புரட்சிக்காகப் பிறந்தவர் லெனின். உண்மையில் புரட்சிகர எழுச்சியின் மேதை அவர்; புரட்சிகரத் தலைமை என்ற கலையின் ஆகச்சிறந்த மேதை அவர். புரட்சிகர எழுச்சிக் காலத்தில் சுதந்திரமாகவும், மகிழ்வாகவும் உணர்வதுபோல வேறு எப்போதும் அவர் உணர்வதில்லை.

எல்லா புரட்சிகர எழுச்சிகளுக்கும் சமமான ஒப்புதல் என்று நான் கூற வரவில்லை; எல்லா நேரத்திலும், எல்லா சூழ்நிலையிலும் புரட்சிகர எழுச்சியை ஆதரித்தார் என்று நான் கூற வரவில்லை. இல்லவே இல்லை. புரட்சிகர எழுச்சிகளின்போது, அவரது உள்ளுணர்வின் மேதைமை முழுமையாகவும், தெளிவாகத் தெரியுமாறும் வெளிப்படுத்தப்பட்டவாறு, வேறு நேரங்களில் வெளிப்படவில்லை என்பதே எனது கூற்றிற்குப் பொருளாகும். புரட்சி நேரத்தில் மலர்ச்சியாக இருந்தார்;

முனிவராக மாறி வர்க்கங்களின் இயக்கத்தையும், புரட்சியின் ஏற்ற இறக்கங்களையும் தனது உள்ளங்கையில் அது கிடப்பதாகப் பார்த்தார். நமது கட்சி வட்டாரத்தில் வழக்கமாக கீழ்க்காணும்படி கூறப்படுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது: “நீரில் மீன் நீந்துவதுபோல, புரட்சி அலையில் லெனின் நீந்தினார்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

எனவேதான், லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான” தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ”திகைக்கவைக்கும்” துணிவு இருந்தது.

லெனின் அவர்களின் இந்த குணாம்சங்கள் தொடர்பாக உண்மைகளை நினைவுகூர விரும்புகிறேன்.

முதல் உண்மை: அக்டோபர் புரட்சிக்கு சற்று முந்தைய காலகட்டம் அது; பின்னணியிலும், முன்னணியிலும் நெருக்கடியால் உந்தப்பட்ட பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவாசாயிகளும், படையினரும் சமாதானத்தையும், விடுதலையையும் கோரி வந்தனர்; ”இறுதிவரை யுத்தம்” என்பதற்காக இராணுவ சர்வாதிகாரத்தைப் படைத்தளபதிகளும், முதலாளித்துவ வர்க்கமும் திட்ட மிட்ட நேரம் அது; “மக்கள் கருத்து” என்றழைக்கப்படுவதும், “சோசலிகக் கட்சிகள்” என்றழைக்கப்பட்டவர்களின் கருத்தும், போல்ஷ்விக்குகளுக்கு விரோதமாகவும், அவர்களை “ஜெர்மானிய ஒற்றர்கள்” என்று முத்திரைக் குத்துவதாகவும் இருந்த நேரம் அது.

போல்ஷ்விக் கட்சியை தலைமறைவிற்கு தள்ளுவதற்கு கெரன்ஸ்கி முயற்சித்த – ஏற்கெனவே அதில் ஓரளவிற்கு வெற்றி கண்டிருந்தார் – நேரம் அது; சோர்ந்து போன, நொறுங்கி நின்ற நமது படையை ஆஸ்திரிய – ஜெர்மானிய நாடுகளின் சக்திவாய்ந்த, கட்டுப்பாடான படைகள் எதிர்த்த நேரம் அது; மேற்கு – ஐரோப்பிய “சோசலிசவாதிகள்” “வெற்றியை நிறைவு செய்வதற்கான யுத்தம்” என்பதற்காகத் தங்களது அரசுடன் மகிழ்வாக கூட்டணி அமைத்திருந்த நேரம் அது…..

அத்தகைய நேரத்தில் ஒரு புரட்சி எழுச்சியைத் தொடங்குவதற்கு என்ன பொருள் இருக்கும்? அத்தகைய சூழ்நிலையில் தொடங்குவது என்பதற்கு எல்லாவற்றையும் பணயம் வைப்பது என்று பொருள் தருகிறது. அந்த அபாயத்தை எதிர்கொள்ள லெனின் அஞ்சவில்லை; அவரது தொலைநோக்குப் பார்வையில், புரட்சிகர எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதும், அது வெல்லும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; ரஷ்யாவில் ஒரு புரட்சி ஏற்பட்டால், அது ஏகாதிபத்திய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர் அறிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; யுத்தத்தால் சோர்வடைந்திருந்த மேலைநாட்டு மக்களை அது தட்டியெழுப்பும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை; அது ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை ; புரட்சிகர எழுச்சி சோவியத் குடியரசை உருவாக்கும் என்றும், சோவியத் குடியரசு உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு அரணாக அமையும் என்றும் அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை.

ஈடு இணையற்ற துல்லியத்தோடு லெனினின் புரட்சிகர தொலை நோக்கு அமைந்திருந்தது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்.

இரண்டாவது உண்மை. மக்கள் அரசுத் தலைவர்களின் (கமிசார்களின்) பேராயம், சண்டையை நிறுத்தி, ஜெர்மனியோடு இராணுவ ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்குமாறு, கலகக்கார தலைமைத் தளபதியான ஜெனரல் டுக்கோனினை வற்புறுத்த முயற்சித்த அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்கள் அவை. லெனின், கிரைலென்கோ (வருங்கால தலைமைத்தளபதி) மற்றும் நான் பெட்ரோகிராடில் இருந்த இராணுவ தலைமையகத்துக்குச் சென்று, டுக்கோனினோடு நேரடியாகப் பேசுவதற்கு முயற்சித்தோம். அது பயங்கரமான தருணம். மக்கள் அரசுத் தலைவர்களின் கவுன்சிலின் ஆணையை ஏற்க டுக்கோனினும், கள தலைமையகமும் மறுத்தனர்.

கள தலைமையகத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இராணுவ அதிகாரிகள் இருந்தனர். சோவியத் அதிகாரத்துக்கு விரோதமாக இருந்த, இராணுவ அமைப்புகளுக்கு அடிபணிந்திருந்த, 140 லட்சம் பேர்களைக் கொண்ட இராணுவம் என்ன சொல்லும் என்று யாருக்கும் தெரியாது. பெட்ரோகிராடிலும் கூட இராணுவ வீரர்களின் கலகம் தொடங்கிவிட்டிருந்தது.

மேலும் கெரன்ஸ்கி பெட்ரோகிராடு மீது அணிவகுத்தார். நேரடி பேச்சுவார்த்தையில் சிறிய இடைவெளி ஏற்பட்ட பிறகு, லெனினின் முகத்தில் அசாதாரண வெளிச்சம் திடீரென தோன்றியதை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவர் கூறினார்: ”கம்பியில்லாத ஒயர்லெஸ் நிலையத்திற்கு நாம் செல்வோம்; ஜெனரல் டுக்கோனினை பதவி நீக்கம் செய்வதற்கான சிறப்பு ஆணையை வெளியிடுவோம்; தோழர் கிரைலென்கோவை தலைமைத் தளபதியாக அவருக்குப் பதிலாக நியமிப்போம்; அதிகாரிகளைப் புறக்கணித்து, தளபதிகளைச் சுற்றி வளைக்குமாறும் சண்டையை நிறுத்துமாறும், ஆஸ்திரிய – ஜெர்மானிய இராணுவத் தினருடன் தொடர்பை ஏற்படுத்தி, சமாதானத்தை தங்களது கரத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் இராணுவ வீரர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

இது “இருட்டில் ஒரு பாய்ச்சல்” ஆகும். இந்தப் பாய்ச்சலில் இருந்து லெனின் பின்வாங்கவில்லை. இராணுவம் அமைதியை விரும்பியது என்றும், தனது பாதையில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் தகர்த்து சமாதானத்தை அது வெல்லும் என்றும் அவர் அறிந்திருந்ததால், அந்தப் பாய்ச்சலை அவர் ஆர்வமாக எடுத்திருந்தார். சமாதானத்தை நிறுவுவதற்கான இந்த வழிமுறை ஆஸ்திரிய – ஜெர்மானிய படைவீரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், விதி விலக்கின்றி ஒவ்வொரு முனையிலும் சமாதானத்திற்காக ஏங்கு பவர்களுக்கு கடிவாளம் வழங்கும் என்றும் அவர் அறிந்திருந்தார்.

உச்சபட்ச துல்லியத்தோடு இதிலும் கூட லெனினின் புரட்சிகர தீர்க்கதரிசனம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்று நமக்குத் தெரியும்.

மேதைமையின் உள்ளுணர்வு, வரவுள்ள நிகழ்வுகளை விரைவாகக் கிரகிக்கும் திறன், அவற்றின் உள்அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது ஆகிய லெனினின் இந்தத் தன்மைகள்தான் சரியான மூலஉத்தியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது; புரட்சிகர இயக்கத்தின் முக்கிய திருப்பங்களில் தெளிவான நடத்தை வழியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது.

பிராவ்தா எண். 34, பிப்ரவரி 12, 1924

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க