பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 4

பாகம் 3 : ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ்

முதன் முதலாக பிரான்சில் தோன்றி, பின்னர் மற்ற மேலைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848-ம் ஆண்டுப் புரட்சி மார்க்சையும் எங்கெல்சையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. இங்கே, ரைனிஷ் பிரஷ்யாவில், கொலோன் நகரிலிருந்து வெளிவந்த ஜனநாயகத் தன்மையுள்ள Die Neue Rheinische Zeitung என்ற பத்திரிகையை அவர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தினார்கள். ரைனிஷ் பிரஷ்யாவில் எல்லாப் புரட்சிகர ஜனநாயக வேட்கைகளின் இதயமாக, ஆன்மாவாக இவ்விரு நண்பர்களும் விளங்கினர்.

மக்களின், சுதந்திரத்தின் நலன்களைப் பாதுகாத்து அவர்கள் பிற்போக்குச் சக்திகளைக் கடைசிவரை எதிர்த்துப் போராடினர்; பிற்போக்குச் சக்திகளின் கை மேலோங்கியது என்பது நாமறிந்த சங்கதிதான். Die Neue Rheinische Zeitung தடை செய்யப்பட்டது. நாடு கடத்தப்பட்ட காலத்தில் தமது பிரஷ்யக் குடியுரிமையை இழந்துவிட்டிருந்த மார்க்ஸ் பிரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதந்தாங்கிய மக்கள் எழுச்சியில் எங்கெல்ஸ் பங்கு கொண்டார், சுதந்திரத்துக்காக மூன்று முனைகளில் போர் புரிந்தார். கலகக்காரர்கள் தோல்வியுற்ற பிறகு சுவிட்சர்லாந்து வழியே லண்டனுக்கு வந்து சேர்ந்தார்.

மார்க்சும் அங்கேயே குடியமைத்துக் கொண்டார். எங்கெல்ஸ் மீண்டும் ஒரு குமாஸ்தா ஆகிவிட்டார். கொஞ்ச காலம் கழித்து, தாம் 1840-1850-ம் ஆண்டுகளில் வேலை பார்த்த அதே மான்செஸ்டர் வர்த்தக நிலையத்திலேயே பங்குதாரராக ஆனார். 1870 வரை அவர் மான்செஸ்டரிலேயே வாழ்ந்து வர, மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வந்தார்.

படிக்க :
♦ அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

இருந்தபோதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை அநேகமாக தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள், விஞ்ஞான சோசலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணிபுரிவதைத் தொடர்ந்தார்கள். 1870-ம் ஆண்டில் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்.

கடும் உழைப்பு நிறைந்த அவர்களுடைய பொதுவான அறிவுத்துறை வாழ்க்கை 1883-ம் ஆண்டு வரை நீடித்தது. 1883-ம் ஆண்டில் மார்க்ஸ் காலமானார். மார்க்ஸ் பங்குக்கு இந்தப் பொதுவான அறிவுத்துறை வாழ்க்கையின் பலன் மூலதனம் என்ற நூலாகும்; நமது சகாப்தத்திலேயே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய நூல்கள் யாவற்றிலும் தலைசிறந்த நூல் இதுதான்.

எங்கெல்சைப் பொறுத்தமட்டில் அதன் பலன் பல பெரிய, சிறிய நூல்கள் எழுதியதுதான். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கல் நிறைந்த தோற்றங்களைப் பற்றிய பகுப்பாராய்ச்சியிலே மார்க்ஸ் ஈடுபட்டார். எங்கெல்ஸ் எளிய நடையில் எழுதிய நூல்களில், அடிக்கடி எதிர்வாதங்களைச் சந்திக்கிழுத்துத் தாக்கும் நூல்களில் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தையும் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தையும் செயல்படுத்திய வழியிலே, மிகப் பொதுவான விஞ்ஞானப் பிரச்சினைகளையும், பல வகைப்பட்ட சென்றகால, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் விளக்கினார்.

எங்கெல்சின் இந்நூல்களில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவோம்: டூரிங்குக்கு மறுப்பாக எழுதிய வாதவடிவம் கொண்ட நூல் (இந்நூலில் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம். சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட மாபெரும் பிரச்சினைகள் ஆராயப் பட்டுள்ளன); குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல் (இது ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பின் மூன்றாம் பதிப்பு 1895-ல் வெளிவந்தது); லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற நூல் (இதன் ரசிய மொழிபெயர்ப்பு கி.பிளெஹானவ் குறிப்புகளுடன் ஜெனிவாவில் 1892-ல் வெளிவந்தது); ரசிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கட்டுரை (ஜெனீவாவில் வெளிவந்த Der Sozial-demokrat) ”சமூக ஜனநாயகவாதி” என்ற பத்திரிகையின் 1, 2 இதழ்களில் ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டது); குடியிருப்புப் பிரச்சினையைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள்; கடைசியாக, ரசியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு சிறிய, ஆனால் மதிப்பு மிகுந்த கட்டுரைகள் (ரசியாவைப் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற நூல், ரசிய மொழியில் வேரா ஸசூலிச் பெயர்த்தது, ஜெனீவா, 1894).

மூலதனத்தைப் பற்றிய தமது விரிவான வேலையை முடிக்குமுன்னர் மார்க்ஸ் காலமானார். இருந்தாலும், நகல் குறிப்புகள் வடிவத்தில் அது ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டிருந்தது. தமது நண்பர் மறைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளைத் தயாரித்து வெளியிடும் சிரமமிக்க வேலையை எங்கெல்ஸ் மேற்கொண்டார். அதன் இரண்டாம் தொகுதியை 1885-ம் ஆண்டிலும், மூன்றாம் தொகுதியை 1894-ம் ஆண்டிலும் அவர் வெளியிட்டார் (அவரது மரணம் நான்காம் தொகுதியைத் தயாரிப்பதைத் தடுத்துவிட்டது). இவ்விரு தொகுதிகள் விசயத்தில் எங்கெல்ஸ் அபாரமாக உழைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார் என்று ஆஸ்திரிய சமூக – ஜனநாயகவாதி ஆட்லெர் குறிப்பிட்டது மிகவும் சரி.

உண்மையிலே மூலதனத்தின் இவ்விரு தொகுதிகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பணியேயாகும். மனதையுருக்கும் நட்பைக் குறித்துப் பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு. ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தனது விஞ்ஞானத்தைப் படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள், இரண்டு போராட்ட வீரர்கள், அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். எங்கெல்ஸ் எப்பொழுதுமே – மொத்தத்தில், நியாயமாகத்தான் – மார்க்சுக்கு முதன்மை கொடுத்தார். பழைய நண்பர் ஒருவருக்கு எழுதுகையில் ‘மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன்தான்” என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் உயிரோடிருக்கும்போது அவர்மீது எங்கெல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும், மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த புனித மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்தக் கடின சித்தமுள்ள போராட்ட வீரருக்கு, கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்குள், ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயம் இருந்தது.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க