கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். சாதாரண நாட்களிலேயே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தொற்று காலகட்டத்திலும் அதே நிலையில்தான் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சீனிவாசலுவிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய விளக்கமளித்தார்.

***

மிழகத்திலேயே கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னையில், துப்புரவு பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது ?

கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.

தோழர் சினிவாசலு (கோப்புப் படம்)

சென்னையில் பதினைந்து மண்டலங்களில் மட்டும் 6,401 பேர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இது போக ஒப்பந்தப் பணியாளர்கள், என்.யு.எல்.எம் தொழிலாளர்கள், டி.பி.சி மற்றும் ராம்கி ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் 22,430 பேர் பணியாற்றுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் அவலங்களை சென்னையின் சில உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னை முழுவதும் நோய் தொற்று பரவாலாக அதிகரித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை.

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்கிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர், வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. தொழிலாளர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில்தான் கையைக் கழுவுகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

கொரோனா தொற்று இல்லாத காலங்களிலும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். அப்போதே பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை கிடப்பில் போட்டார்கள். இவ்வசாதாரண அபாய காலத்திலாவது முறையாக கொடுக்க வேண்டாமா?

துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் எவ்வாறு உள்ளது ?

கொரோனா தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அதிகாலை 5 மணிக்கு பணிகளை தொடங்க வேண்டும். எந்த பாதிப்பாக இருந்தாலும் முதலில் தூய்மை பணியாளர்தான் சந்திக்க நேரிடும். இது போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களும் மனமுவந்து அவர்களும் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தோம். தொற்று பரவியியுள்ள வீடுகளில் உள்ள குப்பையை அகற்றுவதற்குகூட போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லை. “தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் கடமை. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளோம்” என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், ஊழியர்களிடம் கேட்டால் தரவில்லை என்று கூறுகின்றனர்.

அப்படியானால் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே சென்றன?

லாக்டவுன் அறிவித்த பிறகு, மார்ச் மாத அறிக்கையின்படி சுமார் 17,944 பேர் அதாவது 80 விழுக்காட்டினர் வேலைக்கு வந்துள்ளனர். இதுபோக மண்டலங்களில் உதிரியாக பணியாற்றுபவர்கள் 2,250 என மொத்தம் 20,194 பேருக்கு கணக்கீடு செய்து, ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.100 வீதம், 15 நாட்களுக்கு ரூபாய் மூன்று கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் தேவைப்படும் என்று (ரூ.303,20,000) 28.03.2020 அன்று ஒரு எஸ்டிமேட் கொடுக்கிறார்கள்.

இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்து கேட்கப்பட்ட போது 20.04.2020 அன்று ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் 15 மண்டலங்கள், 3 வட்டார அலுவலகம், எலட்ரிகல், மெக்கானிகல், திடக்கழிவு மேலாண்மை துறை, கட்டிட பராமரிப்பு, மற்றும் சுகாதாரம் என்று பெரிய பட்டியலே போட்டு 17 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரத்து 726 ரூபாய் செலவாகி இருப்பதாக சொன்னார்கள்.

இவற்றில் திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு மட்டும் 10 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 732 ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பில்டிங் பராமரிப்பு செலவு 76 லட்சத்து 34 ஆயிரம். ஆனால் 20,194 தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு செய்த செலவு வெறும் 85 லட்சம்தான். ஒரு கட்டிடத்திற்கு கொடுக்கும் மதிப்பு கூட பணியாளர்களின் சுகாதாரத்திற்கு இல்லை. இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

லாக்-டவுன் சமயத்தில் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றதா ?

ஊரடங்கு அமலில் உள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவது சிரமம். 100 பேருந்து மட்டும் விட்டிருக்கிறார்கள். அதில்தான் பல தடங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கே சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான சூழலே இல்லை. பலர் குப்பை வண்டி, லாரிகளில் பணிக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளிகள்.

படிக்க:
♦ PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

தன்னார்வலர்கள் கொடுத்தது போக, மாநகரட்சியிலிருந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவு தருகிறார்கள். உண்மையில் சாப்பிட முடியவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். ஆனால், அதனை பெரிய குறையாக சொல்லவில்லை. இந்த சூழலில் பசிக்கு தருகிறார்களே… அதுபோதும் என்ற மன நிறைவு மட்டுமே பணியாளர்களிடம் உள்ளது. மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க களத்தில் நமது பணி பிரதானமானது என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. அதற்காக எங்களுக்கு அச்சம் இல்லை என்பதல்ல. அதனைவிட, நாங்கள் முடங்கினால் பலரும் தொற்றுக்கு பலியாகி விடுவார்களே என்ற கவலை எங்களை களப்பணியை நோக்கி தள்ளுகிறது.

தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா ? எத்தனை தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ?

எங்களில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்பது கூட தெரியாது. எங்களிடமிருந்து மற்றவர்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பரவி விடக்கூடாது என்பதாலேயே தொடர்ந்து சோதனை செய்ய வலியுறுத்தினோம்.

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம்.

தூய்மைப் பணியாளர்கள் வாழும் பகுதிகள் மிகவும் அடர்த்தியானவை. சென்னையில் சுமார் 16 இடங்கள் தூய்மைப் பணியாளர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். பத்துக்கு பத்து குடிசையில் 4, 5 பேர் வசிக்கிறார்கள். இங்கெல்லாம் தொற்று பரவினால் மிக மோசமான சூழலை சந்திக்க நேரிடும் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரினோம். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கோ, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு வசதியை செய்யாததன் விளைவாக தற்போது நான்கு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சுமார் 30 பேர் வரை பரவியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. உடனடியாக அனைவருக்கும் சோதனையை தீவிரப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். ஆனால் சோதனை செய்வதில் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இவர்களிடம் போதிய சோதனைக் கருவியும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியில் உள்ளனர். நாங்கள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். தொற்று இருப்பது தெரிய வந்தால் மருத்துவ செலவு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நேரிடும் என்பதால்தான் இவர்கள் சோதனை செய்ய மறுக்கிறார்களோ அல்லது உண்மையை சொல்ல தயங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் பற்றிய பார்வை இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களிடையே மாறியிருக்கிறதா ?

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம். அதனால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதே கொரோனா காலகட்டத்தில் தான் நாட்டின் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.

சுனாமி, புயல், மழை வெள்ளம் என பல பேரிடர் காலங்களில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். அவற்றில் மக்களை காப்பதில் முதன்மையான பங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்தது. மோடி, எடப்பாடி உட்பட எல்லோரும் எங்களைப் போற்றலாம். மக்களும் எங்களைப் புகழலாம். பாத பூஜை செய்யலாம். அதனால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை.
எங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள் !

– வினவு செய்தியாளர்

1 மறுமொழி

  1. “” எங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள் ! “”

    சுடும் உண்மை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க