தில்லியின் காற்றில் குளிர் அலைந்து பரவிக் கொண்டிருந்த ஒரு பிப்ரவரி மாத நள்ளிரவில் வினவு செய்தியாளர்கள் உலகிலேயே மிக அதிகளவில் ‘தேசதுரோகிகளை’ உற்பத்தி செய்து வரும் ஜே.என்.யு வளாகத்தின் நுழைவாயிலுக்கு எதிரே காத்துக் கொண்டிருந்தார்கள். நாடே கண்டு அஞ்சும் தீயசக்திகளாக வட நாட்டு ஆங்கில ஊடகங்கள் சித்தரிக்கும் ’தேசவிரோதிகளை’ காண்பதும், அவர்களின் விளைநிலமாக சித்தரிக்கப்படும் ஜே.என்.யு குறித்த ஒரு நேரடி சித்திரத்தை தீட்டுவதே எமது பயண நோக்கம்.
பின்பனிக் காலத்தின் குளிர் ஈரப்பதமின்றி வறட்சியாய் நாசியில் நுழைந்து வெளியேறச் சிரமப்பட்டது. தமிழ்நாட்டின் வெப்பத்திற்குப் பழகிய நாசியின் உட்சுவர்கள் அந்த வறண்ட குளிரில் லேசாகப் புண்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் ஒரு நண்பர் எம்மை முக்கிய நுழைவாலுக்கு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். அவரது நள்ளிரவு உறக்கத்தை கெடுக்கிறோமோ என்கிற உறுத்தலோடு காத்திருந்தோம்.
ஜே.என்.யுவின் முக்கிய நுழைவாயிலின் முன் தடுப்பரண்கள் போடப்பட்டு சில போலிஸ்காரர்கள் அமர்ந்த வண்ணம் உறக்கத்திற்காக தங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் கொசுப் படைகளோடு ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தில்லியின் குளிருக்குப் பொருந்தாத உடைகளோடு நின்ற நம்மை நோக்கி போலீசாரின் புருவங்கள் உயர்வதற்குள் நண்பர் வந்துவிட்டார்.
“சாப்பிட்டீங்களா?”
“மணி பண்ணிரண்டைத் தாண்டியாச்சே.. உங்களுக்குத் தொந்தரவு ஏதுமில்லையே. நீங்க தூங்க வேண்டிய நேரம் தானே?”
“தூக்கமா? சரியா சொன்னீங்க போங்க. இப்பத் தான் சாயந்திரம் ஆகியிருக்கு.. தேனீர் குடிப்பீர்கள் அல்லவா?”
“இந்த நேரத்துக்குக் கடைகள் திறந்திருக்குமா என்ன?”
”வாங்க உள்ளே போவோம்”
அடைகாக்கும் கோழிகளைப் போல் பொழுது சாய்வதற்குள் வீடு சேர வேண்டும் – முக்கியமாக நண்பர்களோடு கூடி அரட்டை அடிக்க கூடாது, அப்படியே அரட்டையடித்தாலும் அதில் அரசியல் போன்ற ’கெட்ட’ சமாச்சாரங்கள் இருந்து விடக்கூடாது என்கிற தமிழ்நாட்டுச் சிறு நகர கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டவர்கள் தில்லி ஜே.என்.யு வளாகத்திற்குள் இருக்கும் தாபாக்களை இரவு நேரங்களில் தரிசிக்கக்கடவர். தேனீருக்காக வளாகத்தினுள் இருக்கும் கங்கா தாபாவுக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.
அந்த நேரத்திலும் சூடான தேனீரோடு அரசியல் விவாதங்களின் வெப்ப நிலையும் மேலோங்கி இருந்தது. இளைய முகங்களின் மத்தியில் சில வயதானவர்களையும் காண முடிந்தது. கேள்விகளைத் தாங்கிய நமது பார்வைக்கு நண்பர் பதிலிருத்தார்,
”அவர்கள் ஆசிரியர்கள் தோழர்”
”ஆசிரியர்களா?”
“ஆமாம். இங்கே வகுப்பறையில் கற்பதை விட அதற்கு வெளியே நடக்கும் விவாதங்களில் தான் நாங்கள் அதிகம் கற்பது வழக்கம்”
”மாணவர்களில் கூட சிலர் முப்பதுகளில் இருக்கிறார்களே?”
“ஆமாம். அவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள். நீங்கள் இங்கே முப்பத்தைந்து வயதுள்ள மாணவர்களையும் கூட பார்க்க முடியும். நாற்பதை நெருங்கிய சிலர் கூட மாணவர்களாக இருக்கிறார்களே”
இந்த பதில் நம்மில் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கலாம். ”தமிழ்ச்சூழலில்” வார்த்தெடுக்கப்பட்ட நாம் ஜே.என்.யுவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள அதன் அறிவுச் சூழலைப் தெரிந்து கொள்வது பயனளிக்கும். அந்த அறிவுச் சூழல் கட்டமைக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தையும் அறிந்தால்தான் ஜே.என்.யூவில் நிலவும் ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மையையும் அதனுள் கருத்துக்களுக்கு – அது எந்தக் “கருத்தாக” இருந்தாலும் – வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர வெளியைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வழியில் நாம் “தேசதுரோகத்தையும்” புரிந்து கொள்வோம்.
நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது என்ன? நமது இளைஞர்கள் எதற்காக படிக்கிறார்கள்?
17 வயது வரை பள்ளிப் படிப்பு. பொறியியல் கல்லூரியில் நுழைவதற்கான அடிப்படைகளை உண்டாக்கிக் கொள்வதற்கு தேவை என்பதற்காகத் தான் அந்தப் பள்ளிக் கல்வியும் கூட. பின், 23 வயதுக்குள் பொறியியல் படிப்பை முடிப்பது. முடித்த உடன் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை. வேலையில் சேர்ந்ததும் வங்கிக் கடனில் நான்கு சக்கர வாகனம். கார் வாங்கிய சில ஆண்டுகளில் திருமணம். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் மீண்டும் வங்கிக் கடனில் ஒரு சொந்த வீடு. படிப்போரில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்தக் கனவை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் உள்ளவர்கள் என்றாலும் மீதிப் பேருக்கு இந்த ஆசை இல்லாமல் இல்லை. எனினும் அந்த ஐந்திலக்க கனவு நிறைவேறுவதாகவே வைப்போம்.
முப்பது அல்லது முப்பத்து மூன்று வயது வரை தொழில்நுட்ப பொறியாளராக காலம் தள்ளுவது. பின் அதுவரை அனுபவத்தில் சேர்த்த தொழில்நுட்ப அறிவைத் தலையைச் சுற்றித் தூர எரிந்து விட்டு உதவி மேலாளராவது. நாற்பது வயதுக்குள் மேலாளர் பதவியை அடைய அலுவலக அரசியலில் சுற்றிச் சுழல்வது. ஐம்பதுக்குள் மூத்த மேலாளராகவோ பொது மேலாளராகவோ அமர்வதற்கான நாற்காலிச் சண்டைகள். ஐம்பத்தெட்டில் ஓய்வு – எழுபதில் சாவு.
இந்த சுழற்சியின் விளைவு என்ன?
முப்பத்தைந்தில் கற்கும் ஆர்வம் சுத்தமாக வடிந்து போன அரைக்கிழமாகவும்.. நாற்பத்தைந்தில் மூளைச்சரக்கு அத்தனையும் காலியாகி இளம் பொறியாளர்களுக்கு பயனற்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் முழுக்கிழமாகவும் ஆகிறார்கள். ஓய்வு பெறுவதற்குள் யாரும் காது கொடுக்க விரும்பாத தத்துவங்களைப் பேசும் தொண்டுக்கிழங்களாக பரிணமிக்கிறார்கள். இப்படித்தான் வாழ்ந்து மறைந்ததற்கு சுவடுகள் ஏதுமின்றியே சென்று சேர்கிறோம்.
முன்னொரு காலத்தில் பி.காம் படித்த குமாஸ்தாக்களால் நிரம்பியிருந்த நமது தமிழ் சூழல், இன்று பொறியியல் படித்த தொழில்நுட்ப குமாஸ்தாக்களால் நிரம்பியிருக்கிறது. கார் வாங்குவதில் துவங்கும் நமது கடங்கார வாழ்க்கை வீடு வாங்கிய பின் உத்திரவாதமாகிப் பின் மாதத் தவணையைத் தவற விடக்கூடாது என்கிற நிரந்தர அச்சத்தில் தள்ளுகிறது. அந்த அச்சத்திலிருந்தே நிறுவனத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற அச்சமும் – இதிலிருந்து அரசியல் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதிலிருந்து ஒதுங்கிச் செல்லும் அச்சங்களும் முளைத்தெழுகின்றன.
எனவே 35 வயதில் படிப்பு என்பது நமக்கு ஒரு அதிர்ச்சி
நமக்கு அறிமுகமாகியிருக்கும் அறிவுலகத்தை அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் கிடைப்பது தான் ஜே.என்.யு. மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க ஐந்தாண்டு கேள்வித் தாள்களை நகலெடுத்துக் கொடுக்கும் பேராசிரியர்கள் அங்கே இல்லை. கற்றுக் கொடுப்பதல்ல – கற்றுக் கொள்ள உதவி செய்வதையே அங்கே ஆசிரியர்கள் செய்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுமாக இணைந்து ஏற்படுத்தியிருக்கும் விவாதச் சூழலுக்குள் நுழையும் மாணவர்கள் இயல்பாக சமூக ஆளுமைகளாக உருவாகிறார்கள்.
கற்றல் என்பது மூடிய சுவர்களுக்குள் மட்டுமின்றி வளாகமெங்கும் மிக இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலைகள், மொழியியல் பற்றி மட்டுமின்றி சமூக மற்றும் மனித உறவுகளின் சிக்கலான பக்கங்கள் மிக இயல்பாக வகுப்பறைக்கு வெளியே புரட்டப்படுகின்றன. அறிவூட்டல் என்பது ஆசிரியரிடமிருந்து மாணவர்களை நோக்கிய ஒற்றைப் பாதையில் அல்லாது – ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்த பரஸ்பர கூட்டு இதைச் சாத்தியமாக்குகின்றது.
நாங்கள் அன்றைய இரவில் கடந்து சென்ற மேசைகளைச் சுற்றி அமர்ந்து கொண்டு விவாதத்தின் போக்கில் பயணித்துக் கொண்டிருந்த எவரிடமிருந்தும் பயனற்ற வார்த்தைகள் ஏதும் வெளிப்படவில்லை என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் அரசியல் என்பது அலுக்காதா? அரசியல் மயமாகவே இருப்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவர்களின் ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகிறது?
இந்தக் கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து அங்கே தங்கியிருந்த நாட்களில் நேரடியாகக் கண்டுணர முடிந்தது. நள்ளிரவு தொடங்கிய எங்களது உரையாடல் சில மணி நேரங்கள் தொடர்ந்தது. தற்போதைய நிகழ்வுகளின் பின்னணியை விரிவாக விளக்கினார். உறங்கச் செல்லும் போது அதிகாலை ஆகியிருந்தது. விழித்த போது மணி பத்தைக் கடந்திருந்தது.
நாங்கள் தங்கியது ஆண்களுக்கான விடுதியில். வெளியிலிருந்து நண்பர்களைக் காண வருபவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு ஒரு சிறிய தொகையைக் கட்டினால் விடுதி நண்பர்களோடு தங்கிக் கொள்ளும் வசதியிருந்தது. மறுநாள் காலை முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்கள் விடுதியில் உள்ள பொதுக் குளியலறைக்குச் சென்றால் அங்கே வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார் ஒரு பெண்.
“அதிர்ச்சியில் மயங்கி விட்டீர்களா என்ன?” பின்னர் நண்பரிடம் எமது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது சிரித்துக் கொண்டே கேட்டார்.
“இல்லை.. அது எப்படி ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் வர முடியும்?”
“இங்கே தங்கியிருக்கும் உடன் படிக்கும் மாணவர் யாரையாவது பார்க்க வருவார்கள். பெண்கள் விடுதிக்கு இங்கேயிருந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆத்திர அவசரமென்றால் அதற்காக ஓடவா முடியும்? கழிவறையை அவசரத்திற்கு பயன்படுத்த வந்திருப்பார். ஏன், உங்கள் மேல் உங்களுக்கே ஏதாவது சந்தேகமா என்ன?”
”அப்படியில்லை.. வெளியே ஜே.என்.யு குறித்து சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் இங்கே படிக்கும் ஆண்கள் பெண்களிடையே உள்ள உறவுகள் பற்றி அதிகம் சொல்லப்படுவதால் எழுந்த கேள்வி தான்”
“நீங்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பொய் பிரச்சாரங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் சேற்றிலேயே வாழ்வதால் அவனுக்கு உலகமே சேறாகத் தெரிகிறது என்று நினைக்கிறேன். அப்படியெல்லாம் இங்கே பெண்களை கீழ்த்தரமான பாலியல் கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதும் இல்லை, பழகுவதும் இல்லை”
”ஆர்.எஸ்.எஸ்காரனை விடுங்கள். அவன் சட்டசபைக்குள்ளேயே நீலப்படம் பார்த்த பாரம்பரியத்துக்கு சொந்தக்காரன் தானே.. ஆனால், பொதுவான சிலர் கூட இங்கே ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதைப் பார்த்தால் தவறாகத் தானே கருதுவார்கள்?”
”நானே கூட ராஜஸ்தானில் இருந்து வந்தவன் தான். எனக்கே கூட முதலில் இங்கே உள்ள சுதந்திரத்தைக் கண்டு அச்சம் கலந்த குறுகுறுப்பாகத் தான் இருந்தது. ஆனால், அதெல்லாம் சில மாதங்கள் தான். பிறகு எனது பழைய குறுகுறுப்புக்குக் காரணம் நான் வளர்ந்த பார்ப்பனிய ஆதிக்க கருத்துக்களின் சூழல் தான் என்பதை புரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வது போல பெண்களை பிள்ளை பெற்றுப் போட்டு புருசனுக்கு கால் அமுக்கி விடும் இயந்திரங்களாக இங்குள்ளவர்கள் பார்ப்பதும் இல்லை, அவ்வாறான கண்ணோட்டத்தோடு பழகுவதும் இல்லை”
”நீங்களே கவனித்துப் பாருங்கள், பெரும்பாலான விவாதங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் சூழல் இருப்பதை நீங்கள் சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பொது விடயங்கள் குறித்து அறிவார்ந்த தளத்தில் உரையாடிக் கொள்ளும் ஒரு ஜனநாயக வெளி இருக்கிறது. அதன் காரணமாக பெண்களை “சைட்” அடிக்கும் ஈவ்டீசிங் போன்ற சில்லறை விசயங்கள் இல்லாமலே போய் விட்டது. அது தான் மாணவிகளுக்கும் ஆண்கள் புழங்கும் கழிப்பறைகளைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி அங்கே எல்லா கழிவறைகளுக்கும் கதவுகளும் உண்டு.. ஒருவருக்கு மேல் நேரத்தில் ஒரே கழிவறையை பயன்படுத்தப் போவதுமில்லை… யாரால் தான் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியும் சொல்லுங்கள்?”
தொடர்ந்து வந்த நாட்களில் இதை நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. வளாகத்தின் அரசியல் சூழல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஜனநாயக உணர்வும் அது வழங்கியிருக்கும் நம்பிக்கையும் பாலியல் கண்ணோட்டத்தை வெகுவாக பின்னுக்குத் தள்ளியிருந்தது.
வளாகத்தினுள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் வண்ணம் பல விடுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி, இருபாலார் விடுதி, மணமான மாணவர் விடுதி என்று அனைத்து வகைகளிலும் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் திரைகளின்றி சேர்ந்து பழகும் வெளிகளில் பாலியல் வன்முறைகளும், பாலியல் கண்ணோட்டங்களும் உதிர்ந்து போய் பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் இயல்பான கண்ணோட்டத்தை குறிப்பாக ஆண்கள் பெற முடியும் என்பதை ஜே.என்.யூ நிரூபிக்கின்றது.
வளாகத்தினுள் மாணவர் விடுதிகளைச் சுற்றி சிறு சிறு தேனீர்க் கடைகள் உள்ளன. அவற்றுக்கு அருகிலேயே உட்காரும் அளவுக்கான கற்களை சுற்றிப் போட்டு நடுவே கல்லால் ஆன மேசை போன்ற ஒரு வடிவம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவை மாணவர்களின் சந்திப்பு மையங்கள். இது போன்ற இடங்களெல்லாம் மாணவர்களால் நிரப்பப்பட்டு எல்லோரும் எதையோ குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
”கண்ணையா கைது பிரச்சினைக்குப் பின்னர் தான் இப்படி அரசியல் பேசுவது அதிகரித்துள்ளதா?”
”இல்லை பொதுவாகவே இங்கே இப்படித் தான் இருக்கும். ஆனால், நீங்கள் பிரமிப்பதற்கு ஏதும் இல்லை. மேலும் இங்கே அத்தனை பேருமே இடதுசாரி அரசியல் மட்டும் பேசுவதில்லை. இடதுசாரி கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றது என்பது உண்மை தான். எனினும், இங்கே விவாதங்களில் பெண்ணியம், பின்னவீனத்துவம், அம்பேத்கரியம், மொழிவழி தேசியம், இன தேசியம்… ஏன் சிலர் இந்துத்துவ அரசியலைக் கூட விவாதித்துக் கொள்வார்கள். இப்படி பல்வேறு அரசியல் கருத்துக்களிடையே மோதலும் கூட நடக்கும்”
”இந்துத்துவ அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் யார் வெல்வது வழக்கம்” சட்டென எழுந்த குறுகுறுப்பில் கேட்டோம். கொஞ்சம் நேரம் சிரித்தவர், பின் சொன்னார் –
“இப்போது அவர்கள் வெறியேறிப் போய் அரசின் உதவியோடு எங்கள் மேல் பாய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இங்கே இருக்கப் போகிறீர்கள் தானே… திரும்பிப் போவதற்குள் அதைப் புரிந்து கொள்வீர்கள்”
“உங்களது ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகின்றன?”
”ஆராய்ச்சிப் படிப்பிற்காக படிப்பதற்கே நிறைய நேரம் தேவைப்படும். வீட்டிலிருந்து அதற்குத் தானே அனுப்பியிருக்கிறார்கள்? ஒழிந்த நேரங்களில் அரசியல் விவாதங்கள், குறும்படங்கள் பார்த்து விவாதிப்பது, அல்லது ஏதாவது நூலைப் படித்து விவாதிப்பது இப்படிச் செல்லும்…”
”சினிமா, ஷாப்பிங் மால்…?”
“சிலர் அப்படியும் நேரத்தைப் போக்குவார்கள். குறிப்பாக அறிவியல் துறை மாணவர்கள் தனித் தனியே தங்கள் ஓடுகளுக்குள் சுருங்கிக் கிடப்பார்கள்… ஆனால், இப்போது எல்லோரையும் அரசு தேசதுரோகிகளாக்கி விட்டுள்ளதால் அவர்கள் வெளியே வந்துள்ளனர். இது உண்மையில் நல்ல விசயம். இதற்காக அரசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்”
உண்மை தான் வளாகத்தில் தங்கியிருந்த நாட்களில் உள்ளே நடந்த கூட்டங்களுக்கு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். ஜே.என்.யுவில் படித்து தற்போது வெவ்வேறு துறைகளில் அறிஞர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் திகழ்பவர்கள் “தேசதுரோகிகளுக்கு” ஆதரவாகப் பேச வந்தனர். இக்கூட்டங்களில் பொதுவாக ஒதுங்கி வாழும் அறிவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
வளாகத்தில் நிலவும் விவாதச் சூழல் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. மார்க்சியம் செல்வாக்கான ஒரு இடத்தில் இருந்தாலும், எவரும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதில்லை. மார்க்சியத்தை ஒரு இளமைத் துடிப்புள்ள தத்துவமாக உணராதோர் எவரும் இங்கே விவாதிப்பது கடினம்.
எதையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் இந்த ஜனநாயக கலாச்சாரத்தின் வீச்சை இந்துத்துவ அரசியலால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை என்பதை விளக்க வேண்டியதில்லை. பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, வேத கால விமானம், மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற சரடுகளெல்லாம் எள்ளி நகையாடி சுக்கல் சுக்கலாக கிழித்தெறியப்பட்டு விடும். அவ்வாறு நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
வலதுசாரி பிற்போக்குக் கண்ணோட்டங்கள் அறிவியக்கச் செயல்பாடுகளோடு எந்த வகையிலும் பொருந்தி வராததோடு போட்டியிட்டுத் தோல்வியடைந்தும் விடுகிறது. ஜே.என்.யு மாணவர்கள் இன்று ”தேசதுரோகிகளாக” முத்திரை குத்தப்படுவதன் இந்துத்துவ பின்னணியை நாம் பின்னர் விரிவாக காணவுள்ளோம்.
அதற்கு முன், இந்தப் பல்கலைக்கழகத்தின் தோற்றம், மாணவர்கள் தேர்வு மற்றும் அவர்களின் வர்க்க / சாதிய பின்னணி குறித்தும் இவ்வாறு வேறு வேறு சமூக சூழல்களில் இருந்து வருபவர்கள் வளாகத்தில் நிலவும் ஜனநாயகப்பூர்வமான சூழலுக்கு எப்படி தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம்
(தொடரும்…)
– வினவு செய்தியாளர்கள்
- புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட் – 1
- JNU நேரடி ரிப்போர்ட் 2 – ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !
- JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?
- JNU நேரடி ரிப்போர்ட் 4 – வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்
- JNU நேரடி ரிப்போர்ட் 5 – மாணவர் விஷ்மய் நேர்காணல்
இடது சாரி தத்துவங்கள் எளிதில் அனைவருக்கும் பரவுகிறது .
இடது சாரிகள் கட்டமைப்பு இதில் வலுவாக இருக்கிறது .
மற்றபடி கல்வி என்பதை மனப்பாடம் செய்து பெரும் வெற்றியாக மாற்றிவிட்ட நமது சமூகத்தில் இப்படியும் இருக்கிறதா எனபது ஆச்சரியம் அளிக்கிறது
\\இடது சாரி தத்துவங்கள் எளிதில் அனைவருக்கும் பரவுகிறது//ஆம் நக்சலைட்டு ஆதரவு தத்துவங்கள் கலை, இலக்கியம், நிர்வாகம் அரசியல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று ஊடுருவி ஐந்தாம் படை வேலையை செம்மையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஐயோ மாமா … அவசரப்பட்டு வாய்விட்டேளே .. அரசாங்கத்துல உக்காந்துட்டே நாட்ட வெள்ளக்காரனுக்கு கூட்டிக் கொடுக்குற மோடியையும் மன்மோகன்சிங்கையும் எததனாம் படையில சேப்பீங்கன்னு இந்த நக்சலைட் பசங்க கேப்பானுங்க .. என்ன பதில் சொல்லப் போறேள் ?
நக்சலைட்டு ஆதரவு தத்துவம்னா என்னானு கேப்பானுங்க ?. எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ.. பத்து, பன்னெண்டு பேர் ரவுண்டுகட்டி பதில் போட்டு கேள்வி கேப்பானுங்க .. தெரியாதுன்னு சொல்லிடுங்கோ .. எதாவது வாய விட்டுட்டேள்னா .. புலி வால புடிச்ச் மாதிரி தான் ..
ஏதோ .. ”நம்ம”வா மாதிரி தெரியறேள் .. உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன் .. அப்புறம் உங்க இஸ்டம்.. ஆத்துல மாமிய கேட்டதா சொல்லுங்கோ .. வரட்டா ?
ஐயோ பாய் மாமா … அவசரப்பட்டு வாய்விட்டேளே ..இந்தியாவில் உக்காந்துட்டே நாட்ட சீனாவுக்கும்,பாகிஸ்தான்கும் காசுகாக கூட்டிக் கொடுக்குற டி ராஜாவும்,சிதாராம் எச் எததனாம் படையில சேப்பீங்கன்னு இந்த பசங்க கேப்பானுங்க .. என்ன பதில் சொல்லப் போறேள் ?எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ.. பத்து, பன்னெண்டு பேர் ரவுண்டுகட்டி பதில் போட்டு கேள்வி கேப்பானுங்க .. தெரியாதுன்னு சொல்லிடுங்கோ .. எதாவது வாய விட்டுட்டேள்னா .. புலி வால புடிச்ச் மாதிரி தான் ..
ஏதோ .. ”நம்ம”வா மாதிரி தெரியறேள் .. உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன் .. அப்புறம் உங்க இஸ்டம்.. ஆத்துல பிவிய கேட்டதா சொல்லுங்கோ .. வரட்டா ?
ஸ்ரீநிவாசன்,
டி ராஜாவும் சீதாரமும் கூட்டிக் குடுக்கறத நீங்க பாத்தேளா?. ஒரு சோலார் தகடு கூட இந்தியாக்காரன் பன்னகூடாதுன்னு அமெரிக்காகாரன் சொல்றானமே.
மாமோய்,
ஒரு சோலார் தகடு கூட இந்தியாக்காரன் பன்னகூடாதுன்னு அமெரிக்காகாரன் சொன்னது நீங்க பாத்தேளா?
அருமை. புரட்சியின் தொட்டிலாக உள்ள ஜே.என்.யூ வைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.
மெட்ராஸி உனிவர்சிட்டி மாறி ஜேஎன்யூ வும் கலை அறிவியல் துறை சார்ந்த பல்கலை கழகம் அதனாலதான் அவுங்க வட்ட வட்டமா சுத்தி உக்காந்து பேச முடியிது