உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்!
ஆசான் ஸ்டாலினின் 146வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்!!
மார்க்சியவாதி, தன்நிகரற்ற பாட்டாளி வர்க்க போராளி, லெனினியத்தை விஞ்ஞானமாக வகுத்தளித்த கோட்பாட்டாளார், சோசலிச சமூகத்தை வழி நடத்திட அதற்கான பொருளாதார கொள்கைகளை வகுத்தளித்த மேதை, இரண்டாம் உலகப் போரில் பாசிச ஹிட்லரை வீழ்த்தி உலகைக் காத்தவர், பாட்டாளி வர்க்க கட்சிக்குரிய நடைமுறை இலக்கணமாகத் திகழ்ந்தவர், காலனிய நாடுகளின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்தவர், உலகெங்கும் உள்ள உள்ள ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் போர்க் குரல்; அவர்தான் ஆசான் ஸ்டாலின்..
“என்னிடம் படித்த நூறு இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்” என சுவாமி விவேகானந்தர் கூறியதாகச் சொல்வதுண்டு. இன்றைக்கு நமது நாட்டில் அரசுப் பள்ளிகளை விடுங்கள், வேலம்மாள், DAV, பத்ம சேஷாத்திரி உள்ளிட்ட சர்வதேச பள்ளிகள் பல உள்ளன. அதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தவர்கள். உயர் கல்வி பெற்றவர்கள் பெருகிக் கொண்டே போனாலும், நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வாழ முடியாத நாடாக இந்தியா உள்ளது. மறுபுறம் அம்பானி, அதானி, அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சூறையாடச் சுதந்திரம் கொண்ட இந்தியாவாக இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள, சுரண்டல் அடக்கு முறையிலிருந்து நாட்டு மக்களை விடுதலை செய்ய ஆசான் ஸ்டாலினின் புரட்சிகர வாழ்க்கை நமக்குப் பாடமாகவும் அவரின் போதனைகள் புரட்சிகர நடைமுறைக்கு உந்து சக்தியாக இருப்பதாலும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அன்றைய ஜாரிச ரஷ்யா எழுத்தறிவு அற்ற விவசாய நாடாக இருந்தது. மக்கள் சொல்லன்னா துயரத்திலிருந்தனர். மகத்தான நவம்பர் சோசலிச புரட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. ஆசான் ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டம் வழியே, ஒரு நாட்டில் முதலாளிகள் இல்லாமலேயே விவசாயிகளும் – தொழிலாளர்களும் இதர உழைக்கும் மக்களும் இணைந்து உற்பத்தியைத் திறம்பட நடத்தினார்கள். அதுவே சோசலிச சமத்துவ சமூகமாக விஞ்ஞானப் பூர்வமாகப் பரிணமித்து வந்தது. அதுதான் மனிதனை மனிதன் சுரண்டும் அவலத்திற்கு முடிவு கட்டியது.
ஸ்டாலின் என்றால் ரஷ்ய மொழியில் உருக்கு அல்லது இரும்பு என்று பொருள். புரட்சிகர வாழ்வில் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டுப் பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கொடும் அடக்குமுறைக்கு ஆளான போதிலும், சில முறை மயிரிழையில் உயிர் பிழைத்த போதிலும் புரட்சியின் மீது மீளாப் பற்று, உழைக்கும் மக்களின் மீது வற்றாத நேசம் இவையே ஆசான் ஸ்டாலின் தனிச் சிறப்பான பண்புகளாகும்.
உலக பாட்டாளி வர்க்க ஆசான் ஆசான் லெனின் 1924 ஆம் ஆண்டு மறைந்த நிலையில் நாட்டையும் கட்சியையும் திறம்பட வழி நடத்துபவர் யார்? லெனினின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்வி சமூகத்தைக் கடந்து கட்சிக்குள் வந்த போது, ”தனிப்பட்ட முறையில் யாரும் லெனினின் வாரிசாக முடியாது. மாறாக ஒரு குழுதான் அந்த இடத்தை இட்டு நிரப்ப முடியும்” எனக் கூறியதோடு, நிரூபித்தும் காட்டினார்.
படிக்க: ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary
கண்ணைக் கருவிழிகள் காப்பதைப் போலக் கட்சியைக் காப்பதும், அதற்குக் கட்டுப்படுவதுமே, பாட்டாளி வர்க்க ஒழுங்கு என்ற லெனின் போதனையை உயிருக்கு மேலாகக் கருதி அதனை வளர்த்தெடுக்கவும் செய்தார்.
கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து கொண்டு பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராகவும் லெனினியத்திற்கு எதிராகவும், எதிர் புரட்சி வேலைகளில் ஈடுபட்ட டிரட்ஸ்கி, புகாரின், காமோனோவ் போன்ற துரோகிகளைக் களையெடுத்ததைத்தான் முதலாளித்துவ வர்க்கத்தினர் ”ஸ்டாலினின் சர்வாதிகாரம், ஜனநாயகம் இல்லை” என்று கூப்பாடு போட்டனர். ஆனால், அவற்றை அன்றைய ரஷ்ய உழைக்கும் மக்கள் கண்டு கொள்ளவில்லை. மேலும், ஆசான் ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு கட்சியின் ஆவணங்கள் ஜனநாயக மத்தியத்தியத்துவத்தின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டது; மாறாகத் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதை அன்னா லூயி ஸ்ட்ராங் போன்றோர் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
ஐந்தாண்டு திட்டம் என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயம், தொழில் துறை, சுரங்கம், மின்சாரம், மருத்துவம், கல்வி, இதர துறைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றும் நடவடிக்கையாக மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளும் இந்தியாவில் நேரு போன்றோரும் பார்த்தனர். ஐந்தாண்டு திட்டத்தை வெறும் பொருளாதார திட்டமாக வெட்டி சுருக்கினார்கள்.
எந்தவொரு துறைக்கான திட்டமும் நாட்டு மக்களுக்கானது என்பதை உணர்த்தி அதில் பங்கேற்கும் கடைநிலை தொழிலாளி முதல் உயர் அதிகாரி வரையிலும், கட்சி ஊழியர் மற்றும் கட்சி சார்பற்ற தனி நபர் என்றாலும் திட்டத்தின் நோக்கத்தை உணர்வுப் பூர்வமாக நிறைவேற்றுவதுடன் தனக்கு மேலே உள்ளவர்கள் தவறு செய்தால் விமர்சிக்கவும், திருத்தவும் அதற்காகப் போராடவும் முடியும் என்பதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் விழுமியங்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதைக் கனவு கூடக் காண முடியாது.
படிக்க: தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
கூட்டுப் பண்ணைகள், பெருவீதத் தொழிற்சாலைகள், பெரும் அணைகள், இரயில் பாதைகள், மின் நிலையங்கள் இப்படி எல்லா இடங்களிலும் இம்மாதிரியான நடைமுறை, அதாவது விமர்சனம் – சுயவிமர்சனம் திட்டத்தோடு இழையோடும். மூளை உழைப்பும் உடல் உழைப்பும் இணைக்கப்பட்டது.
லெனின் மறைவிற்குப் பிறகு கட்சிக்குச் சித்தாந்த பங்களிப்பை வழங்கியதுடன், மார்க்சிய தத்துவத்திற்கு லெனினின் பங்களிப்பு என்ன என்பதனை விளக்கும் விதத்தில் “லெனினிசத்தின் அடிப்படைகள்” என்ற நூலைத் தொகுத்தார். அந்நூல் ஏகாதிபத்திய சகாப்த்தித்தில் பாட்டாளி வர்க்க கட்சி புரட்சிக்கான வேலைகளை எங்கிருந்து துவங்க வேண்டும், கட்சியைக் கட்டுவது, மக்களைப் புரட்சிக்குத் திரட்டுவது உள்ளிட்ட அனைத்து நடைமுறை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தத்துவார்த்த அடிப்படையைக் கொடுத்தது.
இதுவே, மகத்தான சீன புரட்சிக்கும் இதர நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கும் மக்களின் விடுதலைக்கும் வழி காட்டியது.
மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டு சோசலிச சமூகத்தை நிறுவுதல் என்பது மனித குல வரலாற்றில் மாபெரும் பாய்ச்சலாகும். அப்படிப்பட்ட மகத்தான நடவடிக்கையைத் தலைமை தாங்கி வழி நடத்திய ஆசான் ஸ்டாலின் விவசாயிகளிடமும், மக்களிடமும் பணிந்து அவர்களின் கருத்தறிந்து செயல்பட வேண்டும் எனக் கட்சியின் ஊழியர்கள் – தலைவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தினார். ஒவ்வொரு முறையும் இப்படிச் சொல்வார்: “நாம் மக்களின் இயக்கத்திலிருந்து பின்தங்கி விடக் கூடாது. ஏனெனில் அப்படிப் பின்தங்கினால் நாம் தனிமைப்பட்டு விடுவோம். அதே சமயம் முந்திச் செல்வதும் கூடாது; ஏனென்றால் மக்களுடன் தொடர்பிழந்துவிடுவோம்”. மக்களின் கருத்தை விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததே சோசலிச சமூகம். (இன்று நமது நாட்டில் தங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் பாசிச மோடியின் அடக்குமுறைகள் குறித்து இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்)
இரண்டாம் உலகப் போரின் போது பாசிச ஹிட்லர் ஐரோப்பாவைத் தனது காலடியில் மண்டியிடச் செய்தான். இந்த வெற்றி மமதையுடன் போலந்தில் இருந்து மாஸ்கோவை நோக்கியும், பின்லாந்திலிருந்து லெனின்கிராடை நோக்கியும் தொண்ணூறு லட்சம் வீரர்களோடு இந்த படையெடுப்பு அரங்கேறியது. அமெரிக்காவின் துணை அதிபர் ஹாரி ட்ரூமன் பின்வருமாறு கூறியிருக்கிறான் “ஜெர்மானியர்கள் ஜெயித்க் கொண்டிருந்தால் நாம் ருஷ்யர்களுக்கு உதவ வேண்டும்; ருஷ்யர்கள் ஜெயித்து கொண்டிருந்தால் நாம் ஜெர்மானியர்களுக்கு உதவ வேண்டும். இந்த விதத்தில் அவர்கள் எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரைக் கொல்லட்டும்” என்றான். பிணங்களின் மூலம் தனது கஜானாவை நிரப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி சோசலிச சமூகத்தை அழித்து விட தன் பங்குக்கு அதற்கான வேலைகளைச் செய்தது.
படிக்க: பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
இப்படிப்பட்ட அசாதாரண போர் சூழலில் நாட்டு மக்களைத் திறம்பட வழி நடத்தினார் ஸ்டாலின். உண்மையில் நாட்டுப் பற்று என்றால் அதுதான். சோசலிச தாய் நாட்டை பாதுகாக்க முப்படைகளின் பங்களிப்பைக் கடந்து நாட்டு மக்களும் களத்தில் இறங்கிப் போராடினார்கள். டிராக்டரை கொடுத்தால் ஒட்டத் தெரியாமல் வயலில் துருப் பிடிக்கவிட்ட அதே விவசாயிகள் இப்போது ஆயிரக்கணக்கான டாங்கிகளை திறம்பட ஓட்டினார்கள்.
உழைக்கும் மக்களின் அந்தப் பெரும் கூட்டங்களை ஆகாயத்திலிருந்து பார்த்த ஜெர்மானிய விமானி அதிர்ச்சியடைந்தான். மிரண்டு ஓடும் மக்களிடையே அச்சத்தை விதைத்துப் பழகிய அந்த விமானி தன்னம்பிக்கையுள்ள உழைக்கும் மக்கள் தமது ராணுவத்தைச் சுற்றி அணி திரண்டு தம் நாட்டை காக்க அரண் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்த போது அச்சத்தில் உறைந்து போனான். உணர்வைச் சிலிர்க்க வைக்கும் இது போன்ற சம்பவங்கள் பாசிசத்தை வீழ்த்திய போரில் ஏராளம்.
ருஷ்யா மக்கள் வெளிப்படுத்திய வீரமும் தியாகத்தையும் உலக வரலாற்றில் எங்கும் எந்த இலக்கியத்திலும் நாம் பார்க்க முடியாது. இது எப்படிச் சாத்தியமானது? மூலதனத்தைக் கொண்டு உழைப்பைச் சுரண்டும், அடக்குமுறையை ஏவும் அரசு சோவியத் ருஷ்யாவில் அப்போது இல்லை. உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.
தற்போது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் இருள் சூழ்ந்து வருவதைப் போலவே, சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பாசிச அடக்குமுறையை நிலை நாட்டும் நிகழ்ச்சிப் போக்கு உள்ளது. இச்சூழலில் பாசிசஸ்ட்டுகளை முறியடிக்க ஆசான் ஸ்டாலின் தனது கருத்துகள், மற்றும் நடைமுறை வழியாக நமக்கு வழி காட்டுகிறார். அந்த வழியைப் பற்றிக் கொள்வோம். நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைக்க ஆசான் ஸ்டாலின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.
ஆ.கா.சிவா
21.12.2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram