சிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.

இந்நூலில் “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்” எனும் தலைப்பின் கீழ் வரும் “அமைப்பு வேலையின் செயல் பரப்பு” எனும் உட்தலைப்பில் தொழில்முறைப் புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, தேர்ச்சி நயமின்மை எனும் பிரச்சினையிலிருந்து எவ்வாறு மீண்டு வரமுடியுமென்பதையும், தேர்ச்சிநயமிக்கவரை ஒரு புரட்சிகர அமைப்பு எப்படி உருவாக்க முடியுமென்பதையும், அத்தகையவர்களை எப்படி தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பதையும் விவரிக்கிறார் லெனின்.

  • வினவு

***

அமைப்பு வேலையின் செயல்பரப்பு

“செயலாற்றத் தகுதியுள்ள புரட்சிச் சக்திகள் போதாதிருப்பதை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டுமின்றி ரசியாவெங்கும் உணர்ந்திருக்கிறார்கள்” என்பது பற்றி B-v சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்விசயத்தை அநேகமாக யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், இதை எப்படி விளக்குவது என்பதே கேள்வி. B-V எழுதுகிறார்:

“இந்நிகழ்ச்சித் தோற்றத்திற்குரிய வரலாற்றுக் காரணங்களை நாம் விளக்கப் புகவில்லை . நீடித்த அரசியல் பிற்போக்காலும், சென்றகால, நிகழ்காலப் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட பிளவாலும் மனமுடைந்து போன ஒரு சமுதாயம், புரட்சி வேலைக்குத் தகுதியுள்ள மிகச் சில நபர்களையே தன் மத்தியிலிருந்து மேலுக்குக் கொண்டு வருகிறது. புரட்சிகரமான ஊழியர்களைத் தொழிலாளி வர்க்கம் உண்டாக்கித் தரத்தான் செய்கிறது. அவர்கள் சட்டவிரோதமான அமைப்புகளின் அணிகளை ஓரளவுக்குப் பெருக்குகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட புரட்சியாளர்களின் தொகை காலத்தின் தேவைகளுக்குப் போதாமலிருக்கிறது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

படிக்க :
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

மேலும், அப்படி இருக்கக் காரணம்: தொழிலாளி நாள் தோறும் தொழிற்சாலையில் பதினொன்றரை மணிநேரம் செலவழிக்கிறான். எனவே, முக்கியமாய், அவன் ஒரு கிளர்ச்சியாளனாக மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், பிரச்சாரம், அமைப்புத் துறை, சட்டவிரோதமான இலக்கியத்தைச் சேர்ப்பிப்பது, பிரதியெடுப்பது, துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது முதலிய கடமைகள் அவசியமாகவே வெகு சில அறிவுஜீவிகள் மீதுதான் முக்கியமாக விழவேண்டியுள்ளது” (ரபோச்சியே தேலோ, இதழ் 6, பக்கங்கள் 38-39).

பல அம்சங்களில் நாம் B-v யுடன் உடன்படவில்லை . குறிப்பாக, நாம் வலியுறுத்தியுள்ளவையுடன் உடன்படவில்லை. இவை தெளிவாகக் காட்டுவதாவது: நமது தேர்ச்சி நயமின்மை குறித்து (சிந்திக்கும் ஒவ்வொருவரையும் போலவே) மலவே) B-V அலுத்துக் கொண்டாலும் இந்த சகிக்கவொண்ணாத நிலைமையிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம்,  ”பொருளாதாரவாதம்’ அவரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  உண்மை என்னவென்றால், “இலட்சியத்துக்கு”த் தகுதியுள்ள மிகப் பல நபர்களைச் சமுதாயம் உண்டாக்கித் தருகிறது. நாம்தான் அவர்கள் அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இவ்விசயத்தில் நம் இயக்கத்தின் நெருக்கடியான, பரிணமிப்பு நிலைக்குரிய கட்டத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம். அதாவது, ஊழியர்களே இல்லை – எனினும் ஊழியர்கள் திரள் திரளாக இருக்கவே செய்கிறார்கள். ஊழியர்கள் திரள் திரளாக இருக்கக் காரணம், ஆண்டு தோறும் தொழிலாளி வர்க்கமும் மேன்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையேயிருந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அதிருப்தியடைந்த நபர்களை உண்டாக்கியவாறு இருக்கிறது. இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள், எதேச்சதிகார ஆட்சி முறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவியனைத்தும் அளித்திடத் தயாராயிருக்கிறார்கள். இந்த எதேச்சாதிகார ஆட்சிமுறையைச் சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லையாயினும் மேன்மேலும் அதிகமான மக்கள் திரள் தீவிரமாக உள்ளூர உணர்ந்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாயும், அதேநேரத்தில் சமச்சீராகவும், இசைவாகவும் வேலையை ஒழுங்குபடுத்திச் சித்தம் செய்ய திறமையுள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆற்றல் மக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை. ”புரட்சிகரமான அமைப்புகளின் வளர்ச்சியும், பெருக்கமும்” தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பின்னடைந்திருப்பது மட்டுமல்ல (இதை    B-v கூட ஒப்புக் கொள்கிறார்), எல்லா மக்கட் பிரிவுகளிடையேயுமுள்ள பொதுவான ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைந்திருக்கிறது. (தமது முடிவுக்கு இணைப்பாக உள்ளதாக B-V இதைப் பெரும்பாலும் கருதக்கூடும் என்று போகிற போக்கில் சொல்லிவைப்போம்).

படிக்க :
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

இயக்கத்தின் தன்னியல்பான அடிப்படையின் விரிவுடன் ஒப்பிடுகையில் புரட்சி வேலையின் செயல்பரப்பு மிகக் குறுகியதாக உள்ளது. “முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான பொருளாதாரப் போராட்டம்” எனும் படுமோசான தத்துவம் இதை வேலிபோட்டு மிகவும் குறுக்கிவிட்டுள்ளது. ஆனால், தற்சமயம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் சமூக – ஜனநாயகவாத அமைப்பாளர்களும் “மக்களைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடையேயும் சென்று” தீரவேண்டும்1*.

சமூக ஜனநாயகவாதிகள் தம் அமைப்புத்துறை வேலையைச் சேர்ந்த ஆயிரத்தொன்று சிறுசிறு செயற்கூறுகளை மிகவும் வேறுபட்ட வர்க்கங்களின் தனித்தனி பிரதிநிதிகளிடையே வினியோகிக்க முடிகிறதைப் பற்றி ஒரு நடைமுறை ஊழியனுக்கும் ஐயமிராது. நம் தொழில் நுணுக்கத்தின் மிக மோசமான குறைபாடுகளில் தனித் தேர்ச்சியின்மையும் ஒன்றாகும். இதைப் பற்றி B-V நியாயமாகவே கசப்புடன் குறைப்பட்டுக் கொள்கிறார்.  நம் பொது இலட்சியப்பணியில் ஒவ்வொரு தனித்தனி “செயற்கூறும்” எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அப்படிப்பட்ட செயற்கூறுகளைச் செய்து முடிக்கத் திறமையுள்ள நபர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள் (இவர்களில் பெரும்பாலோர் முழுநேரப் புரட்சியாளர்களாகும் திறமை சிறிதேனும் இராதவர்களே). அவ்வளவுக்கவ்வளவு போலீசுக்கும் இந்த ”நுணுக்கப் பிரிவு ஊழியர்கள்” அனைவரையும் “பிடிப்பது” அதிகக் கடினமாயிருக்கும். ”பாதுகாப்பிற்காக” அரசாங்கம் செலவழிப்பதை நியாயப்படுத்தும் அளவிற்கு ஒரு சில்லறை விவகாரத்திற்காகக் கைது செய்து “வழக்கு” ஜோடிப்பதும் அதிகக் கடினமாகி விடும்.

நமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, சென்ற ஐந்தாண்டு வாக்கில் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றத்தை முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். மறுபுறத்தில், இந்தச் சின்னஞ்சிறு கூறுகளை ஒரு முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கும், இயக்கத்தின் செயற்கூறுகளைப் பிரிக்கும் அதேநேரத்தில் இயக்கத்தையே உடைத்தெறியாமல் இருப்பதற்கும், இந்தச் சின்னஞ்சிறு செயற்கூறுகளை நிறைவேற்றி வரும் நபர்கள் தாங்கள் செய்யும் வேலை அவசியமானதென்றும், முக்கியமானதென்றும் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதற்கும் (இந்த நம்பிக்கை இல்லையேல் அவர்கள் என்றைக்கும் வேலை செய்யமாட்டார்கள்)2* புடம் போட்ட புரட்சியாளர்களைக் கொண்ட வலுவான அமைப்பு இருத்தல் அவசியம்.

லெனின்இவ்வகை அமைப்பு எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலாகக் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை பலமாகவும். பரவலாகவும் இருக்கும். போர்க்காலத்தில், நம் சொந்த இராணுவம் தன் பலத்தில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வது மட்டுமின்றி அந்த பலத்தைப் பற்றி எதிரிக்கும், எல்லா நடுநிலைச் சக்திகளுக்கும் உறுதியாக உணர்த்துவதும் மிக மிக முக்கியம். நேசமுள்ள நடுநிலை சில சமயம் விவகாரத்தையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும்; இதை நாம் அறிவோம்.

உறுதியான தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்டும், சமூக-ஜனநாயகவாதப் பத்திரிக்கை ஒன்று வைத்துக் கொண்டும் இருக்கிற இவ்வகை அமைப்பு இருக்குமேயானால், இயக்கத்தின்பால் ஈர்க்கப்படும் எண்ணற்ற ”அந்நிய நபர்கள்” இயக்கத்தைத் தடம் புரளச் செய்வார்கள் எனும் பயம் நமக்கு ஏற்படக் காரணமிராது. (மாறாக, தேர்ச்சி நயமின்மை நிலவும் இந்தக் காலத்திலேதான் பல சமூக-ஜனநாயகவாதிகள் “Credo” பால் சாய்வதையும் வெறுமே தங்களைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்று கற்பனை செய்து கொள்வதையும் காண்கிறோம்.) சுருங்கச் சொன்னால், தனித் தேர்ச்சி மையப்படுத்தலின் அவசியத்தை முன்னுணர்கிறது. அதே நேரத்தில் அதை நிச்சயமாகக் கோருகிறது.

குறிப்புகள் :

1*  இப்படித்தான், சந்தேகமின்றி அண்மையில் இராணுவ சேவை புரிகிற நபர்களிடையே ஜனநாயக உணர்ச்சி மீண்டும் தோன்றியுள்ளதைக் காண்கிறோம்; தொழிலாளிகள், மாணவர்கள் போன்ற “பகைவர்களுடன்” முன்னைவிட அடிக்கடி நடக்கிற தெருப்போராட்டங்களினால் ஓரளவுக்கு ஏற்பட்ட விளைவு இது. நம்மிடமுள்ள சக்திகள் இடங்கொடுக்கும் அளவுக்கு விரைவிலே நாம் படைவீரர்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் கிளர்ச்சியும், பிரச்சாரமும் செய்வதிலும், நம் கட்சியுடன் இணைப்புள்ள “இராணுவ அமைப்புகளைப்” படைப்பதிலும் தவறாமல் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும்.

 2* ஒரு தொழிற்சாலைக் கண்காணிப்பாளரைப் பற்றி ஒரு தோழர் ஒரு சமயம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கண்காணிப்பாளர் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு உதவ விரும்பினார். உதவவும் செய்தார். ஆனால் தான் கொடுக்கும் “தகவல்” பொருத்தமான புரட்சி மைய அமைப்பிடம் போய்ச் சேர்ந்ததா? எந்த அளவுக்கு உண்மையிலே தன் உதவி தேவைப்படுகிறது? தன் அற்பசொற்பமான சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சாத்தியப்பாடுகள் என்ன? என்பது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கசப்புடன் குறை தெரிவித்தார்.

இதுபோன்ற பல உதாரணங்களை ஒவ்வொரு நடைமுறை ஊழியரும் கொடுக்க முடியும் என்பது உண்மை . நமது பக்குவமின்மையால் நாம் துணைச் சக்திகளை இழந்ததை இவை காட்டுகின்றன. இந்தச் சேவை ஒவ்வொன்றும் தன்னளவில் ”சிறியது’ ஆயினும் மொத்தத்தில் பார்க்கையில் விலைமதிக்கொணாதது. தொழிற்சாலைகளிலுள்ள அலுவலகப் பணியாளர்களும் அலுவலர்களும் மட்டுமல்லாமல், அஞ்சல், இரயில்வே, தீர்வைத் துறைகளிலும், பிரபு வம்சத்தினர், பாதிரிமார் இடையேயும், போலீசு, அரசவைத் துறைகளையும் உள்ளிட்ட எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் அலுவலகப் பணியாளர்களும், அலுவலர்களும் நமக்கு இந்தச் சிறிய சேவைகளை அளிக்க முடியும்; அளிப்பார்கள்!

நம்மிடம் உண்மையான கட்சி இருந்தால், புரட்சியாளர்களைக் கொண்ட உண்மையான செயல்துடிப்புள்ள அமைப்பு இருந்தால், இந்தத் துணையாட்கள்” ஒவ்வொருவரிடமும் தகுதிக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யக் கொடுக்கமாட்டோம்; நம் “சட்டவிரோத நிலையின்” மையத்திற்கு எப்போதும் அவர்களைக் கொண்டுவர துடிக்க மாட்டோம். மாறாக, அவர்களைப் பத்திரமாகச் சேமித்து வைப்போம். குறிப்பாக இப்படிப்பட்ட வேலைகளுக்கென்று நபர்களைப் பயிற்றுவிக்கவும் செய்வோம். ”குறுகியகால” புரட்சியாளர்களாக இருப்பதைவிட ஏதாவது அதிகாரபூர்வமான பதவியை வகித்துவரும் நிலையில் பல மாணவர்கள் உதவியாளர்களாக எவ்வளவோ அதிகமாகச் சேவை செய்யக் கூடியவர்களாக இருக்க முடியும். எனினும், உறுதியாக நிலை நாட்டப்பட்டுத் தீவிரமாகப் பணியாற்றும் சக்திகளைக் கொண்டு இருக்கிற அமைப்புக்கு மட்டுமே இப்படிப்பட்ட செயல்தந்திரங்களைச் செயல்படுத்தும் உரிமையிருக்கும்.

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க