த்தரப்பிரதேசத்தின் பரேலியில் ஒரு தலித் இளம்பெண் ஆறு நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 6 கிரிமினல்களில் இருவர் மட்டுமே இப்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகவான்பூர் திம்ரி கிராமத்தில் வசிக்கும் 19 வயது தலித் இளம்பெண், கடந்த மே 31 அன்று தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 6 நபர்கள் அப்பெண்களைத் தடுத்து நிறுத்தினர். அதில் மூன்று பேர் அந்தப் பெண்ணை இழுத்துச் செல்கையில், மீதமுள்ள மூன்று பேர் மற்ற இரு பெண்களையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.

படிக்க :
♦ அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
♦ நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி

கிரிமினல்கள் ஆறு பேரும் அந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று அவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இச்சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கடந்த ஜூன் 5 அன்றுதான்  இது குறித்த தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி அன்றே, இளம் பெண்ணின் மூத்த சகோதரரும் அவரது பள்ளி நண்பர்களும் அவரை இசட்நகரில் உள்ள உள்ளூர் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தி வயர் இணையதளத்திடம் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து வெளியில் ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி அப்பெண்ணை மிரட்டியுள்ளான். அவள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறாள்; உடலில் பல காயங்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், “எனது பள்ளி நண்பருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் நானும், மற்றொரு இருசக்கர வாகனத்திலும் மற்றொரு நண்பரும் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் கிராமத்தை கடந்து செல்லும்போது, ஒரு சில இளைஞர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களில் மூன்று பேர் என்னை ஸ்கூட்டியில் இருந்து இழுத்துச் சென்றனர். மற்றவர்கள் எனது நண்பர்களைத் தாக்கத் தொடங்கினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”வறண்ட ஓடை அருகே உள்ள கைவிடப்பட்ட நிலத்திற்கு என்னை இழுத்துச் சென்ற அவர்கள், அங்கே என் மீது பாலியல் வன்முறையை செலுத்தினர்.” என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் நண்பர்களில் ஒருவர், தி வயரிடம், “அவர்கள் எங்கள் அலைபேசிகளைப் பறித்து என்னைத் தாக்கத் தொடங்கினர். என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, பின்னர் நான் மயக்கமடைந்தேன். எனது தோழிக்காக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார் மிகுந்த வேதனையுடன்.

மேலும் அந்தப் பெண், “நான் இன்னும் அவர்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் ஒருவருக்கொருவர், தர்மேந்திரா, அனுஜ், விஷால், நீரஜ், அமித் மற்றும் நரேஷ் என்று தங்களுக்குள் அழைத்துக் கொண்டனர். அதில் ‘நரேஷ்’ எனும் நபர் மற்றவர்களை விட மிகவும் ஆதிக்கம் செலுத்தினான், அவன்தான் அந்தக் கும்பலை வழிநடத்தினான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குற்றவாளிகள் தப்பி ஓடிய நிலையில், பேரெய்லி எஸ்.எஸ்.பி ரோஹித் சிங் சஜ்வான், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு) மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கொடுமைகள் தடுக்கும்) சட்டம், 1989 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

“நாங்கள் அப்பெண்ணின் புகாரை பதிவு செய்தோம். மேலும், தகவல்களைப் பெற குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள்” என்று அவர் தி வயரிடம் கூறினார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் விஷால் படேல் (22), அனுஜ் படேல் (23) ஆகிய இரு குற்றவாளிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
♦ பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்

மேலும், பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், சி.ஆர்.பி.சி பிரிவு 164 இன் கீழ் அவரது அறிக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்றும் எஸ்.எஸ்.பி. கூறினார்.

இந்த பாலியல் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். ராமராஜ்ஜியம் ஆளும் உத்தரப் பிரதேசத்தில், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மலிந்து போயிருக்கும் சூழலில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பது என்பதே அதிசயமான நிகழ்வு என்ற நிலைமையே நீடிக்கிறது.

இரண்டு பேரை மட்டும் பெயருக்கு கைது செய்துவிட்டு, மீதமுள்ள கிரிமினல்கள் கைது செய்யப்படாமல்  விடப்படுவதற்கும் வாய்ப்புள்ள நிலையில், அங்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.


சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க