வஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (16.09.2018) அன்று வெளியாகின. மாணவர் சங்க தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளையும் இடதுசாரி மாணவ அமைப்புகளின் கூட்டமைப்பு வென்றுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர்கள் அனைத்து இடங்களையும் வென்றுள்ளனர்.

கிட்டத்தட்ட எட்டாயிரம் மாணவர்கள் பயிலும் ஜே.என்.யூ-வில் (JNU) ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை இடதுசாரி மாணவ அமைப்புகள் பெற்றுள்ளன. ஆயிரம் வாக்குகளை பெறுவதற்குக்கூட திணறிய ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தன்னுடைய கையாலாகாதனத்தைக் காட்ட குண்டாயிசத்தில் இறங்கியிருக்கிறது.

மாணவர் தேர்தலில் தங்கள் வெல்லப் போவதில்லை என்பதை அறிந்த ஏபிவிபி அமைப்பினர் சனிக்கிழமை முதலே வன்முறையில் இறங்கியிருக்கின்றனர். வாக்குகளை எண்ணவிடாமல் இடையூறு செய்து வந்த நிலையில், தேர்தல் குழு அவர்களை கண்டித்து அனுப்பி வைத்தது.

ஞாயிற்றுக்கிழமை நான்கு இடங்களையும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வென்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு ஏபிவிபி குண்டர்கள் வெற்றியைக் கொண்டாட குழுமியிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.

நள்ளிரவு 2.30மணியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து தாக்குவதோடு பாட்டில்களையும் அவர் மீது எறிகின்றனர். தடுக்கவந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தவர்களையும் காவி குண்டர்கள் தாக்கத் தொடங்குகின்றனர்.

ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் தலைவர் என். சாய்பாலாஜி, ஏபிவிபியின் தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்லஜ் விடுதியில் இருந்த மாணவர்களை ஏபிவிபி அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்கினர். பவன் மீனா என்ற இடதுசாரி அமைப்பின் மாணவரை தடியால் தாக்கியதை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு போனபோது, ஏபிவிபி அமைப்பின் தலைவர் சவுரப் சர்மா தலைமையில் வெறியாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். பவன் மீனாவின் நண்பர்கள் என நினைத்து பல மாணவர்களை ரத்தம் வருமளவுக்கு அடித்துக்கொண்டிருந்தனர்.

வன்முறை வெறியாட்டத்தை தடுக்க முனைந்த என்னையும், கீதா உள்ளிட்ட பல மாணவர்களையும் வெளிப்படையாக அவர்கள் மிரட்டினர். முன்னாள் மாணவரான அபினய் என்பவரை கும்பலாக துரத்திச் சென்று கடுமையாகத் தாக்கினர். அவர்கள் அடித்ததில் அபினய் மயக்கமானார். அம்புலன்ஸை வரவைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

மாணவர்களின் பயம் காரணமாக அவர்களுடன் நான் அங்கேயே இருந்தேன். ஆனால், அவர்கள் என்னையும் அடித்தனர். மயக்கமடையும் நிலையில் என்னுடைய விடுதி அறைக்கு வந்துவிட்டேன். ஏபிவிபியின் வன்முறை வெறியாட்டம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன்” என்கிறார்.

மாணவர்கள், வீடியோ ஆதாரங்கள் இருந்தும் வழக்கம்போல, ’நாங்களும் தாக்கப்பட்டோம்’ என ஒப்பாரி வைக்கின்றனர் ஏபிவிபி குண்டர்கள்.  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போன தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை பின் தொடர்ந்து சென்று, காவல் நிலையத்தின் வாசலில் தடிகளோடு கெத்தாக ஏபிவிபியினர் நின்றதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வந்த சாய்பாலாஜியை ‘காவல் நிலையத்தை விட்டு வெளியே வா உன் கதையை முடிக்கிறோம்’ என மிரட்டியுள்ளனர். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு போலீசு பாதுகாப்பு தேவை என கேட்டிருக்கிறார் புதிதாக மாணவர் சங்க தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாய்பாலாஜி.

ஏபிவிபி குண்டர்படை, கல்லூரி பெண்களிடம் கீழ்த்தரமாக பேசியதோடு, அவர்களையும் அடிக்கப் பாய்ந்துள்ளது. கும்பலாக சேர்ந்து தாக்கிக் கொண்டிருந்த ஏபிவிபினரிடமிருந்து மாணவர்களை காப்பாற்றப் போன முன்னாள் மாணவர் சங்க தலைவர் கீதா குமாரியை கையை முறுக்கி, கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் பேசும் பாஜகவினரும் வலதுசாரி கருத்தாளர் என்கிற பெயரில் பேசும் சங்கிகளும் கல்லூரி மாணவர்கள் படிப்பை மட்டும் கவனிக்க வேண்டும், அரசியல்-போராட்டம் எல்லாம் தேவையில்லை என வாய்கிழிய அறிவுரை சொல்வார்கள்.  கும்பல் வன்முறையை கருவிலிருந்தே வளர்தெடுக்கும் சங்பரிவாரின் மாணவர் அமைப்பின் குண்டாயிசம் குறித்து அவர்கள் ஒருபோதும் வாயைத் திறப்பதில்லை.

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க