நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில்

மிழக கேரளா எல்லையில் அடர்ந்த மலைக்காடு.

“ஏன் ஆயீஷா, மாப்பிள்ளை பாக்க வந்தாங்களே என்னாச்சு”

“அத ஏன் மேடம் கேக்குறீங்க, வாரவனெல்லாம் கவர்மென்ட்டு நர்ஸுன்னு நம்பி வாரானுங்க. அப்புறம் என் சம்பளம் என்னன்னு தெரிஞ்சதுமே, சொல்லாம கொள்ளாம ஓடிடுறானுங்க” என சிரித்தாள் .

“டாக்டர் !…. டாக்டர் !…”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. செல்போனில் மணி இரவு 1.00 காட்டியது. கதவை திறந்தவள்.

“என்னமா.. கேசு”

“மங்கா வந்திருக்கா மேடம். வலி ஆரம்பிச்சிடுச்சு போல”

“அப்டியா” என்றவள் உடைமாற்றி கொண்டு தயாரானாள்.

அந்த அடர்த்த மலைக்காட்டில், அப்படி ஒரு சிறிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அவ்வளவு எளிதாக நம்பிவிட முடியாது .

ஒரே ஒரு பெண் மருத்துவரும், நர்ஸும் மட்டுமே. இருவருக்குமே வயது 25-ல் இருந்து 30-க்குள் இருக்கலாம். ஏதோ இருப்பதை வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அந்த அதரப்பழசான quarters-உம் இன்றோ நாளையோ இடிந்து விழும் நிலையில் இருந்தது. பாம்புகள் வந்து செல்வதெல்லாம் இந்த 2 வருடங்களில் அவர்களுக்கு சர்வசாதாரணம்.

மங்கா, காட்டுவாசி. கணவன் யானை மிதித்து இறந்துவிட, தனியாளாக அருகில் இருந்த ரிசார்ட்டில் கூலி வேலை செய்து பிழைத்த வந்தாள். நிறைமாத கர்பிணி. பிரசவம் இன்றோ நாளையோ என்று இருந்தவள். இப்போது வலியோடு வந்திருக்கிறாள்.

வெளியே இடியும் மின்னலும் என, வானம் ஒரு பெருமழைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

மங்காவை பிரசவ அறை கட்டிலில் கிடத்தினோம். ஆயிஷா BP பார்த்து கொண்டிருக்க, நான் பிரவத்துக்கான tray தயார் செய்தேன்.

மங்கா வலியில் “அம்மா .. அம்மா” என முனகிக் கொண்டிருந்தாள்.

“ஏய் மங்கா. இதைப் பாருடி, அதான் நானும் அயீஷாவும் இருக்கோம்ல, என்னத்துக்கு கெடந்து பயப்படற” என அவள் கைகளை தொட.

“சரிங்ககா” என் கைகளை இறுக்கி பற்றிக்கொண்டாள்.

அதற்குள் மழை சற்று பலமாக பிடித்திருந்தது. புயல் காற்று வீசும் சப்தம் ஜன்னல் வழியாக வீசுவது கேட்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.

“மேடம் BP 170 இருக்கு” என்ற ஆயிஷாவின் குரலில் கொஞ்சம் பதட்டம்.

பிரசவத்தில் BP 120 என்பதே கொஞ்சம் அதிகம்தான். 170 என்பதெல்லாம் ஆபத்துக்கான அறிகுறி.

“என்னமா சொல்ற, நல்லா பாத்தியா” என்றவாறே நானே இன்னொரு தடவை பார்த்தேன். 170-க்கு கொஞ்சம் மேலே இருந்தது .

“ஆயீஷா, கடைசியா மங்காக்கு எப்பமா BP பார்த்தோம்”

“நேத்து சாயந்தரம் கூட வந்திருந்தா மேடம் . நார்மலா தான் இருந்துச்சு”

“ஹ்ம்ம்.. யூரின் செக் பண்ணுமா” என்றேன்.

சில நிமிடங்களில்.

“மேடம் , அதுவும் positive”

சிறுநீரில் உப்பு அதிகம் , BP -யும் அதிகம். உடனே மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பில்லை.

மங்காவிடம் எதுவும் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்தாள். நல்லவேளை குழந்தை இந்த நொடி வரை நலம்.

இடி இடிக்கும் சப்தம் காதுகளை பிளந்தது. மின்னல் வெட்டுக்கள் கண்களைக் கூசியது. இவளுக்கும் கொஞ்சம் அடிவயிறு மாதவிடாய் வலியில் கனத்தது. Pad மாற்றி கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது.

“ஆயீஷா 108-க்கு கால் பண்ணுமா, நான் இதோ வந்துடறேன்” என்றவள் சில நிமிடங்களில் வந்து…

“என்னாச்சு ஆயிஷா, வண்டிக்கு சொல்லிட்டியா”

“இல்ல மேடம், லைன் போகவே மாட்டேங்குது”

“Landline”

“அதுவும் போகல மேடம்.”

“BSNL try பண்ணி பாரும்மா . அது சில நேரத்துல போகும்”

மங்கா வலியில் துடித்து கொண்டிருந்தாள் .

சில நொடிகளில் “மேடம் ! BSNL ரிங் போகுதுங்க”

இவள் கையில் இருந்து போனை பிடுங்கினாள்.

“ஹலோ. நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர் பேசுறேன்”

அந்தப்பக்கம் எந்த சப்தமும் கேட்கவில்லை .

“ஹலோ, நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர். இங்க ஒரு பிரசவ கேஸு, 170 BP , எகிலம்ப்சியா (ஆபத்தான பிரசவ நிலை) மாதிரி இருக்குங்க. உடனே வண்டி அனுப்புங்க ப்ளீஸ்”

அந்தப் பக்கம் மீண்டும் அமைதி.

“உடனே வாங்க ப்ளீஸ்” என்றவள் கட் செய்தாள் .

“என்னாச்சுங்க மேடம்”

“அவங்களுக்கு கேட்டுச்சா இல்லையான்னு தெரியலையேமா”

மீண்டும் 108-க்கு அழைத்தாள். லைன் போகவில்லை.

“வேற எதாவது ஆம்புலன்ஸ் கிடைக்குமா ஆயீஷா”

“அர்த்தராத்திரில இந்த காட்டுல ஆம்புலன்சுக்கு எங்க மேடம் போறது . வெளியே வேற மழை பிச்சிகிட்டு பேயுது”

முதலுதவி மருந்துகளை உடனடியாக செலுத்தினோம . இனி ஒரு மணி நேரத்திற்கு ஒரு டோஸ் போட வேண்டும்.

“இன்னும் எத்தனை டோஸ் மா பாக்கி இருக்கு”

“ரெண்டு டோஸ் மேடம்”

மனதுக்குள் கணக்கு போட்டேன் அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் சமாளிக்கலாம், அதற்குள் இவளை கோவை GH-க்கு எப்படியாவது கொண்டு சென்றுவிட வேண்டும்.
மீண்டும் BP பார்த்தார்கள் .அது சற்றும் குறைந்தபாடில்லை.

மங்காவோ “தலை வலிக்குதுகா” என்றாள். அனைத்தும் ஆபத்துக்கான அறிகுறிகள்.

கையுறை போட்டுக்கொண்டு, மங்காவின் பிறப்புறுப்பை ஆய்வு செய்தாள்.

கனநொடியில் பனிக்குடம் உடைந்து, இவள் முகத்தில் தெளித்தது உதட்டில் சில துளிகள் பட்டு இவளுக்கு குமட்டியது. துடைத்துக் கொண்டு, பிறப்புறுப்புக்குள் கைவிட்டு குழந்தையின் தலையின் இருப்பை பரிசோதித்தாள். குழந்தை பிறக்க இன்னும் சிறிது நேரம் அவகாசம் இருப்பது தெரிந்தது.

மங்காவின் பிறப்புறுப்பு வழியாக ரத்தமும், அதன் கீழே மலமும் கலந்து ஒருவித சொல்ல முடியாத வாசத்தோடு வந்துகொண்டிருந்தது. பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.

ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். அடுத்த டோஸ் மருந்தை செலுத்தினார்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்கான மருந்து மட்டுமே கையிருப்பு இருந்தது . 108 ஆம்புலன்ஸ் வருவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

“ஆயீஷா ! பேசாம நம்ம கார்லயே கூட்டிட்டு போய்டலாம்டா”

ஆயீஷா சற்று அதிர்ச்சியானாள்.

“என்ன மேடம் சொல்றீங்க, இந்த காட்டு வழியில, அதுவும் இந்த பேய் மழைல, நாம எப்புடி மேடம்”

“வேற வழி இல்லடா. எதாவது பண்ணலைனா செத்துடுவா”

ஆயீஷாவுக்கும் வேறு வழியில்லை என்று புரிந்தது.

“சரிங்க மேடம் . நீங்க வண்டிய எடுங்க . நான் shift பண்ண ரெடி பன்றேன்”

பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.

மீதமிருந்த அந்த ஒரு டோஸ் மருந்தையும், ஆயிஷா பத்திரபடுத்திகொள்ள
இவள் காரை reverse எடுத்து start செய்தாள். பின்னர் இருவரும் கைத்தாங்கலாக மங்காவை பின்சீட்டில் கிடத்தினர். ஆயீஷா மங்காவின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

முழு வேகத்தில் வைப்பர் வைத்தும், மழை வீசும் வேகத்தில் சாலை சுத்தமாகத் தெரியவில்லை. வழியெங்கும் சேறும் சகதியுமாக கார் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. நல்ல வேலையாக காட்டாற்று பாலத்தை தாண்டி வெள்ளம் இன்னும் வரவில்லை. வழியாக மண் ரோட்டைத் தாண்டி தார் ரோட்டை அடைந்தார்கள்.

“மேடம். மங்கா மயங்கிட்டா மேடம்”

“இன்னொரு டோஸ் போடும்மா. சீக்கரம் போயிடலாம்”

கடைசி கையிருப்பு மருந்தும் செலுத்தப்பட்டு விட்டது. மழையோடு புயல் காற்றும் சேர்ந்து கொண்டது.

“ம்மா ஆயீஷா . விடாம போன் அடிச்சிக்கிட்டே இரும்மா. லைன் கிடைச்சா உடனே குடும்மா”

“சரிங்க மேடம்”

இருளில் திடீரென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தினாள். வண்டியின் சக்கரம் கிறீச்சிட்டு நின்றது .

நடுவில் ஒரு மரம் சாலை நடுவே விழுந்திருந்தது . நல்ல வேளையாக இவர்கள் அதில் மோதவில்லை. சற்றும் யோசிக்காமல் இவள் இறங்கி அந்த மரத்தை தள்ள முயற்சித்தாள். காட்டு மரம் கொஞ்சமும் அசையவில்லை .

ஆயிஷாவும் இறங்கி வந்து முயற்சித்தும், பயனில்லை. மின்னல் வெளிச்சத்தில் எதையோ பார்த்த ஆயீஷா இவள் கையை பிடித்து இழுத்து வந்து காருக்குள் தள்ளினாள் . இவளும் முன் சீட்டில் அமர்ந்து கண்ணாடியை அவசர அவசரமாக ஏற்றினாள். காரின் லைட் அனைத்தையும் அணைத்தாள்.

“என்னமா என்ன பண்ற என்னாச்சு”

“ஷ்ஷ்ஷ்..” என்று என் வாயை கையால் பொத்தி அது ஒரு திசையில் கை காட்டினாள் .

ஒரு யானைக்கூட்டம் குட்டிகளோடு மெதுவாக கடந்து சென்றது. காரின் கண்ணாடி அருகே வந்த ஒரு யானையின் கண்கள், கண்ணாடிக்கு மறுபுறமிருந்த இவள் கண்களுக்கு மிக அருகில் இருந்தது . இவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது .

சிறிது நிமிடங்கள் கழித்து, அவைகள் கடந்து போனதை உறுதி செய்தபின் , பயம் கொப்பளிக்க மங்காவின் நாடியை பார்த்தாள். நல்ல வேலையாக இன்னும் துடித்துக் கொண்டிருந்தது .

பயத்திலும், இதற்குமேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதே என்கிற விரக்தியில் அவளுக்கு ஓவென்று அழுகத் தோன்றியது . காரை விட்டு வெளியேறி, கொட்டும் மழையில் சாலையை மறைத்திருந்த அந்த மரத்தில் அமர்ந்து கொண்டாள். அவளால்

திடீரென்று ஓடி வந்த ஆயிஷா “மேடம் .. அங்க பாருங்க”

எனக்கும் இன்ப அதிர்ச்சி. சற்று தொலைவில் நீலமும் சிகப்புமாக சைரன் விளக்குகள் மினுக்கியபடி 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது .

இவர்கள் இருவரும் “ஸ்டாப் ஸ்டாப்” என கைய்யசைத்து வண்டியை நிறுத்தினர்.

உள்ளிருந்து வந்த 108 பணியாளர் “மேடம் . நீங்க சிவன்மலைக்காடு PHC டாக்டர்தானே”

“ஆமாங்க நான்தான்”

“சென்னை 108 control ரூம்ல இருந்து பேசுனாங்க மேடம். உங்க patient எங்கேங்க ?”

உடனடியாக ஸ்ட்ரெச்சர் வைத்து மங்காவை வண்டியில் ஏற்றினோம். கடைசியாக அந்த மரத்தைத் தாண்டும்போது தவறி விழுந்து அவள் தலை ஒரு ஆம்புலன்ஸ் கம்பியில் மோதியது .

(சில மணி நேரம் கழித்து)

அவள் கோவை அரசு மருத்துவமனை வார்டில் மயக்கத்தில் இருந்து விழித்தாள்.

பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும் தத்தம் வேளைகளில் பிசியாக இருந்தனர். கட்டில் அருகே ஆயீஷா சூடாக பால் ஆற்றிக் கொண்டிருந்தாள்.
மெதுவாக கண் திறந்தவள்

“ஆயிஷா…மங்காக்கு …?”

மலர்ந்த முகமாக ஆயீஷா

“டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க”

அவளின் செல்போன் அலறியது

ஆயிஷா போனை எடுத்தாள் “ஹலோ”

“மேடம் DD office-ல இருந்து பேசுறாங்க” என்று குடுத்தாள்.

“ஹலோ”

“டாக்டர் ! ஒரு சின்ன விஷயம் தப்பா நெனச்சிக்காதீங்க”

“சொல்லுங்க சார்”

“நீங்க போன வாரம் strike-ல கலந்துகுட்டதுக்காக உங்களுக்கு Punishment transfer வந்திருக்கு”

இவள் சற்று விரக்தியாக

“பரவால்ல சார் . இது எதிர்பார்த்தது தான . நாளைக்கு காலைல வந்து ஆர்டர் வாங்கிக்குறேங்க” என்று கட் செய்தாள் .

(சில நாட்கள் கழித்து)

“இந்தம்மா மங்கா. புள்ளைக்கு birth certificate குடுக்கோணும். புள்ளைக்கு என்ன பேரு வெக்க போற”

“வேறென்ன பேரு, என் புள்ள உசுர காப்பாத்துன சாமி , எங்க டாக்டரக்கா பேருதேன் இவளுக்கும்”

“அதென்னமா உங்க டாக்டராக்க பேரு”

“அனிதா-ங்க…. டாக்டர் அனிதா”

நன்றி: முகநூலில் – ம. சிவசந்திரன் 

disclaimer

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. அருமையான கதை ! இதனை எழுதிய நண்பர் ம.சிவசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க