பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 3

பாகம் 2 : தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ்

ங்கெல்சுக்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்ப துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக் கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விமோசனம் சோசலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டுபோய்விடும்.

மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும் போதுதான் சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன. இந்த நூல் முதலாளித்துவ அமைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தின் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணிபோல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845-ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.

இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோசலிஸ்டு ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களுடன் மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோசலிசப் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். 1844-ம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பிவரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோசலிஸ்டு ஆகிவிட்டார்.

இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தாம் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோசலிசத்தின் அடிப்படைகள் – அதன் முதன்மையான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் – சொற்பமான அடங்கியுள்ளன. ”புனிதக் குடும்பம்” என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும்.

எல்லா வகையான யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே ”விமர்சன” கண்கொண்டு பார்ப்பதோடு நின்று விட்டது. இந்தக் கனவான்கள் – பௌவர் சகோதரர்கள் – பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதப் பிறவியின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. புனிதக் குடும்பம் வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும் ரூகேயும் நடத்திய Deutsch-Franzosische Jahrbicher என்ற பத்திரிகையில் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்கு ஒரு நகல் என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார்.

அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கிவிட்டார்.

1845-லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்சிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் லீக்” என்ற நிறுவனத்துடன் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த லீக் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்ற புகழ்பெற்ற நூல் 1848-ல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் ஒழுங்கமைப்பு பெற்று அணிதிரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க