Sunday, January 24, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் JNU மாணவர் தேர்தல் : இடதுசாரிகள் வெற்றி ஏன் ? நேர்காணல்

JNU மாணவர் தேர்தல் : இடதுசாரிகள் வெற்றி ஏன் ? நேர்காணல்

-

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை 2016 மாணவர் தேர்தலில் இடதுசாரிகள் அணி வெற்றி பெற்றிருப்பதை அறிவீர்கள். ஜே.என்.யூ-வில் கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இது அதிகம் கவனிக்கபட்டது. இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யை இடதுசாரிகள் அணி தோற்கடித்துள்ளது. மாணவர் சங்கத்தின் முக்கியமான 4 பதவிகளுக்கான தேர்தலிலும் இடதுசாரிகளே வெற்றி பெற்றிபெற்றிருக்கிறார்கள்.

இத்தேர்தல் குறித்தும், அரசின் அடக்குமுறைகளுக்கு பிந்தைய ஜே.என்.யூ நிலைகுறித்தும் JNU மாணவர் ஆனந்த் (புதிய பொருள்முதல்வாதிகள்) அவர்களுடன் ஒரு நேர்காணல்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

வணக்கம். என்னுடைய பெயர் ஆனந்த். நான் டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வருகிறேன். எனது துறை சர்வதேச சட்டம். பல்கலையில் இயங்கும் ”புதிய பொருள்முதல்வாதிகள்” என்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன். இந்த அமைப்பு பல்வேறு போராட்டங்களை எடுத்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவன் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு தோழர் கோவன் பாட்டிற்காக கைது செய்யப்பட்டபோது அப்போதைய ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் கண்ணையாகுமாரின் தலைமையில் நாங்களும் இணைந்து போராட்டத்தை நடத்தினோம். 2011-ல் மாட்டுக்கறி திருவிழா நடத்தவேண்டும் என்று தீர்மானம் செய்து அந்த உரிமைக்காக மிகப்பெரிய அளவில் ஜே.என்.யூ-ல் போராடிய அமைப்பு எங்களைடையது.

ஜே.என்.யூ-வை பற்றி சொல்லுங்கள் ?

ஜே.என்.யு ஒரு காம்பவுண்ட் சுவருக்குள் அனைத்துமே இருக்கிற மாதிரியான ஒரு பல்கலைகழகம். இதில் பல்வேறு துறைகள் இருக்கிறன. இதை நாங்கள் பள்ளிகள்(school) என்போம். உதரணாமக ஸ்கூல் ஆப்ஃ இண்டர்நேசனல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆஃப் சோசியல் சிஸ்டம்ஸ், ஸ்கூல் ஆஃப் லேங்குவேஜ் இது போல.. அந்த பள்ளிகளுக்குள் சென்டர் இருக்கும். உதாரனமாக ஸ்கூல் ஆஃப் இண்டர்நேசல் ஸ்டடிஸ் என்ற பள்ளியில் சென்டர் ஃபார் ஆப்பிரிகன் ஸ்டடிஸ்,சென்டர் ஃபார் லத்தின் அமெரிக்கன் ஸ்டடிஸ் என சின்ன சின்ன துறைகளாக இருக்கும். இது தான் ஜே.என்.யு.இங்கே கிட்டதட்ட 8000 மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். 1000-த்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 2008-ல் தான் தமிழ் துறை ஆரம்பித்தார்கள். இதில் எம்.பில், பிஎச்டி என 30-40 மாணவர்கள் படிக்கிறரகள்.

ஸ்கூல் ஆஃப் இண்டர்நேசனல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆஃப் லேங்குவஜ், ஸ்கூல் ஆஃப் சோசியல் சிஸ்டம்ஸ்… இந்த மூன்று பள்ளிகள் தான் மிகப்பெரிய பள்ளிகள். மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அதே போல் அரசியல் செயற்பாடுகளும் இந்த மூன்று பள்ளிகளில் தான் முக்கியமாக இருக்கும். இந்த மூன்று பள்ளிகளில் எந்த அமைப்பினர் பலமாக இருக்கிறர்களோ அவர்கள் தான் மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள்.

பல்கலையில் இடதுசாரி சிந்தனைகள் முன்னணியில் இருப்பது ஏன்?

ஜே.என்.யூ ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு இடதுசாரி சிந்தனை உள்ள வளாகமாகத் தான் இருந்து வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பார்த்தால் நேருவின் சிந்தனை. எப்படிப்பட்ட விமர்சனங்களையும் அரசாங்கத்தின் மீது வைக்கலாம்; விமர்சனங்கள் இருக்கக்கூடிய பல்கலைகலைகழகம் தான் உண்மையான பல்கலைகழகம் என்று ஜவஹர்லால் நேரு சொல்லியிருக்கிறார். ஒரு இடத்தில் எதையும் பேசலாம் எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், அரசை எதிர்த்து ஒரு சமூதாயத்த எதிர்த்து விமர்சனம் வைக்கலாம் என்று சொல்லும்போதே இயற்கையாகவே இடதுசாரி சிந்தனைகள் தான் அந்த இடத்தை கைப்பற்றி கொள்கின்றன.

சாதாரணமாக பொதுமக்கள் மத்தியில் எது நகைப்பிற்குரியதோ அந்த விசயங்கள் எல்லாம் ஜே.என்.யூ-க்குள் தலைகீழாக இருக்கும். உதாரணமாக மோடியை கிண்டல் செய்தால் பெரும்பாலான மக்கள் அதை ஒரு காமெடியாக, சிந்தனையாக, சிரிப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் ஜே.என்.யூ-க்குள் ஒரு மாணவர் குஜராத்திலிருந்து வருகிறார் என்றால் அவர்களை கேலிப்பொருளாக பார்க்கும் ஒரு பண்பு இருக்கிறது. நீங்கள் குஜராத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளவே தயங்கக்கூடிய நிலைமை தான் இருக்கிறது

உள்ளுக்குள் பயங்கரமான பிற்போக்குவாதியாக இருக்கலாம்; ஆனால் ஜே.என்.யூ மாணவரகள் மத்தியில் முற்போக்காக காட்டித் தான் ஆகனும். இல்லை என்றால் அந்த சமுதாயத்தில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி தன்னை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் தான் இன்றைக்கும் வலதுசாரி சக்திகளாக ஜே.என்.யூ-வுக்குள் சிறிய அளவுக்கு இருக்கிறார்கள்.

கண்ணையா குமார் கைதுக்கு பிறகு தற்போதைய 2016 மாணவர் சங்க தேர்தல் வரை நடந்தவை பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

பிப்ரவரி 9–ம் தேதி நடந்த நிகழ்ச்சி அனைவரும் அறிந்தது தான். அதன் பிறகு அரசு மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை, மாணவர்கள் மீது ஏவப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தலைமறைவானார்கள். கண்ணையா குமார் கைது செய்யப்பட்டர். பிறகு இரண்டாம் கட்ட போராட்டம் எப்பொழுது ஆரம்பித்தது என்றால் அந்த மாணவர்கள் மீது தண்டனை ஏவப்பட்டபோது. குறிப்பாக கண்ணையா குமார் அவர்களுக்கு தண்டணைத் தொகையாக ரூ.20,000 உமர்காலித்திற்கு ஒரு செமஸ்டர் தடையும், அனிர்பனுக்கும் ஐந்து ஆண்டுகள் வளாகத்திற்குள் வரமுடியாது என்ற அளவிலும் தண்டனை கூறப்பட்டது. அந்த தண்டனை அநீதியானது என்று  மிகப்பெரிய போராட்டட்தை தொடங்கி 10-15 நாட்களுக்கு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம். இறுதியில் தனிப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் அந்த தடை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்று மறுபடியும் ஒரு சில மாற்றங்களுடன் அந்த தடை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.இது தான் பிப் 9-லிருந்து எலெக்சனுக்கு முன்பு வரை நடந்த விசயம்.

ஜே.ன்.யூ மாணவர்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறை என்ன விளைவை ஏற்படுத்தியது?

இந்த போராட்டத்தின் மூலமாக ஆளும் வர்க்கம் குறிப்பாக ஏ.பி.வி.பி-பி.ஜே.பி போன்ற அமைப்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான். போராட்டம் தீவிரமாக ஆக ஆக  ஒரு சில மாணவர்கள் அதாவது ஒரு பள்ளியின் தலைவரும், மைய ஏ.பி.வி.பி-யின் துனை தலைவரும் அவ்வமைப்பிலிருது வெளியேறினார்கள். ஒரு நீண்டகால தத்துவார்த்த ரீதியான வகையில் மனுஸ்மிருதி என்பதை ஏ.பி.வி.பி ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்று கேள்வி வைத்தார்கள். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அம்பேத்கர் மனுஸ்மிருதி எரித்த நாளில் வெளியே வந்த மாணவர்களும் மனுஸ்மிருதியை ஜே.என்.யூ வளாகத்திற்குள் எரித்தார்கள்.
ஸ்மிருதி இராணி மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்தார்கள். இதற்கும் மற்ற வளாகத்தில் நடந்த மாணவர் பிரச்சனைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பார்த்தால் தொடர்பு இருக்கிறது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஸ்மிருதி இராணியை நியமித்தார்களோ அதை அவர் சரியாக நிறைவேற்றவில்லை. ஒரு பெரிய பிரச்சனையில் கொண்டு நிறுத்திவிட்டார். எந்த இடத்திலேயும் அவர்கள் வெற்றியடையவில்லை. எந்த வளாகத்திலும் ஏ.பி.வி.பி தத்துவத்தை உள்ளே நுழைக்க ஸ்மிருதி இராணி சரியான ஒரு ஆயுதமாக பயன்படவில்லை என்ற காரணத்தினால் தான் அவர்களை மாற்றினார்களே ஒழிய அவர்கள் திட்டத்தை கைவிடவில்லை.

ஜே.என்.யூ 2016 மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி தோல்வியடைந்தது ஏன்?
கடந்த ஆண்டே சென்ட்ரல் பேனலில் ஏ.பி.வி.பி துணை செயலாளராக இருந்தது. அதற்கு முன்னர் வாஜ்பாய் காலத்தில் தலைவராக இருந்தார்கள். இவ்வாண்டு AISA- க்கு எதிராக பிரசாரம் நடந்தது. ஒரு பாலியல் குற்றத்தில் அதன் முன்னாள் மாணவர் ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டை ஒட்டி அதை வைத்து பிரச்சாரம் செய்தார்கள். அதனால் எனக்குதெரிந்த வரை ரொம்ப நம்பிக்கையாக இருந்தாரக்ள். நாங்கள் எல்லாவற்றிலேயும் ஜெயிப்போம் எங்கள் பக்கம் ஆதரவு இருக்கிறது என்று தான் எண்ணினார்கள்.முன்னர் ஏ,.பி.வி.பி பல்வேறு பதவிகளில் வென்றிருந்தாலும் இன்று அதிகாரத்தில் இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் இருந்தாலும் பதவியில் இல்லை. ஜீரோவாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் ஏ. பி.வி.பி ஜே.என்.யூ-வின் சுதந்திர ஜனநாயகா அமைப்பு மேலே நடத்திய தாக்குதல் தான். இதனால் தான் மாணவர்கள் மத்தியில் பொதுவாகவே ஒரு பயமும் ஒரு அதிருப்தியும் பாதுகாப்பற்ற உணர்வும் வந்திருக்கிறது. இந்த ஏ.பி.வி.பி வந்தால் நாளைக்கு நமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும். ஏ.பி.வி.பி அரசியல் என்பது வன்முறை பொறுக்கித்தனமான அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதை கண்கூடாக மாணவர்கள் பார்க்கிறர்கள். ஜே.என்யூ வின் விவாதம் எப்படி இருக்கும் என்றால் கருத்தியல் ரீதியானதாக இருக்குமே ஒழிய வன்முறையாக இருக்காது.

ஜே.என்.யூ மாணவர் சங்க தேர்தல் எப்படி நடக்கும்?

ஜே.என்.யூ -வுக்கு என்று ஒரு சாசனம் இருக்கிறது. அரசியல் சாசனம் இருக்கிறது. லிங்டோவிற்கு முன்னர் எப்படி இருக்கும் என்றால் கிட்டத்தட்ட ஒருமாத காலம் தேர்தல் திருவிழா என்றே சொல்லலாம். வெளியில் தேர்தல் திருவிழா என்றால் பிரியாணி பொட்டலம், சாராயம், ஓட்டுக்கு காசு, நடிகர் நடிகைகள் குத்தட்டம் இந்த மாதிரி தான் நமக்கு தெரிந்த தேர்தல் திருவிழா நடக்கும். நமது பொதுக்கூட்டங்களில் கேள்வி கேட்கும் உரிமை எல்லாம் கிடையாது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இங்கு உட்கார்ந்திருப்பவர்கள் பிரியாணி பொட்டலத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். இது தான் தேர்தல் மாநாடு.
ஆனால் ஜே.என்.யூ- வில் ஒரு பொதுக்கூட்டம் என்றால் அவர்கள் பேசும் நேரத்திற்கு இரண்டு மடங்கு நேரம் மாணவர்கள் அவர்களை நோக்கி கேள்வி கேட்பாரக்ள். அதற்கு நேரம் ஒதுக்கப்படும். அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகணும். அப்படி சொல்வதில் தடுமாறுதல் ஏற்பட்டால் பலகீனமாக போய் முடியும். அவர்கள் தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள்
ஒரு ஒரு டீக்கடையிலும், தாபாவிலும் மாணவர்கள் உட்கார்ந்து இரவு ஒரு மணி வரை விவாதம் செய்வார்கள். இவர் சரியானவரா இந்த உறுப்பினர் சரியாக வருவாரா? இந்த உறுப்பினரின் கொள்கை ஜே.என்.யூ -வை பாதுகாக்குமா என்று விவாதம் நடக்கும்.

பல்வேறு பள்ளிகளின் பொதுக்குழு கூட்டம் நடக்கும் அக்கூட்டத்தில் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தாங்கள் கடந்த ஆண்டில் என்ன வேலை செய்திருக்கிறோம்; இந்த வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என்று அவர்களின் அறிக்கையை சமர்பிக்கவேண்டும். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடக்கும். அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும். மாணவர்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறும் இல்லை என்றால் தோற்கடிக்கப்படும்.இதில் வெளிப்படையாக தண்டிப்பது கிடையாது. திருப்பி அழைக்கும் உரிமை மாதிரியும் இதை சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு தார்மீக பிரச்சணை ஏற்படும், பண்பில்லாதவன் தேர்தெடுத்தும் சரியாக செயல்படாதவன் என்று பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாணவர்களோ அல்லது கட்சிக்கே அவமானமாக முடியும்.

இது முடிந்த பிறகு அடுத்து வரும் தேர்தலுக்காக தேர்தல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் எல்லா கட்சியினரும் நடுநிலையானவர்கள் என்று தோன்றக்கூடிய மாணவர்களை நிறுத்தி தேர்ந்தெடுக்க வைப்பார்கள். இது எப்படி இருக்கும் என்று பார்த்தால் இந்திய தேர்தல் முறையில் நம் தேர்தல் அதிகாரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. அரசாங்கம் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தேர்தல் அதிகாரியாக நியமிக்கிறது. அவர் அரசாங்கத்தின் அடியாளாக இருந்து தேர்தல் நடத்துகிறார். மக்களிடம் கருத்து கேட்பதில்லை.ஆனால் ஜே.என்.யூ வில் தேர்தல் கமிசன் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மாணவர்கள். இம்மாணவர்கள் தங்களுக்குள் ஒரு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுப்பார்கள். இப்படி தான் தேர்தல் அமைப்பு இருக்கும். அதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். தேர்தல் நடக்கும். தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் கமிசன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்கும். தேர்தல் கமிசன் இவர் தான் தலைவர், துணைத்தலைவர் என்று கூறுவதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்
அகடமிக் கவுன்சில் போன்று முக்கியமான கமிட்டிகளில் மாணவர் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். நிர்வாகம் தேர்தல் கமிசன் கொடுத்த லிஸ்டை ஏற்றுக்கொள்ளும். நிர்வாகத்தில் தகுதிக்குரிய இடத்தை கொடுக்கும். இது லிங்டோவுக்கு முன்னாடி இருந்தது.

லிங்டோ கமிட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் தேர்தல் நடப்பதற்கு முன்னரே ஜி.ஆர்.சி என்று ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அந்த அமைப்பு நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சின்ன கமிட்டி. ஆந்த கமிட்டிதான் முழுமுழுக்க இந்த தேர்தல் நடத்தக்கூடிய பொறுப்பாகவும் அந்த தேர்தல் ஆணையத்திற்கும் மாணவர் சங்கத்திற்கும் உரிமை வழங்கும் அமைப்பாகவும் இருக்கிறது. எந்த சமயத்திலும் தேர்தல் கமிசன் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலைக்கக்கூடிய உரிமை ஜி.ஆர்.சி க்கு இருக்கிறது.

முன்னர் தேர்தலில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். வயது வரம்பு கிடையாது. லிங்டோவிற்கு பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் ஒருவர் ஒரு முறைதான் போட்டியிட முடியும். அவர் தோற்றுப்போனால் கூட அடுத்த முறை போட்டியிட முடியாது. இது மிகப்பெரிய ஜனநாயக மீறல். வயது வரம்பு என்று ஒன்று இருக்கிறது. பி.எச்.டி படித்தால் 30வயசுக்கு மேல் நிற்க கூடாது. இந்திய சூழலில் படித்துவிட்டு வேலை பார்க்கிறான். மூனு வருசம் குடும்பத்திற்கு வேலைபார்த்து குடும்ப பிரச்சனைகளை முடித்துவிட்டு படிக்க வருபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களை தேர்தலில் நிற்கும் வாய்ப்பை மறுக்கும் ஜனநாயக மறுப்பாக தான் மாறிவிட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க எல்லா கல்லூரிகளிலும் பல்கலைகழகத்திலும் இது அமல்படுத்தப்படுகிறது. இதனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகமும் பறிபோகிறது. இதனால் பல அமைப்புகள் எங்களின் புதிய பொருள்முதல்வாதிகள் அமைப்பும் உள்ளிட்டு இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். தீவிர இடதுசாரி மாணவர்களும் இந்த நிலைப்பாட்டை தான் எடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தல் சடங்காக குறுகிவிட்டது என்பது தான் உண்மை.

ஜே.என்.யூ 2016 தேர்தல் முடிவுகளை எப்படி பார்ப்பது.ஏ.பி.வி.பிக்கு உண்மையில் தோல்வியா?

இந்த முறை பிப்-9 நிகழ்ச்சிக்குப் பிறகு முன்னாடி பார்த்த மாதிரி மிகப்பெரிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் அடக்குமுறை மாணவர்கள் மத்தியில் இருந்தது. அடக்குமுறைக்கு எதிரான ஒட்டுமொத்தமான முற்போக்கு மாணவர்களின் ஒற்றுமை தேவைப்படும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவாகத் தான் AISA என்ற சி.பி.ஐ (எம்.எல் –லிபரேசன்), அமைப்பும் SFI என்ற சி.பி.எம் என்ற அமைப்பும் இடதுசாரி ஒற்றுமை என்ற அடிப்படையில் சேர்ந்து போட்டியிட்டனர். நாம் ஒன்று சேரவில்லை என்றல் ஏ.பி.வி.பி பொறுப்புக்கு வந்துவிடுவார்கள் என்ற அடிப்படையில் இடதுசாரி ஒற்றுமை என்று ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு முக்கியமான பெரிய கட்சிகள் சேர்ந்து தான் ஏ.பி.வி.பி-யை தோற்கடித்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஏ.பி.வி.பி-யின் தோல்வியா என்று பார்த்தால் அது கேள்விக்குறியான விசயம் தான். ஏ.பி.வி.பி தனது ஓட்டை இன்றைக்கும் தக்கவைத்திருக்கிறர்கள். அதைவிட கொஞ்சம் அதிகமாகத்தான் இம்முறை வாங்கியிருக்கிறார்கள். ஓட்டுமொத்தமாக பார்க்கும் போது இது மகிழ்ச்சியான விசயம் தான். ஏனென்றால் ஏ.பி.வி.பிக்கு போனமுறை பல கவுன்சிலர்கள் இருந்தார்கள். 13 முதல்14 கவுன்சிலர்கள் இருந்தார்கள். இன்று1 கவுன்சிலர் தான். ஆனால் ஓட்டு வாங்கியிருக்கும் எண்ணிக்கையை பார்க்கும் போது அவர்கள் அதை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான விசயமாக இருக்கிறது.

ஜே.என்.யூ நிலைமைகளுக்கு மாறாக டெல்லி பல்கலைகழகத்தில் ஏ.பி.வி.பி வெற்றி பெறுவது ஏன்?

டெல்லி யூனிவர்சிட்டி என்று பாத்தால் இடது சாரி சக்திகள் மிக மிக குறைவு. டெல்லி பல்கலைகழகத்தில் காங்கிரசும், பிஜேபியும் தான் மாறி மாறி பதவிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு எப்படி தேர்தல் நடக்கும் என்று பார்த்தால் நமது எம்.எல்.ஏ , எம்.பி தேர்தலுக்கும் டெல்லி பல்கலைகழக தேர்தலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. சாராயம் , பார்ட்டிக்கு கூட்டிக்கொண்டு போவது பணம் தருவது இது போல எல்லாமும் நடக்கும். இன்னமும் மிகப்பிற்போக்கான விசயம் என்னவென்றால் அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு. சாதரண, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் டெல்லி பல்கலைகழக தேர்தலில் நிற்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விசயம். ஆதிகக் சாதியினர் பொதுவாக ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த தேர்தலில் போட்டியிடுவார்கள். இது போன்ற பிற்போக்காகத்தான் ஏ.பி.வி.பி வெற்றி பெறும் கேம்பஸ் இருக்கிறது. இதுபோன்று பிற்போக்காக இருப்பதால் தான் ஏ.பி,வி.பி போன்ற அமைப்புகளோ அல்லது காங்கிரஸ் போன்ற அமைப்புகளோ பதவிக்கு வர முடிகிறது.

பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் ஆணும் பெண்ணும் பேசக்கூடாது. ஆணும் பெண்ணும் சேர்ந்து போனால் அவர்களை தாக்குவது அதுபோல அந்த பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர் ஆசிரியர் உறவு எப்படி இருக்கும் என்றால் ஆண்டான் அடிமை உறவுபோல இருக்கும்.காலை தொட்டு கும்பிடுவது, காலை கழுவுவது. பல்கலைகழகத்தின் உள்ளே ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடக்கும் .இந்த அளவுக்கு பிற்போக்குத்தனமான கேம்பசில் ஏ.பி.வி.பி போன்ற அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த முடியும். ஜே.என்.யூ போன்ற முற்போக்கான , ஜனநாயக பூர்வமான, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுக்க கூடிய இடத்தில் ஜனநாயக விரோத கொள்கைகளை கொண்டிருக்ககூடிய ஏ.பி..வி.பி போன்ற ஜனநாயாக விரோத அமைப்பு ஒரு போதும் வரமுடியாது என்று நிச்சயம் சொல்லலாம்.

BAPSA என்ற அமைப்பு இரண்டாம் இடம் வந்திருக்கிறதே. அவர்களைப் பற்றி சொல்லுங்கள்?

பிர்சா,அம்பேத்கர், பூலே என்று பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் அமைப்பு என்று இவ்வமைப்பு சொல்லிக்கொள்கிறது. இடதுசாரிகளை தான் தங்களின் முதன்மையான எதிரியாக கருதி இவர்கள் செயல்படுகிறார்கள். அடையாள அரசியல் என்ற வகையில் செயல்படுகிறார்கள். இவர்களின் தாய் அமைப்பான UDSF தான் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் அன்புமணியை முதல் முறையாக வளாகத்திற்குள் அழைத்துவந்தது. தற்போது இவர்கள் கூட்டுவைத்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்புதான் சமீபத்தில் அன்புமணியை அழைத்து வந்தவர்கள். அதற்கு எதிராக BAPSA போராடினார்கள். பிற மாணவர் அனைவரும் பங்கேற்றார்கள்.
பீகாரின் முன்னால் முதல்வர் மாஞ்சி பி.ஜே.பி கூட்டணியில் ஐக்கியமான பிறகும் அவரை அழைத்து வந்து கூட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் விமர்சனம் செய்தோம். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தலித் மாணவி ஒருவர் இடதுசாரி மாணவர் அமைப்பில் செயல்படுவதை விமர்சித்து அம்மாணவிக்கு திறந்த மடல் எழுதினார்கள்.

ஆண்டு தோறும் டிசம்பர் 6 அன்று ஒட்டுமொத்த மாணவர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவுநாளும், பாபர் மசூதி இடிப்பு நாளும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தாங்கள் தான் இதை தலைமை தாங்குவோம் என்று அறிவித்தார்கள். அம்பேத்கருக்கு தாங்கள் தான் உரிமை கொண்டவர்கள் எனவும், பாபர் மசூதி இடிப்புக்கு முஸ்லீம் மாணவர் அமைப்பு தலைதாங்குவது என்றும் அவர்கள் அறிவித்தார்கள். JNUSU சார்பில் கூட்டம் நடத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரண்டு ஊர்வலங்கள் வளாகத்தில் நடைபெற்றன.

அதுபோல SFI,AISA போன்ற அமைப்பின் அரசியலும் இதற்கு ஒரு காரணம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மனுஸ்மிருதியை எரிப்பதை வளாகத்தில் முதலில் செய்தவர்கள் UDSF மாணவர்கள் தான். அதை அப்போது பிருந்தா காரத் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. “School” என்பதை இங்கு ‘புலம்’ என்று புரிந்துகொள்வதே சரியாக இருக்கும். சமூகவியல் புலம், மானுடவியல் புலம், மொழிப் புலம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர அவற்றை ‘பள்ளிகள்’ என்று அழைப்பது வழக்கமல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க