அமைப்பு வேலையின் செயல்பரப்பு – பாகம் 2

<< முந்தைய பாகம்

னித் தேர்ச்சியின் அவசியத்தை எவ்வளவோ நேர்த்தியுடன் வர்ணித்த அதே B-Vதான் நாம் மேற்கோள்காட்டிய வாதத்தின் இரண்டாம் பகுதியில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார் என்று கருதுகிறோம். தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களின் எண்ணிக்கை போதாதென்கிறார். இது முற்றிலும் உண்மை. இன்று சமூக -ஜனநாயகவாதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குரிய காரணங்கள் பற்றியும், எனவே அந்நெருக்கடியை அகற்றுவதற்கு வேண்டிய சாதனங்களைப் பற்றியும் நாம் கொண்டுள்ள கருத்தை “ஒரு நெருங்கிய நோக்கரின் மதிப்புமிக்க தகவல்” முற்றாக உறுதிப்படுத்துகிறதை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுவாகவே புரட்சியாளர்கள் தன்னியல்பாய் விழிப்புற்று வரும் மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல; தொழிலாளர் – புரட்சியாளர்களுங்கூட தன்னியல்பாய் விழிப்புற்று வரும் தொழிலாளி வர்க்க மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதத்தில் மிக அடிக்கடி நம்மிடம் கூறப்படும் “பள்ளியாசிரியத்தனங்களின்” முட்டாள்தனத்தை மட்டுமின்றி அவற்றின் அரசியல் பிற்போக்குத் தன்மையையும் “நடைமுறைப்” பார்வையிலே இந்த உண்மை தெளிவான சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. இந்த உண்மை நிரூபிக்கிறதாவது: நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே. இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் (‘‘கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளிகளை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்ல).

எனவே தொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதில் முதன்மையான கவனம் செலுத்தவே “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவது போல் ” உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல், “சராசரித் தொழிலாளியின்” தரத்திற்கோ இறங்குவது நம் பணி அல்லவே அல்ல. (ஸ்வபோதா அவ்வாறு செய்ய விரும்புவதிலே பொருளாதாரவாதப் ”பள்ளியாசிரியத்தனங்களின்” இரண்டாம் படிவத் தரத்திற்கு ஏறுகிறது). தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக் கூடிய இலக்கியம் வேண்டும்; குறிப்பாகப் பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிக எளிதாகப் புரியக்கூடிய (ஆனால் கொச்சைப்படுக்கப் படாத) இலக்கியம் வேண்டும் என்பதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் அரசியல், அமைப்புத்துறை பற்றிய பிரச்சினைகளோடு பள்ளியாசிரியத்தனங்களை இடைவிடாது போட்டுக் குழப்புவது தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது.

படிக்க:
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
♦ பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

”சராசரி தொழிலாளி”யைப் பற்றி இவ்வளவு கவலை தெரிவிக்கும் பெருமான்களே, தொழிலாளி வர்க்க அரசியலைப் பற்றியும், தொழிலாளி வர்க்க அமைப்பைப் பற்றியும் விவாதிக்கும் போது நீங்கள் தொழிலாளிகளை புத்தி சொல்லி அடக்க விரும்புவதால் உண்மையிலேயே அவர்களை அவமதிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களை வினைத்திட்ப முறையிலே பேசுங்கள்; பள்ளியாசிரியத்தனங்கள் ஆசிரியர்களோடு நிற்கட்டும், அரசியல்வாதிகளுக்கும் அமைப்பாளர்களுக்கும் அது வேண்டாம்! படிப்பாளிப் பகுதியினர் இடையே கூட முன்னிலை நபர்கள், “சராசரி நபர்கள்”, “மக்கள் திரள்” இல்லையா? படிப்பாளிப் பகுதியினருக்கும் எளிதாகப் புரியக் கூடிய இலக்கியத்தின் தேவையை ஒவ்வொருவரும் அங்கீகரிக்கவில்லையா? அவ்வகை இலக்கியம் எழுதப்படவில்லையா? கல்லூரி அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களைத் திரட்டியமைப்பது பற்றிய கட்டுரையில் ஒருவர் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்தவர் போல் முதன்முதலில் “சராசரி மாணவர்கள்” கொண்ட அமைப்பு அவசியம், என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஆசிரியர் கேலி செய்யப்படுவார். அது சரியாகவும் இருக்கும். அமைப்பு பற்றி உங்களுக்குக் கருத்துக்கள் ஏதேனுமிருந்தால் கொடுங்கள், யார் “சராசரி”, யார் “சராசரி”க்கு மேலே அல்லது கீழே என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என்று அவரிடம் சொல்வார்கள்.

ஆனால் அமைப்பு பற்றி உங்களுக்கு சொந்தத்தில் கருத்துக்கள் எதுவும் இல்லையென்றால் மக்கள் திரள்” சார்பிலும் ”சராசரி நபர்கள்” சார்பிலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் வெறுமே அலுப்பூட்டுவதாயிருக்கும். “அரசியல்”, “அமைப்பு” சம்பந்தமான இந்தப் பிரச்சினைகள் தம்மளவில் எவ்வளவோ முக்கியத்துவமுடையவை ஆதலால் அவற்றை செயல்திட்பமுடைய வழியிலே அல்லாது வேறெந்த வழியிலும் கவனிக்க முடியாது. நாம் தொழிலாளிகளைப் (பல்கலைக்கழக மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும்) பயிற்றுவிக்க முடியும்; பயிற்றுவிக்க வேண்டும். அவ்விதம் செய்வதால் அவர்களோடு இந்தப் பிரச்சினைகளை விவாதிக்க நமக்கு முடியக் கூடும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை நீங்கள் கிளப்பத் தொடங்குகிறீர்கள் என்றால் அவற்றிற்கு உண்மையான பதில்கள் நீங்கள் கொடுத்தாக வேண்டும்; ”சராசரி நபர்கள்” என்றோ , “மக்கள் திரள்” என்றோ சொல்லிக் கொண்டு பின்வாங்கக் கூடாது; குறும்புத்தனமான குறிப்புரைகளோடும் வெறும் சொற்றொடர்களோடும் விசயத்தை முடித்து விட முயற்சிக்கக் கூடாது.”1*

அதேபோல் தொழிலாளி – புரட்சியாளனும் தன் பணியைச் செய்வதற்கு முற்றாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளனாக ஆகித் தீரவேண்டும். எனவே, தொழிற்சாலையிலே தொழிலாளி பதினொன்றரை மணிநேரம் செலவழிப்பதனால் (கிளர்ச்சி தவிர) மற்றெல்லா புரட்சி வேலைகளும் “அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு குழுவின் மேலேதான் முக்கியமாக விழுவது அவசியமாகித் தீரவேண்டும்” என்று B-v சொல்வது தவறு. இந்த நிலைமை வெறும் “அவசியத்தினின்று” விளைவதல்ல. அது விளையக் காரணம் நாம் பின்தங்கியிருப்பதுதான். நாம் ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் ஒரு முழுநேரக் கிளர்ச்சினாகவும், அமைப்பாளனாகவும், பிரச்சாரகனாகவும், இலக்கிய விநியோகஸ்தனாகவும், மற்றபடியும் ஆவதற்கு உதவ வேண்டிய நமக்குள்ள கடமையை நாம் உணரவில்லை என்பதுதான். இவ்விசயத்தில் முற்றிலும் வெட்கக்கேடான முறையில் நம் சக்தியை வீணடிக்கிறோம். பேணிக்காக்க வேண்டியதை, தனிக் கவனிப்போடு வழங்கப்பட வேண்டியதைச் சிக்கனத்தோடு சேமித்து வைக்கும் திறமை நம்மிடம் இல்லை.

ஜெர்மானியர்களைப் பாருங்கள். அவர்களிடம் நம்மை விட நூறு மடங்குச் சக்திகள் உண்டு என்றபோதிலும் ”சராசரி” நிலையிலுள்ள அணிகளிடையே இருந்து உண்மையிலேயே திறமையுள்ள கிளர்ச்சியாளர் முதலானோர் அடிக்கடி மேலுக்குக் கொண்டு வரப்படுவதில்லை என்று மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் தன் ஆற்றல்களை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும் செயல்படுத்தவும் இடமளிக்கக்கூடிய நிலைமைகளில் அவனை வைத்திட உடனுக்குடன் முயல்கின்றனர்; அவன் ஒரு முழுநேரக் கிளர்ச்சியாளன் ஆக்கப்படுகிறான்; தனது நடவடிக்கைக்கான நிலைக் களத்தை விரிவுபடுத்திக் கொள்ளும்படி, ஒரு தொழிற்சாலையிலிருந்து அது சம்பந்தப்பட்ட தொழில் முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி, ஒரு தனி ஊரிலிருந்து நாடு முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிறான். அவன் தன் தொழிலில் அனுபவமும் நயத்திறமும் பெறுகிறான்; பார்வையை விரிவாக்கிக் கொள்கிறான்; அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்; வேற்று வட்டாரங்களையும், மாற்றுக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களை நெருங்கிய நிலையில் கவனிக்கிறான்; அவர்கள் தரத்திற்கு உயர முயற்சிக்கிறான்; தொழிலாளி வர்க்கச் சூழலைப் பற்றிய அறிவையும் சோசலிஸ்டுத் துணிபுகளின் புது மலர்ச்சியையும் தொழிற்திறனுடன் தன்னுள் இணைத்துக் கொள்ள முயல்கிறான். இது இல்லையேல் நேர்த்தியான பயிற்சிபெற்ற தனது பகைவர்களை எதிர்த்துத் தொழிலாளி வர்க்கம் விடாப்பிடியான போராட்டம் நடத்த முடியாது. இவ்வொரே வழியிலேதான் உழைப்பாளி மக்கள் பேபெல், ஆவுயெர் போன்ற தலைவர்களை உண்டாக்கித் தருகின்றனர். ஆனால் அரசியல் வகையிலே சுதந்திரமாக உள்ள ஒரு நாட்டில் பெருமளவுக்குத் தன்னாலே நிகழக்கூடிய இது ரசியாவில் நம் அமைப்புகளால் முறைமையுடன் செய்யப்பட வேண்டும். சிறிதளவேனும் ஆற்றலுள்ளவனாகவும் “முன்னுக்கு வரக் கூடியவனாகவுமுள்ள” தொழிலாளி – கிளர்ச்சியாளனைத் தொழிற்சாலையில் பதினொரு மணிநேரம் வேலை செய்யும்படி விட்டு வைக்கக்கூடாது. அவனைக் கட்சி காத்துப் பேணிவரும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உரியகாலத்தில் அவன் தலைமறைவாகச் சென்றுவிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவன் வேலை செய்யும் இடத்தை மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவன் தன் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வான்; பார்வையை விரிவாக்கிக் கொள்வான்; போலீசு உளவாளிகளை எதிர்க்கும் போராட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு சில ஆண்டுகளுக்காயினும் சமாளித்து நிற்பான். தொழிலாளி வர்க்க மக்கள் திரளின் இயக்கத்தின் தன்னியல்பான எழுச்சி மேன்மேலும் அகன்றும் ஆழ்ந்தும் வர வர அம்மக்கள் திரள் தன்னிடையே இருந்து மேன்மேலும் அதிகரித்த எண்ணிக்கையில் ஆற்றலுள்ள கிளர்ச்சியாளர்களை மேலுக்குக் கொண்டு வருவதோடல்லாமல் ஆற்றல்மிக்க அமைப்பாளர்களையும், பிரச்சாரகர்களையும், (மிகச் சிறந்த அர்த்தத்தில்) ”நடைமுறை ஊழியர்களையும்” மேலுக்குக் கொண்டு வருகின்றது. (நம் அறிவுஜீவிகளிடையே நடைமுறை ஊழியர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். ரசிய பாணியில், நம் அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் தம் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கவனமற்றவர்களாகவும் மந்தமாகவும் இருக்கிறார்கள்).

படிக்க:
♦ பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !
♦ பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

விரிவான தயாரிப்புக்கு ஆளாகி உருப்பெற்ற, தனிச்சிறப்பான பயிற்சி பெற்ற தொழிலாளி – புரட்சியாளர்களின் (“சேவையின் எல்லாக் கிளைகளையும் சேர்ந்த” புரட்சியாளர்களும் இதில் அடங்குவர்) சக்திகள் நமக்கு கிடைக்கிறபொழுது உலகத்தில் எந்த அரசியல் போலீசாரும் அச்சக்திகளை எதிர்த்துச் சமாளிக்க முடியாமற் போகும். ஏனெனில் புரட்சிக்கு முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டுள்ள இச்சக்திகள் மிக விரைவான தொழிலாளர் மக்கள் திரளின் எல்லையில்லா நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருப்பார்கள். தொழிலாளர்களுக்கும் ”அறிவுஜீவிகளுக்கும்” பொதுவானதாக விளங்கும் முழுநேரப் புரட்சியாளனாக்கும் பயிற்சிக்குரிய இந்தப் பாதையில் தொழிலாளர்கள் செல்லும்படி ‘ஊக்கிவிடச் செயலாற்றுவது” மிகக் குறைவாக இருப்பதற்கான பழி நேரடியாக நம்மையே சேரும். தொழிலாளர் திரள், “சராசரித் தொழிலாளர்கள்” என்றெல்லாம் சொல்லப்படுபவர்களுக்கு “எட்டக் கூடியதாய் இருப்பது” எது என்பது பற்றி நாம் ஆற்றும் அசட்டுத்தனமான சொற்பொழிவுகளால் மிக அடிக்கடி அவர்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் பழியும் நேராக நம்மையே சேரும்.

மற்றவை போல் இவ்விசயத்திலும் நம் அமைப்புத் துறைப் பணி குறுகிய செயல் எல்லை கொண்டிருப்பதற்குக் காரணம் நாம் நம் தத்துவங்களையும், நம் அரசியல் பணிகளையும் ஒரு குறுகிய செயற்களத்தில் கட்டுப்படுத்தி விடுவதே (”பொருளாதாரவாதிகளில் மிகப் பெரும்பான்மையோரும் நடைமுறை வேலைகளில் கற்றுக் குட்டிகளாக இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோரும் இதைப் பார்க்கிறதில்லை), இதில் ஐயமே இல்லை. தன்னியல்பிற்கு அடிபணிவதானது மக்கள்திரளுக்கு எட்டக்கூடியதாய் உள்ளதற்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைக்காதபடி பீதியை உண்டாக்குகிறது போலும். மக்கள் திரளின் உடனடியான நேரடியான தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு அப்பால் வெகுதூரம் மேலே சென்று விடுவோமோ என்கிற பீதியை உண்டாக்குகிறது போலும். பெருமான்களே, பயப்படாதீர்கள், அமைப்பு மட்டத்தில் நாம் மிக மிகத் தாழ்ந்து உள்ளதால் அளவுக்கு மிஞ்சிய உயரத்திற்கு நாம் ஏறிவிட முடியும் என்கிற கருத்தே அபத்தமானது என்பதை நினைவில் வையுங்கள்!

குறிப்பு :
1*
ஸ்வபோதா இதழ் 1, பக்கம் 66-இல் “அமைப்பு” என்ற கட்டுரையில் கூறுவதாவது : ”தொழிலாளர் படையின் கனமிக்க நடை ரசிய ‘உழைப்பாளர்கள்’ சார்பில் முன் வைக்கப்படும் எல்லாக் கோரிக்கைகளையும் பலப்படுத்தும்” – உழைப்பாளர்கள் என்கிற சொல்லைக் தடித்த எழுத்தில் போடுங்கள், உண்மையாக! மேலும், ஆசிரியர் கூவுகிறார்: “எனக்குப் படிப்பாளிப் பகுதியினர்பால் சிறிதேனும் பகை இல்லை, ஆனால்”… (ஆனால் இந்தச் சொல்லுக்குப் பொருள் “நெற்றிக்கு மேலே காதுகள் உயர வளர்வதேயில்லை’ என்று ஷெட்ரின் மொழிபெயர்த்தார்!) – “ஆனால் யாராவது ஒருவன் என்னிடம் வந்து அழகும் கவர்ச்சியும் மிக்க வார்த்தைகள் பேசி அவற்றின் (தன்னுடைய?) அழகுக்காகவும் மற்ற பண்பு நலன்களுக்காகவும் அவற்றை ஏற்கவேண்டும் என்று கோரினால் எனக்கு எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது’ என்று (பக்கம் 62), உண்மைதான், எனக்கும் கூட “எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது.”

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க