நாடு தழுவிய கொரோனா ஊரடங்கின், முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் தாண்டி இந்திய கோடிசுவரர்கள் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

UBS மற்றும் PWC வெளியிட்டுள்ள 2020-ன் Billionaires Insights அறிக்கையின் படி, ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு 35% அதிகரித்து 423 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

2009 முதல் ஜூலை 31, 2020 வரை  இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு  90% அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா, சீனா , ஜெர்மனி , ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து உலகளவில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்திய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு ரஷ்யாவின் கோடிசுவரர்களை விட வேகமாக அதிகரித்துள்ளதாக UBS – PwC அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின் படி 2009-ல் இருந்து இன்றுவரை ரசிய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு  80% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
♦ பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

Forbes வெளியிட்ட 2020-ன் India Rich List படி, இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஒருவருடத்தில்  73 % உயர்ந்து,  கிட்டத்தட்ட 89 பில்லியன் (₹6.52 லட்சம் கோடி) டாலர்களை எட்டியுள்ளது. இது இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கெளதம் அதானியை ($25.2 பில்லியன்) விட மூன்று மடங்கு அதிகம். இதனால் தொடர்ந்து 13-வது வருடமாக, முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும்பணக்காரராக இருக்கிறார். இவர்களை தொடர்ந்து  HCL நிறுவனர் ஷிவ் நாடார், தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் Serum Institute of India நிறுவனர் சைரஸ் பூனாவாலா, Biocon நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரும் அந்த பட்டியலில் உள்ளனர்.

Bloomberg Billionaires Index-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானிதான் உலகளவில் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலிலுள்ள ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒரே நபர்.

இந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்லும் வேளையில்,  முரண்பாடாக “ஒரு சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்துள்ளது” என்று Forbes தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, மக்கள் தொகையில் 1% இருக்கும்  இந்திய பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 42.5% வைத்திருக்கின்றனர். ஆனால் அடிமட்டத்திலுள்ள 50% மக்களிடம் வெறும் 2.8 % சொத்துக்கள் தான் உள்ளது என Oxfam report-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 10 % இருக்கும் பெரும்பணக்காரர்களிடம், நாட்டின் மொத்த செல்வத்தில் 74.3 % இருக்கும் நிலையில், 90% மக்களிடம் 25.7% மட்டுமே உள்ளது.

“அம்பானியின் நிறுவனங்கள் (குறிப்பாக ஜியோ) வளர்ந்துள்ளதால், அம்பானியின் தனிப்பட்ட சொத்துகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது” என்று JNU பல்கலைகழகத்தின் Centre of Economic Studies and Planning – ன் தலைவர் ஜெயதி கோஷ் கூறியுள்ளார்.

₹1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்துள்ள செல்வந்தர்களின்  பட்டியலை ஆகஸ்டு 31, 2020 அன்று The Hurun India வெளியிட்டது. அம்பானி, இந்துஜா சகோதரர்கள்(SP இந்துஜா மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள்) – இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹ 1.43 லட்சம் கோடி, HCL ஷிவ் நாடார் (₹ 1.41 லட்சம் கோடி), ஆகியோர் பெயர்களும் 824 பெரும்பணக்கார இந்தியர்களின் பட்டியலில் உள்ளது.

2019-ல் $140 பில்லியன் (₹10.29 லட்சம் கோடி ) ஆக இருந்த இந்த 828 நபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 2020-ல் $821 பில்லியன் ( ₹ 60.59 லட்சம் கோடி ) உயர்ந்துள்ளது. இதில் பெரும்பங்கு, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையேற்றத்தால்  உருவானது.

கோவிட்-19 நிவாரணங்களுக்காக இந்தியாவின் 9 பில்லியனர்கள் 541 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது உலகளவில் வழங்கப்பட்ட நன்கொடைகளில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியானது என்று  “BloombergQuint” கூறுகிறது.

முகேஷ் அம்பானியின் RIL நிறுவனம் ₹500 கோடியை PM CARES-க்கும், தலா ₹ 5 கோடியை மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தின் CM FUNDS-க்கும் வழங்கியுள்ளது. இதனை தவிர்த்து,  RIL, மும்பையிலுள்ள Seven Hills மருத்துவமனையின் கொரோனா  பிரிவுக்கு நூறு படுக்கைகள் வழங்கியுள்ளது.

படிக்க :
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

Forbes வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, கோவிட்- 19 நிவாரணமாக $132 மில்லியன் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜாக் டோர்சே மற்றும் பில் கேட்ஸ்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நன்கொடையாளராக ஆகியுள்ளார்.

உலகளவில் பில்லியனர்கள் $7.2 பில்லியன் டாலரை கொரோனா வைரஸ் நிவாரணமாக வழங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியின் UBS வெளியிட்ட அறிக்கை படி , உலகளவில் மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2017-ன் இறுதியில் $8.9 டிரில்லியனாக இருந்தது ஜூலை 2020-ல் $10.2 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 2017-ல் 2,158 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 என அதிகரித்துள்ளது.

USB-ன் Global family office department- ன் தலைவர் ஜோசப் ஸ்டாட்லர் “கோவிட் -19 நெருக்கடி சூழலிலும்  கோடிசுவரர்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது இந்த நெருக்கடி சூழலில்  இருந்து வெறுமனெ மீண்டு எழுவது மட்டுமின்றி பங்கு சந்தையில் ஏற்பட்ட உயர்வால் அவர்கள் மேலெழுந்தும் இருக்கிறார்கள்.

UBS அறிக்கையின் படி “பெரும்பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாவது முதலாளித்துவம் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி” என்று High Pay Centre- ன் executive director – ஆன Luke Hilyard , Guardian பத்திரிகையில் கூறியுள்ளார்.

0o0o0


தமிழாக்கம் : தேவா  
நன்றி :
The Wire

குறிப்பு :
பெரும்பணக்காரர்கள் கொரோனாவில் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளபிரபுக்களாக நம் முன்னே வலம் வருகிறார்கள். அவர்கள் அள்ளி வீசும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. யாரிடமிருந்து எடுத்து யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்துதான் இது யாருக்கான அரசு என்பதைப் புரிந்து கொள்ள முடியும் !

1 மறுமொழி

  1. இவர்களின் சொத்து அவர்களின் மரணத்தை தடுக்க வல்லமை உள்ளதா…?
    வாழ்க்கை சுதந்திரமா… சொத்து நிரந்தரமா… எந்த கருத்தாவது நடைமுறை கண்டதுண்டா… பணக்காரர்கள் அனைத்து தரப்பினரும் உள்ளது, கயவர்கள் உள்பட… உறுப்பினர் சேர்ப்பு சந்தா வசூல் போன்ற வசூல் நடவடிக்கை அனைத்தும் நவீன சொத்துடைமையின் கிளைகள்… பரம்பரை பணக்காரன் நிரந்தர பணக்காரன் திடீர் பணக்காரன் பெரும் பணக்காரன் உள்பட அனைவரும் மரணத்திற்கான சம்பளமாக பணம் திகழ்கிறது, உணர மருக்கும் குணம்… யாருக்கு எது …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க