லக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022 இந்தியாவை “உலகின் மிகவும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக” குறிப்பிடுகிறது. கொரோனா காலகட்டத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த டிசம்பர் 7-ம் தேதி அன்று உலக ஏற்றத்தாழ்வு ஆய்வதத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை, வருமானம் மற்றும் செல்வத்தின் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு தொடர்கின்றன. மேலும், அவை கொரோனா காலத்தில் அதிகரித்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதர அறிஞர் தாமஸ் பிகெட்டி, லூகாஸ் சான்சல், இம்மானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜூக்மேன் ஆகியோர் இந்த ஆய்வறிக்கை குழுவில் இடம்பெற்றவர்கள்.
கொரோனா நெருக்கடி பெரும் பணக்காரர்களுக்கும், மற்ற மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது. எனினும், பணக்கார நாடுகளில் அரசாங்கத்தில் தலையீட்டால் வறுமை அதிகரிப்பது குறைந்தபட்சமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏழை நாடுகளில் இப்படி இல்லை” என்று லூகாஸ் சான்சல் கூறினார்.
அதாவது, ஐரோப்பாவில் மட்டும் ஏற்றத்தாழ்வு சற்று குறைந்து காணப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள முதல் 10 சதவீத பெரும் பணக்காரர்களின் வருமானம், மொத்த வருவாயில் 36 சதவிதமாக இருக்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் 58 சதவிகிதமாகவும், கிழக்கு ஆசியாவில் 43 சதவிகிதமாகவும், இலத்தின் அமெரிக்காவில் 55 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உலகின் மிகவும் ஏற்றத்தாழ்வான வருவாய் பகுதிகளாக உள்ளது என கூறுகிறது.
படிக்க :
இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !
கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !
அறிக்கையின் முக்கிய நோக்கம் உலகம் முழுவதிலும் உள்ள மிக சமீபத்திய ஏற்றத்தாழ்வு தரவுகளை எடுத்துக்காட்டுவதுதான். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அப்படி உண்மைத்தன்மை கொண்ட தரவுகள் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்பதால் ஏற்றத்தாழ்வு மாற்றங்களை மதிப்பிடுவது மிகவும் கடினமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட வறுமைக் குறியீட்டின் படி, நாட்டின் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பல பரிமாணங்களில் ஏழையாக உள்ளார். பீகாரில் 51.91 சதவிகிதமும், ஜார்கண்டில் 42.16 சதவிதமும், உத்தரப் பிரதேசத்தில் 37.79 சதவிமும் பல பரிமாணங்களில் ஏழைகளாக உள்ளனர்.
நாட்டின் பணக்காரர்களில் முதல் 10 சதவிதம் பேர் தேசிய வருமானத்தில் 57 சதவிகிதத்தை தங்களது வருவாயாகப் பெறுகின்றனர். அதே நேரத்தில் கடைசி 50 சதவிகிதத்தினரின் வருமானம் வெறும் 13 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் ஒரு ஏழைக்கும் ஒரு பெரும்பணக்காரனுக்கும் இடையில் மிகவும் அதிகமாக ஏற்றத்தாழ்வு உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
தனியார்மயத்தின் மூலம் நாடு வளர்ச்சி அடையும் என்ற கருத்தை, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால், அதன் விளைவாக இந்தியா இப்போது மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் ஒன்றாக உள்ளது. சீனாவும், இன்னும் பல நாடுகளும் விரைவில் இந்த நிலையை அடையும் அபாயம் உள்ளது.
உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் உச்சத்தில் இருந்ததைப்போலவே இன்றும் அதிகமாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் ஏழ்மையாக இருப்பவர்களில் பாதிக்கு பாதி பேர் எந்தவொரு செல்வத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை. மொத்த செல்வத்தில் 2 சதவிதம் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அதேசமயம் உலக மக்கள் தொகையில் பணக்காரர்களான முதல் 10 சதவிகிதம் பேர் மொத்த செல்வத்தில் 76 சதவிகிதத்தை வைத்திருக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
கொரோனா காலத்தில் (2020-ல்) உலக பெரும் பணக்காரர்களின் செல்வத்தின் மதிப்பு செங்குத்தாக அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் காணக்கூடிய மாற்றங்களில் ஒன்று, பல நாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து விட்டாலும், அரசாங்கம் ஏழ்மையானதாக மாறுகிற செயல்பாடு உள்ளது. அரசின் கையில் செல்வம் குறைந்தால் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பதில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 2019-ல், 655 மில்லியனாக இருந்த வறுமை உள்ளவர்களின் எண்ணிக்கை 2021-ல் 711 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா நெருக்கடி கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளியுள்ளது என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
படிக்க :
இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !
கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
இந்த வறுமை அதிகரிப்பை குறைக்க உலகளவில் சொத்து வரி அமைப்புகளை நவீனமாக்க வேண்டும் என்பதை அறிக்கை ஆலோசனையாக முன்வைக்கிறது. ஆனால், அத்தகைய வரி விதிப்பு தட்டையாக இல்லாமல், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் அதிக வரியும், குறைவாக சொத்து வைத்திருப்பவர்களிடம் குறைந்த வரியும் விதிக்க வேண்டும் என்கிறது அறிக்கை.
இந்தியா போன்ற நாடுகள் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கையைக் கடைபிடித்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை இது அதிகரிக்கும், நாட்டின் செல்வம் பெருகும் என அன்றைய ஆட்சியாளர்களும், முதலாளித்துவ பொருளாதார  அறிஞர்களும் 1990-களில் இருந்து கூவி வருகின்றனர். அதன் பலன்கள் ஏழைகளுக்கு மெதுவாகவே வந்தாலும் அது அவர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்றனர். ஆனால் அது இன்று பல்லிளித்துவிட்டது.
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, இந்தச் சமூகத்தில் ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டத் தவறிவிட்டு, அறிக்கை சொல்வது போல வெறுமனே  பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர், இந்தியன் எஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க