‘எங்கள் குழந்தைகளை ஏன் கொல்கிறீர்கள் ?’

போலீசின் தடி ரஃபீக் அகமது (55) தலையின் மீது விழுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் “தயவு செய்து வீட்டிற்கு அமைதியாகச் செல்லுங்கள். கற்களை எறியாதீர்கள்” என ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டார். டிசம்பர் 20-ம் தேதி, நண்பகல் 1.30 மணியளவில் உத்தர பிரதேசத்தின் நெக்தார் நகரத்தின் அருகே இது நடந்தது.

முறையீடு தேவையற்றது என்று நினைத்தாலும் அவர் அப்படி செய்தார். அப்பகுதியில் கூட்டம் பெரியளவில் இருந்தது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முறையான போராட்டக் கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. முசுலீம் பெரும்பான்மை கொண்ட இந்த நகரத்தில் சுமார் 100 குடியிருப்பாளர்கள் உள்ளூர் மசூதியில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்ய நைசா சாராயின் பாதைகளில் கூடியதாக அகமது கூறுகிறார்.

நைசா சராய் பகுதியில் உள்ள மசூதி.

அந்த ஊரில் நன்கு அறியப்பட்ட நகராட்சி ஒப்பந்தக்காரரான அகமதுவிடம், ஒரு காவல்துறை அதிகாரி, அவர் தொழுகைக்குப் பிறகு வெளியேறும்போது, அவரை பகிரங்கமாக அறிவிக்கச் சொன்னார். எனவே, அதை அறிவித்தார்.

அதன்பிறகு, சாதாரண உடைகளில் கைகளில் தடியுடன் தன் அருகில் நின்ற காவலரின் மீது அவருடைய பார்வை படுகிறது. “சாதாரண உடைகளில் உள்ள இவர்கள் யார்?” என அந்த அதிகாரியைப் பார்த்து கேட்கிறார் அகமது. அந்த அதிகாரியிடமிருந்து பதில் இல்லை.

ஒரு கணம் கழித்து, பாதையில் நடக்க ஆரம்பித்ததும் முதல் கண்ணீர் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. பிறகு, அகமதுவின் தலையில் ஒரு அடி விழுகிறது. வலிதாங்காமல் தலையில் கைவைக்கும்போது, கைகளில் இரத்தம் பிசுபிசுக்கிறது.

“அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிற அகமது “யாரும் கற்களை வீசவில்லை; ஆனாலும் போலீசு தடியடியில் இறங்கியது” என்கிறார்.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நெஹ்தாரில், முக்கால்வாசி பேர் முசுலீம்கள். இந்த மாதம் மோடி அரசாங்கத்தின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்கள் வெடித்ததில் இந்தியாவில் எங்கும் போலீசு நடத்திய அராஜகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது இந்த பிராந்தியத்தில்தான்.

படிக்க:
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
♦ மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம், மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கான இந்திய குடியுரிமைக்கு விரைவான பாதையை வழங்குகிறது. குடியுரிமைக்கான ஒரு மத சோதனையை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை மீறுவதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘சட்டவிரோதமாக குடியேறியவர்களை’ அடையாளம் காண இந்தியாவில் உள்ள அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி தேசிய குடிமக்களின் பதிவேட்டை தயார் செய்யப்போவதாக பலமுறை அச்சுறுத்தியதால் மில்லியன்கணக்கான இந்திய முசுலீம்கள் பயம் கொண்டனர். இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கூறி, இது முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறினார்.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் 24 பேர் கொல்லப்பட்ட பின், அவர்களில் 17 பேர் உத்தரபிரதேசத்தில் மட்டும் பலியான பின், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி இந்த நடைமுறையாக்கல் பற்றி முழுமையாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்று அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மட்டும் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏன் ஏற்பட்டன?

அரசியல் அனுமதி பெற்ற போலீசு வன்முறை, நெக்தார் நகரத்தில் உள்ள முஸ்லிம்கள் மீது ஏவப்பட்டது. புல்லட் காயங்களால் இரண்டு இளைஞர்கள் இறந்தனர். இரண்டு இளைஞர்கள் நகர மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பலர் அச்சத்தால் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

“நாங்கள் போராடக்கூட இல்லாதபோது இது நடந்தது” என்கிறார் மொகமது சையது. இறந்துபோன இவருடைய தந்தை ரஷீது அகமது 17 ஆண்டுகளாக நெக்தாரின் தலைவராக இருந்தவர். “இந்த ஊரில் ஒரே ஒரு எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்”

நைசா சாராயின் பல குடியிருப்பாளர்கள் ரபீக் அகமது சொன்னதை எதிரொலித்தனர். அவசியமே இல்லாமல் தடியடி தொடங்கியதாக அவர்கள் கூறினர். இதற்கு சாதாரண உடையில் இருந்த ஆண்கள், போலீசின் நண்பர்கள் எனப்படுவோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்கள் என யூகிக்கிறார்கள்.

தடியடி தொடங்கியதும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அதன்பின் துப்பாக்கிகள் வெடிக்கத்தொடங்கின. போலீசு இதை வழக்கம்போல மறுக்கிறது. ஆனாலும், ‘அவர்கள் ஒருவர், அல்லது இருவரை கொல்லுங்கள்’ என துப்பாக்கியால் சுடும் போலீசு வெறித்தனமாகப் பேசுவது வீடியோவாக பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் வீடுகளுக்குள் நுழைந்ததாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். ஒரு வீடியோ காட்சியில் ஒரு முதியவர் போலீசு வாகனத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதும் போலீஸ்காரர்கள் லத்திகளையும் கைத்துப்பாக்கியையும் வைத்திருப்பது தெரிகிறது. அந்த குழப்பமான சூழல் துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தால் நிறுத்தப்படுகிறது.

போலீசால் இழுத்துச்செல்லப்பட்ட அந்த முதியவர் ஷம்சுதீன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். “அவரால் இனி நடக்க முடியாது; யாராவது ஒருவரின் ஆதரவால் மட்டுமே நடக்க முடியும்” என்று அவரது சகோதரர் சிராஜுதீன் கூறுகிறார். “போலீசார் பலவந்தமாக அவருடைய வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கதவைத் திறக்க உதைக்கும்போது, கைப்பிடியை உடைத்தனர்.” அந்த அடையாளம் இன்னும் கதவுகளில் உள்ளது.

“மசூதிக்கு அடுத்ததாக அவருடைய வீடு இருப்பதால்தான் அவர்கள் குறிவைத்துள்ளனர்” என்று அவரது சகோதரர் கூறினார். ஷம்சுதீனின் மனைவியும் குழந்தைகளும் பக்கத்து வீடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். எனவே, காவல்துறையினர் அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குடும்பத்தினருக்குத் தெரியாது.

போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்சுதீன் வீட்டுக்கதவு சேதப்படுத்தப்பட்டுள்ள படம். உள்படம் – அவரது சகோதரர் சிராஜுதின்.

நூறு மீட்டர் தொலைவில், நைசா சராயில் மற்றொரு வீடு பூட்டப்பட்டது. முகமது ஹசீனை போலீசு அழைத்துச் சென்றபின், அவரது மனைவி ஊரை விட்டு வெளியேறியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். “அவர் உண்மையில் போலீசாரின் கால்களைப் பிடித்து தன் கணவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார், ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகிறார்.

மற்றொரு சம்பவத்தில், ஒரு இளம் பெண்ணும் அவரது தாயும் காவல்துறையினர் தங்கள் வீட்டைத் தாக்கி, சமையலறைக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்ததாக கூறுகின்றனர். டிவியை அடித்து நொறுக்கியுள்ளனர், மின் விசிறியை வளைத்துள்ளனர், தங்கள் வீட்டின் புனரமைப்பிற்காக அவர்கள் சேமித்த ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். 60 வயதான ஜரீனா கதுன், “நாங்கள் கைக்கட்டி நின்றிருந்தபோதும் அவர்கள் எங்களை அடித்தார்கள்” என குரல் உடைந்து கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன்பின், அவருடைய மகனை அழைத்துச் சென்றிருக்கிறது போலீசு. “அண்ணனை அழைத்துச் செல்வதாக இருந்தாலும் ஏன் எங்கள் வீட்டை நொறுக்க வேண்டும்? எங்களுடைய பணத்தை திருட வேண்டும்” எனக் கேட்கிறார் ஜரீனாவின் மகள்.

இதேபோன்ற சம்பவத்தை மற்றொரு இளம்பெண்ணும் பகிர்ந்துகொண்டார். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த போலீசு கேஸ் சிலிண்டரின் இணைப்பு குழாயை வெட்டிவிட்டு வீட்டை எரிப்போம் என மிரட்டியிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வீட்டிலிருக்கும் ஆண்கள் போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. போலீசாரிடம் இதுகுறித்து கேட்கும்போது, காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளிக்கச் சொல்லுங்கள் என ஸ்க்ரால் இணையதளத்தின் நிருபரிடம் கூறியுள்ளனர்.

இரத்தக் களறியாக்கப்பட்ட அப்பகுதி  – துப்பாக்கி சூட்டில் பலியான அனாஸ் (உள்படம்)

வெள்ளிக்கிழமை, தனது 7 மாதக் குழந்தைக்கு பால் வாங்கச் சென்ற 21 வயதான அனாஸ் உசைனின் கண்களை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது போலீசு குண்டு ஒன்று. அனாஸ் உசைன் அப்பகுதியைச் சேராதவர். சம்பவ இடத்தைக் கடந்து சென்றவருக்குத்தான் இந்த துயரம் நேர்ந்துள்ளது.

அதுபோல, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருந்த, வீட்டை வீட்டு அதிகம் வெளியில் போகாத முகமது சுலைமான் (20), தொழுகைக்குச் சென்றுவிட்டு ஒரு கடைக்கு அருகே நின்றிருந்தபோது போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். போலீசு அவரை அழைத்துச் சென்றதை பலர் பார்த்துள்ளனர்.

சில மணி நேரம் கழித்து அவரது உடல் அருகே இருந்த குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய வயிற்றை துளைத்த குண்டு, முதுகின் வழியே வெளியேறியிருக்கிறது. சுலைமானின் உடலைக்கூட தர மறுத்திருக்கிறது போலீசு.

சிவில் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த சுலைமான் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். (புகைப்படத்தில் இடது பக்கம் நிற்பவர்)

“முதலமைச்சருக்கோ, பிரதமருக்கோ குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியெனில் அவர்கள் எங்கள் குழந்தைகளை வாழ விடமாட்டார்கள் என பொருளாகிறதா? எங்கள் குழந்தைகளை அவர்கள் ஏன் கொல்கிறார்கள்?” எனக் கேட்கிறார் சுலைமானின் தந்தை ஜாஹிர் உசைன்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என்கிறார் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்துக்கொண்டிருக்கும் முகமது சமி.

“முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒரு மனிதராக மாநில முதல்வரே இருக்கும்போது, வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்கிறார் ஒரு நடுத்தர வயது மனிதர்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாக போலீசு வயர்லெஸில் கூறும் ஆடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தக் குரல் உள்ளூர் போலீசு அதிகாரியுடையது என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

‘நான் மக்களை பாதுகாப்பவன்’ என என்னதான் கூவிக்கூவி அறிவித்தாலும் இந்துத்துவ காவிகளின் பாசிச திட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது உ.பி.யில் நடந்த இந்தக் கொலைகள்.

அனாஸ் ஹுசைனின் உறவினர் ஸ்க்ரால் நிருபருக்கு அளித்த பேட்டி :

எங்களுக்கு நீதி வேண்டும் ! – போலீசால் கொல்லப்பட்ட சுலைமானின் சகோதரி :


செய்திக் கட்டுரை: சுப்ரியா சர்மா.
அனிதா
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க