“என் கண் முன்னாலேயே என் தந்தையைக் கொன்றார்கள்” என்கிறார் பத்து வயதான சாபில். சாபிலின் தந்தை அப்துல் ஜலீல் டிசம்பர் 19-ம் தேதி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, போலீசு சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர்.

டிசம்பர் 19-ம் தேதி ஜலீலும் அவருடைய இளைய மகனான சாபிலும் மாலை 4 மணியளவில் தொழுகைக்காக வீட்டிலிருந்து கிளம்பினர். அப்போது எங்கிருந்தோ வந்த போலீசின் துப்பாக்கி குண்டு ஜலீலின் இடது கண்ணில் பாய்ந்தது. உடனடியாக அவர் உயிரிழந்தார்.

‘கட்டுக்கடங்காத கூட்டம்’ வன்முறையில் இறங்கியதை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசு தெரிவித்தது. ஆனால், சாபில், அங்கே கட்டுக்கடங்காத கூட்டமும் இல்லை; வன்முறையும் வெடிக்கவில்லை எனக் கூறுகிறார்.

49 வயதான ஜலீல், மங்களூரு நகரத்தில் உள்ள பந்தர் பகுதியில் மீன் வியாபாரியாக உள்ளார்.

“அன்றைக்கு அப்பா, சற்று முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். என்னுடைய அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவினார். எங்களை பள்ளியிலிருந்து அழைத்து வந்தார். எங்கள் வீட்டிலிருந்து சற்று தள்ளி நடந்திருப்பார்; அதற்குள் அந்தக் கொடூர சம்பவம் நடந்துவிட்டது.” என்கிறார் ஜலீலின் 14 வயது மகள் ஷிபானி.

இந்தக் குடும்பம் ஜலீலின் வருமானத்தை மட்டுமே நம்பி இயங்கியிருக்கிறது. 32 வயதான சயீதா செய்வதறியாது, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

ஜலீல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவர். அவருக்கு குடியுரிமை திருத்த சட்டம் என்ன என்பது குறித்துகூட எதுவும் தெரிந்திருக்காது. அவர் எந்த போராட்டத்திலும் இதுவரை கலந்துகொண்டதில்லை. மங்களூரு போராட்டத்துக்கும் அவருக்கும்கூட எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஜலீலின் உறவினர் சகினா.

மங்களூரு போராட்டத்தின்போது ஜலீல் உள்பட இருவர் போலீசு துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். போலீசு கூற்றுக்களை நேரடி சாட்சியங்களோ அல்லது வீடியோ ஆதாரங்களோ உண்மை எனக் கூறவில்லை. ஆனால், பலர் மீது போலீசு பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஜலீலை குண்டு துளைத்த சில நிமிடங்களுக்குப் பிறகு 22 வயதான நவுசீன் குத்ரோலி அதே போன்ற முறையில் கொல்லப்பட்டர். நவுசீனும் அவருடைய நண்பர் முகமது ஹனிஃபும் வெல்டிங் ஒர்க்‌ஷாப்பிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, போலீசின் குண்டு நவுசீனை துளைத்தது.

நவுசீன் குத்ரோலி குடும்பத்தினர்.

“அந்த இடமே கண்ணீர் புகை குண்டால் வெடித்துக்கொண்டிருந்தது. புகையால் என்ன நடந்துகொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அடிவயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து நவுசீன் கீழே கிடந்தான்” என்கிறார் ஹனிஃப்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நவுசீனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த இரண்டு போலீசு படுகொலைகளும் மங்களூருவில் உள்ள முசுலீம்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கின்றன. மருத்துவமனைக்கு போலீசு கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், மசூதிக்குள்ளும் மசூதி அலுவலகத்துக்குள்ளும் போலீசு படை புகுந்ததும் போர் நடைபெறும் இடங்களிலும்கூட காணமுடியாத காட்சி. இவை அனைத்தும் வீடியோ ஆதாரமாக வெளியாகியுள்ளன.

மசூதியை குறிவைத்து போலீசு ஒருவர் துப்பாக்கியால் சுடும் காட்சி ஒன்றும்கூட வீடியோவாக பதிவாகியுள்ளது.

கர்நாடகத்தை ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக தட்சிண கன்னட மாவட்டத்தில் டிசம்பர் 19 – டிசம்பர் 23-ம் தேதி வரை இணைய சேவையை நிறுத்தி வைத்தது. மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசின் அடாவடித்தனங்களை மூடிமறைக்கவே இத்தகைய தடைகளை அரசாங்கம் அமலாக்கியதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

“நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கேயும்கூட அமைதியான முறையிலேயே நடந்தது” என்கிறார் ஆசாத் கண்டிகா என்ற உள்ளூர் பத்திரிகையாளர்.

மங்களூரு போலீசு, பல போலீசார் கல்வீச்சு சம்பவத்தால் காயமடைந்ததாக கூறினர். உள்ளூர் மருத்துவமனையில் நேரடி விசாரணையில் இறங்கியபோது ஒருவர்கூட அங்கே சிகிச்சையில் இல்லை. மருத்துவர் ராஜேஸ்வரி தேவி, மொத்தம் 66 போலீசார் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அதில் 64 பேருக்கு முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக அனுப்பப்பட்டதாகவும் இருவர் மட்டும் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறுகிறார். அவையும் சொல்லும்படியான காயங்கள் இல்லை என்கிறார்.

படிக்க:
அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
♦ CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

இந்தப் படுகொலை நடந்து முடிந்தபோது, எடியூரப்பா இரு குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ. 10 லட்சம் தருவதாக அறிவித்தார். ஆனால், 25-ஆம் தேதி, முழு விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வரும்வரை நிவாரணத்தில் ஒரு பைசாகூட தரமுடியாது எனக் கூறிவிட்டார்.

கொல்லப்பட்டவர்களின் உடலும், போலீசால் தாக்கப்பட்டவர்கள் ஹைலேண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காயமடைந்தவர்களின் உறவினர்களும் போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் கூடினர். சட்ட நடைமுறைக்காக மருத்துவமனை நிர்வாகம் போலீசை அழைத்தபோது, மருத்துவமனை என்றுகூட பார்க்காமல் கண்ணீர் புகை குண்டை வீசியிருக்கிறது போலீசு.

அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் கதவை உதைத்துக்கொண்டு திறக்கிறது வெறிப்பிடித்த போலீசு. இவையாவும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

“அவர்கள் திரும்பத் திரும்ப எங்களுடைய பெயர்களை சொல்லி அழைத்தார்கள். எங்கள் மீது குண்டுகளை பொழியப்போவதாக சொன்னார்கள். அது ஒரு கொடூரமான கணம்” என்கிறார் சிகிச்சை பெற்றுவரும் முசுலீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்.

72 வயது இதய நோயாளி அப்துல் ரஹ்மான், கண்ணீர் புகை குண்டு வீச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஐ.சி.யூ. -வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைலாண்டு மருத்துவமனை இசுலாமியர் ஒருவரால் நடத்தப்படுகிறது. முசுலீம்கள் அதிகமாக வரக்கூடிய இந்த மருத்துவமனைக்கு சமீபத்திய போலீசு தாக்குதல் காரணமாக முசுலீம்கள் இங்கே வர அஞ்சுவதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அடிவயிற்றில் தோட்டா பாய்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது இம்ரான்.

படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களில் அடிவயிற்றில் துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்ட 34 வயது முகமது இம்ரானும் ஒருவர். மட்டுமல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டதால் எலும்புகள் உடைந்த நிலையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கையில் குண்டடிப்பட்ட அபுஸ் அலி.

கையில் குண்டடிப்பட்ட 40 வயது அபுஸ் அலி ஒரு தினக்கூலி தொழிலாளி.

போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது, போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த கேரள பத்திரிகையாளர்கள் பலரை கைது செய்தது போலீசு. கன்னட ஊடகங்கள் இவர்களோடு நிற்பதற்கு பதிலாக, ‘ஆயுதம் ஏந்திய கேரள நபர்கள் மங்களூருக்குள் ஊடுருவியுள்ளதாக’ செய்தி வெளியிட்டன.

கேரள அரசு தலையிட்டதன் பேரில் கைதான மீடியா ஒன், ஏசியாநெட், நெட்வொர்க் 18, 24 உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த எட்டு கேரள பத்திரிகையாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான கேரள பத்திரிகையாளர்கள் போலீசு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தனர். போலீசு சொன்னதுபோல அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பது தெரியவந்தது.

போலீசார் ஏன் இந்து பத்திரிகையாளர்கள் முசுலீம் பத்திரிகையாளர்களுடன் பணிபுரிகிறீர்கள் எனவும் கேட்டதாக மலையாள பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். வர்த்தபாரதி என்ற உள்ளூர் ஆங்கில இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் இஸ்மாயில் போலீசாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பத்திரிகையாளர் அட்டையை காட்டிய பிறகு, அவர் தாக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தைப் போன்று காவிகளின் தென்னிந்திய நுழைவாயிலான கர்நாடகத்தை போலீசு ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறார் ஊழல் மதவெறி பெருச்சாளி எடியூரப்பா. நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் இரக்கமில்லாமல் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இது ஹிட்லருக்கு இணையான மதவெறி பாசிசம் என்பதை இன்னமும் சந்தேகப்படத் தேவையில்லை.


செய்திக் கட்டுரை: சுகன்யா சாந்தா.
தமிழாக்கம் :
அனிதா
செய்தி ஆதாரம் : தி வயர்.