மோடியின் ‘பொன்னாட்சியில்’ கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் 15 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவீதம் அதிகரித்திருப்பதாக சமீபத்தில் வெளியானப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2020 வரைக்குமான இந்த கணக்கெடுப்பின் படி இந்த 15 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த முன்னணி நிறுவனங்களில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது மருந்து நிறுவனங்கள்தான்.

படிக்க :
♦ ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே மருந்து நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. உலகப் பொருளாதார நிலையையே புரட்டிய கொரோனா ஊரடங்கு நிலையிலும் கூட கடந்த 2020-ம் ஆண்டில் இந்த மருந்து நிறுவனங்களின் மதிப்பு குறையவில்லை.

கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது இடத்தில் வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருள் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.3.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் பெட்ரோலியத் துறையின் மதிப்பு அதிகரித்திருப்பது, மோடியின் ஆட்சியில் பெட்ரோலிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபம் அதிகரித்திருப்பது உறுதியாகிறது.

இந்தக் கணக்கெடுப்பு ஹுருன் இந்தியா என்ற நிறுவனம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரகுமான் இது குறித்துக் கூறுகையில், “இந்தப் புள்ளிவிவரங்கள், மிகவும் துரிதமாக மதிப்பை அதிகரிப்பதில் இந்திய நிறுவனங்கள் இந்திய வரலாற்றிலேயே தனி முத்திரை பதித்து வருகின்றன எனதைக் காட்டுகிறது. கூடுதலாக, தொழில்நுட்ப ரீதியிலான சொத்து உருவாக்கம் அதன் உச்சத்தை அடையும்போது, பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சி விடும்” என்கிறார்.

ஐந்தாண்டுகளில் முன்னணியான 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவீதம் உயர்ந்திருப்பது, மோடியின் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் இலாபமும் வருவாயும் அதிகரித்திருப்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்று, நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், மக்களிடமிருக்கும் சிறிய அளவிலான சேமிப்புகளைக் கரைத்து, மக்களைக் கடனாளியாக்கியிருக்கிறது கொரோனா ஊரடங்கு. இந்த ஊரடங்கு காலகட்டங்களிலும் பெரும்நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதும், உலகப் பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்திருப்பதும் இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மக்களின் பணம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் கிடைக்கும் விதமாக பெட்ரோலிய விலை ஏற்றம், ஆத்மநிர்பார் எனும் பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை என தொடர்ந்து மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணம்தான், மருந்து நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் கஜானாவில் சேர்கிறது.

அரசு அதிகாரத்தை உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் எடுக்கும் போதுதான் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதை நோக்கி செல்லத்தவறினால், சோமாலியா போன்ற நிலைக்குத்தான் இந்திய மக்களின் நிலைமை மாறும்.


கர்ணன்
செய்தி ஆதாரம் : The Hindu Budiness line

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க