‘40 ஆயிரம் சம்பளம் வாங்கின இடத்துல 30 ஆயிரம் குடுத்தா கூட போதும். மொத்தத்துல வேலைன்னு ஒண்ணு இருந்தாலே பெரிய விசயம்’ – என்றார் ஓர் ஊடக நண்பர். அவர் ஊடகத் துறைக்கு வந்து 8 வருடங்களாகிறது. எட்டு வருடங்களில் அவர் சம்பளம் 40 ஆயிரம். அதை நம்பி திருமணம் முடித்து ஒரு குழந்தையாகி, குடும்பமாகி நிற்கையில் இப்போது அவரது ஊதியம் 40-ல் இருந்து கீழே இறங்கப் போகிறது. எவ்வளவு என்று அடுத்த மாதம் தெரிந்துவிடும். வேலையே நிலைக்குமா என்பது அதற்கும் அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

இவரைப் போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊடகங்களில் சராசரியாக 30-40 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். அனைவரின் மனதிலும் இப்போது கவ்வியிருக்கும் அச்சம், ‘இந்த வேலை நிலைக்குமா?’. ஊடகம் மட்டுமல்ல… பெரும்பான்மையான துறைகளில் பணிபுரியும் அனைவரது மனதிலும் இந்த கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

இந்த நிச்சயமின்மை இதற்கு முன்பும் இருந்ததுதான். இப்போது அது திட்டவட்டமான ஆபத்தாக எழுந்து நிற்கிறது. முன்பு ஓர் ஊழியரை வேலைநீக்கம் செய்வதற்கு நிறுவனத்துக்கு, பெயரளவுக்கேனும் ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது கொரோனா வந்து, எதையும் செய்வதற்கான ‘பிளாங்க் செக்’-ஐ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘நஷ்டம்.. அதனால் வேலையில்லை’, ‘நஷ்டம்.. அதனால் சம்பளம் குறைப்பு..’.. அவ்வளவுதான். மேலதிகமாக எதுவும் தேவையில்லை. ஆகவே தொழிலாளர்களின் மனம் இயல்பாகவே, ‘சம்பளத்தையாச்சும் குறைச்சுக்க… வேலையை விட்டு தூக்கிராதே..’ என்று சிந்திக்கிறது.

‘வேறு என்ன செய்வது? இது வரலாறு காணாத நோய்த்தொற்று. பழைய மாதிரி நிறுவனம் இயங்க முடியாது. பழைய மாதிரி சம்பளம் மட்டும் எப்படி வழங்க முடியும்?’ என்பது நியாத்தோற்றம் கொண்ட விளக்கம்தான். ஒருவகையில் இந்த விளக்கம், முதலாளிகளின் கையறு நிலையை புரிந்துகொள்ளும்படி தொழிலாளிகளிடம் கோருகிறது. அதாவது, ‘கொடுக்க மனம் இருக்கிறது. ஆனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதே… என்ன செய்வது? புரிந்துகொள்ளுங்கள்’ என்று பாவனை செய்கிறது.

உண்மை என்னவெனில், கம்பெனி நன்றாக நடந்த காலங்களிலும் இத்தகைய ஊதியக் குறைப்பையும், ஆள்குறைப்பையும் இவர்கள் செய்தார்கள் என்பதுதான். அப்போது வேலை கொடுக்கப்பட்டது. மூவர் செய்யும் வேலை ஒருவருக்கு வழங்கப்பட்டு அதன்மூலம் மறைமுக ஆட்குறைப்பு நடந்தது. அப்போது ஊதியம் கொடுக்கப்பட்டது. அது, கம்பெனியின் லாபத்துக்கேற்ற ஊதியமோ, தொழிலாளியின் வேலைக்கேற்ற ஊதியமோ அல்ல… மிக சொற்ப சம்பளம். அதன்மூலம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டது. ஆகவே, ‘நாங்க அந்த காலத்துல நல்லவங்களா இருந்தோம்’ என்ற பாவனை, ஒரு பம்மாத்து.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

நிறுவனம் லாபத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள். நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். லாபத்தில் இருந்தபோது நீங்கள் சேர்த்து வைத்த சொத்து உங்களுக்கு இருக்கிறது. தொழிலாளிக்கு, சேர்த்து வைத்த கடனைத் தவிர என்ன இருக்கிறது?

‘சரி நீங்களே சொல்லுங்க.. என்ன செய்வது?’

என்ன செய்வது என்றால், இத்தனை நாளாய் தொழிலாளியின் உழைப்பில் சேர்த்த உபரி சொத்து, எல்லா முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த உபரி இல்லாத நிறுவனம் எது? முதலாளி யார்? அதை வெட்டி எடுத்து வெளியே கொண்டு வாருங்கள். இத்தனை நாள் உங்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த தொழிலாளியை இந்த நேரத்தில் கைவிடாமல் தொடர்ந்து வேலை கொடுங்கள்; ஊதியம் கொடுங்கள். நாளை நிலைமை சரியாகும்போது, இந்த உபரி உங்களிடம் வந்து சேரத்தானே போகிறது? உங்களுக்கு குறையப்போவது லாபவிகிதம்தானேயன்றி, லாபமே அல்ல.

இத்தனை தூரம் நீட்டி முழக்காமல், யாரும் எடுத்துச் சொல்லாமல் நிறுவனங்களின் கஷ்டத்தை தொழிலாளிகள் புரிந்து கொள்கிறார்கள். எந்த தொழிலாளியை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ‘பாவம், கம்பெனியே நஷ்டத்துல ஓடுது..’ என்று இயல்பாக சொல்வார்கள். அது, பிறர் துன்பத்தை தனதாக கருதும் தொழிலாளி வர்க்கத்தின் குணம்; உங்களிடம் இல்லாத குணம்.

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. உங்களிடம் உபரி செல்வம் இருக்கிறது. அப்படி ‘இருப்பது’ எதுவும் உங்கள் சொந்த உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அதில் தொழிலாளிகளின் உழைப்பும், உதிரமும் கலந்திருக்கிறது. அதை பெறுவது தொழிலாளியின் உரிமை. அதை வழங்குவது உங்களின் பெருந்தன்மை அல்ல… கடமை.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி