீறுவதற்கு அது வழிவகுத்து விடுமோ?” என்று தோழர் லெனின் வஞ்சகப் புகழ்ச்சியாகக் கூறினார்.

நானோ மனம்விட்டு சிரித்தேன். கட்டுப்பாட்டுக்கு அவர் கீழ் படிவதைப் பற்றி வானவளாவப் புகழ்ந்தேன். அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசாமல் இருப்பதாவது! இது ஆகிற காரியமா? இதைப் புரிந்து கொள்ள முடியாத டாக்டர்களைப் பற்றி நாங்கள் சிரித்துச் சிரித்துப் பேசினோம்.

தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம், கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர்போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. சோசலிஸ்டு புரட்சியாளர்கள் மீதான வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது? ஜெனோவாவிலும் தி ஹேக்-இலும் என்ன நடக்கிறது? அறுவடைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? தொழில்கள் எந்த நிலையில் உள்ளன? நிதி நிலைமை என்ன? – இந்தக் கேள்விகள் எல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் வந்தன. தன்னுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அவர் அவசரப்படவில்லை. நிகழ்ச்சிகளோடு தொடர்பிழந்து பின்தங்கி விட்டதாக அவர் அங்கலாய்க்கிறார், குறைப்பட்டுக் கொள்கிறார். உரையாடலில் பெருமளவு கேள்விகளையே அவர் அடுக்குகிறார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறார். நல்ல அறுவடைக்கான வாய்ப்புகள் இருப்பதை அறிந்து மிகவும் உற்சாகமடைகிறார்.

ஒரு மாதம் கழித்து, அவரை மீண்டும் பார்த்தபோது, முற்றிலும் மாறுபட்டக் காட்சியை நான் கண்டேன். இம்முறை புத்தகக் கட்டுகளும் பத்திரிகைகளும் அவரைச் சுற்றி குவிந்திருந்தன. (ஆசை தீரப் படிக்கவும் அரசியல் பேசவும் அவருக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.) சோர்வு, மிதமிஞ்சிய உழைப்பு ஆகியவற்றின்  அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வேலை செய்வதாக தணியாத தாகத்தின் காரணமாக எழும் பதற்றம் அவரிடம் இல்லை. இதற்கு முன்னர் இருந்ததுபோல ”பட்டினி” கிடப்பவராக அவர் தெரியவில்லை. அமைதியும் தன்னம்பிக்கையும் முழுமையாகத் திரும்பிவிட்டன. இவர்தான் நம்முடைய பழைய லெனின். தன்னுடன் பேசுபவரை ஊடுருவிப் பார்க்கிறார்; கருத்தூன்றி ஆராய்கிறார்…

இந்தமுறை எங்களுடைய உரையாடல் உற்சாகமாகவும் விறு விறுப்பாகவும் இருந்தது.

உள்நாட்டு விவகாரங்கள்… அறுவடை நிலைமை… தொழில்களின் நிலை…. அன்னிய நாணயங்களுடன் ரூபிளின் பறிமாற்ற மதிப்பு விகிதம்… வரவு செலவுத் திட்டம்… இப்படிப் பலவற்றையும் பற்றிப் பேசினோம்.

”சிரமமிக்க காலம்தான். ஆனால், படுமோசமான நிலைமை போய்விட்டது. நல்ல அறுவடை கிடைக்கும். நிலைமையில் அடிப்படையான மாற்றத்தை இது ஏற்படுத்திவிடும். இதையடுத்து, தொழில் துறையிலும் நிதிநிலைமையிலும் முன்னேற்றம் ஏற்பட்டே தீரும். இப்போது செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அரசின் அனாவசிய செலவுகளைக் குறைத்து, அதன் மீதுள்ள பளுவை அகற்ற வேண்டும். இதற்காக நம்முடைய நிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் சிக்கனத்தை மேற்கொண்டு, அவற்றின் நிலையை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்த விசயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கஷ்ட நிலையிலிருந்து நாம் மீளுவோம். ஆம், நிச்சயமாக நாம் மீண்டே தீருவோம். இது உறுதி” என்றார் லெனின்.

அயல்நாட்டு விவகாரங்கள்… ஏகாதிபத்தியங்களின் சோவியத் எதிர்ப்பு கூட்டணி…. பிரான்சின் நடத்தை… பிரிட்டனும் ஜெர்மனியும்…. அமெரிக்காவின் பங்கு பாத்திரம்…. இவற்றைப் பேசினோம்.

லெனின் சொன்னார். ”அவர்கள் (ஏகாதிபத்தியவாதிகள்) பேராசை பிடித்தவர்கள். அவர்களோ ஒருவரை ஒருவர் மனமார வெறுக்கின்றனர். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்வார்கள். நாம் அவசரப்படத் தேவையில்லை. நமது பாதை தெளிவானது, நிச்சயமானது; நாம் அமைதியையே வேண்டுகிறோம். இதற்கான ஒப்பந்தத்துக்காக நாம் வாதிடுகிறோம். ஆனால் நாம் அடிமைப்படுத்தலையும் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையும் எதிர்க்கிறோம். நமது கப்பலின் சுக்கானை உறுதியாகப் பற்றி நின்று, நமது சொந்த வழியில் நாம் முன்னேறிச்செல்லு 20

வோம். நாம் முகத்துதிக்கு இரையாக மாட்டோம். அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

சோசலிஸ்டு புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் – சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான இவ்விரு தரப்பினரின் வெறி கொண்ட கிளர்ச்சி / எதிர்ப்பு….. இவை பற்றியும் நாங்கள் பேசினோம்.

”ஆம், சோவியத் ரஷ்யாவை இழிவுபடுத்துவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். சோவியத் ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்கள் துணை போகின்றனர், வழிசெய்கின்றனர். முதலாளித்துவப் அவர்கள் விழுந்துவிட்டனர்; படுபாதாளத்தில் வீழந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தடுமாறி தடுமாறி கெட்டொழியட்டும். தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எப்போதோ செத்தொழிந்து விட்டனர்…” என்றார் லெனின்.

வெண் காவலர்களின் பத்திரிகைகள்… நாட்டைவிட்டு ஓடிப் போனவர்கள்… லெனின் இறந்து விட்டார்; முழு விவரங்கள் இதோ என்று கூறி எண்ணற்ற இழிந்த கட்டுக்கதைகளைப் பரப்புகின்றனர்….

புன்னகைத்தபடியே லெனின் குறிப்பிட்டார்: ”புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.”

செப்டம்பர் 15, 1922

தோழர் லெனினுடைய விடுமுறை
பிராவ்தாவுக்கான படத்துடன் கூடிய இணைப்பு
எண். 215, செப்டம்பர் 24,1922

ஸ்டாலின்படைப்புகள்,
ரஷ்யப்பதிப்பு ,
தொகுதி 5..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க