மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்

ங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த், “மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

இந்த நூலில் “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.

இந்நூலின் ஒரு அத்தியாயமான “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற பகுதியை மட்டும் தொடராக இங்கு வெளியிடுகிறோம். இந்த நூல் கீழைக்காற்று வெளியிட்டகத்தில் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பயன்பெறவும் !

வினவு

பாட்டாளி வர்க்கக் கட்சி

முன்னுரை

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.

மார்க்சிய நூல்களுக்கு வழிகாட்டிமார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

படிக்க:
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.

லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் நாம் மார்க்சு, எங்கெல்சு, லெனினின் கட்சியைப் பற்றி சிறப்பாக அதன் பங்கு, அமைப்பு, கொள்கை குறித்த படைப்புகளில் என்ன சொல்கிறார்கள் என்று கவனம் செலுத்துவோம்.

ஆனால் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின் முழுமையே வழிகாட்டும் தத்துவமாகவும், பாட்டாளி வர்க்கத்தின் போரில், போர்த்தந்திர வரையறுப்பாகவும் அமைகின்றது.

இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஏற்கெனவே கட்சியைப் பற்றிய அடிப்படை விசயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறித்து, முதலில் மாணவர்கள் போல்சுவிக் கட்சி வரலாறு, லெனினியத்தின் அடிப்படைகள் 1, 8 அத்தியாயங்கள், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை ஆகியவற்றைக் கற்க வேண்டும்.

அதன்பின் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு” என்னும் இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்டாலினின் 17,18-ம் சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப் படிக்க வேண்டியவை.

இதற்குப் பின் ‘மாணவர்’ இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தைப் பற்றி லெனின் எழுதியவற்றைப் படிக்க வேண்டும். (இந்தப் பகுதிகள் லெனினும், பிரிட்டனும் என்ற நூலிலும், மார்க்சு – எங்கெல்சு – மார்க்சியம் என்ற நூலிலும் லெனின் தேர்வு நூல்களிலும் உள்ளன). பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியப் போரைப் பற்றிக் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்பதற்கு சோசலிசமும் போரும், போரும் தொழிலாளர்களும் என்ற நூல்களையும் இறுதியாக கம்யூனிஸ்ட் அகிலத்தை தோற்றுவிக்க அதன் வேலைகள் குறித்து லெனின் எழுதியவையும் படிக்கப்பட வேண்டும்.

மார்க்சிய மாணவர் தம் தொடக்க கட்டத்தில் லெனினும் ஸ்டாலினும் கட்சியைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படித்த பின் மார்க்சு எங்கெல்சு எழுதியவற்றைப் படித்தால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவை அனைத்தும் (பிரிட்டன் பற்றிய எங்கெல்சின் கட்டுரைகள் தவிர) சிறிய நூல்கள் தான் மார்க்சு எங்கெல்சு தேர்வு நூல்களின் இரு தொகுதிகளில் அடங்கியுள்ளன.

கட்சி பற்றிப் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரைகளை நான்கு தலைப்புகளில் பின்வருமாறு கொடுக்கிறோம்.

(i) மார்க்சு – எங்கெல்சு கட்சி பற்றிக் கூறியது
(ii) லெனினும் புதுப்பாணியிலான கட்சியும்
(iii) இரண்டாம் அகிலத்தில் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்.
(iv) கம்யூனிஸ்ட் அகிலம்.

(தொடரும்)

நூல் : மார்க்சிய மூல நூள்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க