சிய பெண்களுக்கான கபடிப் போட்டியில் 28 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது ஈரான். பெண்களின் விளையாட்டு உரிமைகளை வென்றெடுக்கும் விதமாக, தற்போது கால்பந்து விளையாடும் உரிமைகளையும் வென்றுள்ளனர் ஈரானிய பெண்கள்.

உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஆணாதிக்கத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் கூட கிறித்தவ மதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதின் விளைவாகவே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கப் பெற்றது. இந்திய அளவில் பார்க்கும்போது பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்த்து  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாலேயே பெண்கள் விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளில் பங்கேற்க முடிந்தது.

சமீப ஆண்டுகளில்தான் ஈரான் நாட்டு அரசாங்கம் ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெறும் அரங்குகளில் பெண்களும் அமர்ந்து பார்க்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தது. தற்போது அந்த சாம்பியன்ஸ் லீக் விளையாட்டையே விளையாடலாம் என்ற அனுமதி கிடைத்த நிலையில் வீரர்களின் (பெண் வீரர்கள்) மகிழ்ச்சி பெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

படிக்க:
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

கடந்த நவம்பர் (13.11.2018) மாதம், ஈரானிய பெண்கள் கால்பந்து அணி தாய்லாந்து நாட்டில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

19 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினர், ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டிகளுக்காக நடைபெறும் ஆட்டங்களில், அவர்கள் இடம் பெறும் குழுக்களில் முதலிடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினரும் தங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஈரான் போன்ற இசுலாமிய நாடுகளில் மத அடிப்படைவாதமே ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும், விளையாட்டின் போது அணியக்கூடிய உடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவையனைத்துக்கும் அப்பாற்பட்டு ஈரானிய பெண்கள் விளையாட்டுத்துறைகளில் சாதித்து வருகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகிறது.

கட்டாயூன் கொஸ்றோயர் (Katayoun Khosrowyar):

இவர் ஈரானிய அமெரிக்க வேதிப் பொறியியல் வல்லுனர். தற்போது 19 வயதுக்குட்பட்ட ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். பிஃபா (FIFA) நிர்வாகம் ஈரான் பெண்கள் கால்பந்து அணிக்காக இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.

கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடி தேசிய அளவில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஈரானிய பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் காஸ்பியன் கடலையொட்டி அமைந்துள்ள பந்தார் அன்சாலி  என்ற நகரத்திலுள்ள மலாவன் பெண்கள் கால்பந்து அணியினர்தான், அந்நாட்டு அரசின் அறிவிப்பால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த கால்பந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. ஒரு கப்பல் எதிர்பாராத புயலால் தாக்கப்படும் நிலையில் தேவையில்லாதவற்றை வீசி எறிந்தால் தான் கப்பல் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்று கூறி கால்பந்து அணியில் பெண்கள் நீடிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் அப்போதைய  மலாவன் அணியின் தலைமை செயல் அதிகாரி.

இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது இந்த அணியை முன்னாள் கால்பந்து வீராங்கனையான மரியம் இராண்டூஸ்ட் வாங்கியதோடன்றி தானே அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். தடை விதிக்கப்பட்டிருந்த காலத்திற்கு முன்பும் இவரே பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

அல்ஜசீரா இணையதளத்திற்கு மரியம் இராண்டுஸ்ட் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் ’ இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது. இங்கு விளையாடும் பெண்களில் அனேகமானோர் படித்துக் கொண்டே விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர். ஆண்களைப் போன்றே எங்களாலும் கால்பந்து விளையாட்டை சிறப்பாக விளையாட முடியும் என்கிறார்.

ரம்மியமான இயற்கைச் சூழலில் மலாவன் கால்பந்து அணியினர்.

25 வீரர்களைக் கொண்டு 2002-ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட மலாவன் கால்பந்து அணி பல தடைகளைத் தாண்டி இப்போது மறுபடியும் விளையாட்டுக் களத்தில்.

ஈரானியப் பெண்கள் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் முன்னேறுவது இளம் வீரர்களிடையை மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லீக் போட்டிகளுக்கான தயாரிப்பில் மலாவன் அணியினர்

பந்தார் அன்சாலி பகுதியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக அறியப்படுவது கால்பந்து விளையாட்டு.  அனுமதித்தால் சாதிக்க முடியாதவர்களா பெண்கள்?

தேசிய அணிக்காக விளையாடிய பல ஆண்கள் பயிற்சியாளர் மரியம்-இன் தந்தை உட்பட இந்த விளையாட்டு மைதானத்தில் கால்பதித்தவர்கள் தாம்…

ஊதா நிற உடையில் இருப்பவர் தான் பயிற்சியாளர் மரியம். தன் அணியின் வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

1976-ம் ஆண்டு நடைபெற்ற ஹஃப்சி கோப்பை கால்பந்து போட்டியில் மலாவன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றதும் இதே மரியம் தான்.

சிறுவயது முதலே தனது தந்தை விளையாடும் போட்டிகளை ஆர்வமுடன் இரசித்ததால் தான் இந்த விளையாட்டு மீது ஆர்வம் வந்தது என்கிறார்.

மலாவன் அணியின் பயிற்சியாளராக 14 வருடங்களாகப் பணியாற்றி வரும் மரியம் இளம் தலைமுறை வீரர்களுடன்…

தடை நீங்கியதால் ஏற்படும் உற்சாகத்தை வெற்றிகளாய் மாற்றிடுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார் மரியம்….

நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: வரதன்

1 மறுமொழி

  1. கால்பந்து வீரமான விளையாட்டு, கூட்டுத்துவமான விளையாட்டு.
    விளையாடுங்கள்.
    நீங்கள் எட்டு உதைப்பதில் ஆணாதிக்கம் நொருங்கி
    சபரிமலையில் விழட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க