பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!

2

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் பாஜக-வில் இருப்பதாக ஏ.டி.ஆர். எனும் தேர்தல் கண்காணிப்பக அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

“பேட்டி பச்சாவ்” – “பேட்டி பதாவ்” என ஜூம்லா விட்ட மோடிஜியின் கட்சியில்தான் ‘பேட்டி’களை (பாரதத்தின் மகள்களை) பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் “மாண்புமிகு”-க்கள் அதிகம் பேர் உள்ளனர் என்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். பா.ஜ.க.-வுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியிலும் இத்தகையவர்கள் 16 பேர் இருக்கின்றனர்.

ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தக் கழகம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.

unnao-kuldip-singh-sengar
உன்னாவ் பாலியல் குற்றவாளி (பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங்.)

அந்த அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2019-ம் ஆண்டில் 19-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் வெறும் 2-ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த எண்ணிக்கையின் வளர்ச்சி, நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு முற்றி வருவதை சுட்டிக் காட்டுகிறது.

தனது ஆய்வுக்காக, தற்போதைய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களில் 4,822 வேட்பு மனுக்களை (759 எம்.பி. + 4063 எம்.எல்.ஏ.) இந்த அமைப்பு பரிசீலித்தது.

வேட்புமனுக்களிலேயே தங்கள் மீது பாலியல் குற்ற வழக்குகள் இருப்பதை 9 பேர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடுகையில், “தற்போது எம்.பி.-க்களாக இருப்பவர்களில் 3 பேரும், எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களில் 6 பேரும் தங்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு இருப்பதாக வேட்புமனுவிலேயே தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பாலியல் வன்முறை வழக்கை எதிர்கொண்டுள்ள 41 வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கியுள்ளன” என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்ற வழக்குகளை சந்தித்துவரும் 66 பேரை மோடியின் பாரதிய ஜனதா கட்சி, மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது. இக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இத்தகைய வேட்பாளர்கள் 46 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 40 பேரும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மூன்று கட்சிகளும் தான் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன. பாரதமாதா படத்தை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள பாஜக-தான் இந்தப் பட்டியலில் நம்பர் ஒன் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !
♦ உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

இந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்ததற்கான வழக்குகளைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவை வேட்பாளர்களின் எண்ணிக்கை 231% அதிகரித்திருக்கிறது. அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 38-ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 126-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலவாரியாகப் பார்க்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள எம்.பி / எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையில் மேற்கு வங்க மாநிலம்தான் முன்னிலை வகிக்கிறது. தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதாக 16 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இங்கு மொத்தம் 12 பேர் தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாகத் தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.

“கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் கொண்ட சுமார் 572 வேட்பாளர்கள் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனையளிக்கப்படவில்லை.” என்கிறது அறிக்கை. இந்த 572 பேரில் 410 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்களில் 89 பேர் மாநிலங்களவை, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதுவா முதல் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக-வின் முகம் அன்றாட செய்திகளில் அம்பலப்பட்டு வருகிறது. தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்திடும் பெண்களை மிரட்டவும் வாயடைக்கச் செய்யவும் அவர்களை பாலியல்ரீதியாக அவமானப்படுத்துவதும், பாலியல் வன்முறை மிரட்டல் விடுவதும் பகிரங்கமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஏ.டி.ஆர். அமைப்பின் இந்த அறிக்கை பாஜகவின் யோக்கியதைக்கு வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.

வினவு செய்திப் பிரிவு
நந்தன்
நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்.

2 மறுமொழிகள்

  1. ஓ…! நாங்கதான் நெ ஒன்னா …! நிதி வசூலில் .. வாயால் வடை சுடுவதில் … கிரிமினல் குற்றசாட்டு எம.எல்.ஏ…எம்.பி..க்களில் …அடடா..அச்சரா…அச்சரா …. வெளங்கிடும் நாடு …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க