ஹூரன் ஆய்வு நிறுவனமானது 2024-ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய பணக்காரர்களின் மையமாக இருக்கும் சீனாவின் பெய்ஜிங் நகரை பின்னுக்கு தள்ளி மும்பை நகரமானது முதல் இடத்திற்கு வந்துள்ளது.
ஹூரன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலின் படி, 92 பில்லினியர்கள் வசிக்கும் இந்தியாவின் மும்பை நகரம் ஆசியாவிலேயே பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனாவின் பெய்ஜிங் நகரம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது பெய்ஜிங் நகரம் 91 பில்லினியர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக சீனாவில் 816 பில்லினியர்களும், இந்தியாவில் 271 பில்லினியர்களும் உள்ளனர்.
உலக அளவில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் 119 பில்லினியர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்திலும், 97 பில்லினியர்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. உலகளவில் மும்பை மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
படிக்க: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: தொடர்ந்து வறுமைக்குத் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்
கடந்த ஓராண்டு காலத்தில் மும்பையில் 26 புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் இங்கே உள்ள பணக்காரர்களின் செல்வம் 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டு காலத்தில் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவே பெய்ஜிங் நகரில் உள்ள பணக்காரர்கள் மொத்த செல்வத்தின் மதிப்பு 265 பில்லியன் டாலர்கள் ஆகும். அங்குள்ள பில்லியனர்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு 28 சதவிகிதம் குறைந்துள்ளது. மும்பையில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஆற்றல் மற்றும் மருந்து துறைகளே காரணம் என்றும் அந்த அறிக்கையானது தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பணக்காரர்களில் ரியல் எஸ்டேட் அதிபரான மங்கள் பிரபாத் ஸ்லோதா மற்றும் குடும்பத்தினர் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 116 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலை பொறுத்தவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10-வது இடத்திலும், கௌதம் அதானி சற்றே முன்னேறி 15-வது இடத்திலும் இருக்கின்றனர்.
படிக்க: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சாங் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 34-வது இடத்தை பிடித்துள்ளனர். சீரம் நிறுவனத்தின் சைரஸ் எஸ் பூனவல்லா 55-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல டி மார்ட் நிறுவனத்தின் ராதாகிஷன் தமாணி எட்டு இடங்கள் முன்னேறி முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே உழைக்கும் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் பணக்காரர்களின் செல்வம் மட்டும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியது. தற்போது வெளியாகியுள்ள ஹூரன் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை இந்தியாவில் பணக்காரர்கள் பெருகிவருவதைக் காட்டுகிறது. இதிலிருந்து பாசிச பி.ஜே.பி-யின் ஆட்சி யாருக்கானது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube