பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறைக்கு இடையூறாக இருந்த ஏ.பி.வி.பி. மாணவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன பேராசிரியர் தேச விரோதியாம்!

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், ஒரு அரசுக் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.-யை சேர்ந்த குண்டர்கள் ஒரு மூத்த பேராசிரியரை தேச விரோதி எனக் குற்றஞ்சாட்டி அவர் மீது வழக்கு தொடுப்பதாக மிரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் அந்த குண்டர்களின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு விடுமுறையில் சென்றிருக்கிறார்.

மத்திய பிரதேசம் மாண்டசூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குப்தா. இவர் வகுப்பறையில் கடந்த புதன்கிழமை (26.09.2018) பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், தீர்மானம் ஒன்றை கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பிக்கச் சென்ற ஏ.பி.வி.பி. குண்டர்கள் முழக்கங்களை கத்திக் கொண்டே சென்றிருக்கின்றனர். பேராசிரியர் தினேஷ் குப்தா அவர்களை முழக்கமிடாமல் செல்லுமாறும், வகுப்பெடுக்கையில் அது இடர்பாடாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

”வந்தே மாதரம்”, பாரத் மாதாகி ஜே எனக் கூறுவதை பேராசிரியர் குப்தா தடுப்பதாகக் கூறி ஏ.பி.வி.பி. குண்டர்கள் அவரை தேச விரோதி என்று சாடியுள்ளனர். கூடுதலாக, அவரது ’தேசப்பற்று அற்ற’ செய்கைக்காக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். சுற்றி நின்று அவரை மிரட்டியுள்ளனர். இத்தகைய இழிவுபடுத்தும் மிரட்டல்களால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் குப்தா அவர்களது கால்களைத் தொட்டுக் கும்பிட்டார்.

உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்களால் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில், பேராசிரியர் குப்தா தன்னைச் நின்று மிரட்டும் அந்த குண்டர்கள் ஒவ்வொருவரின் காலையும் தொடுகிறார். அக்குண்டர்கள் விலகி ஓடினாலும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களின் காலைத் தொடுகிறார்.

இச்சம்பவத்திற்குப் பின்னர் வியாழக்கிழமை (27-09-2018) கல்லூரியில் 3 நாட்கள் விடுமுறை பெற்றுச் சென்றுள்ளார்.  அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து மாண்டசூர் தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான யஷ்பால் சிசோடியா கூறுகையில், இது பெரிதாக பேசப்படத்தக்க சம்பவம் அல்ல என்றும், ஊடகங்களால் பெரியதாக ஊதிக் காட்டப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும், ஏ.பி.வி.பி.-யினர் அந்த பேராசிரியரை மன்னிப்புக் கேட்கவோ அல்லது காலைத் தொடவோ சொல்லவில்லை என்றும், அவராகவேதான் அதைச் செய்தார் என்றும் கூறினார்.

ஏ.பி.வி.பி. குண்டர்கள் அந்தப் பேராசிரியரை மன்னிப்புக் கேட்கச் சொன்னதற்கு எவ்வித வீடியோ ஆதாரமும் இல்லை என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ, இருவருக்கு இடையிலும் தாம் மத்தியஸ்தம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், ஏ.பி.வி.பி.-யினர் பக்கம் தவறிருந்தால் அவர்களை மன்னிப்புக் கேட்கச் செய்வதாகவும், பேராசிரியர் பக்கம் தவறிருந்தால் அவரை அம்மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கச் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

ஒரு கல்லூரியில் ஒரு மூத்த பேராசிரியரை சுற்றி நின்று மிரட்டி அவரை மானபங்கப்படுத்திய குண்டர்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தருகிறார் எனில் அந்தக் கட்சியின் யோக்கியதையையும், அந்த மாநிலத்தின் யோக்கியதையையும் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பேராசிரியர் இந்துவாக இருந்தபடியால் ஏ.பி.வி.பி. குண்டர்களால் மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டது. ஒரு வேளை அவர் ஒரு முசுலீமாக இருந்திருந்தால் இந்நேரம் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்.

அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பு. இடதுசாரி மாணவர் அமைப்புகள் மாணவர் உரிமைகளுக்காக, தனியார்மயத்தை எதிர்த்து போராடினால் காவிகள் பசுவதை, வந்தே மாதரம் போன்ற மதத்துவேசத்தை எழுப்பும் பணிகளை செய்வார்கள். குருபூஜை என்று ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் அடிமைத்தனத்தை செய்யச் சொல்வார்கள். இங்கோ ஒரு குருவையே காலில் விழ வைத்து அவமதித்திருக்கிறார்கள். அந்த பேராசிரியர் எவ்வளவு புண்பட்டிருந்தால் இந்த அயோக்கியர்களை தேடித்தேடி காலில் விழுந்து தன்னை விட்டுவிடுமாறு மன்றாடியிருப்பார்!

மத்தியிலும் மாநிலத்திலும் தமது ஆட்சிதான் என்னும்போது தன்னை ”யாரால் என்ன செய்துவிட முடியும்?” என்ற அதிகார வெறி, பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்ட அடிபொடிகள் வரை பரந்து விரிந்து கிடக்கிறது.

தமிழகத்திலும் அடிமைகளின் ஆட்சியை உபயோகித்து இத்தகையதொரு அவலநிலையை ஏற்படுத்த சங்க பரிவாரக் கும்பல் படுவேகமாக வேலை பார்த்து வருகிறது.

இச்சம்பவத்தைப் பார்க்கையில் சென்னை பல்கலைக்கழகத்தில் சங்கிகளை உள்ளே விடாமல் தடுத்த மாணவர் போராட்டமே நம் நினைவிற்கு வருகிறது. நைச்சியமாக சங்கிகளை உள்ளே விட்டது தொடங்கி அவர்களுக்காக பதிவாளரே படியிறங்கி வந்தது வரையில் நடந்த கூத்துக்களை நினைக்கையில் மாண்டசூர் சம்பவத்தின் வரிசையில் காவிகளின் கால்களில் முதலில் விழப் போவது சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்களாகவும் இருக்கலாம். இந்த புண்ணிய கலாச்சாரம் தமிழகம் முழுவதிலும் விரைவில் பரவலாம்.

தமிழக பேராசிரியர்களே, காவிகளின் கால்களில் விழத் தயாராக இருக்கிறீர்களா? எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழாக்கம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க