PSBB ராஜகோபாலன் வரிசையில் இன்னொரு பொறுக்கி, நெல்லை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி !

நீதிமான்களை உருவாக்குவதாக சொல்லிக் கொள்ளும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி பொறுக்கிகளை தான் உருவாக்குகிறதா ? திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி என்னும் பாலியல் பொறுக்கியின் வரலாறு தற்போது அம்பலமாகியிருக்கிறது.

அக்கல்லூரியில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ‘தலைமறைவாக’ உள்ள குற்றவாளி ராஜேஷ் பாரதியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை

யார் இந்த ராஜேஷ் பாரதி?

கல்வி நிறுவனங்களை பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில், அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் கீழ் டாக்டர் சந்தோஷ் குமார் என்ற தீவிர இந்துத்துவ வலதுசாரி சிந்தனை கொண்ட நபர் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இயக்குனராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

அவ்வாறு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பொழுது அங்கு ஒப்பந்த உதவி பேராசிரியராக சுரேஷ் மாணிக்கம் என்பவர் பணிபுரிந்தார். சுரேஷ் மாணிக்கம், ராஜேஷ் பாரதியின் உடன்பிறந்த அண்ணன். (இவர் பின்னாட்களில் ஒரு மாணவியிடம் தவறான பாலியல் தன்மை கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவரது மனைவியால் குற்றஞ்சாட்டப்பட்டு உதவி பேராசிரியர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்)

சந்தோஷ் குமார் பல்கலைக்கழக இயக்குனராக பதவி உயர்வு பெற்ற பின் சுரேஷ் மாணிக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் ராஜேஷ் பாரதி ஒப்பந்த உதவிப் பேராசிரியராக பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட அடிப்படைத் தகுதியாக நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் பாரதி மேற்படி எழுதிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல் இயக்குனர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் உதவியினால் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார். மேற்படி எவ்வித அடிப்படை தகுதிகளையும் பெறாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி செயல்பட்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பான முறையில் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பல்வேறு திறமைமிக்க நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர்களாக செயல்பட்டு வந்தனர். ஆனால், அனைவரும் வயது முதிர்வு என்ற பொய்யான காரணத்தினை கூறி பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். ஆனால், எவ்வித சிறப்பு திறமைகளுமற்ற ராஜேஷ் பாரதி தொடர்ந்து உதவிப் பேராசிரியராக இருந்து வருவது வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

சட்டம் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை திறன்களான அரசமைப்புச் சட்டம் பற்றிய அறிவு, குறிப்பிட்ட சட்டப்பிரிவை விளக்குதல் மற்றும் சட்டப்பிரிவு தொடர்பாக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்கள் கொடுத்திருக்கும் பொருள் விளக்கங்களை மாணவர்களிடையே விளக்குதல், தொடர்ச்சியான சலிப்பற்ற வாசிப்பு ஆகியவை இன்றியமையாததாகும். இத்தகைய திறன்கள் எதையும் கொண்டிராத ராஜேஷ் பாரதி வகுப்புக்கு சினிமா நடிகர்கள் போல உடை அணிந்து புத்தகத்தை அப்படியே மாணவர்களிடம் வாசித்து விட்டு வருகின்ற பழக்கத்தை கொண்டு இருந்திருக்கிறார். மாணவர்கள் கேட்கும் எவ்வித கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் “நானும் ரவுடிதான்” என்று மிரட்டி வந்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் பாரதி தனது தலைமையில் கோனார், தேவர் சாதி மாணவர்களை ஒன்றிணைத்து அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு வீரவாள் ஒன்றை பரிசளித்தார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே பாடம் கற்பிக்கும் போது தனது சாதி பெருமையை கூறி “நாங்கள் எல்லாம் சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாட்டுக்கறி போன்ற மாமிச உணவுகளை சாப்பிட மாட்டோம் ஒருவன் உண்மையான இந்தியன் என்றால் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது” என்றெல்லாம் பாசிச விஷமக் கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வந்திருக்கிறான்.

உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி

திருநெல்வேலி தமிழ்நாட்டில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறும் மாவட்டம். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சாதிய விழுமியங்களை தீவிரமாக கடைபிடித்து வரும் கிராமங்களில் இருந்து வரும் இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சாதிய சிந்தனை கொண்டவர்களாவர். சாதிய பிற்போக்கு சிந்தனையுடைய இம்மாணவர்கள் இடையே நவீன ஜனநாயக விழுமியங்களை கொண்ட கல்வியை புகுத்தி அவர்களை சமத்துவ சிந்தனை உடையவர்களாக மாற்றுவது சட்டக் கல்லூரி பேராசிரியர்களின் முக்கிய கடமையாகும்.

மாறாக இத்தகைய சிந்தனை கொண்ட மாணவர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் குழுக்களாக பிரித்து, சாதிய உணர்வை புகுத்தி அவர்களை மற்ற சமூக மாணவர்களிடம் மோத விடுவது என்பதன் அடிப்படையில் ராஜேஷ் பாரதி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.

ராஜேஷ் பாரதி யாதவ சமூகத்தைச் சேர்ந்தவன். முதலில் யாதவ சாதி மாணவர்களை மட்டுமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ராஜேஷ் பாரதி பின்னாட்களில் தேவர், நாடார் போன்ற ஆதிக்க சாதி மாணவர்களை தலித் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து வந்துள்ளான்.

ராஜேஷ் பாரதியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது, “ராஜேஷ் பாரதி குறிப்பாக கோனார், தேவர் ஜாதி மாணவர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்து தருகிறேன் எஸ்.சி பசங்க கூட சேர்ந்து சுற்றாதீங்க, நம்ம பசங்களாக இருங்க” என்று கூறி அவரின் கட்டுப்பாட்டில் முதலில் கொண்டு வருவான். பின்னர் மாணவர்களை எப்பொழுதும் தனது அடியாட்கள் போல வைத்துக் கொண்டிருந்தான். அவனுடன் சுற்றித்திரியும் மாணவர்கள் அனைவரும் சாதிவெறி சிந்தனை கொண்டவர்கள்” எனக் குறிப்பிட்டார்.

ராஜேஷ் பாரதி தனது கருத்துக்களுக்கும் தனது செயல்பாடுகளுக்கும் எதிரான மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து வந்திருக்கின்றான். குறிப்பாக தலித் மாணவர்களை “இந்த எஸ்.சி பசங்களை இப்படித்தான் சார் எப்ப பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு தான் இருப்பாங்க” என்று கல்லூரி முதல்வரிடமும் சக ஆசிரியர்களிடமும் தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளான்.

கடந்த 2017-ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்தால் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் எனும் பெயரில் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ் மாணிக்கம், காளிராஜ், மற்றும் ராஜேஷ் பாரதி ஆகியோர் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற திரைப் படப் பாடலுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முன்னிலையில் அருவருப்பான முறையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மது அருந்திவிட்டு இத்தகைய ஆபாச நடனம் ஆடியதை கண்டித்து நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

படிக்க :
♦ பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அதுமட்டுமன்றி இறுதி ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் புகாரால் கோபமுற்ற ராஜேஷ் பாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் புகார் அளிப்பதற்கு சென்ற குறிப்பிட்ட மாணவரை தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது முறைகேடான முறையில் தேர்வு எழுதுவதாக கூறி அவரை வலுக்கட்டாயமாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்கள் குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்களை அங்கு பணிபுரிந்த சக ஆசிரியர்களான ஜெனிபர், காளிதாஸ், சுரேஷ் மாணிக்கம், சண்முகப்பிரியா, ஜீவரத்தினம், நாராயணி ஆகியோரின் உதவியுடன் செய்து வருகிறான் என்று மாணவர்கள் சொல்கின்றனர்.

கல்லூரியின் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, கல்லூரி நிர்வாகத்தின் கண்டுகொள்ளப்படாத தன்மை மற்றும் பல்கலைக்கழக இயக்குனர் வரை கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக இவன் மென்மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தன்னை ஒரு ரவுடியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தன.

அதேப்போல் ராஜேஷ் பாரதி தனது பிறந்தநாளை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வானது மாணவர்களின் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்நிகழ்வு குறித்து பாளையங்கோட்டை போலீசு நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி

சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கல்லூரி முதல்வர் திருமதி லதா அவர்களிடம் விசாரணை செய்தபோது, “ராஜேஷ் பாரதி மாணவர்களுக்கு வாள் வீச்சு பயிற்சி கொடுத்து வருகிறார். அவ்வாறு பயிற்சி அளிப்பதை சிலர் தவறாக சித்தரித்து புகார் அளித்துள்ளனர். அவர் ஒரு நல்ல ஆசிரியர்” என நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இதர ஆசிரியர்களும் கல்லூரி ஊழியர்களும் ராஜேஷ் பாரதி வாள் வீச்சு பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார் என்று அப்பட்டமாக பொய் கூறினர். போலீசு துறையோ, கல்லூரி நிர்வாகமோ அவன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இச்சம்பவம் பற்றி மாணவர்களிடம் கருத்து கேட்டப்போது, ராஜேஷ் பாரதி சாதிரீதியாக அணித்திரட்டி வைத்துள்ள மாணவர்களை அழைத்து கல்லூரியின் வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதக்கணக்கில் கல்லூரிக்கு வராத முதல்வருக்கு எப்படி அவர் வாள்வீச்சு பயிற்சி கொடுத்தது தெரியும்? ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகமும் அவருக்கு சப்போர்ட் செய்யும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ராஜேஷ் பாரதி மாணவியிடம் செய்த பொறுக்கித்தனம் :

Covid-19 தொற்றுநோய் காரணமாக தினசரி வகுப்புகள் நடைபெறாத காரணத்தால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு ராஜேஷ் பாரதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் எப்படியோ அம்மாணவியின் செல்போன் எண்ணை தெரிந்துக் கொண்ட ராஜேஷ் பாரதி கடந்த 2020 மே மாதம் முதல் மாணவிக்கு போன் செய்து, “என்ன சந்தேகம் உதவி என்றாலும் நான் செய்து தருகிறேன்” எனத் தந்திரமாகப் பேசி இருக்கிறான். பின்னர் அடிக்கடி அம்மாணவிக்கு போன் செய்து நன்றாக படிக்குமாறும் கல்லூரியில் ஏதாவது உதவி வேண்டுமானாலும் தான் செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளான். அம்மாணவியும் ஆசிரியர் என்ற முறையில் இயல்பாகப் பேசியிருக்கிறார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த 2020 மே 31 அன்று அம்மாணவி தனது கல்லூரி சேர்க்கையை புதுப்பிப்பதற்காக கல்லூரிக்கு சென்றிருக்கிறார். கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கையை புதுப்பித்து விட்டு பேருந்து நிலையம் செல்ல பேருந்துக்காக நின்று இருக்கிறார். வக்கிரமான திட்டத்துடன் காரில் வந்த ராஜேஷ் பாரதி தான் மாணவியின் ஊருக்கு செல்வதாகவும் தன்னுடன் வருமாறும் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

செல்லும் வழியில் இடையே காரை நிறுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறான். மயக்கநிலை தெளிந்து தனக்கு ஏற்பட்ட வன்கொடுமை தொடர்பாக கதறி அழுத மாணவியிடம் “நடந்த சம்பவத்தை கல்லூரியில் சொன்னால் உன்னை டிஸ்மிஸ் செய்து விடுவார்கள். எனக்கு மேலிடம் வரை செல்வாக்கு இருக்கிறது” என்று கூறி மிரட்டியுள்ளான்.

This slideshow requires JavaScript.

பின்னர், தொடர்ந்து மாணவிக்கு அடிக்கடி போன் செய்து “தான் சொல்வதைக் கேட்காவிட்டால் உன்னுடன் எடுத்த வீடியோவை வெளியில் பரப்பி விடுவேன்” என மிரட்டி தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளான். இதனால், தற்கொலை செய்யுமளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்ட அம்மாணவி கடந்த 2021 மே 12 அன்று நெல்லை போலீசு ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசு நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 376(2)f, 506(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் திட்டமிட்ட முறையில் கூடுதலாக தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67, 67A ஆகிய பிரிவுகளை சேர்த்து வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கின்றனர்.

ராஜேஷ் பாரதியின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்பதாலும் சாதிரீதியான செல்வாக்கு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு ஆகிய காரணத்தினால் அவன் இன்று வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. அவனை போலீசார் கைது செய்து அவனது செல்போன் லேப்டாப் போன்றவற்றை ஆய்வு செய்தால் மேலும் பல பாலியல் வன்முறை நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

ராஜேஷ் பாரதி போன்ற பொறுக்கிகள் உருவாவதற்கான அடிப்படை எது?

கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், ஜனநாயக சிந்தனை கொண்ட, மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. டெல்லி JNU பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்ணையா குமார், உமர் காலித், பட்டாச்சாரிய போன்ற முக்கியமான செயல்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து கைது செய்தது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ரோஹித் வெமுலா எனும் தலித் சமூகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை உட்பட அனைத்து உதவிகளையும் நிறுத்தி, விடுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டு படுகொலை செய்தது போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.

இது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் துணைவேந்தர், இயக்குனர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி-யினர் தமது தத்துவ சார்புடையவர்கள் மற்றும் சாதிய மதவாத சிந்தனை கொண்டவர்களையும் பணியமர்த்தி வருகின்றனர். டெல்லி JNU பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் போன்ற முன்னணி மத்திய பல்கலைக் கழகங்களில் மட்டுமன்றி மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இத்தகைய சதியை செய்து வருகிறது.

பல்கலைக் கழகங்களுக்கு உரிய அறிவார்ந்த சிந்தனை மரபை அழித்து அவ்விடத்தில் அதன் கட்டமைப்பு முழுவதையும் பார்ப்பனியமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. மாணவர்களை அச்சுறுத்தி முடக்குவதோடு, அவர்களை சாதிய ரீதியாக பிளவுறச் செய்யும் வேலையை செய்கிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மாணவர்களை சங்கமாகச் சேர விடாமல் தடுக்கும் பணியைச் செய்கிறது !!

சென்னை PSBB பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்தது போல போலீசுத்துறை ராஜேஷ் பாரதியையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவன் செய்த அத்தனை கிரிமினல்தனங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை விசாரித்து தக்க நடவடிக்கை வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் ஆகும்.

மேலும், மாணவர்கள் சாதிரீதியாக குழுக்களாக பிரித்து மோதிக்கொள்ள வைப்பது, அதற்கு இத்தகைய பொறுக்கி பேராசிரியர்கள் தூபம் போட்டு தன்னுடைய அடியாட்படையாக வைத்துக் கொள்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாற்றங்களை கொண்டுவர போராடுவது ஒவ்வொரு மாணவன், பேராசிரியர், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

படிக்க :
♦ உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

ராஜேஷ் பாரதியால் பாதிக்கப்பட்ட பெண் “பார்ப்பன” சமூகமாக இருந்தாலும் அதிகார வர்க்கம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ராஜேஷ் பாரதி போன்ற செல்வாக்கு படைத்த (PSBB நிர்வாகத்தைப் போன்ற), பணம், அதிகார திமிர்பிடித்தவர்கள் பக்கம் தான் நிற்பார்கள். ஆகவே, மாணவர்களே சாதி – மதவெறி, சமூக விரோத அமைப்புகளை விட்டு வெளியேறி, மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து, பாதிப்புக்குள்ளான சகமாணவிக்கு உறுதுணையாக நில்லுங்கள்.

அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் புரட்சிகர மாணவர் சங்கங்களை தொடங்குவதும், மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து போராடுவதுமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.

தகவல் சேகரிப்பு : புகழேந்தி, நெல்லை. (நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது)

இதுதொடர்பாக நியூஸ் 18 செய்தி சேனலில் வந்த காணொலி :

தகவல் :
மக்கள் அதிகாரம்
நெல்லை