Thursday, November 7, 2024
முகப்புசெய்திஇந்தியாஇந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை, அரசு ஒடுக்கியவிதம் பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் ஹபீப்.

-

“அலிகர் முசுலீம் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினரின் இத்தகைய அடக்குமுறை ஆங்கிலேயர்களின் காலத்தில்கூட இருந்ததில்லை” என பிரபல வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் கூறியுள்ளார்.

தனது வாழ்க்கையில் சிறந்த பகுதியை அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் கழித்ததாகக் கூறும் இர்பான் ஹபீப், 1969 முதல் 1991 வரை பேராசிரியராக இந்தப் பல்கலையில் பணியாற்றியவர். இதே பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியராக இவருடைய தந்தை முகமது ஹபீப்பும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

1938-ம் ஆண்டில் இந்திய அரசு சட்டத்தின் கீழ் அப்போதைய ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் நிறுவப்பட்டபோது, ஹபீப் ஒரு குழந்தையாக வளாகத்தில் கண்ட ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப்

“மாணவர்கள் போலீசாருடன் மோதினர். காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு ஆங்கிலேயர், அவர் மாணவர்களால் தாக்கப்பட்டார். அப்போதும் போலீசார் வளாகத்திற்குள் நுழையவில்லை. இதுதான் அன்றைய கட்டுப்பாடு”

அவரைப் பொறுத்தவரை, அப்போதைய சார்பு துணைவேந்தர் சர் ஷா சுலைமான், பின்னர் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய துணைவேந்தராக ஆனவர், கிளர்ந்தெழுந்த மாணவர்களை அமைதிப்படுத்த வந்தார். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். இந்த நிலையிலும்கூடம மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை தடுக்க துணை வேந்தர் பேரா. தாரிக் மன்சூர், போலீசை அழைத்தது விமர்சனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார் இர்பான் ஹபீப்.

“போலீசை அழைப்பதன் மூலம், பல்கலைக்கழக நிர்வாகம் விமர்சினத்தை வரவழைத்துக்கொண்டுள்ளது. அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது” என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

விடுதிகளை வலுக்கட்டாயமாக காலி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வியப்பை வெளிப்படுத்தினார். “பொதுவாக பல்கலைக்கழகம் மூடப்படும் போது, மாணவர்கள் தானாக முன்வந்து வீட்டிற்குச் செல்வார்கள். ஆராய்ச்சி அறிஞர்களுக்கும் வீட்டிற்குச் செல்ல விரும்பாத மற்றவர்களுக்கும் விடுதி திறந்து வைப்பது இப்போது சாதாரண நடைமுறையாக உள்ளது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடுவதாக அறிவிக்கவில்லை. அவர்கள் குளிர்கால விடுமுறையை கால அட்டவணைக்கு முன்னதாக மட்டுமே அறிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஏன் மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறச் செய்தார்கள்?”

படிக்க :
CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அலிகார் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள், குறித்து பதிலளித்த அவர், தனக்குத் தெரிந்த சமீபத்தில் குடியேறிய நேபாள குடும்பம் இந்த சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் அச்சத்துடன் உள்ளது பற்றியும் அவர் கவலைப்படுவதாக தெரிவித்தார்.

“இந்த அரசு நேபாளத்திற்கு எதிராக மிகுந்த அதிருப்தியைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது இனி ஒரு இந்து நாடு அல்ல. என்ன பாசாங்குத்தனம்! பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்று அவர்கள் கோபப்படுகிறார்கள், ஆனால் நேபாளத்திற்கு எதிராக நான்கு மாத கால தடையை விதித்தனர், ஏனெனில் அது இனி ஒரு இந்து நாடாக இருக்க விரும்பவில்லை என்று முடிவு செய்தது”

மாணவர்களிடம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டிருந்த கருணையான அணுகுமுறை குறித்து நினைவு கூர்ந்த வரலாற்றாசிரியர் ஒரு நிகழ்வை விவரிக்கிறார்.

“1950-களில் பாராளுமன்றத்தில் சில வலதுசாரி எம்.பி.க்கள் நேருவிடம், எத்தனை அலிகர் முசுலீம் பல்கலையில் பொறியியல் பயின்ற மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர் என்பதைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது பதிலளித்த நேரு, “அவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்கிறார்கள்” என்று பதிலளித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் வாயடைத்து நின்றனர்.”

ஆனால், மனிதகுலம் குறித்து சிறிதும் கருணையற்ற இன்றைய இந்துத்துவ ஆட்சியாளர்களே வன்முறையாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஹிட்லரின் வரலாற்றை மட்டுமே தங்களுக்கானதாக எடுத்துக்கொள்கிறார்கள்.


கலைமதி
நன்றி :  டிரிபியூன் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க