த்திய பிரதேச மாநிலத்தின் 32 மாவட்டங்களில் ‘பஜ்ரங் தள்’ அமைப்பு ஆயுத பயிற்சி முகாம்கள் அமைத்து தமது உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, வாள் பயிற்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. இப்பயிற்சி குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்திருக்கின்றன.

’பாபர் மசூதி இடிப்பு’, இழிபுகழ் விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அணியான பஜ்ரங் தள் அமைப்பு மத்திய பிரதேசத்தில் கடந்த மே 3 முதல் மே 11 வரை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தியிருக்கிறது. இந்த முகாமில், துப்பாக்கி, வாள் மற்றும் லத்தி ஆகியவற்றை பிரயோகிப்பதற்கான பயிற்சிகள், அதில் கலந்து கொண்ட பஜ்ரங்தள் அமைப்பினருக்கு வழங்கப்பட்டது.

சமூக வலைத் தளங்களில் வலம் வந்த பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி புகைப்படம்

மபி-யின் பியோரா, ராஜ்கர் ஆகிய மாவட்டங்களில் பஜ்ரங்தள் கும்பல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, இது குறித்து மத்திய பிரதேசம், ராஜ்கர் பகுதியின் பஜ்ரங்தள் தலைவனான தேவிசிங் சிசோடியாவிடம் கேட்டபோது, “இத்தகைய 10 நாள் முகாம்களை ம.பி-யின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்துகிறோம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஜ்ரங் தள் உறுப்பினர்களுக்கு, லவ் ஜிகாதிகள் மீதும் தேசவிரோதிகள் மீதும், பசு வதையாளர்கள் மீதும் துப்பாக்கியையும் லத்தியையும் எப்படி பிரயோகிக்க வேண்டும் என்பதை சொல்லித் தருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரான ஜெய்வர்தன்சிங் மற்றும் மனக் அகர்வால் ஆகியோர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஆர்.எஸ்.எஸ். தமது இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறது. இதன்மூலம், இவர்கள் அமைதியான வழியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தையும் கூட வன்முறையாக்கும் வாய்ப்புண்டு. பாஜக அரசாங்கத்தின் கீழ் இவர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது” என தமது கண்டன அறிக்கையில் கூறியுள்ளனர்.

காங்கிரசின் கண்டனங்கள் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த லோகேந்திர மாளவியாவிடம் கேட்கையில், “1995 முதல் இத்தகைய பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். மகளிர் அமைப்பான துர்கா வாஹினியிலும் இத்தகைய பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். இதற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. காங்கிரசின் திக்விஜயசிங் ஆட்சியிலும் இவ்வாறு நடத்தியிருக்கிறோம்” என பதில் கூறியுள்ளார்.

மேலும், “உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள் “ஏர்-கன்” வகையைச் சேர்ந்தவையே. அணியினரை வலுவானவர்களாக உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இத்தகைய பயிற்சிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என்றால், எங்கள் மீது ஏன் போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ்-க்கு விளக்கமளித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ரஜ்னீஸ் அகர்வால், “இது ஒரு தற்காப்புப் பயிற்சி நிகழ்வு. அவர்கள் சட்டவிரோதமான  துப்பாக்கிகளை பயன்படுத்தாத வரையில் அதில் எவ்வித தவறும் இல்லை. இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியும், அரசியலமைப்புச் சட்டமும் உள்ளது. யாரும் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்க முடியாது. போலீசு அவர்களை விசாரிக்கவேண்டும். அவர்கள் சட்டவிரோத ஆயுதங்கள் உபயோகித்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து போபால் போலீசு ஐஜி ஜெய்தீப் பிரசாத்திடம் ”இந்துஸ்தான் டைம்ஸ்” செய்தியாளர்கள் கேட்டபோது,  “எங்களுக்கு மற்ற முகாம்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பஜ்ரங் தள்-ளின் பியோரா மற்றும் ராஜ்கர் முகாம்களின் புகைப்படங்களைப் பார்த்தோம். ராஜ்கர் மாவட்ட எஸ்.பி இது குறித்து விசாரித்து வருகிறார். விசாரணை முடிந்தபிறகுதான் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், அதற்கு ஏற்றாற் போல ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களையும், காதுகளையும் இறுக மூடிக் கொண்டுள்ளன. தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டார்கள், விஷமிகள் கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்று நாக்கூசாமல் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி இறைக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க – ஊடக – ரஜினி கும்பலகள் தமது உண்மையான சமூகவிரோதிகள் ஆயதப் பயிற்சி செய்வதை நியாயம் என்பார்கள். நாம் போராடினால் சமூகவிரோதி, அவர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து கலவரம் செய்தால் தேசபக்தர்கள்!  ஆகவே நாம் ‘தேசபக்தர்களை’ கருவறுக்கும் ‘சமூக விரோதிகளாகவே’ தொடர்வோம்!

(முகப்புப் படம்: ஆக்ராவில் பஜ்ரங்தள் கும்பலின் ஆயுதப் பயிற்சி. நன்றி- ராய்டர்ஸ் கோப்புப்படம்)

மேலும் படிக்க
Bajrang Dal arms training to cadres to take on ‘love jehadists’
Bajrang Dal cadre gets arms training to ‘protect Hindus’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க