மார்க்சின் மூலதனம் எனும் நூலைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ளவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே இந்த வெளியீட்டில் இடம் பெறுகிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின. மூலதனம் எனும் நூலின் மிகவும் முக்கியமான புதுக்கருத்துகளை உருவாக்குவதில் எங்கெல்ஸ் செயலூக்கமாகப் பங்கேற்றார் என்பதையும் தமது ஆலோசனைகள், மெய்த்தகவல்கள், விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்க்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது. எங்கெல்சின் பல சிறந்த நூல்கள் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையான கருத்துகளை வளப்படுத்துவதிலும் ஆதாரப்படுத்திக் காட்டுவதிலும் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மார்க்ஸ் வாழ்ந்த காலத்துக்குள் அவருடன் எங்கெல்ஸ் பூண்டிருந்த பல ஆண்டு கால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக மூலதனத்தின் இரண்டு கடைசித் தொகுதிகளை வெளியிடும் மாபெரும் சாதனை நிறைவேறியது. இவற்றை மார்க்ஸ் கையெழுத்துப் பிரதி வடிவில் விட்டுச் சென்றிருந்தார். இதோடு மூலதனத்தின் முதல் தொகுதியும் மார்க்சின் வேறு பல நூல்களும் புதிய பதிப்புகளில் எங்கெல்சின் முயற்சியால் வெளியிடப்பட்டன. எங்கெல்சால் பிரசுரிக்கப்பட்ட மார்க்சின் நூல்கள் பலவற்றுக்கு அவர் முகவுரைகள் எழுதினார். இம்முகவுரைகள் மார்க்சிய போதனையை அதன் எல்லா விரோதிகளிடமிருந்தும் பாதுகாக்கும் பணியில் அருந் தொண்டாற்றியுள்ளன.

இந்தத் திரட்டில் எங்கெல்சின் ஒரு சில சிறிய நூல்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டுள்ளன. இவை வடிவில் சுயேச்சையானவை. அதே சமயம் மார்க்சின் மூலதனத்துடன் நேரடியான தொடர்புடையவை.

இந்தத் திரட்டின் முதல் பாகம் மூலதனத்தின் முதல் தொகுதி குறித்த மூன்று மதிப்புரைகள் கொண்டதாகும். 1867-ல் மூலதனத்தின் முதல் தொகுதி வெளிவந்ததன் பின்னால் மார்க்சும் எங்கெல்சும் எதிர்கொள்ள நேர்ந்த கடமைகளில் ஒன்று, முதலாளித்துவ வர்க்கம் தான் பகைக்கும் இந்தத் தத்துவத்தை முளைப்பருவத்திலேயே நெரித்தழிக்கும் நோக்குடன் கையாண்ட அமுக்கி மறைக்கும் சதியை உடைத்தெறிவதாகும். 1859-ல் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்குச் செலுத்தும் ஒரு பங்கு எனும் நூல் தோன்றியவுடன் ஒரு அமுக்கி மறைக்கும் சதியுடன் முதலாளித்துவ வர்க்கம் எதிரிட்டது. மூலதனத்தின் முதல் தொகுதியையும் இதை அச்சுறுத்தியது. மார்க்சின் சக போராட்டத் தோழர்களும் முதலாவதாக எங்கெல்சும் இந்தத் திட்டத்தைச் செயல் குலைக்கு பல முயற்சிகள் மேற்கொண்டனர். அந்தச் சமயத்தில் தொழிலாளர் பத்திரிகைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. இந்த நாலில் அடங்கியிருந்த கருத்துகளை மேலும் பரப்பும் ஆற்றலுடைய வாசகர்கள் மத்தியில் இந்த நூலின் மீது ஆர்வத்தை உண்டாக்குவது முதலாளிகளின் கைகளில் இருந்து வந்த பொதுவான பத்திரிகைகளின் மூலம், மறைமுகமான முறையில் மட்டுமே சாத்தியம். முதலாளித்துவப் பத்திரிகை ஆசிரியர்களின் அவநம்பிக்கையினை அகற்றும் பொருட்டு எங்கெல்ஸ் மாபெரும் நுண்திறனைக் கையாள வேண்டி இருந்தது. ஜாராட்சியின் தணிக்கைக்கு இலக்கான வெளியீடுகளில் ருஷ்யப் புரட்சியாளர்கள் பயன்படுத்திய மொழியினை ஒத்ததான, மெய்யாக ஈசாப் பாணி மொழியில் அவர் பல மதிப்புரைகளை எழுதின் முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியர்களின் வர்க்கத் தணிக்கையால் விளைவாக எங்கெல்சின் சில மதிப்புரைகள் பிரசுரிக்கப்பட சில மதிப்புரைகள் புரட்டப்பட்டன.  (நூலிலிருந்து பக்.3 – 4)

மதிப்பின் விதி மற்றும் லாபத்தின் விகிதம் பற்றிய எங்கெல்சின் கட்டுரை மூலதனத்தின் மூன்றாம் தொகுதிக்கு ஒரு முக்கியமான சேர்ப்பாகும். அதே சமயம் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தைச் சரியாக முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும். மார்க்சை விமரிசனம் செய்த எண்ணற்ற பலர் மூலதனத்தின் முதல் தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் குறை கூறி அதை நிரூபிப்பதற்கு என எழுதிக் குவித்து வீணாக்கிய காகித மலைகள் எத்தனையோ. தமது கட்டுரையில் எங்கெல்ஸ் அவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தார்.

மார்க்சியத்தின் இந்தப் பகிரங்கமான விரோதிகளையும் மார்க்சியத்தின்  நண்பர்கள் போல வேஷமிடும் எதிராளிகளையும் ஒருங்கே முழுமையாக அம்பலப்படுத்தினார். இந்த நட்பு வேஷம் போட்டவர்கள் மதிப்பை ‘ஒரு தர்க்க மெய்யாகச்’ சுருக்கினார்கள் (சோம்பார்ட்) அல்லது ‘தத்துவார்த்த ரீதியில் அவசியமான ஒரு கற்பனை’ (ஸ்மித்) ஆக்கினார்கள். மதிப்பு என்பது தத்துவார்த்த வழியில் மட்டுமன்றி வரலாற்று வழியிலார் கூட உற்பத்தியின் விலைக்கு முன்னோடி எனும் மார்க்சின் புதுக்கருத்தை வைத்துத் தொடர்ந்து செயல்படும் எங்கெல்ஸ், பரிவர்த்தனை உதித்தெழுந்து வளர்ச்சியடைவதை ஒட்டி மதிப்பின் வரலாற்று வழித் தோற்றம் ஏற்படுவதையும், சாமான்ய பண்ட உற்பத்தி முதலாளித்துவத்தால் மாற்றீடு செய்யப்படும் போது மதிப்பில் இருந்து உற்பத்தியின் விலைக்கான வரலாற்று மாறுதல் ஏற்படுவதையும் புலப்படுத்துகிறார். எங்கெல்சின் கட்டுரை மதிப்புப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் மெய்யான பொருள் முதல்வாத விளக்கத்திற்கான ஓர் அரிய உதாரணமாகும். மார்க்சியத்தை ஊறு செய்யும் எல்லாவகையான சித்தாந்தப் புரட்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்குரிய ஈடும் எடுப்புமில்லாப் பேராயுதமாக இது இன்னும் விளங்குகிறது.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

சாமானிய பண்ட உற்பத்தியின் இயல்பு, அதிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும் நடைமுறை பற்றிய தெள்ளத் தெளிவான தன்மைக் குறிப்புகள் இக்கட்டுரையில் அடங்கியிருக்கின்றன என்ற மெய்விவரத்தில் தான் இதன் தனி முக்கியத்துவம் காணக் கிடக்கிறது. மதிப்பின் விதியை எங்கெல்ஸ் பண்ட உற்பத்தியின் இயக்க விதியாகக் காட்டுகிறார். மதிப்பின் விதி செயல்படும் சகாப்தத்தின் அதி தீர்க்கமான அளவை வலியுறுத்துகிறார். பல வரலாற்று உதாரணங்கள் மூலம் அவர் முதலாளித்துவ உறவுகளின் தோற்றத்தைத் தடம் கண்டு, இந்த உறவுகள் எவ்வாறு உற்பத்தித் துறையில் பரவின என்பதையும் காட்டுகிறார். (நூலிருந்து பக்.7-8)

நூல் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
ஆசிரியர் : பிரடெரிக் எங்கெல்ஸ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க