ந்து ரூபாய் டாக்டர் என்று வட சென்னை மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.

கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் 1972 முதல் மக்களுக்கான ஒரு கிளினிக்கை தொடங்கி அதில் கட்டணமாக ரூ.2 பெற்று வந்தார். அதிகபட்சமாக ஐந்து ரூபாய் அவ்வளவுதான். அரசு மருத்துவம் தவிர்த்து பெருமளவு மருத்துவ உலகம் கார்ப்பரேட்டின் கொள்ளைக் காடாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில் அதிக கட்டணமின்றி சிகிச்சை அளித்து வந்தார். சமீபத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த மக்கள் மருத்துவரின் சாதனை விளங்கும்.

தமிழ் சினிமா உலகம் தனது மசலா படங்களுக்காக வடசென்னையை ரவுடிகளாக, பொறுக்கிகள் நிறைந்த பகுதியாக தவறாக சித்தரித்து வருகிறது. ஆனால் அந்த மக்களை அவர் குழந்தையாக கருதி இருக்கிறார். எல்லாப் பிரிவு மக்களிடமும் எந்த வித்தியாசமும் இன்றி மக்களுடன் பழகி அவர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கிறார். அவருடையை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் அழுகுரலே இதை நமக்கு உணர்த்துகிறது.

அவருடைய இறுதி பயணத்தில் கலந்து கொள்ளவும், மக்கள் கருத்தை அறியவும் சென்றிருந்தோம்.  தள்ளாத வயது முதியோர்கள் முதல் இளைஞர்கள் வரை அவருடைய மக்கள் நலன், சேவைகளை நினைவு கூர்ந்தனர். ஒவ்வொருவரின் நினைவின்போதும் குடும்ப நண்பர், உறவினர், வீட்டின் மூத்த மகனை இழந்ததைப் போன்று அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

*****

குணசுந்தரி, வயது 67

இவ்ளோ நல்ல மனுசன உலகத்துல எங்கயும் பார்த்தது கிடையாது. உடம்பு முடியாத குழந்தைய தூக்கினு வந்தா குழந்தைக்கு சிரிப்பு காட்டி விடுவாரு. அது என்ன அதிசயமா சிரிக்கும். பெரியவங்களா இருந்தா முதுவுல ஒரு அடி அடிப்பாரு. இவ்ளோ சளிய வச்சிக்கினு வந்துட்டியா அப்பிடின்னு கேட்பாரு.

என் புள்ளங்களுக்கு நோய்நொடின்னு வந்தா அவருகிட்டதான் காட்டுவேன். இவருகிட்ட இரண்டு ரூபா பீசுல இருந்து வறேன். 18 வயசுல இருந்து நான் அவருகிட்ட பாக்குறேன். நாங்க எல்லாம் ஏழைங்க. எத்தனையோ வாட்டி பணமே இல்லாத வைத்தியம் பார்த்துனு போயிருக்கோம். நாங்களே வற்புறுத்தி கொடுத்தாலும் இரண்டு ரூபாய்க்கு மேல வாங்க மாட்டாரு.

அவரு எங்களுக்கு மருந்துகூட கொடுக்க வேண்டியதில்ல. உடம்பு முடியாத போது அவரை போயிட்டு பார்த்தாலே பாசத்தோட தட்டி குடுக்கும்போதே எங்க நோயி போயிடும். – என்று கூறிக்கொண்டே கண்ணீல் வரும் நீரை அடக்க முடியாமல் அழுதார்.

பத்மா, வயது 68

அவரோட எங்களுக்கு நாற்பது வருசம் பந்தம். எதுவா இருந்தாலும் கொழந்த குட்டிய தூக்கினு அவருகிட்ட தான் போவோம். அழுதுனு போற குழந்தைங்ககிட்ட என்ன மாயம் செய்வாரோ தெரியாது, சிரிச்சிக்கினே வரும். இந்த சுத்துப்பட்டுல இருக்க ஏ-பி-சி பிளாக், தெலுங்கானா குப்பம், காசிமேடு இப்படி எல்லா மூலையில இருந்தும் ஏழைங்க இங்க தான் வைத்தியம் பார்க்க வருவாங்க. முடியாம வீட்டுலயே மூச்சி வாங்கினு இருக்குன்னு சொன்னா போதும்,  என்னேரமா இருந்தாலும் அவரு பாட்டுக்கு வந்து டிரிப்பு ஏத்தி விடுவாரு. நேரங்காலமே கிடையாது.

நைட்டு பன்னிரெண்டு மணின்னாலும் கொழந்தைய தூக்கிட்டு போயி வீட்டாண்ட நிப்போம். அவரு தூங்கிக்கினு இருப்பாரு… நாங்க அப்பான்னு குரல் கொடுப்போம். அடுத்த நிமிசம் வந்து நிப்பாரு. வயசானவங்களா இருந்தா எதுக்கு இட்டுனு வரீங்க…. கூப்பிட்டா நானே வருவேன்லன்னு சொல்லுவாரு. என்ன சொல்லி…… என்ன ஆகப்போவுது….. மனுசன் போயிட்டாரு.

லீலாவதி, வயது 71
லீலாவதி – கஸ்தூரி (வலது)

“என்னா சொல்ல……. சொல்றேன் தம்பி அவரைப் பத்தி…. எப்ப அவருகிட்ட வந்தேன்னு ஞாபகம் இல்ல. ஆனா ரொம்ப காலமா வரேன். இப்ப மருமக, பேத்தின்னு வைத்தியம் பாக்க வராங்க. இவர விட்டா வைத்தியம் பாக்க எங்களுக்கு வேற ஆளு கிடையாது. நாங்க பல நேரம் சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருப்போம். அதுல உடம்புக்கு வேற நோவு வந்துடும்.

இவருகிட்ட வந்து நின்னா காசு இல்லையான்னு பாசமா கேட்டு கையில காசு கொடுத்து அனுப்புவாரு. இப்படி ஒரு மனிசன நான் இனிமேலும் எங்கபோயி பார்ப்போம்….” என்று அழுகிறார்.

கஸ்தூரி, வயது 70

என் பையனுக்கு வயசு முப்பத்தி இரண்டு. உடம்புக்கு முடியாம ஒரு மாசத்துக்கு முன்ன இட்டுனு வந்தேன். “அவனுக்கு  நீ….. இன்னா துணையா?” அப்படின்னு என்ன திட்டினாரு. “இந்த வயசுல ஏன்டா பெத்தவங்களுக்கு கஸ்டம் கொடுக்கிறன்னு அவனையும் திட்டினாரு. வயசு புள்ளைங்க உடம்ப ஒழுங்கா வச்சிருக்கிறதில்ல”ன்னு பெத்த பையனுக்கு புத்திமதி சொல்ற மாதிரி சொல்லுவாரு. கொஞ்ச நாளைக்கு முன்னதான் என் மருமவ உடம்ப தேத்தி கொடுத்தாரு. நாங்க யாருமே அவரை டாக்டரா  பார்த்ததில்ல. அப்பா, தாத்தான்னுதான் உறவு வச்சி கூப்பிடுவோம். இனி நாங்க எந்த ஆஸ்பித்திரிக்கு போவோம்?

சண்முகம் – நதியா

இவ என் பொண்ணு. 16 வயசுல ஒரு ஜுரம் வந்தது இவளுக்கு…. உசுரு போயிடும்னு பார்த்தேன். இவருதான் இத காப்பாத்தினாரு. ஏனோ தெரில….. அவர பார்த்தாலே நம்ப மனசு நெறஞ்சிடும். அவரு நமக்கு வைத்தியமே பார்க்க வேண்டியதில்ல. பாசமா விசாரிக்கிறதுலயே பாதி நோய் போயிடும். இறந்தத கேட்டு வீட்டுல இருக்க முடியல….அதான் ஓடியாந்துட்டேன்.

சுவிஸ் ராஜன், வயது 70
சுவிஸ் ராஜன் (இடதுபுறம் உள்ளவர்)

46 வருசமா நண்பர் அவரு… அவரு கல்யாணத்த பாத்தேன். அவரோட கொழந்தைங்க கல்யாணத்துக்கு எல்லாத்துக்கும் கூட இருந்தேன். இப்ப சாவுக்கும் வந்துட்டேன். இவரு மத்தவங்களுக்கு எல்லாம் டாக்டர். எங்களுக்கு போராட்டத்துக்கு முன்ன நிக்கிற ஒரு பெரும்தூண். மெட்ரோ ரயில் போராட்டம், ராயபுரம் ரயில் நிலையம் (இந்தியாவிலே முதல் ரயில் நிலையம்) புனரமைக்கக்கோரி போராட்டம், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம், சுகாதாரம் இப்படி எந்த போராட்டம்னாலும் அவர வச்சிதான் நடத்துவோம். அவரு முன்ன நிப்பாரு.  நம்மளயும் வர சொல்லி நச்சரிப்பாரு. எவ்ளோ பெரிய மனிசன். டாக்டர் தொழிலையும் பார்ப்பாரு, ஊர் வேலையும் செய்வாரு. பொதுத் தொண்டுன்னா தலையில தூக்கி போட்டுக்குவாரு. எங்களுக்கு எல்லாம் பெரிய பலமா இருந்தாரு.

கட்பீஸ் செல்வராஜ்

அவரு செஞ்சத எதை சொல்லுறது….. எதை விடுறது…. அவர் ஒரு மாணிக்கம். என்னோட அத்தை பொண்ணுக்கு 7 வயசு இருக்கும். ஒரு பெரும் ஜுரத்துல பிட்ஸ் வந்து தூக்கினு வந்தோம். பதட்டப்படாம பக்கெட்ல தண்ணிய எடுத்து வந்து, அந்த தண்ணிய கொழந்த தலையில ஊத்த சொன்னாரு. கொஞ்ச நேரத்துல பிட்ஸ் நின்னுடுச்சி. அதுக்கப்பால மாத்திர மருந்து கொடுத்தரு.

சில நாள்ல கொழந்தைக்கு சாதாரணமா ஆயிடுச்சி.  நான் நோயிக்காக யாரனாலும் நைட்டு ஒரு மணிக்கு கூட்டி வந்தாலும் முகம் சுளிக்காம பாத்து அனுப்புவாரு. அந்நேரம் திடீர்னு வெளில இருந்து போன் வந்தாலும், நம்ம பைக்லயே ஏறி உக்காந்துக்கினு வந்து வைத்தியம் பார்ப்பாரு. அப்படி ஒரு மனுசன். இப்பகூட கலைஞர் சாவும்போது நான் மாடியில இருந்து தவறி விழுந்துட்டேன். எழுந்துக்க முடியல.. சப்ப நவுந்து போச்சி. இவருகிட்ட வந்து காமிச்சேன். ஒன்னியுமில்ல… ஒத்தடம் மட்டும் கொடு’ன்னு சொல்லி அவரே அந்த இடத்துல தேச்சி விட்டு அனுப்பினாரு. எங்களுக்கு அவரு அப்பா மாதிரி.

பால கோட்டையா

நானு ஈ.பி-யில துப்புரவு வேலை செய்யுறேன்…. எனக்கு படிப்பறிவு இல்ல. அவர அஞ்சி ரூபா டாக்டர்னு சொல்லுறாங்க. நான் இது வரைக்கும் எந்த ரூபாயும் கொடுத்ததில்ல. எங்களுக்குத்தான் அவரு கொடுப்பாரு. போனதும் சாப்டியான்னு கேட்பாரு. இல்லன்னு சொன்னா….. சாப்பிட பணம் கொடுப்பாரு.  நடு ராத்திரி பொண்டாட்டி கிட்ட ஒடம்பு முடிலன்னு சொல்லுவேன். சொல்லிட்டு தலைய சொறிவேன். அவளும் கூட்டினு போவா. ஒரு மணிக்கு வந்துகீற திரும்பி போகும்போது போலிசு கீலிசு புடிக்க போவுது.. என் பேர சொல்லு. பொண்டாட்டிய பாத்து இட்டுனு போ. பணம் வச்சிருக்கியா…. வேணுமான்னு கேட்பாரு. இப்படி ஒரு மனிசன இனிமே நாங்க எங்க பார்ப்பேன்….

பாலகோட்டையாவின் மனைவி நர்சம்மா.

எங்களுக்கு மூனு கொழந்தைங்க. அதுல இரண்டு பொறந்த சில மாசத்துலயே..  நோவு வந்து தங்காமா போயிடுச்சி… மூணாவது கொழந்தய இவருதான் காப்பாத்தி கொடுத்தார். இப்ப அதுக்கு ஏழு வயசு ஆவுது…..

நர்சம்மா, பாலகோட்டையா

இரண்டு கொழந்த தவறி போயிடுச்சி.. கொழந்த நிக்கல..ன்னு சொல்லி அவருகிட்ட வந்து அழுதேன்…. அவரு என்ன டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு ஒன்னுமில்ல கர்ப பையில நீர் கட்டி இருக்கு…. அது சரி பன்னிடுறேன்.. பிறகு கொழந்த தங்கும் அப்படின்னு சொன்னாரு. அதன்படியே எல்லாம் நடந்தது.  பொறந்த கொழந்தைக்கு அவருதான் பேரு வச்சாரு. எங்க வீட்டுக்காரும் அதேமாதிரி மறுபொறப்பு எடுத்தாரு.. வயித்துல கட்டி. ஆபுரேசன் பண்ண் சொன்னாங்க. வெளில சில லட்சம் ஆகும்’னு சொன்னாங்க.   எங்க கஸ்டத்த சொல்லி பத்தாயிரத்துல ஒரு ஆஸ்பித்திரியில ரெக்கமண்டு பன்னாரு.

இப்ப இருக்க கொழந்தைக்கும் இதயத்துல ஓட்ட.. இவருதான் மருந்து கொடுத்துனு இருக்காரு. இனிமே அது எல்லாம் யாருகிட்ட போயி வாங்குவேன்?

மதன், வயது 30

எங்கள் குடும்ப நண்பர். 2010 ல் இருந்து அவர் பேச்ச தான் கேட்டு நடக்கிறேன். என்ன மாதிரி பசங்கள பொது வேலைக்கு இழுத்து விட்டு இருக்காரு. அவர் தலைமையில. நாங்க பல நூறு மருத்துவ கேம்ப் நடத்தி இருக்கோம். வர ஏழைங்களுக்கு ஈ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனைன்னு எல்லா செக்கப்பும் இலவசமா செய்யுங்கன்னு சொல்வாரு. வரவங்களுக்கு நோயி எதனா இருக்குன்னு தெரிஞ்சா… சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு அவரே கைப்பட லெட்டெர் எழுதி கொடுத்து போயி பாக்க சொல்வாரு. ஜனங்க அவர உரிமையா அப்பான்னுதான் கூப்பிடுவாங்க. அவரும் எல்லாரையும் குட்டி, செல்லம் அப்படின்னு தான் வாய் நெறைய கூப்பிடுவாரு.

நானு ஒருதடவ ராத்திரி பன்னிண்டு மணிக்கு ஒரு வேலையா அவரு வீட்டுக்கு போனேன். என்கிட்ட பேசினு இருக்கும் போதே ஒரு போனு வந்தது… போன்ல எதோ உரிமையா கேட்டாரு. தெரிது தெரிது சொல்லு… நான் இப்ப வரேன்னு சொன்னாரு.  அடுத்த நிமிசம் கொஞ்சம் பக்கத்துல என்ன வண்டியில இட்டுனு போறியான்னு என்கிட்ட கேட்டாரு. அந்த நேரத்துல வீடு தேடி போயி வயசான பாட்டிக்கு வைத்தியம் பார்த்துட்டு  திரும்பினாரு.

“நம்மள நம்பி கூப்பிடுறாங்க. அவங்களுக்கு வேற யாரு”ன்னு சமாதனம் சொல்வாரு. அவருக்கு சின்ன உதவி செஞ்சாலும் அதை மத்தவங்க கிட்ட சொல்லி நம்மள பெருமைபடுத்துவார்.. இவன தெரியுமா? அப்படின்னு நமக்கு கூச்சம் வர அளவுக்கு மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்துவாரு. எந்த பொது நிகழ்ச்சி என்றாலும் அவரோட அனுமதி கேட்காமலே அவரோட பேரை போட்டுடுவோம். அவரும் ஆட்சேபிக்காம வந்துடுவார். எப்ப அவர பாக்க போனாலும், நோயாளிங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து பேசுவாரே தவிர, தெரிஞ்சவங்கன்னு நம்மகிட்ட உடனே பேச மாட்டார். கொறஞ்சது இரண்டு மணி நேரம் ஒரு விஷயத்த சொல்றதுக்கு உக்காந்துனு இருக்கனும்.  இந்த வயசுல எப்படியோ போக வேண்டிய எங்கள ஒரு பொறுப்பா மாத்தினவரு அவருதான்.

நடராஜன், அப்பு, கோவிந்து, ராஜா (பறையிசை கலைஞர்கள்)

நாங்களும் எவ்ளோ சாவுக்கு மோளம் அடிச்சி இருக்கோம். மாலை எடுத்துனு போறப்ப மூஞ்ச உம்முனு வச்சிருப்பாங்க. வரும்போது சிரிச்சினு வருவாங்க. ஆனா இங்க வரும்போது எல்லோரும் அழுதுனு வராங்க.. அவ்ளோ நல்லது செஞ்சிருக்காரு மனுசன். அஞ்சி ரூபா கூட வாங்க மாட்டாரம். நமக்கு அவருதான் கொடுத்து அனுப்புவாரு.

பார்த்த சாரதி. அரசு போக்குவரத்து கழக செக்கர்.

பக்கத்துல இருக்க ராபின்சன் பூங்காவுல நாங்க அவரு கூடதான் காலை நடை செல்வோம். அப்பவும் எதாவது ஒன்னு ஏழைங்களுக்கு செய்வாரு. அதைப் பத்தி பேசுவாரு. இல்லாட்டி ஊருல இந்த இந்த பிரச்சனைன்னு சொல்லுவாரு. சதா பொது விஷயம்தான் பேசுவாரு.

ஒருநாள், 5 வயசு கொழந்தைய ஒரு அம்மா தூக்கினு வந்து காமிச்சது. இன்னான்னு கேட்டதுக்கு மூச்சி விட சிரமப்படுறான். எங்க எங்கயோ காமிச்சிட்டேன்.. இனிமேலும் எனக்கு வைத்தியம் பார்க்க தெம்பு இல்ல… நாங்க பிளட் பாரத்துல இருக்கோம்னு சொல்லி.. ஓ..ன்னு அழுது.. அங்கயே கொழந்தைய கை வச்சி டெஸ்ட் பண்ணாரு. இது நுரையீரல்ல நீர் கோத்துனு இருக்கு. இது செலவு புடிக்கிற வைத்தியம்ன்னு சொல்லிட்டு அங்கயே எங்க எல்லார் கிட்டயும் ஒருமணி நேரத்துல ரூ.50,000த்த சின்ன சின்னதா வசூல் பன்னாரு.

அப்பவே அதுக்கு ஒரு பொறுப்பாளர் தேர்ந்தெடுத்து அவர்கிட்ட அந்த பணத்தை ஒப்படைச்சார். இந்த கொழந்தைய நாம எல்லாம் சேர்ந்து காப்பாத்தலாம். நான் இன்னும் தெரிஞ்சவங்க கிட்ட பணம் கேக்குறேன்னு சொல்லி அந்த அம்மாவுக்கு நம்பிக்கை கொடுத்தார்.. இந்த விசயத்த கேட்டு ஒரு தொழிலதிபர் ஐந்து லட்சம் கொடுத்தாரு. இப்படி எல்லாம் அந்த கொழந்தைய காப்பாத்தினாரு. ஒருத்தரோட நல்ல குணத்த சொல்லனும்னா மனிதருள் மாணிக்கம்னு ஏதேதோ சொல்லுவாங்க.. ஆனா அதுக்கும் மேல இவரு…..

மீனாட்சி

என் வீட்டுக்காருக்கு ஒரு நாள் நெஞ்சிவலி வந்துடுச்சி… எங்க கூட்டி போனாலும் 25,000 செலவாகும்னு சொன்னாங்க. அவ்ளோ பணத்த எங்களால பொறட்ட முடில. அப்பதான் இவருகிட்ட வந்து காட்டினோம். அந்த சமயம் ரெய்னி ஆஸ்பித்திரில முகாம் போட்டிருந்தாங்க. அந்த முகாமுக்கு போக சொல்லி லெட்டர் எழுதி கொடுத்தாங்க. அந்த லெட்டர வாங்கிட்டு ட்ரீட்மெண்டு இலவசமா பார்த்தாங்க. அதுமட்டுமில்லாம, 500 ரூபா மதிப்புள்ள மாத்திர மாதந்தோறும் இலவசமா வாங்கிட்டு இருக்கோம். அதுபோக அவரோட அக்கவுண்ட்ல மாசம் ஐநூரு ரூபா போடுறாங்க.. அவரோட புண்ணியத்தால உயிரோடா இருக்காரு. அதே மாதிரி என் பையனுக்கு செருப்பு கடிச்சி இரண்டு காலும் வீங்கிடுச்சி…. இவர்கிட்ட கூட்டியாந்து.. ..ஓ..ன்னு அழுதேன். முன்னூரு ரூபா ஆயின்மெண்ட் கொடுத்து…. பணம் எதுவும் வேணாம்… இத வேளா வேளைக்கு தேச்சி விடு போதும்னு சொன்னாரு…. அவனுக்கும் சரியாகி இப்பதான் கல்யாணம் பண்ணேன்..என்கிறார்.

ராஜேந்திரன், டிரைவர்…

1978 -இல் இருந்து எனக்கு பழக்கம்… இவர்கிட்ட எப்ப போனாலும் டாக்டரா பழக மாட்டார்… சக டிரைவரா பேசுர மாதிரி தான் எங்க கிட்ட நடந்துப்பாரு.! ஆட்டோவுலே ஏறி மீட்டர் 25 ரூபா வந்தா நமக்கு ஐம்பது ரூபா கொடுத்து அனுப்புவாரு.. அப்படி ஒரு மனிதர்..!

மருத்துவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ள மக்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவ்ற்றின் மீது அழுத்தவும் )

*****

ருத்துவர் ஜெயச்சந்திரன் அடிக்கடி சொல்வாராம்.. “மக்கள் நம்மை கடவுளாக பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு நாம் ஒன்றையும் அவர்களுக்கு செய்து விடவில்லை. நாம் அவர்களை குழந்தையாக பார்க்க வேண்டும்”.

இவர் ஒரு வார்த்தை சொன்னால் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பலரும் காத்துக் கிடந்தனர். மக்களுக்காகவும் அவர்களது மருத்துவத்துகாகவும் அன்றி வேறு எதற்காகவும் எவரிடமும் எதையும் கேட்டதில்லை. ஒரு மக்கள் நலப் பணியாளர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக நம் கண் முன்னே வாழ்ந்து காட்டியிருக்கிறார் மருத்துவர் ஜெயச்சந்திரன். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

– செய்தி, படம்: வினவு களச் செய்தியாளர்கள்

4 மறுமொழிகள்

  1. மகத்தான மனிதர்கள் மிகவும் எளிமையாக எளிய மனிதர்களுக்கு சேவை செய்து வாழ்ந்து மறைந்தாலும் என்றென்றும் வாழும் வரலாறாக உள்ளனர். இந்த வரலாற்று நாயகனை அறியத்தந்த வினவு செய்தியாளர்களுக்கு நன்றி 🙏

  2. இந்த வரலாற்று நாயகனை அறியத்தந்த வினவு செய்தியாளர்களுக்கு நன்றி

  3. இதயம் கனக்கிறது. இந்த சாவு கனமானதுதான். மக்கள் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்தால்தான் இத்தகைய கனமான இழப்புகளைத் தாங்க முடியும். வினவின் இப்பதிவு இத்தகையோர் பற்றிய வரலாற்றுப் பதிவாகட்டும். கண்ணீர் அஞ்சலி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க