அதிபர் டொனால்டு டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை (War Powers Resolution) நிறைவேற்றியுள்ளது. இது அமெரிக்க ஆளும் வர்க்கமான ட்ரம்ப் மஸ்க் கும்பல் ஆட்சியில் நிலவும் முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ வல்லரசான அமெரிக்கா, தனது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் பல தசாப்தங்களாக உலகின் பல பகுதிகளில் இராணுவத் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. டிரம்ப்-மஸ்க் தலைமையிலான தற்போதைய கும்பலாட்சி, கார்ப்பரேட் நலன்கள், இராணுவ-தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் பெரும் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் ஆட்சியாகவே இருந்து வருகிறது. இதனூடாக அதிகாரத்தை மையப்படுத்தும் போக்கு, தீவிர தேசியவாத அரசியல், குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாடுகள், சமூக இயக்கங்கள் மீதான தாக்குதல்கள், ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என பாசிச கும்பலாட்சியை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் (War Powers Resolution) நிறைவேற்றப்பட்டுள்ளது.
215-208 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், அமெரிக்காவில் போரை அறிவிக்கும் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் யாருக்கு என்பதைக் குறித்த நீண்டகால அரசியல் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு ஜோ பைடனின் அனைத்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததுடன், டிரம்பின் நான்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது டிரம்பின் தற்போதைய இராணுவக் கொள்கைகள் குறித்து அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
சரி அமெரிக்க அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
அமெரிக்க அரசியலமைப்பின்படி, போரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் (Declare War) அதிகாரம் காங்கிரஸுக்கே உள்ளது. அமெரிக்க வரலாற்றில் கடைசியாக அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரின் போது தான்.
ஆனால் தேசியப் பாதுகாப்பு அல்லது அவசர சூழ்நிலைகளில், அதிபர் காங்கிரஸின் முன் அனுமதி இல்லாமல்கூட வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க முடியும்.
1973-இல் நிறைவேற்றப்பட்ட போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் (War Powers Resolution):
அதிபர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், 48 மணி நேரத்திற்குள் காங்கிரஸுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுவாக 60 நாட்களுக்குள் காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி கிடைக்காவிட்டால் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். ஆனால் பல அதிபர்கள் குறிப்பாக ட்ரம்ப் போன்றோர் இந்தச் சட்டத்தின் விளக்கத்தை வேறு விதமாகப் பயன்படுத்தி, காங்கிரஸின் முழுமையான ஒப்புதல் இல்லாமல்கூட இராணுவ நடவடிக்கைகளை நீட்டித்துள்ளனர்.
அந்த வகையில் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமானது, அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக நீண்டகால அல்லது போரை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு காங்கிரஸின் வெளிப்படையான ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதாகும். அமெரிக்க அரசியலமைப்பின் படி போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் தன்னிச்சையாகப் போரை விரிவுபடுத்த முடியாது என்பதையும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் அதிபர் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக (Commander-in-Chief) செயல்படுகிறார். எனினும், முழுமையான போர் நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது நீண்டகாலமாகத் தொடர்வது போன்ற முக்கிய முடிவுகளுக்கு காங்கிரஸின் அனுமதி அவசியம் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட அமெரிக்கா மேற்கொள்ளும் போர்கள் ஜனநாயகம் அல்லது உலக பாதுகாப்பு, மனித உரிமை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டாலும், அவற்றின் பின்னணியில் டாலர் மேலாதிக்கம், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்கள், எண்ணெய் வளங்களின் கட்டுப்பாடு மற்றும் அமெரிக்க ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துதல் ஆகியவையே உள்ளன.
கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க அதிபர்கள் காங்கிரஸின் முறையான அனுமதியின்றி பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சான்றாக ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போர்கள்.
இந்த தீர்மானத்தை ஆதரித்த உறுப்பினர்கள், ஈரானுடனான போரானது முழுமையான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் மேலும் பல நாடுகளை மோதலுக்குள் இழுக்கக்கூடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போரைத் தொடங்கும் மற்றும் தொடரும் அதிகாரம் அதிபருக்கா அல்லது காங்கிரஸுக்கா என்ற கேள்வி மீண்டும் தேசிய அளவில் விவாதிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் ட்ரம்பின் சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உடனடி பதிலளிக்க அதிபருக்கு போதுமான அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், இராணுவ நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸின் நீண்டகால விவாதங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
தற்போது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அடுத்த கட்டமாக செனட் சபையின் பரிசீலனைக்குச் செல்ல உள்ளது. அங்கு போதுமான ஆதரவு கிடைத்தால் அது சட்ட ரீதியாக மேலும் வலுப்பெறும். இருப்பினும், இறுதியில் அதிபர் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதை முறியடிக்க காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அமெரிக்க மக்களிடத்திலேயே பெரும் கோபத்தையும், உழைக்கும் மக்களின் போராட்டத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கம், மாணவர்கள் மற்றும் சாதாரண மக்கள் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் போர் செலவுகளுக்காக ஒதுக்கப்படுவது குறித்து கடுமையான எதிர்ப்புகள் அமெரிக்க மக்கள் இடத்திலேயே எழுந்துள்ளது. இந்தத் தீர்மானம் டிரம்பின் போர் அதிகாரங்களுக்கு ஒரு வரம்பை விதிக்க முயன்றாலும், அமெரிக்க அரசியல் அமைப்பின் அடிப்படை விதியான ஏகாதிபத்திய போக்கை இது துளியும் மாற்றாது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றினாலும், உலகளாவிய முதலாளித்துவ ஆதிக்கத்தைப் பாதுகாப்பதில் பெரும்பாலும் ஒரே நிலைப்பாட்டையே இரண்டு கட்சிகளும் கொண்டுள்ளன.
எனவே, டிரம்பின் போர் அதிகாரங்களுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஒரு இறுதி வெற்றியாக அல்லாமல், அமெரிக்க மற்றும் உலக உழைக்கும் மக்களின் போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் இயக்கங்கள் உருவாக்கிய அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.
![]()
காலா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











