”நீ ஒரு தீவிரவாதி. அதை முதலில் ஒப்புக் கொள். உன்னிடமிருந்து விளக்கங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை. நீ ஒரு தீவிரவாதி. நீ ஒரு பயங்கவாதி. ஒப்புக் கொள்”
பிப்ரவரி 10ம் தேதி இரவு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் வெறிக்கூச்சல்களை எதிர் கொண்டு அதற்கு விளக்கங்கள் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் உமர் காலித். உமர் காலித் தில்லி ஜவகர்லால் பல்கழைக்கழக மாணவர். மேற்படி “விவாதம்” நடந்ததற்கு முந்தைய தினம் பல்கலைக்கழகத்தில் அவரும் அவரது நண்பர்களும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் “தேச விரோதிகளை” திட்டமிட்டு கலந்து கொள்ளச் செய்த காரணத்தால் அவர் ’பயங்கரவாதி’ என்பது அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு. நீதிபதி அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாளில் இருந்து உமர் தலைமறைவாகிப் போனார்.
உமர் காலித் தலைமறைவாக இருந்ததாலும் அவரது பெயர் “உமர் காலித்” என்பதாக இருப்பதாலும் முகத்தில் மெல்லிய தாடி இருந்ததாலும் பயங்கரமான தீவிரவாதியாக உருவெடுத்திருந்தார். அவருக்கு ஜெய்ஷ் ஏ முகம்மது அமைப்போடு தொடர்பை உருவாக்கி இருந்தன ஊடகங்கள். அவரது தொலைபேசியில் இருந்து தில்லிக்கு வெளியே உள்ள சிலருக்கும், காஷ்மீரில் உள்ள சிலருக்கும் அழைப்புகள் செய்யப்பட்டிருப்பதே போதுமான ஆதாரமாக இருந்தது.
தற்போது தேசிய ஊடகங்களில் அனல் கிளப்பிக் கொண்டிருக்கும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் இன்னொருவர் அப்பல்கலைக்கழத்தின் மாணவர் சங்கத்தின் தலைவரான கண்ணையா குமார்.
”இதோ இவன் தான் கண்ணைய்யா குமார். இவனுக்கு ஜெய்ஷ் ஏ முகமது அமைப்போடு தொடர்பிருக்கிறது. விஷயம் தெரியுமா? இவன் கடந்த காலங்களில் காஷ்மீரில் உள்ளவர்களுக்கு தொலை பேசியிருக்கிறான். உளவுத் துறையிலிருக்கும் எங்களது “சோர்ஸ்” மூலம் இந்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன….”
டைம்ஸ் நவ், ஜீ மற்றும் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகளின் நெறியாளர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். ”விடுதலை” கோரி கண்ணையா குமார் எழுப்பிய முழக்கங்கள் ஹாலிவுட் திகல் படங்களில் வரும் பின்னணி இசையோடு இத்தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன.
”கேட்டீர்களா சேதியை? விடுதலை வேண்டுமாம் இந்த பிரிவினைவாத பயரங்கவாதிகளுக்கு…”
வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி தொலைக்காட்சிகள் தேசியம் மற்றும் தேசபக்திக்கான புதிய விளக்கங்களை பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பின் எழுதி முடித்த போது இந்த நாட்டுக்கு புதிதாய் சில தீவிரவாதிகள் கிடைத்திருந்தனர்.
உமரின் தந்தையைக் கொன்றும், அவரது இரண்டு சகோதரிகளை பாலியல் வல்லுறவு செய்தும் பாரத மாதாவின் மாண்பை தலை நிமிரச் செய்வதாக இந்துத்துவ குண்டர்கள் சவால் விடுக்கத் துவங்கியிருந்தனர். உமர் காலித் தலைமறைவாக இருந்த காரணத்தாலும் அவரது சகோதரிகள் கையில் சிக்காத காரணத்தாலும் தமது தேசபக்தியை நிரூபிக்க வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிப்ரவரி 12-ம் தேதி கைது செய்யப்பட்ட கண்ணையா குமாரை 17-ம் தேதி தில்லியின் கீழமை நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து தாக்கியதன் மூலம் தேசபக்த வெறியைத் தணித்துக் கொண்டனர் இந்துத்துவ ரவுடிகள்.
உச்சநீதிமன்றமே தலையிட்டு வழக்கறிஞர் குழு ஒன்றை கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் தான் தேசபக்தி ஒரு மட்டுக்குள் வந்தது. அதற்குள் நீதிமன்ற வளாகத்துக்குள் கண்ணையா குமாரையும் அவரது தோழர்களையும் மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சிலரையும் கூட கண்மூடித்தனமாக தாக்கியிருந்தனர் பாரதமாதாவின் புதல்வர்கள். சி.பி.ஐ கட்சியின் ஊழியர் ஒருவரை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ தாக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. ”தேச துரோகிகளை வக்கீல்கள் சரியாக கவனித்தனர்” என்று தமிழ்நாட்டின் தினமலம் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் உலகளவிலான ஊடகங்களோ காறி உமிழ்ந்து கொண்டிருந்தன.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துப்படி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களான பயங்கரவாதிகளின் தீவிரவாத அச்சுறுத்தலை தேசம் எதிர் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் ’தேசிய’ ஊடகங்கள் இரண்டாகப் பிளவுண்டு நிற்கின்றன. என்.டி.டீ.வி, சி.என்.என், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஊடகங்கள் மாணவர்கள் தரப்பிலும் ஜீ, நியூஸ் எக்ஸ் மற்றும் டைம்ஸ் நௌ போன்றவை சங்கபரிவாரத்தின் தரப்பிலும் நின்று களமாடிக் கொண்டிருக்கின்றன.
தான் பணிபுரியும் தொலைக்காட்சி மாணவர்களுக்கு எதிரான போலி வீடியோவை உண்மை போலக் காட்டி, இந்து வெறியர்களுககு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்ததைக் கண்டித்து ஜீ தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். என்.டி.டீ.வி தொலைக்காட்சியின் நெறியாளர் ரவிஷ் தனது ப்ரைம்டைம் நிகழ்ச்சியின் போது கேமராக்களை அணைத்து விட்டு தொலைக்காட்சி ஊடகங்களின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
பாரதிய ஜனதாவினரால் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட பின்னரும் மேற்படி தேசத்துரோக மாணவர்களுக்கு நாடெங்கும் பெருகி வரும் ஆதரவு காக்கி அரை டவுசர்களைக் கலங்கச் செய்திருக்கிறது. இந்த சூழலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி ஜே.என்.யுவில் நடந்த நிகழ்வுகளை மட்டுமின்றி ஜே.என்.யு பற்றியும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
முதலில் ஜே.என்.யுவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்து விடுவோம்.
2001ம் ஆண்டு 13 டிசம்பர் அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது. ஐந்து ’தீவிரவாதிகள்’, ஆறு தில்லி போலீசார் உட்பட 14 பேர் கொல்லப்பட்ட அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு எஸ்.ஏ.ஆர் கிலானி, அப்சல் குரு அவரது உறவினர் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரனைகளுக்குப் பின் கிலானி மற்றும் அப்சல் குருவின் மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அப்சல் குருவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் “தேசத்தின் மனசாட்சியை” சாந்தப்படுத்த 2013 பிப்ரவரி 9-ம் தேதி தூக்கிலடப்பட்டார்.
அப்சல் தூக்கிலடப்பட்டதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டு பலரும் கண்டித்துள்ள நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான பி.டி.பியும் கண்டித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அபசல் தூக்கிலிடப்பட்ட நாளன்று அது தொடர்பான கண்டன நிகழ்ச்சிகளை தில்லி ஜே.என்.யு மாணவர்கள் நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதியன்று ”தபால் நிலையம் இல்லாத நாடு” (A Country Without Post Office) என்கிற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மாவோயிஸ்டு கொள்கையை ஆதரிக்கும் மாணவர் அமைப்பான ஜனநாயக மாணவர் சங்கத்திலிருந்து விலகிய தனி நபர்கள். (இந்த மாணவர் சங்கம் மாவோயிச கொள்கையை ஆதரிக்கிறது என்றாலும் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்புடையது அல்ல). நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் உமர் காலித்தும் ஒருவர். பல்கலைக்கழத்தின் முறையான அனுமதியோடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், துவங்குவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து அனுமதியை ரத்து செய்ய வைக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்ற மாணவர் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்து நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்த உதவி கோருகின்றனர். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கண்ணையாவும் மற்ற நிர்வாகிகளும் அச்சமயத்தில் தலையிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (மைக் இல்லாமல்) நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுத் தருகின்றனர்.
நிகழ்ச்சியை எப்படியும் தடுத்தே தீர்வது அல்லது அதில் தலையிட்டு பிரச்சினை செய்வது என்கிற திட்டத்தோடு வெளியிலிருந்து குண்டர்களையும் ரவுடிகளையும் அழைத்து வந்திருந்த ஏ.பி.வி.பி, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எதிரே கும்பலாக நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் புறக்கணித்து விட்டு நிகழ்ச்சி தொடங்கி நடந்த போது முசுலீம்களையும், மாணவர்களையும் சீண்டும் விதமாக ஏ.பி.வி.பி அமைப்பினர் கோஷங்களை எழுப்புகின்றனர். இப்போது அந்நிகழ்வுக்கு வெளியிலிருந்து வந்திருந்த காஷ்மீர் மாணவர்கள் சிலர் எதிர் கோஷங்களை எழுப்புகின்றனர்.
கூட்டத்தினுள் இருப்பவர்கள் யார் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றே அவதானிக்க முடியாத குழப்பமாக இருக்கிறது அந்த சூழல். அந்த சந்தர்பத்தில் காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. இந்த கோஷங்களை யார் எழுப்பியது என்பது தெளிவாக தெரியாத அதே நேரம், பாகிஸ்தான் வாழ்க என்கிற கோஷம் ஏ.பி.வி.பி தொண்டர்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டதாக இந்த வீடியோவின் மூலம் அறிய முடிகிறது (https://youtu.be/Xs1sCRVxoHY)
நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு வெளியிலிருந்து குண்டர்களை மட்டுமின்றி தமக்குச் சாதகமான ஊடகங்களையும் அழைத்து வந்துள்ளனர் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதில் குறிப்பாக ஜீ டீ.வி தொலைக்காட்சி நிகழ்வுகளை நெருக்கத்திலிருந்து படம்பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து படம் பிடித்த வீடியோ காட்சிகளை வெட்டி ஒட்டி அதற்குப் திகிலான பின்னணி இசையைக் கோர்த்து இட்டுக் கட்டி வெறிக்கூத்தாடுகிறது ஜீ தொலைக்காட்சி. ஜே.என்.யு வளாகமே மொத்தமும் பாகிஸ்தானாகி விட்டதைப் போலவும் அதை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் போலியான தேசிய வெறியைத் தூண்டியிருக்கிறது.
மாலை ஏழு மணி அளவில் ஜே.என்.யு வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சபர்மதி தாபாவிற்கு அருகில் துவங்கிய மோதல் பின்னர் கங்கா தாபாவிற்கு அருகில் இரு பிரிவினரும் மாற்றி மாற்றி கோஷம் போட்டுக் கலைந்து செல்வது வரை தொடர்ந்துள்ளது. இதற்கிடையே 7:30 மணி அளவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஜே.என்.யு வளாகத்திற்குள் போலீசார் வந்த பின்னரும் மாற்றி மாற்றி கோஷங்கள் எழுப்புவது தொடர்ந்துள்ளது. மாணவர்கள் கலைந்து சென்றபின் போலீசாரும் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது – சம்பவ இடத்தில் போலீசார் இருந்த போதும், கோஷங்களை அவர்களே கேட்ட பிறகும் மறுநாளே (பிப்ரவரி 10-ம் தேதி) முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்யவில்லை. விவகாரத்தை ஜீ தொலைகாட்சி ஊதிப் பெரிதாக்கியதோடு தமது நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சோம்பித் பத்ராவை அழைத்து “சியாச்சினில் வீரர்கள் நாட்டைக் காக்க தியாகிகள் ஆகியுள்ள நிலையில் நாட்டின் உள்ளேயே தேச விரோதிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். 56 இன்ச் மார்பு என்றெல்லாம் பீற்றிக் கொண்ட நீங்கள் ஏன் தேச துரோகிகளின் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்” என்று உசுப்பேற்றியிருக்கிறது.
சொல்லி வைத்துக் கொண்டு நடந்த இந்த நாடகத்திற்கு பின்னர் பிப்ரவரி 11-ம் தேதி தான் தில்லி வசந்த்குஞ்ச் காவல் நிலைத்தில் போலீசாரால் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ’அடையாளம் தெரியாத’ மாணவர்களின் மேல் தானாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறது போலீசு. அதே சமயம் பாரதிய ஜனதா எம்.பி கிரி மற்றும் ஏ.பி.வி.பி அமைப்பினரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
இதற்கிடையே பிப்ரவரி 9-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து தில்லி போலீசாரின் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிப்ரவரி 17-ம் தேதி அறிக்கை ஒன்று சமர்பிக்கப் பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் துர்கா பூஜையன்று மகிஷாசுரனை வணங்கியதையும், பல்கலைக்கழக உணவு விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததையும் சுட்டிக்காட்டி இந்த காரணங்களால் அவர்கள் தேச விரோதிகள் என்று தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 9-ம் தேதியன்று வளாகத்தில் நடந்த சம்பவங்களில் தாம் தனிமைப்படுத்தப்பட்டதை ஏ.பி.வி.பியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடையே தமக்கு ஆதரவு குறைந்து வெளியிலிருந்து அழைத்து வந்த குண்டர்களைச் சார்ந்தே கலவரங்களைத் தூண்ட வேண்டிய நிலைக்கு தாழ்ந்து விட்டதை எண்ணிக் குமைந்துள்ளனர். உடனடியாக மறுநாளே “தேச பக்தியை” கடைவிரித்து அதன் மூலம் கல்லாகட்ட தமது அமைப்பின் சார்பில் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். வெறும் 200 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த கண்டன வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் பரவலான மாணவர்களின் ஆதரவின்றி பிசுபிசுத்துப் போயிருக்கிறது.
தொலைக்காட்சி ஊடகங்களின் வெறுப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம் என்றால் ஜே.என்.யு வை இழுத்து மூட வேண்டும் என்கிற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் (#ShutdownJNU) இந்துத்துவ கும்பலால் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்துத்துவ கும்பல் வெளியிலிருந்து ஏற்பாடு செய்த ரவுடி கூட்டத்தை ஜே.என்.யு வாசலில் கூட்டி மாணவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட வைத்தது. மொத்தத்தில் மாணவர்களுக்கு எதிராக ஒரு பொது மனநிலை கட்டமைக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 11-ம் தேதி ஜே.என்.யு மாணவர் சங்கம் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கிறது.
கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், “மனுவாதிகளிடமிருந்து விடுதலை” “வறுமையில் இருந்து விடுதலை” “புதிய பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விடுதலை” “பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை”, “ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து விடுதலை” என்கிற கோஷங்களை தனது உரையின் இறுதியில் எழுப்புகிறார். கண்ணைய்யா 11-ம் தேதி ஆற்றிய உரையை வீடியோ பதிவு செய்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் அதில் போர்ஜரி வேலை செய்து 9ம் தேதி கூட்டத்தில் ஏ.பி.வி,பி ரவுடிகள் எழுப்பிய கூச்சல்களில் இருந்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” “காஷ்மீர் விடுதலை” போன்ற கோஷங்களை வெட்டி ஒட்டுகிறது.
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பி “தேச துரோக” குற்றச்சாட்டுகளுக்கு மேலும் போலியான அடித்தளம் ஒன்றை அமைத்துக் கொடுக்கின்றன. அதே நாளில் தான் (பிப் 11) பாரதிய ஜனதா எம்பி கிரி தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து கொள்ளும் போலீசு, அதை அப்படியே பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்புகிறது. ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளால் நிரம்பிய பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக இருபது மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு போலீசாருக்கு அனுப்புகின்றது. தங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பட்டியலில் இருந்து கண்ணையா குமார், உமர் காலித், அனிபான் பட்டாச்சார்ய, ராம நாகா, அசுதோஷ் குமார் மற்றும் ஆனந்த் பிரகாஷ் நாராயணன் ஆகிய ஆறு மாணவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து அவர்கள் மேல் தேச துரோக வழக்கைப் புணைகிறது தில்லி காவல் துறை.
12-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும் போலீசார், மாணவர் விடுதிகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். பெண்கள் விடுதிகளுக்குள் ஆண் போலீசார் புகுந்து வெறியாட்டம் போட்டுள்ளனர். அதே நாள் கண்ணையா கைது செய்யப்படுகிறார் மற்ற ஐந்து மாணவர்கள் தலைமறைவாகின்றார்கள். இதற்கிடையே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாணவர்களோடு மேலும் இரண்டு மாணவர்களான ஸ்வேதா ராஜ் மற்றும் ஐஷ்வர்யா அதிகாரி ஆகியோரையும் சேர்த்து மொத்தம் எட்டு மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.
இந்த மாணவர்களின் மேலான “குற்றத்தை” விசாரிக்க மூன்று சங்க்பரிவார் சாய்வுள்ள பேராசிரியர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். கமிட்டி இம்மாணவர்களை 15-ம் தேதி ஆஜராகும்படி சம்மன் ஒன்றையும் அனுப்புகிறது. இதற்கிடையே கண்ணையா குமார் கைது செய்யப்பட்டது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அன்று மாலையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுமி நிற்கிறார்கள். அங்கே மயான அமைதி நிலவுகிறது.
தங்களது சுதந்திரத்தின் சிறகுகள் வெட்டப்படும் என்பதை அம்மாணவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கள் விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழையும் என்பதையோ, சுதந்திரமாய் இரவு நெடுக விவாதித்துக் கழிக்கும் அந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதையோ அவர்களின் மிக மோசமான துர்சொப்பனத்தில் கூட கண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும் அந்த மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு ”இன்குலாப் ஜிந்தாபாத்” “லால் சலாம் சால் சலாம்” என்கிற முழக்கங்கள் அந்த இரவில் ஒரு புதிய அர்த்தத்துடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன.
இதற்கிடையே காவல் துறை நடவடிக்கை மற்றும் மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பதை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூடி விவாதிக்கின்றனர். ஒரு நீண்ட போரை சங்கப் பரிவாரத்தினர் துவக்கி வைத்துள்ளனர் என்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் உணர்கின்றனர். இந்தப் போரில் ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வதா மாணவர்களே முன்னின்று எதிரிகளைச் சந்திப்பதா என்கிற விவாதங்கள் துவங்குகின்றன. உடனடியாக ஆசிரியர் சங்கத்தினர் முன்னிற்க சுமார் 4000 மாணவர்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் ஒன்று வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது.
மிக அதிக அளவில் கூடிய மாணவர்கள் கூடிய போதிலும் உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதையும் துவக்காமல் ஆசிரியர் சங்கத்தினர் அந்த ஊர்வலத்தை முடித்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர் சங்க கூட்டம் ஒன்று நடக்கிறது. ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வது என்றில்லாமல், மாணவர்களே முன்னின்று எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று இடது சாரி மாணவர்கள் முன்வைத்த கருத்து எல்லா சங்கத்தினராலும் ஏற்கப்படுகின்றது.
பிப்ரவரி 13-ம் பல்லாயிரக்காணவர்கள் கலந்து கொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றை மாணவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். டி.ராஜா, யோகேந்திர யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தினுள் புகுந்து தகறாரில் ஈடுபடுகின்றது ஏ.பி.வி.பி. கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆனந்த் சர்மா ஏ.பி.வி.பி ரவுடிகளால் தாக்கப்படுகிறார். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் தாக்குகின்றன ஏ.பி.வி.பி வானரங்கள். அதுவரை அடக்கி வாசித்து வந்த தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு பிரிவினர், இந்த தாக்குதல் சம்பவங்களுக்குப் பின் இந்துத்துவ பாசிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை இதற்கு மேலும் கேள்வி கேட்காவிட்டால் தம்மையும் அழித்தொழித்து விடுவார்கள் என்கிற அச்சத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
பிப்ரவரி 15-ம் தேதி மாணவர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றும் 16-ம் தேதி ஆசிரியர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது. இதற்கிடையே மாணவர்களிடையே ஏ.பி.வி.பி முற்றிலுமாக அம்பலப்பட்டுப் போகிறது. தாமும் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு ஆதரவு தானென்றும், ஜே.என்.யுவை மூட வேண்டும் என்கிற கோரிக்கையில் தமக்கும் உடன்பாடில்லை என்றும் நோட்டீசடித்துச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஏ.பி.வி.பி தள்ளப்படுகிறது.
இதற்கிடையே அதே நாளில் (பிப் 15) கண்ணையா குமாரின் போலீசு காவல் முடிந்து விட்டதால் அவரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வருகின்றது தில்லி போலீசு. கண்ணைய்யா வரும் நேரம், வழி போன்றவற்றை ‘எப்படியோ’ அறிந்து கொள்ளும் இந்துத்துவ குண்டர்கள், முன்கூட்டியே நூற்றுக்கணக்கான ரவுடிகளை வக்கீல் உடையோடு நீதிமன்றத்தைச் சுற்றிவளைத்து நிறுத்துகிறது. கண்ணையா நீதிமன்றத்தில் நுழையவும் வெறித்தனமாக அவரையும் வழக்கைக் காண வந்த மற்ற மாணவர்களையும் தாக்குகின்றது இந்துத்துவ ரவுடிப் பட்டாளம்.
”பாரத் மாதா கீ ஜேய்” ”வந்தே மாதரம்” என்று வெறித்தனமாக கூச்சலிட்டுக் கொண்டே முன்னேறிய ரவுடிகள் பெண் மாணவிகளையும் விட்டு வைக்கவில்லை. கையில் செல்பேசியோடு இள வயதில் எவர் தென்பட்டாலும் அடித்துத் துவைக்கப்பட்டனர். விக்ரம் சௌகான் என்ற வானரம் இந்த தாக்குதல்களை முன்னின்று ஒருங்கிணைத்துள்ளான். கண்ணையாவும் பிற மாணவர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டதும் அதற்கு போலீசே மௌனமாய் நின்று அனுமதி வழங்கியதையும் கேள்விப்பட்டதும் நாடெங்கும் உள்ள மாணவ சமூதாயம் கொந்தளிக்கிறது. ஏ.பி.வி.பி மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறது.
இந்தச் சூழலில் ஜே.என்.யு வளாகத்தினுள் வாலைச் சுருட்டிக் கொண்டு பதுங்கிக் கொள்ளும் சங்கப்பரிவாரம், வளாகத்திற்கு வெளியே வெறிக்கூத்தாடுகின்றது. கண்ணையா மற்றும் உமரின் புகைப்படங்களோடு தில்லியின் பல பகுதிகளில் போஸ்டர் அடிக்கும் சங்கப்பரிவாரம், இவர்கள் தேச துரோகிகள் என்றும் இவர்களைக் கண்டதும் தாக்குமாறும் பொதுமக்களிடம் விசமப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. ஊடகங்களின் ஒரு பிரிவு மாணவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க எல்லா வகையான கீழ்த்தரமான எல்லைகளுக்கும் சென்றது.
தொடர்ச்சியான ஒரு இயக்கம் போல் ஜே.என்.யு விவகாரத்தைக் கையிலெடுத்த பார்ப்பன ஊடகங்கள், ஜே.என்.யு வை மூடு என்ற முழக்கத்தை உருவாக்கி, அதனை ஒரு இயக்கமாகவே சமூக வலைத்தளங்களில் கொண்டு சென்றது. போலியான தேசிய வெறி தூண்டி விட்டு இந்திய தேசியத்திற்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஒன்று நிலவுவதாக மக்களை நம்பவைக்க அவை முயன்று வந்த நிலையில் தான் பிப்ரவரி 17-ம் தேதி மீண்டும் கண்ணையாவை கீழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றது தில்லி போலீசு.
திங்களன்று நடந்த அதே காட்சிகள் மீண்டும் அரங்கேறுகின்றன. சுமார் 200 ரவுடிகளை வக்கீல் உடையோடு களமிறக்கிய இந்துத்துவ குண்டர்கள் கற்களாலும் கட்டைகளாலும் கண்ணையாவைத் தாக்குகின்றனர். கண்ணையாவை மட்டுமின்றி இம்முறை பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காவலுக்கு வந்த போலீசார் தங்களது சுண்டு விரலைக் கூட இந்துத்துவ கும்பலை நோக்கி நீட்டாத நிலையில் கண்ணையாவை அவரது வக்கீல்களும் தோழர்களுமே பாதுகாப்பாக கும்பலில் இருந்து மீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு அறைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.
கண்ணையா வெளியேறினால் கொல்வோம் என்கிற கூச்சலோடு வெளியே இந்து ரவுடிக் கும்பல் காத்துக் கொண்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் விசயத்தை உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார். கண்ணையா கொலைகாரர்களிடமிருந்து தப்பி நீதிமன்றத்தின் ஒரு அறைக்குள் சிறைப்பட்டு இருந்த அந்த சூழலில் ஊடகங்களில் பேட்டியளிக்கும் தில்லி போலீசு கமிஷனர் பாஸ்ஸி, கண்ணையா தாக்கப்படவில்லை என்றும் எல்லாம் வெறும் தள்ளு முள்ளு விவகாரம் தான் என்றும் சொல்கிறார்.
உச்சநீதிமன்றம் உடனடியாக கபில் சிபல், துஷ்யந்த் தாவே, தவான் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தின் நிலவரத்தை அறிய அனுப்புகின்றது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குழு கடுமையான போலீசு பாதுகாப்போடு சென்ற போதும், அவர்களை எதிர்த்து கோஷங்களையும் கற்களையும் எறிகின்றனர் ஆர்.எஸ்.எஸ் காலிகள். கண்ணையாவின் உயிருக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஆபத்து இருப்பதை உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கும் மூத்த வழக்கறிஞர்கள் குழு, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு தில்லி போலீசு கமிஷனரும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று அறிக்கை சமர்பிக்கின்றனர். இவ்வளவிற்கும் பிறகு தான் போலீசார் பாதுகாப்பாக கண்ணையாவை மீட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.
காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட மொத்த அரசு அமைப்பும், மாணவர்களின் ரத்தம் குடிக்கும் வெறியோடு இந்துத்துவ கும்பலின் சார்பில் நிற்பதை உணர்ந்த மாணவர்கள் உடனடியாகத் திரள்கின்றனர். ஏ.பி.வி.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை கண்டித்தும், கண்ணையாவை விடுதலை செய்யக் கோரியும் பிப்ரவரி 18-ம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு கண்டன கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர் மாணவர்கள். சுமார் இருபதாயிரம் மாணவர்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் அறிவுத்துறையினர் பலரும் கலந்து கொள்கின்றனர். அதே நாளில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஊடகத்துறையினரும் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர்.
இதற்கிடையே ஜே.என்.யுவின் போராட்டம் இந்தியா முழுவதும் – இந்தியாவைக் கடந்தும் உள்ள பல்கலைகழகங்களுக்கும் பரவுகின்றது. பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். பி.சாய்நாத் உள்ளிட்ட இந்தியளவிலான அறிவுத்துறையினர் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கி மற்றும் நோபல் பரிசு வென்ற அறிஞர்களும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து கடிதங்கள் எழுதுகின்றனர்.
அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்கிற மமதையில் மாணவர்களையும் தங்களுக்கு எதிரான குரல்களையும் நசுக்கி விடலாம் என்ற திமிரில் மிதந்த இந்துத்துவ கும்பல், ஆப்பசைத்த குரங்காக ஜே.என்.யுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தங்களது நேரடி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு சட்டவாதத்திற்குப் பின்னே ஒளிந்து கொள்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் சொத்தையான வாதங்களின் அடிப்படையில், போலியான வீடியோ ஆதாரங்களின் மேல் புனையப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு ”என்ன இருந்தாலும் இது தேச துரோகமில்லையா?” “எதுவாக இருந்தாலும் நீதி மன்றத்தின் முடிவுக்கு விட்டு விடலாமே?” என்று சுதி இறங்கிய குரலில் பேசத் துவங்கியுள்ளன இந்துத்துவ வானரப் படையினர்.
சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிற்காத வழக்கு தானென்றாலும் இது நீதிமன்றத்தில் புகலிடம் தேடிக் கொள்ளும் சந்தர்பம் இல்லை. பல்கலைக்கழகங்களின் மீதும் சுதந்திரமான அறிவுத்துறையின் மீதும் பாசிச குரங்குகளின் பிடி கடந்த இரண்டாண்டுகளாகவே மேலும் மேலும் இறுகி வருகின்றது. பூனா திரைப்படக் கல்லூரி விவகாரமோ, ஜாதவ் பூர் பல்கலைக்கழக விவகாரமோ, சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளோ, ரோகித் வேமுலா கொல்லப்பட்டதோ – அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
இது மாணவர்கள் தனித்து நின்று வெல்லக்கூடிய யுத்தமில்லை. தனித்து களமிரங்கி இன்று வரை முன்னேற்றமின்றி நிற்கும் பூனா திரைப்பட கல்லூரி மாணவர் போராட்டமும், வாரக்கணக்கில் போராடியும் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிப்பாலேயே கொல்லபப்ட்ட ரோகித் வேமுலாவும் நமக்கு உணர்த்தும் பாடம் அது தான். சென்னை ஐ.ஐ.டியின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு ஆதரவாக பிற உழைக்கும் வர்க்க அமைப்புகள் களத்திற்கு வந்த பின்னரே ஆளும் கும்பல் பின்வாங்கியது. இன்று ஜே.என்.யு மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளனர் ஹோண்டா மற்றும் மாருதி தொழிலாளர்கள்.
மாணவர்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிற உழைக்கும் வர்க்கத்தினரும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பாசிஸ்டுகள் இணைந்து நிற்கும் போது நாம் மட்டும் பிரிந்து நிற்பதில் அர்த்தமில்லை.
– தொடரும்
– வினவு செய்தியாளர்
ஏனைய பாகங்கள்:
- புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட் – 1
- JNU நேரடி ரிப்போர்ட் 2 – ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !
- JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?
- JNU நேரடி ரிப்போர்ட் 4 – வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்
- JNU நேரடி ரிப்போர்ட் 5 – மாணவர் விஷ்மய் நேர்காணல்
http://m.thehindu.com/news/national/kohlis-pakistani-fan-faces-10year-jail-for-hoisting-indian-flag/article8161668.ece
இதுக்கு என்ன சொல்றீங்கஜீ?
Hello Manidhan,
Kannaiya Kumar didn’t tell anything wrong about India.
கோசம் போட்டு கருத்தை சொல்ல்வது வேறு . செயலில் வேறு நாட்டுக்கு உதவி செய்வது வேறு.
அப்படியே ஒருத்தன் ஒழிக்க அப்படின்னு கோசம் போட்டாலும் , ஊழல் /லஞ்சம் பண்றவங்களை விடவா தேச துரோகி ?
ஊழல் பண்ணிவிட்டு ஆட்சி செய்பவர்களிடம் காட்ட முடியாத வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுகிறது பொது ஜன உடகம் . மக்களின் உணர்சிகளை காசாக்குகிறது .
என்னய ஏண்டா அடிக்குறே, மிதிக்குறே-ன்னு கேட்டா, அந்தப் பக்கம் அவன் கட்டையால அடிக்குறான்னு கேட்குற முட்டா மனிதர்களுக்கு என்ன சொல்லனும்ங்கறீங்க ஜீ? அவன் கட்டையால அடிக்குறதால, இங்க கத்தியால குத்துனாலும் ஏத்துக்கனுமா ஜீ?
ஜீ, இது சேம் சைடு கோல் ஜீ!
போங்க ஜீ, சரியா சாகா படிக்காம இங்க வந்து அதரப் பழசான போங்காட்டத்த மானங்கெட்டத்தனமா ஆடி அசிங்கப்படாதீங்க.
ஜீ குரங்கன்ஜீ கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா ஜீ?இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா ஜீ?
பார்லி., தாக்குல் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்புபவர்கள் தேசத் துரோகிகள் இல்லையா ஜீ?போங்க ஜீ, சரியா சாகா….
இதுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க ஜீ?
அவிங்கள நிறுத்தச் சொல்லு நா நிறுத்துறேன்னு அதரப்பழசான மணிரத்னம் டயலாக்கையா?
https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/
https://www.vinavu.com/2013/02/15/conversion-28/
See map behind Kannaiya Kumar, if he respect India/Indian constitution he should not attend the meeting. This image itself shows Kannaiya Kumar is anti-national