லக சமத்துவமின்மை அறிக்கை 2022 இந்தியாவில் அப்பட்டமாக வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், தற்போதைய ஆட்சியின் கீழ், விதந்தோதப்படுகிற பொருள் குவிப்பு மற்றும் சமூக பிளவுகளை தீர்க்கத் தேவையான ஒரு விவாதத்தைக் கூட பயங்கரவாதச் செயல் போல நடத்த வேண்டிய நிலையே இருக்கிறது.
தேசம் என்பது “மக்கள் சமூகத்தைக் கொண்ட ஒரு கற்பிதம். அங்கு உண்மையில் ஏற்றத் தாழ்வும், சுரண்டலும் இருந்தாலும் கூட தேசம் என்பது ஆழ்ந்த, சமநிலையில் உள்ள தோழமையான மக்கட் சமூகம் என எப்போதும் கற்பித்துக் கொள்ளப்படுகிறது”. – பெனடிக்ட் ஆண்டர்சன்.
“காசியிலிருந்து கோவை வரை கடவுள் சிவன் எங்கெங்கும் உள்ளார்” – மோடி, பிப்ரவரி 24, 2017.
“உலகில் உள்ள மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் ஒன்றாக இன்றைய இந்தியா உள்ளது” – உலக சமத்துவமின்மை அறிக்கை 2022.
அறிஞர் பெனெடிக்ட் ஆண்டர்சனின் மிகவும் புகழ் பெற்ற கூற்றுப்படி அன்றைய ஐரோப்பா மொழி வழி தேசங்களாக உருவாகி, மதக் குழுக்களுக்கு பதிலாக ஒரு மதச்சார்பற்ற, அரசியல் சமூகமாக உருவானது. ஆனால், இன்றைய இந்தியாவோ திரும்பிச் செல்ல முடியாத வகையில் மதம் சார்ந்த ஒரு இனக்குழுவாக உருமாறிக் கொண்டுள்ளது.
படிக்க :
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
இந்திய குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சாதிய பாகுபாடு !
ஆனால் இதில் கேலிக்கூத்தான முரண்பாடு என்னவென்றால் இந்த கற்பனையான மதம் சார்ந்த சமூகமானது மிக மிக மோசமான ஏற்றத்தாழ்வுடன், இதிலிருந்து மாறிவிடும் என்பதற்கான எந்த அறிகுறியுமற்று உள்ளது. உண்மையில், ஆன்மீக சமூகம் என சொல்லிக் கொள்ளப்படும் இது விளிம்பு நிலையிலும் மிக வறுமையிலும் உள்ள ஆகப் பெரும்பான்மையான மக்களைப் பற்றி கவலைப்படாதது மட்டுமின்றி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழும் பரம்பரையினரின் ஊதாரி வாழ்க்கையை மூடி மறைக்கும் முகமூடியாகவும் உள்ளது.
மிக வறுமையில் அடித்தட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50% பேரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.53,610/- மட்டுமே. அதேநேரம் 10% உள்ள மேட்டுக்குடி பணக்காரர்களின் ஆண்டு வருமானமோ இதைவிட 22 மடங்கிற்கும் மேலாக உள்ளது. (இது உலகில் மிக மோசமான ஏற்றத்தாழ்வாகும்). இது சமீபத்தில் வெளியான உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்.
மதச் சின்னங்களின் அடையாளத்துடனான ஆடைகள் அணிந்து, தலைமைப் பொறுப்பேற்று நாள் முழுதும் மதச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பதை தேசிய தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்புவது வழமையான ஒன்றாக நடக்கிறது. ஒரு கோயிலின் தலைவர் ஒரு அரசாங்கத்தின் தலைவராயிருப்பது, கோயில்களைப் புதுப்பிப்பது பற்றி நடுப்பக்க தலையங்கக் கட்டுரைகள் எழுதுவது, குடிமக்களுக்கு ஆன்மீக மதச் சடங்குகளுக்கு உதவுவது என்பதெல்லாம் எந்த ஒரு சிறு உறுத்தலுமின்றி நடந்து கொண்டுள்ளது.
இந்த விவரங்களுடன் கீழே குறிப்பிடுவதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்: உயர் பொறுப்புக்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சிறுபான்மை மதத்தை கொடூரமான பேய்த்தனமிக்கதாகச் சித்தரித்து, ஈவிரக்கமற்ற முறையில் சிறுபான்மை மதத்தவர்களை அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து முற்றாக விலக்கி வைத்து, பெரும்பான்மை மதத்தை அரசுடன் முற்றிலுமாக ஒன்றிணைப்பது எனச் செய்து வருகின்றனர்.
இங்கே, தேசமும் மதமும் ஒன்றுக்கொன்று மாற்றீடு செய்யப்படுகிறது. தனிமைப்படுத்துகின்ற மற்றும் மத அடிப்படைவாதத்தைப் போன்றே, மிக வெளிப்படையாகவே கோபம், சீற்றம் போன்ற உணர்வுகளை ஊட்டியே இந்த தேசியவாதத்தை நோக்கி மக்கள் அணிதிரட்டப்படுகின்றனர். இப்படிப்பட்ட தேசியவாதம் தொடர்ந்து வெளிப்புற மற்றும் உள் எதிரிகளைத் தேடுகின்ற வெறித்தனமான மற்றும் மனப்பிறழ்வு நிலைமைக்கு மாறுவதோடு, இது தேசியத்திற்கு நேரும் அவமானங்களையும் எதிர்ப்பையும் கண்காணிக்கிறது.
ஜெனரல் பிபின் ராவத்துக்காக துக்கம் அனுசரிக்கப்பட்ட காலகட்டமானது, தேசியவாத உணர்வுகள் அசாதாரணமான முறையில் வெளிப்பட்டதைச் சந்தித்தது. அதில் மக்கள் இழிவான கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். செய்தித்தாள்கள் தலைப்புச் செய்திகளில் ஜெனரலின் பெயரை கெளரவமின்றி குறிப்பிட்டதற்காக கோபத்தை எதிர்கொண்டன. ஆனால் இந்து தேசியவாத எம்.பி.க்கள் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளாமல், நாதுராம் கோட்ஸேவை தேசபக்தர் என்று மீண்டும் மீண்டும் அழைத்த சூழ்நிலை தான் இன்று நிலவுகிறது.
இராணுவவாதமும் இராணுவத்தின் வீரமும் பெரும்பான்மை அதி-தேசியவாதத்தின் முக்கிய கூறுகளாக இருப்பதால் இது வியப்பளிக்கவில்லை. ஆனால் முரண்பாடாக, “அதன் சொந்த” இராணுவத்தினரைக் கூட விட்டு வைப்பதாக இல்லை. ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் மகள் கடும் துயரத்தில் இருக்கும் போதே, ஆளும் கட்சியான பெரும்பான்மையினருக்கு முரணான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்ததற்காக கடுமையான மிரட்டலையும் கொடுமைப்படுத்தலையும் சமூக ஊடகத்தில் எதிர்கொண்டார். அன்பு, உரையாடல் மற்றும் இரக்கம் ஆகியவை நமக்கு அன்னியமாக்கப்பட்டு விட்டன. வட கொரிய அரசு அதன் முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் சிரிப்பதை தடை செய்யும் தடையுத்தரவைப் (மேற்குலக பத்திரிகை தகவல்களின்படி) போல  இல்லாவிட்டாலும், இது கட்டளையிடுகிற தேசியவாதமே ஆகும்.
மதம் நிறைந்த அரசியல் துறையில், மக்கள் பக்தியைக் காட்டவும், பக்தர்களாக மாறவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்கர் நீண்ட காலத்திற்கு முன்பே, மதத்தில் பக்தி இரட்சிப்பை வழங்கலாம், அரசியலில் பக்தி என்பது “சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் ஒரு உறுதியான பாதை” என்று எச்சரித்தார். ஆனால் இப்போதோ, ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதற்கான சேவையில் ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியதாக கூறிக் கொண்டாலும், ஆன்மீக தெய்வத்திற்கும் தற்காலிக தெய்வத்திற்கும் இடையிலான கோடுகள் மிக மங்கலாக உள்ளன, மேலும் தேசிய அரசு ஒரு மதவாத கற்பனைதேசத்தையும் (உட்டோபியா) வழங்குகிறது.
இந்து தேசியம் என்கிற நஞ்சும் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வும்
முக்கியமாக, மதம், அரசியல் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் ஒன்றிணைவு, அதன் விளைவாக வரும் தொல்லை என்னவென்றால் ஒருவர் தேசத்தை, ’விஸ்வ குரு’ என நம்புவதும், இதன் தொடர்ச்சியாக சமூகத்தில் உருவாகியுள்ள பிளவுகளைப் பார்க்க இயலாமல் மூடிமறைப்பதுமாக ஆகிறது
எடுத்துக்காட்டாக, உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருமானப் பங்கு மிக மோசமான நிலையில் 18%-மாக இருப்பதாக நமக்குச் சொல்கிறது.  இது உலகின் மிகக் குறைந்த பங்கான மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (இங்கெல்லாம் பல நாடுகள் மத சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன) நாடுகளில் உள்ளதை விட சற்றே அதிகம். இந்த புள்ளிவிவரம் சமூகத்தில் பெண்களின் அதிகாரத்தையும் நிலையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.
காலனிய ஆட்சியின் போது கூட இந்தியப் பணக்காரர்களில் முதல் 10% பேரின் வருமானப் பங்கு சுமார் 50% தான் இருந்தது, அதே நேரம் பிரிட்டிஷார் வெளியேறிய 75 ஆண்டுகள் கடந்து இன்றைக்கு அதே முதல் 10% பேரின் வருவாய் 57% ஆக உயர்ந்திருப்பது பற்றி “தேசியவாதி” அதிர்ச்சியடையவில்லை! தற்போதைய இந்துத்துவ தேசியவாத ஆட்சியின் போது மட்டும் இந்தியாவில் முதல் 1% பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் சராசரி சொத்து ரூ.3.24 கோடியாகும். அதே நேரம் அடித்தட்டில் உள்ள 50% பேரின் சராசரி சொத்து மதிப்பு வெறும் ரூ.66,000 ஆக உள்ளது.
ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் ஒவ்வொரு செயலிலும் தேசத் துரோக குற்றத்தைக் காணும் மத-தேசியவாதிகள், (அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கு அப்பால்) மில்லியன் கணக்கான அதிகப்படியான கோவிட்-19 இறப்புக்களால்  அதிர்ச்சியடையவில்லை.  இது அடிப்படை சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் கிட்டத்தட்ட முற்றிலும் அரசு தோல்வியால் நடந்த அரசின் படுகொலைகள். அல்லது உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் கவலைக்குரிய தரவரிசை: 116 நாடுகளில் 101-வது  இடம். இதில் இந்தியா அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் இருப்பது பற்றியும் நமது மத தேசியவாதி கவலைப்படவில்லை. இந்தப் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தின் போது இந்தியாவின் கோடீசுவரர்கள் தங்கள் செல்வத்தை 35% அதிகரித்த அதே நேரம், பணக்கார இந்தியர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதித்ததாகவும், இதே கோவிட்-19 முடக்கத்தின் போது நாட்டின் மக்கள் தொகையில் 24% பேர் மாதத்திற்கு சராசரியாக ரூ.3,000 மட்டுமே சம்பாதித்தது பற்றிய புள்ளி விவரங்களைக் கண்டும் அவர் அதிர்ச்சியடையவில்லை.
நமது நாட்டில் இந்தப் பெருந்தொற்றைத் தொடர்ந்து வறுமையில் தள்ளப்பட்டோர் எண்ணிக்கை 15 – 20 கோடி அதிகரித்து விட்டதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. இது மொத்த ஏழைகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி அளவாகும். சுதந்திரத்திற்குப் பின் நடந்த மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக இந்த வறுமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியைத் தொடங்கியதே பணமதிப்பழிப்பு என்ற பேரழிவான நடவடிக்கை தான். இது பக்தி அரசியலின் நேரடி விளைவாகும். இந்த பக்தி அரசியல் காரணமாக இங்கு மிக முக்கியமான முடிவுகள் கூட எந்தவித விவாதமும் பரிசீலனையும் இன்றி உயர் நிலை தலைவர்/கடவுளிடம் இருந்து நேரடியாக வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கூடத் தெரிவிக்கப்படாமல் தான் இந்த பணமதிப்பழிப்பு முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இந்தப் பிரச்சினைகள் பற்றிப் பொது மக்களிடம் மயான அமைதி நிலவுகிறது. இதற்குக் காரணம், ஜனநாயகம், உரிமைகள், சமத்துவம், விவாதம் என்றிருந்த அரசியலின் இடத்தில் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, அந்த இடங்களில் கடமை, தியாகம் (குறிப்பாக பணமதிப்பழிப்பின் போது பார்த்தது), மரியாதை (அதிகாரத்திற்கு), கீழ்ப்படிதல், இன்னபிறவாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்துத்துவ தேசியவாதமானது ’சமஜிக் சம்ரஸ்டா’ (சமத்துவ சமூகம்) எனப் பேசுகிறது, ஆனால் சாதியை அழித்தொழிப்பது பற்றிப் பேச மறுக்கும் அதே நேரம், ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. “மதச்சார்பற்ற” தேசியம் பேசிய சமத்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அரசியல் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, அந்த சமத்துவத்தையே கேள்வி எழுப்பிய காலத்தைத் தொடர்ந்து தான் தற்போது ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இயல்பாகவே சாதியால் வடிவமைக்கப்படுவதால் இது மிகவும் முக்கியமானது. தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஆதிவாசிகள் அதிர்ச்சியூட்டும் அளவு உடைமை நீக்கம் மற்றும் பொருளாதார சரிவுகளின் சுமைகளை எதிர்கொள்கின்றனர். மற்றொரு ஆய்வில் (2015-17 க்கு இடையில்), 22% இந்து உயர் சாதியினர் மொத்த சொத்துக்களில் 41% வைத்திருந்தனர், அதே நேரத்தில் 24% இந்து தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் 11% மட்டுமே வைத்திருந்தனர்.
சமத்துவமின்மை என்பது ஒரு விசித்திரமான இந்தியப் பிரச்சினை அல்ல, மாறாக உலகளாவிய பிரச்சினை. இந்தியாவை விட மோசமான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகள் (எ.கா., சிலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா) உள்ளன. சமத்துவமின்மையும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தோன்றவில்லை. 1980 வாக்கில் வருமானப் பங்கில் மிகக் குறைந்த சமத்துவமின்மையை அடைந்த பின்னர், 1991-ல் (தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தின் பெயரால்) சந்தைகள் விரியத் திறக்கப்பட்ட பின்னர், வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்ததோடு, அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இந்தியா காணத் தொடங்கியது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் ஒரு இந்துத்துவ தேசியத்தின் நச்சுச் சூழலின் கீழ், குறிப்பாக அதன் தலைவரின்  ‘தெய்வமாக்கப்படுதலுடன்’ இணையும் போது, மிகவும் அதிர்ச்சியூட்டும் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கத் தேவையான, முற்றிலும் வேறுபட்ட ஒன்று அவசியமாகிறது. இதற்கேற்ற ஒரே பொருளாதாரவாதம் ஒரு இரக்கமுள்ள ராஜா, பரந்துபட்ட குடிமக்கள் உயிர் வாழ்வதற்கான குறைந்தளவு பரிசுகளை வழங்கும் போக்கு உள்ளது. இதன் மூலமே தமது எஜமானர்களான பெரும் கார்ப்பரேட் பகாசுரக் கொள்ளையர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை எந்த பாதிப்புமின்றிப் பாதுகாக்க முடியும்.
சிலி மற்றும் பிரேசில் போன்ற அநீதியான நாடுகளிலிருந்து எங்கு வேறுபடுகிறது என்றால், அங்கு சமூக-பொருளாதார படிநிலையில் தொடர்ச்சியான அரசியல் போட்டி நடந்து கொண்டிருந்தாலும், அது வலிமையானதாக இல்லை. சமத்துவமின்மை அறிக்கை நாட்டின் பெரும் பிரிவினரை ஒரு வருந்தத்தக்க பழைய நிலைமைக்குத் தள்ளிவிடாமல் பொருளாதார வளர்ச்சியை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் காட்டுகிறது.
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா இந்து தேசியவாதத்தின் தார்மீக கூற்றுக்களின் வாய்ச்சவடால்களையும், மற்ற தேசியவாதங்களை விட மேன்மையானது என பீற்றிக் கொண்ட மோசடியையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அறிக்கை அரசியலை ஒரு உலக விவகாரத்திலிருந்து ஒரு தெய்வீக நிறுவனமாக உயர்த்துவதில் இருந்து வெளிப்படும் மற்றொரு விசித்திரமான பிரச்சினையை அம்பலப்படுத்துகிறது: கடவுளர்கள் தோல்வியடைவதைக் காண முடியாது!
இவ்வாறாக, “தரவுகள் இல்லை” என்று ஆட்சி அறிவித்துள்ள சமூக-பொருளாதார வாழ்க்கையின் பரந்த பகுதிகளைப் போலவே: இறந்த விவசாயிகள், வீட்டு நுகர்வு செலவினங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட்-19 இறப்புகள் வரை, “கடந்த மூன்று ஆண்டுகளில், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமத்துவமின்மை பற்றிய புள்ளிவிவரங்களின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது, இது சமீபத்திய சமத்துவமின்மை மாற்றங்களை மதிப்பிடுவதை குறிப்பாக கடினமாக்குகிறது” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய இக்கட்டான நிலை, தேசத்தை மீண்டும் கற்பிதம் செய்ய வேண்டியதன் அவசியத்தை, ஒரு அவசர கட்டாயத்தை முன்வைக்கிறது. இது ஆழமான தார்மீக மற்றும் அரசியல் கேள்விகளை முன்வைக்கிறது: ஒரு தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

கட்டுரையாளர் : நிசிம் மன்னதுக்காரன்  – டல்கௌசி பல்கலைக் கழகம்
தமிழாக்கம் : நாகராசு
மூலக்கட்டுரை : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க