பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 5 (இறுதி)
பாகம் 4 : விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள்
1848-1849-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864-ல் மார்க்ஸ் ”சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அதைப் பத்தாண்டுக் காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 1870-80-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும் கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை . மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத்துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது.
மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.
படிக்க :
♦ மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் ரசிய மொழி தெரியும்; ரசிய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ரசிய விசயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள், ரசியப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள், ரசியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோசலிஸ்டுகளாக ஆவதற்குமுன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின்மீது பகைமை கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால்தான், மிகப் பலம்வாய்ந்த ஜாரிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில ரசியப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.
மறுபுறத்தில், கானல் நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, ரசிய சோசலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான இலட்சியமாகிய அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது எனும் இலட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான இலட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்றுகூட அவர்கள் கருதினார்கள்.
’பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும், ரசியாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்கம் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள்.
யதேச்சாதிகார ரசியா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்போதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870-ல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ரசியா ஒரு மிக அனுகூலமான சர்வதேச நிலையை வகித்து வந்தது. அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் யதேச்சாதிகார ரசியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ரசியாதான், போலிஷ் மக்களையும், ஃபின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ரசியாதான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ரசியாதான், நவீன ஐரோப்பா தன்னை போர்ச் சுமைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான், மேற்கத்திய தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ரசியாவில் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுவதை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் விரும்பினார். அவரது மறைவால் ரசியப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டனர்.
பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக !
(முற்றும்)
வி.ஐ.லெனின்
(1895 இலையுதிர் காலத்தில் எழுதப் பெற்றது. 1896-ல் “ரபோத்னிக்” (உழைப்பாளி) என்ற திரட்டு, எண் 1-2-ல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது)
பிளாட்டோவின் அரசியல், இயற்கையில் புரட்சி அந்தந்த காலங்களின் தேவையை கருத்தில் கொண்டு நிகழ்கிறது, வாழ்நிலை சிந்தனையை தீர்மானிப்பதோடு நில்லாமல் செயலையும் வடிவமைக்கிறது… ஒத்தது அறிந்து உயிர் வாழ்வதும் மரணத்திற்கான முயற்சியே…