கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

டந்த அக்டோபர் ஐந்தாம் தேதியிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவமனை உட்பட பல மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தங்கள் சகோதரிக்கு நீதி வேண்டியும், மாநில சுகாதாரத்துறை செயலாளர் பணிநீக்கம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் (அக்டோபர் 13) ஒன்பதாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று மருத்துவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போதிலும் மீதமுள்ள மருத்துவர்கள் போர்க்குணத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் (Symbolic Fast) ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் அக்டோபர் 13 அன்று “அரந்தன்” (சமைக்கக் கூடாது) கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மக்களை வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கு வங்க மக்கள் கடைப்பிடித்துள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களாக துர்கா பூஜை (நவராத்திரி விழா) நடைபெற்ற போதும் ஏராளமான மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் போராட்டத்திற்கு வருகை தந்து மருத்துவர்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, அக்டோபர் 12-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய தொலைப்பேசியில் டார்ச் லைட்டை ஒளிரச் செய்து மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் பயின்று மற்றும் பணியாற்றிவரும் மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


படிக்க: கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!


சான்றாக, ஆர்.ஜி.கர். மருத்துவமனையின் முன்னாள் மாணவர்கள் 12 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்காக ஆர்.ஜி.கர். மருத்துவ வளாகத்தை அடைந்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். போராட்டக் களத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடியாத போதிலும் தாங்கள் தீர்மானித்தபடி 12 மணி நேரம் உண்ணாவிரதத்தை கடைப்பிடிப்போம் என்று அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் “நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும்” என அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of All India Medical Associations) எச்சரித்துள்ளது.

இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் நாள்தோறும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றாலும் மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமிர்த்தனமாக மறுத்துவருகிறது. அதன்மூலம், மருத்துவ மாணவியை பாலியல் வல்லுறுவுக்குள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளிகளையும் கிரிமினல்மயமாகியுள்ள அரசுக் கட்டமைப்பையுமே பாதுகாக்கவே மம்தா அரசு விழைகிறது.

ஆனால், மருத்துவர்கள் போராட்டம் மாபெரும் மக்கள்திரள் போராட்டமாக மாறும்போது மம்தா அரசு அடிபணிய வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க