முகப்புஉலகம்அமெரிக்காகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

-

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

________________________________________

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.

பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. “ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்” என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

_____________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

ரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் “கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்” என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் “போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்” என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.

ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் ‘சித்தாந்தம்’ என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: “ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.” ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது?

ஆனால், 60களில் ரஸ்ஸல் மீண்டும் ‘ஜனநாயகவாதி’ ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த ‘ஜனநாயக உணர்வு’ தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.

________________________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு ‘சுதந்திர’ இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் ‘விலங்குப் பண்ணை’ எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் ‘1984′ எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், ‘‘விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன” என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.

பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

“1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.”

சமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக ‘1984′ எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் “பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!” (Big Brother is watching you!) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால், இந்தச் சொற்றொடரை உருவாக்கிய ‘மேதை’யோ ஒரு போலீசு உளவாளி.

________________________________________________________

ஸ்டீபன் ஸ்பென்டர்
ஸ்டீபன் ஸ்பென்டர்

ஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். “என்கவுண்டர்’ (Encounter) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை ‘அறிவுத்தரம்’ கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.

ஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். “பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்” என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.இந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ்ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளி/ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால், என்ன துரதிருஷ்டம்! “நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்” என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால், இந்த ‘அப்பாவி முற்போக்குக் கவிஞர்’ பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் “சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்” என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் ‘அறிவாளி’யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது!

_________________________________________________________

ஆர்தர் கீஸ்லர்
ஆர்தர் கீஸ்லர்

கீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் ‘பகலில் இருள்’. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.

சோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. “அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?” என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. “அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது” என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் ‘கோமாளித்தனத்தின்’ தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. “நாம் முரணற்றவர்கள் அல்ல; முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!” என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை ‘உறிஞ்சும்’ மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. ‘தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்’ என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.

நாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். “ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.” கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.

“மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்” என்றார் கீஸ்லர். “முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே” என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.

__________________________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள்! இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.

சோசலிசத்தை ‘விலங்குப் பண்ணை’ எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் “தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல” என்று கூறிக் கொள்ளத் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ ‘மாபெரும்’ முற்போக்காளர்.

“பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்! அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? யோசித்துப் பாருங்கள்!” இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி. ஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். “ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.”

நாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க்சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே! ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த ‘இயமும்’ இல்லை.

இன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாமெனும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த ‘கலகக் கோட்பாடுகள்’, பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல; உளவு என்ற ‘அநாகரிகமான’ சொல் நீக்கப்பட்டு அது ‘தொண்டு’ “ஆய்வு’ என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு ‘சீர்திருத்தம்’ என்று பெயர் சூட்டியிருப்பது போல! இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் ‘தர்ம’ சங்கடமோ இப்போது தேவையில்லை.

எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் ‘ஒழிக்க’ அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான (Piece rate) உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.

தம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி / உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.

“சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி” என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் ‘தைரியம்’ அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் ‘தெளிவாக’ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், ‘நீங்கள் அறிவாளியா உளவாளியா’ என்று கேட்டால் “”அறிவாளியும் உளவாளியும்தான்” என்று தைரியமாகக் கூறலாம்.

“கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்” என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. “ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருளாயத சக்தியும் உள்ளது” என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது?

இந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத்திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது? இனி ‘பேரறிஞர்’ ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது? கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா? அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் ‘மறுவாசிப்பு’ செய்வதா?

“இடப்புறம் தர்க்கவியல், வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை” என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி? கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு? அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா?

‘இன்டெலிஜென்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை! இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது “ஐயா / அம்மணி! தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா?” என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.·

____________________________________________

பாலன், புதிய கலாச்சாரம், (செப்டம்பர், 1999)
நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – (வெளியீடு) 2006
____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – வெளியீடு 2006
 1. கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?…

  தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்ற ‘அறிவாளிகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை….

 2. […] This post was mentioned on Twitter by வினவு, வினவு. வினவு said: கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா? https://www.vinavu.com/2010/11/08/spy-2/ […]

 3. சுவாரசியமான கட்டுரை. கடைசி பத்தி :)))

  ஏகாதிபத்தியத்தை வெகுவாக எதிர்த்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின், தான் ஒரு சோஷலிஸ்ட் என்று திடமாகக் கூறிக் கொண்ட பெர்னார்ட் ஷா இவர்களைப் பற்றிய கருத்துகளையும் அறிய ஆவல்.

 4. பிரச்சனையை MGR நம்பியார் Rangeக்கு குறுக்க முடியாது தலைவர.. அவர்களுக்கு அப்படி தோன்றலாம் அதை socalled ஏகாதிபத்தியம் உபயோகப்படுத்திக்கொள்ளும்… எது எப்படி இருந்தாலும் முடிவில் பல வருடங்களாக இந்த பூவுலகில் communisa socialist நாடுகள் இல்லை என்பது நிதர்சனம்… அதை உஙளிடம் தேடுங்கள் பிறரிடம் தேடாதீர்… தீதும் நன்றும் பிறர் தர வாரா இல்லையா…?

 5. நல்லகாலம் கருமம் பிடிச்ச இவனுங்களோட எழுத்துக்களை படிக்க நமக்கு இங்கிலிபீஷ் தெரியாமப் போட்டு. ஆனா அதுக்காகத்தான் ஜெயமோகனையும், சு.ரா, இன்னும் சிலரையும் தமிழல் விட்டிருக்காங்களோ…….. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் மாற்று, பின் நவீனத்துவம் பேசுறவங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது……

 6. இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள் ரஷ்யா,சீனாவிலிருந்து பணம் வாங்கவில்லையா இல்லை உதவி பெறவில்லையா.இங்கிருந்து ரஷ்யாவைப் பார் சீனாவை பார் என்று பேசியவர்கள் பலர் அங்கே போய் சுற்றிப் பார்த்தது சொந்தக் காசிலா.குன்றக்குடி அடிகள்,ஜெயகாந்தன்,ராஜம் கிருஷ்ணன் போன்று பலர் போய் வந்தது யார் காசில்.

  பிராண்டியரில் வந்த ஒரு கட்டுரையை வைத்து இத்தனை திரி திரிக்கும் வினவே
  கூகுளில் தேடினால் கிடைக்கும் பல இப்படி
  வில்லன்கள் என்று இவர்களை காட்டுவதில்லையே.அந்த ஒரு கட்டுரையை
  எழுதியது யார்.பிராண்டியர் இடதுசாரி
  பத்திரிகை.அதில் அப்படித்தான் எழுதுவார்கள்.

 7. William Blum, 1986: The CIA: A Forgotten History (Zed Books) ISBN 0-86232-480-7 என்ற நூலில் இவை போன்ற பல விவரங்கள் இருந்ததாக நினைவு.
  இலங்கையில் 8,9 ஆண்டுகள் முன்பு “புதிய பூமி” என்ற அரசியல் ஏடு இத் தகவல்களைக் கொண்ட சுருக்கமான ஒரு கட்டுரையை வெளியிட்டதாக நினைவு.

  • சுந்தர ராமசாமிக்கு “ஞர்னோதயம்” பிறந்து அவர் கம்யூனிசத்தை நிராகரித்த ஆண்டாகச் சொல்லப்படும் 1957 அளவில் சி.ஐ.ஏ. தனது “கலை கலைக்காகவே” என்ற பிரசாரப் போரைத் தீவிரமாக முன்னெடுத்திருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது.
   எந்தப் புற்றில் எந்தப் பாம்பு….

 8. ///”ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே”
  //////

  உண்மை தான். நான் அதிகம் அரசியல் பற்றி தெரியாதவன். ஆனால் மேற்குறிப்பிட்ட இந்த வரிகள் உண்மை என்பதை மட்டும் நான் அறிவேன்.

  என்னுடைய நண்பர்களில் சில கமியூனீஸ்ட்களும் அடக்கம். அவர்களுடன் விவாதிக்கும் போது இந்த உண்மை புலப்படுகிறது. உதாரணத்திற்கு,

  சினா இந்தியா ஒற்றுமையை அழிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் அவர்கள் வரவேற்ப்பதை போல் தெரிகிறது. அது மட்டும் அல்லாது சினா இந்தியா பற்றி பேசும் போது அவர்கள் சினாவிற்க்கே சாதகமாக பேசுகிறார்கள்.

  கேரளா, மேற்குவங்களாம் போன்றவற்றோடு தமிழகத்தை ஒப்பிடும் போதோ அல்லது மற்ற சில சம்பவங்களை (முல்லை பெரியார்) பற்றி பேசும் போதொ அவர்கள் கமியுனிஸம் உள்ள மாநிலங்களை தான் தமது மாநிலமாக கருதி பேசுகிறார்கள்.

  கமியுனிஸம் என்ற கொள்கையில் சிக்கி தமது நாட்டையும், மாநிலத்தையும் விட மற்ற கமியுனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாட்டையோ அல்லது மாநிலத்தையோ உயர்த்தி தனதாக எண்ணி பேசுவது மிகவும் வேதனையளிக்கிறது.

  • கம்யூனிஸ்ட்களில் போலிகளைக் கண்டுகொள்வது மிக முக்கியம். சிங்கூர், நந்திகிராமம், முல்லைப்பெரியாறு விவகாரங்களில் ம. க. இ. க மற்றும் வினவு இந்தப் போலிப் பொதுவுடைமைவாதிகளை எப்படி எதிர்த்தது என்பதைக் கொஞ்சம் ஆராய்வதும், கம்முநிசம் குறித்த நமது அறிவை வளர்த்துக் கொள்வதும் இந்தப் போலிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

   நீங்கள் அதிகம் அரசியல் தெரியாதவராக (நீங்கள் சொன்னது) இருப்பதால்தான் இந்த தவறான புரிதல் என்று நினைக்கிறேன்.

 9. why the topics are discussed here .
  we expect good topics related to Tamil Nadu to
  tabled here.
  we can guide the Tamil people to get freedom from the present day set up

 10. செத்துப்போன ஒரு விஷயம், மக்களால் (உலக அளவில்) நிரகரிகபட்ட ஒரு விஷயம் – Communism

  அதை மறுபடியும் அதன் கல்லறையிலிருந்து மீட்க ஒரு மீட்பர் வருவர் போலும் — நம்பிக்கை தானே வாழ்கை.

  அவர் வரும்வரை, இந்த கட்டுரையும் சேர்த்து அதற்க்கு எழுதப்பட்ட இரங்கற்பா என கொள்ளவேண்டியதுதான்,.

 11. ரஷ்யா..சீனா பிரச்சனைய அலசி ஆராஞ்சி…கம்யூனிசம் கத்துக்கொடுக்கும் பெரியவங்களுக்கு…ஒரு சின்ன கேள்வி…
  வலதுசாரி…
  இடது சாரி…
  அப்படின்னா என்ன?
  இந்த கேள்விக்கு 30 நொடில பதில் தெரியும்னு google ல தேடாம..சொல்ல தெரியுமா?
  மனசாட்சியோட உண்மைய சொல்ல முடியுமா?
  உங்களுக்கு தெரியுமா இல்லையானு?

 12. நண்பர் சரவணன், ஒங்க அளவுக்கு எனக்கு கம்யூனிசம் தெரியாதுங்க, ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இடது சாரி என்பது வெளிச்சம். வலது சாரி என்பது இருட்டு. (போலியை கழித்து விட்டு)

  • இரா.மணிகண்டன் அய்யா!

   எனக்கும் கம்யூனிசம் தெரியாது… ஆனால்… திருட்டு கம்யூனிஸ்ட் பத்தி தெரியும்…
   போலி கீலி எல்லாம் வார்த்தை விளையாட்டு…
   நான் சொல்லுவது…திருட்டு கம்யூனிஸ்ட் பத்தி…

   உங்களுக்கு புரியுதா????

 13. அண்ணே வினவு
  வேள்ளக்காரய்ங்க சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும் நம்ம ஊள்ளுர்காரய்ங்கள பத்தி விரிவாக எழுதாம விட்டுட்டீக

  கிழக்கு பதிப்பகம் வெளியீடு
  புத்தகம்:மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணியும்
  ஆசிரியர்:பா.ராகவன்
  இந்த புத்தகத்துல 114ம் பக்கத்துல

  செலவுகளுக்கு மாவோயிஸ்ட்கள் என்ன பன்னுகிறார்கள்
  கடத்தல் மாவோயிஸ்ட்கள் மிக முக்கியமான வருமான வழி இதுதான் ஆள் கடத்தல் வழிப்பறி தவிரவும் மலைக்காடுகளில், மறைவிடத்தில் போதைப் பயிர் விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதன் மூலமும் மாவோயிஸ்ட்கள் தமது தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

  இப்புடி போதை பொருள் விக்கிற கும்பலுன்னு கேழக்கு பதிப்பகம் அறிமகப்படுத்துகிறது

  இதுக்கு ஏணே இதுவரை ஒங்க தோழர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை

  இன்னும் நெறைய எழுத வேண்டியிருக்கு டயமில்லை நாளை

  • கிழக்கு பதிப்பகம் இந்தத் தகவல்களை யாருடைய தேவைக்காக வெளியிடுகிறது என்று முதலில் விசாரியுங்கள்.

   William Blum முன்வைத்த ஆதாரங்கள் போல ஆதாரங்களை முன்வைக்கட்டும்.
   எல்லா அரட்டைகளுக்கும் ஒவ்வொன்றாக மறுப்புக் கூறிக் கொண்டிருக்க முடியுமா?

 14. yes. anti communist propaganda is multi-billion business and all these dogs were / are doing their job for their bread.

  communism is the only solution to all problems in this world

 15. […] கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அற… (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; //&appId=1234567890 fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, "script", "facebook-jssdk")); […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க