கடந்த ஜனவரி 15 அன்று ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் “ஏற்றத்தாழ்வு” (Inequality Inc) என்று தலைப்பிடப்பட்ட தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) நடந்ததும் 54-வது மாநாட்டின் முதல் நாளன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை டாப் 5 உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.
அதேவேளையில், உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 60 சதவிகித மக்களிடையே ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 79.1 கோடி தொழிலாளர்களின் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ற அளவில் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக, இந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் ₹124 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்த அதே வேகத்தில் இனியும் அதிகரிக்குமானால், அடுத்த 10 பத்தாண்டில் உலகின் முதல் டிரில்லியனர் (1 லட்சம் கோடி டாலர் – அதாவது ₹83.1 லட்சம் கோடி – சொத்து மதிப்பு கொண்ட நபர்) உருவாகிவிடுவார் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், வறுமை ஒழிவதற்கு இன்னும் 230 ஆண்டுகள் ஆகிவிடும் என்றும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறியுள்ளது.
2020-ஆம் ஆண்டிற்குப் பின் உலகின் டாப் ஐந்து பணக்காரர்களான எலோன் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக்கியுள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மணி நேரத்திற்கு 14 மில்லியன் டாலர் (₹116.4 கோடி) என்ற விகிதத்தில் அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு 869 பில்லியன் டாலர் (₹72.2 லட்சம் கோடி).
The fortunes of the five richest men have shot up by 114% since 2020. Meanwhile, 800 million workers have lost $1.5 trillion over the last two years due to inflation. It's time to rein in runaway corporate power. #InequalityInc #FightInequality https://t.co/r1fVoaQMfH pic.twitter.com/V8mJucSCWb
— Oxfam International (@Oxfam) January 15, 2024
5 பணக்காரர்கள் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் (₹8.3 கோடி) என்று செலவு செய்தால், அவர்களின் பணம் அனைத்தையும் தீர்க்க 476 ஆண்டுகள் ஆகும் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவித்துள்ளது; எலான் மஸ்க்-க்கு 673 ஆண்டுகளும், ஜெஃப் பெசோஸ்-க்கு 459 ஆண்டுகள் தேவைப்படும்.
உலகின் 1 சதவிகித பணக்காரர்கள் உலகின் மொத்த சொத்துகளில் 43 சதவிகிதத்தை வைத்திருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”இந்த நெருக்கடியான நேரத்தில் உலக பணக்காரர்கள் பெரிய வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2023-ஆம் ஆண்டில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு 3.3 டிரில்லியன் டாலர், அதாவது 34 சதவிகிதம், அதிகரித்துள்ளது. 2027-ஆம் ஆண்டில் மில்லியனர்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 50 மில்லியன் டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரிக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு சிலர் கைகளில் மட்டும் சொத்து சேர்ந்ததற்கு உலகளாவிய தொற்றுநோய், போர் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் காரணமாக இவ்வறிக்கை முன்வைக்கிறது.
ஏற்றத்தாழ்வு அதிகரித்ததற்கான காரணங்களாக நான்கு விஷயங்களை இந்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. அவை: ஊதியங்களைக் குறைத்து இலாபங்களை பெரும் செல்வந்தர்கள் பக்கம் திருப்பியது; கார்ப்பரேட்டுகள் வரிகளைத் தவிர்ப்பது; பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குதல்; மற்றும் காலநிலை மாற்றம்.
கென்யா, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளைப் போல இந்தியாவிலும் சுகாதாரக் கட்டமைப்பு தனியார்மயமாக்கலால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் தனியார்மயமாக்கலின் விளைவால் இந்தியாவில் தலித்துகள் வறுமைக்கு தள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
“இந்தியாவில் 236 பில்லியன் அமெரிக்க டாலர் (₹19.55 லட்சம் கோடி) மதிப்புடைய தனியார் சுகாதாரத் துறை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் உலக வங்கியின் தனியார் துறை பிரிவான சர்வதேச நிதிக் கழகம் (International Finance Corporation – IFC) சில பணக்கார பில்லியனர்களுக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிலவற்றில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் நேரடியாக முதலீடு செய்துள்ளது” என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச நிதிக் கழகம் முதலீடு செய்துள்ள சுகாதாரத் திட்டங்கள் குறித்து எந்தவொரு மதிப்பீட்டையும் அது வெளியிடவில்லை என்று ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட உலக வங்கி, சுகாதாரத் துறையில் முதலீடு செய்து தனியார்மயத்தை ஊக்குவித்ததால் ஏற்பட்ட விளைவு குறித்து, அதாவது எவ்வளவு பேர் வறுமைக்குத் தள்ளப்பட்டனர் என்பது குறித்து, எந்த மதிப்பீட்டையும் உலக வங்கி வெளியிடவில்லை.
ஆண்டுதோறும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்டுவரும் ஆய்வறிக்கை மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறு ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறது என்பதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அரசு தலையிட்டு ஏகபோகங்களை உடைக்க வேண்டும், தொழிலாளர் நலன்களைக் காக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத இலாபங்களுக்கு வரி விதிக்க வேண்டும் போன்ற தீர்வுகளை ஆக்ஸ்ஃபாம் முன்வைக்கிறது.
ஆனால், இந்த தற்காலிக தீர்வுகளைக் கூட தற்போதைய ஏகாதிபத்திய அரசுகள் நடைமுறைப்படுத்தாது. சோசலிசம் நோக்கிப் பயணிப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube