வாங்கும் சக்தியற்றவர்களாக 100 கோடி இந்திய மக்கள்

பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் ப்ளூம் வென்ச்சர்ஸ் குறிப்பிட்டுச் சொல்கிறது.

ந்திய மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர், தாங்கள் விரும்பும் பொருட்கள், தேவைப்படும் வசதிகளுக்கு ஏற்ப செலவிட முடியாத நிலையில் உள்ளனர் என்று ”ப்ளூம் வென்ச்சர்ஸ்” (Blume Ventures) நிறுவன ஆய்வின் மூலம் (Indus Valley Annual Report – 2025) தெரிய வந்துள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில், 10 சதவிகிதம் பேர் (13 முதல் 14 கோடி பேர்) மட்டுமே நுகர்வோர் சந்தையில் செலவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் நுகர்வு வளர்ச்சி, உலகின் முக்கிய பொருளாதாரங்களை விடவும் அதிகமாக உள்ளது. ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கையில், இந்தியாவின் ‘நுகர்வு வர்க்கம்’ பெரிய அளவிற்கு இன்னும் விரிவடையவில்லை, மாறாக ஆழமடைகிறது என்றும் ”ப்ளூம் வென்ச்சர்ஸ்” கூறுகிறது.

இதற்கான காரணமாக, பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுச் சொல்கிறது.

1990 ஆம் ஆண்டு, உயர்மட்டத்திலிருந்த செல்வந்தர்கள் 10 சதவிகிதம் பேர் நாட்டின் செல்வத்தில் 34 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இருந்தனர். 2025 ல் இது 57.7 சதவிகிதமாக மாறியிருக்கிறது. அதேசமயம் நாட்டின் 50 சதவிகிதம் பேர் 1990 இல் நாட்டின் வருமானத்தில் 22.2 சதவிகிதத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது வெறும் 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

டிஜிட்டல் கட்டண முறை காரணமாக, 30 கோடி மக்கள் நுகர்வை நோக்கி ஈர்க்கப்பட்டாலும் அவர்களும் எச்சரிக்கையாகவே செலவு செய்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் வாங்கும் திறன் குறைந்து வருவது மட்டுமல்லாமல், நிதி சேமிப்பிலும் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடன்களும் பெரிய அளவிற்கு அதிகரித்துள்ளன என்று ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ கூறுகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சந்தையில் மலிவு விலை வீடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 40 சதவிகிதமாக இருந்தது. தற்போது 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.


படிக்க: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை


தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், அது நடுத்தர வர்க்கத்திற்குச் சொர்க்கமாக இருக்கும் என்று ஆளும் வர்க்கம் தேனொழுகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. ஆனால் 35 ஆண்டுகளில் கார்ப்பரேட்மயமாக்கமும், சுரண்டலும் மிகத் தீவிரமடைந்துள்ளது. அதுவும் அதானி, அம்பானி, அகர்வால் போன்ற ஒரு சில கார்ப்பரேட் கும்பல்களின் சுரண்டலுக்கு ஏற்பவே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தீர்மானிக்கப்படுகிறது. மிகத்தீவிரமான சுரண்டலுக்கு உள்ளாகி, ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வாழ்நிலையும் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னும் எப்படி மக்களைச் சுரண்டிக் கொழுப்பது என்பதற்காகத்தான் 44 தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களும், எல்&டி சுப்ரமணியன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி போன்ற பாசிஸ்டுகள் வேலைநேரத்தை அதிகரிக்கச் சொல்லிக் கதறுவதும் ஆகும்.

ஆனால் மோடி – அமித்ஷா பாசிச கும்பலோ ’வளர்ந்த இந்தியா 2047’ என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. யாருக்கு ’வளர்ந்த’தாக அது இருக்கும், யாருக்கு அது நரகமாக இருக்கும் என்பதைத்தான் ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ அறிக்கை அம்பலப்படுத்துகிறது.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க