அக்டோபர் 5 ஆம் தேதி முதல் கொல்கத்தா மருத்துவ மாணவர்கள் தங்களின் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மஹதோ, கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ஸ்னிக்தா ஹஸ்ரா, தனயா பஞ்சா மற்றும் அனுஸ் துப் முகோபாத்யாய், என். ஆர். எஸ் மருத்துவக் கல்லூரியின் புவஸ்தா ஆச்சார்யா மற்றும் கே. பி. சி மருத்துவக் கல்லூரியின் சயந்தனி கோஷ் ஹஸ்ரா போன்ற ஜூனியர் மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“கொல்லப்பட்ட எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும். யாராலும் எங்களின் போராட்டத்தைத் தடுக்க முடியாது” என்று மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு மறுநாளே (அக்டோபர் 6) சிபிஐ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிக்கை பற்றிப் பேசிய இளநிலை மருத்துவர் சவுமோதீப் ராய் “குற்றப்பத்திரிகையில் என்ன உள்ளது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இந்த கொடூர கொலையில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர், எவ்வளவு ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன போன்ற அனைத்தும் வெளிவர வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். குற்றப்பத்திரிகையை வைத்து எங்களைத் திருப்திப்படுத்தவோ, எங்களின் போராட்டத்தைத் தடுக்கவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பயிற்சி மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
அக்டோபர் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி (Maulana Azad Medical College) மருத்துவர்கள் கொல்கத்தா இளநிலை மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
படிக்க: கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் (Guru Teg Bahadur Hospital – GTB) மருத்துவமனையின் மருத்துவர்களும் தங்கள் சக ஊழியரின் ஒற்றுமை மற்றும் நினைவின் அடையாளமாக தங்களின் கைகளில் கருப்பு ரிப்பன்களை அணிந்து மருத்துவ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
GTB மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் “எங்களின் கைகளில் அணிந்திருந்த கருப்பு ரிப்பன்கள் எங்களின் துயரத்தைக் குறிக்கிறது” என்றும், “இதுபோன்ற வன்முறைகளை பார்த்துக்கொண்டு மருத்துவ சமூகம் அமைதியாக இருக்காது என்பதையும் நினைவூட்டுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பானது (Federation of All India Medical Association) “மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மம்தா அரசின் உணர்வின்மையைக் காட்டுகிறது” என்றும், “தங்களின் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடும் இளநிலை மருத்துவர்கள் முன்னணிக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக மக்களும் திரைக் கலைஞர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், பணி இடங்களில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 60 நாட்களாகப் போராடி வரும் மருத்துவ மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram