privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.

-

சமஸ்கிருத இலக்கியத்தை கற்பிக்க முசுலீம் பேராசிரியர் நியமனம் : நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள்!

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ள ஃபெரோஸ் கானை பணியிலிருந்து நீக்கக்கோரி, இந்துத்துவ காவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காரணம், ஒரு முசுலீம் சமஸ்கிருதத்தை போதிப்பது சனாதன இந்து தர்மத்துக்கு எதிரானதாம்!

இராஜஸ்தானைச் சேர்ந்த பெரோஸ் கான், சிறு வயது முதலே இந்து பக்திப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர். இதன் விளைவாக, சமஸ்கிருதத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளதோடு, பி.எட்., பி.எச்டி. படிப்புகளையும் சமஸ்கிருதத்தில் முடித்துள்ளார்.

பெரோஸ் கான்.

“இரண்டாம் வகுப்பு முதல் சமஸ்கிருதம் படித்து வருகிறேன். எங்கள் பகுதியில் 30 சதவீத முசுலீம்கள் இருக்கிறார்கள், ஒருவர்கூட இதைச் சுட்டிக்காட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால், குரான் பற்றி பெரிதாக தெரியாது. ஆனால், சமஸ்கிருத இலக்கியத்தை நன்றாக அறிவேன். என் பகுதியில் உள்ள இந்துக்கள்கூட ஒரு முசுலீமாக இருந்துகொண்டு, சமஸ்கிருதத்தில் உள்ள புலமையைக் கண்டு புகழ்ந்திருக்கிறார்கள்” என்கிற பெரோஸ் கான், மாணவர்கள் என்கிற பெயரில் தன்னுடைய நியமனத்தை எதிர்ப்பவர்களால் மனம்வெதும்பி போயிருக்கிறார்.

ஆனால், இது மாறும் எனவும் நம்புகிறார். “என்னுடைய முழுவாழ்க்கையிலும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் முசுலீம் என்பதை ஒருபோதும் உணர்ந்ததில்லை. இப்போது கற்றுக்கொடுக்க முயற்சிக்கும்போது, இது பிரச்சினைக்குரிய விசயமாகியிருக்கிறது” என்கிறார் அவர்.

நவம்பர் 7-ம் தேதி சமஸ்கிருத பேராசிரியராக நியமனம் பெற்றதிலிருந்து, காவிக் கும்பல் பெரோசுக்கு எதிராக வெற்று கூச்சல் போட்டுவருகிறது. கல்லூரிக்குள் யாகம் நடத்தி தனது சனாதன திமிரையும் காட்டியிருக்கிறது.

தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கேந்திரிய பிராமின் மகாசபா, ஏபிவிபி போன்ற அமைப்புகளில் உள்ள இந்த ‘மாணவர்கள்’தாம் போராட்டத்தில் இறங்கியுள்ளவர்கள்.

படிக்க:
காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

இயல்பாகவே, இந்தச் சூழலில் முசுலீம் வெறுப்பு விசம் கலந்துவிட்ட நிலையில், காவி கும்பலால் அச்சமுற்ற பேராசிரியர் இப்போது தலைமறைவாக உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சமஸ்கிருத இலக்கியத்தைக் கற்றுத் தருவதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. ஆனாலும், காவி மாணவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை என கைவிரித்துள்ளது.

“ஒரு முசுலீம் இந்து மதம் குறித்து எப்படி கற்றுத்தரலாம் என போராடும் மாணவர்கள் கேட்கிறார்கள். ஆனால், இங்கே மதத்தைப் பற்றி சொல்லித் தருவதில்லை. சமஸ்கிருத இலக்கியங்களான அபிக்யான் சாகுந்தலம், உத்தர் ராமசரிதம், ரகுவம்ச மகாகாவ்யா, ஹர்ஸ் சரிதம் போன்றவற்றைத்தான் கற்றுத்தருவோம்” என்கிறார் பெரோஸ் கான்.

பெரோஸ் கான் பணி நியமனத்தை எதிர்த்து பூசை செய்து ‘போராடும்’ பனாரஸ் இந்து பல்கலைக்கழக ‘மாணவர்கள்’.

பேராசிரியர் கானுக்கு வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும், சில பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பண்டைய வரலாறு குறித்து கற்பிக்கும் பேராசிரியர் மகேஷ் பிரசாத் பல்கலைக்கழகத்தில் சாதிக்கும் மதத்துக்கு வேலை இல்லை என்கிறார்.

“முந்தைய காலத்தில் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அவர்கள் இப்போது தங்களுடைய திறமையைக் காட்ட வருகிறார்கள். இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது, யாருக்கெல்லாம் தகுதி உள்ளதோ அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்ற உரிமை உண்டு. இதை யார் எதிர்த்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியர்களே” என்கிறார் அவர்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியில் இருந்த பெரோஸ் கான், இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார். தன்னை ஏற்றுக்கொண்டால், இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் கிளம்பாது என்றால் இங்கே தொடரவே தான் விரும்புவதாக சொல்லும் அவர், “அவர்கள் மனதில் என்ன இருந்தாலும், அதை என்னால் மாற்ற முடியும்” என நம்பிக்கையுடன் சொல்கிறார்.

இந்தியாவின் பன்மைத்துவத்தை துடைத்தெறிய களம் இறங்கியிருக்கும், இந்துத்துவ ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் திமிரில், மதத்துக்கும் இலக்கியத்துக்கும் வேறுபாடு தெரியாமல் காவிப்படை ‘போராடி’க் கொண்டிருக்கிறது.

படிக்க:
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

இதே இந்தியாவில்தான், 2010-ம் ஆண்டு வரை முசுலீம் பேராசிரியர் ஒருவர் வேதங்களை கற்பித்திருக்கிறார். கோரக்பூர் தீன் தயாள் உபாத்யாய பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக 1977-ம் ஆண்டு நியமனம் பெற்று 2010 வரை பணியாற்றியிருக்கிறார் அசாப் அலி.

தன்னுடைய காலத்தில் இத்தகைய எதிர்ப்புகளை ஒருபோதும் சந்தித்தில்லை என்றும், முசுலீம் பேராசிரியரை நீக்கக்கோரி மாணவர்கள் போராடுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கிறார் அசாப் அலி.

தாடியும், தலையில் குல்லாவுமாக சமஸ்கிருத வேதங்களை கற்பித்த தன்னை எவரும் முசுலீம் என்பதாகப் பார்க்கவில்லை என நினைவுகூறிய அவர், தன் நியமனத்தை எதிர்த்த ஒரு சில பேராசிரியர்களுக்கு எதிராக, மாணவர்கள்தான் போராடினர் என்பதையும் இந்தப் பின்னணியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆனால், இந்தியாவில் காட்சிகள் மாறிவிட்டன. தலையில் குல்லா போட்டிருந்தாலோ, தாடி வளர்த்திருந்தாலோ அல்லது முசுலீம் பெயரைக் கேட்டாலோகூட இங்கே தாக்குதலுக்கு ஆளாகும் நிலைமை உள்ளது. சகிப்புத்தன்மை என்பது போய், வெறுப்பே இங்கு ஆட்சி செய்கிறது. இதில் பெரோஸ் கான்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ்.