முகப்புசெய்திஇந்தியாஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-

றுமைக்கு எதிராக வென்றவற்றை இழக்கும் அபாயத்தில் இந்தியா உள்ளதாக இந்திய வளர்ச்சி மேம்படுத்தல் (India Development Update – IDU) வரைவில் உலக வங்கி எச்சரித்துள்ளது. பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஊக்கப் பொதியின் நிதி தாக்கம் ரூ. 20 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இது போதாது என உலக வங்கி கூறுகிறது. ஜூன் 2020 வரை, நிலைமைகளை ஆய்ந்து தயாரிக்கப்பட்ட ஐ.டி.யூ அறிக்கை அரசுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

உலக வங்கியின் வரைவு அறிக்கை குறித்து கருத்துக்களையும் எதிர்வினைகளையும் அறிய தொடர்புடைய அமைச்சகங்களிடம் நிதி அமைச்சகம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் அறிக்கையாக வெளியிடப்படும் எனவும் உலக வங்கியின் இந்திய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுதீப் மொசூம்தர் கூறியுள்ளார்.

அரசாங்கம் வழங்கக்கூடிய நிவாரணத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், வங்கி மூன்று சாத்தியமான அபாயங்களை அடையாளம் கண்டுள்ளது. பொது முடக்க நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தொடர்ந்தால் நிதித் துறையில் கூடுதல் இழப்புகளும் உலகளாவிய கண்ணோட்டத்தில் மேலும் சரிவு ஏற்படும் என கணித்துள்ளது.

சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில், வறுமை விகிதம் 21.6% இலிருந்து 13.4% ஆகக் குறைந்துவிட்டபோது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் கிடைத்த லாபங்களின் பின்நோக்கிய மாற்றத்தை இந்தியா காணும்.

“தேசிய அளவிலான கோவிட் -19 பொது முடக்கத்தைத் தொடர்ந்து முதற்கட்ட பகுப்பாய்வு வறுமைக்கு எதிரான இந்த ஆதாயங்கள் அழிக்கப்படும் என்று கூறுகிறது. வறுமைக்கு எதிராக இந்தியா பெற்ற கடின வெற்றிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளது, மேலும் ஏற்கனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் விரிவடையும்” எனவும் அது மேலும் கூறுகிறது. இந்தியாவின் பாதியளவிலான மக்கள் தொகையின் ‘நுகர்வு அளவுகள் ஆபத்தான முறையில் வறுமைக் கோட்டுக்கு நெருக்கமாக’ உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

“கோவிட் -19 விளைவாக வருமானம் மற்றும் வேலை இழப்புகள் காரணமாக இந்த குடும்பங்கள் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கக்கூடும்” என வரைவு குறிப்பிடுகிறது. இந்தியாவின் 90% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் இருப்பதன் பாதிப்புகளையும் இந்த அறிக்கை கூறுகிறது.

“இந்த தொழிலாளர்கள் சுருங்கிவரும் பொருளாதார நடவடிக்கைகள், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட மூடல்கள் மற்றும் சமூக விலக்கம் தொடர்பான நெறிமுறைகள் ஆகியவற்றால் ஊதியம் மற்றும் வாழ்வாதார இழப்புகள் காரணமாக வறுமையில் விழும் அபாயம் உள்ளது. இந்தியாவில் ஒரு நிலையான சமூக பாதுகாப்பு அமைப்பு இல்லாததன் காரணமாக புலம்பெயர்ந்தோர் ஆழ்ந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்தோர் ஏழ்மை மற்றும் வறுமையின் பிடியும் சிக்கும் அபாயத்தில் உள்ளனர்” எனவும் வரைவு அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்ட மோடி அரசு, பெருநோய்த்தொற்று பொதுமுடக்கத்தை மிக மோசமாக கையாண்டதன் விளைவாக, நாட்டு மக்களை மீள முடியாத அவலநிலைக்கு தள்ளியிருக்கிறது. ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றை ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரும் உலக வங்கி, இத்தகைய வரைவு அறிக்கையை கொடுப்பதன் காரணம் என்ன? அது இந்திய மற்றும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு வரவிருக்கும் அபாயத்தை குறித்து எச்சரிப்பதுதான். ஆனாலும் அந்த எச்சரிக்கையில் நமது மக்கள் மேலும் வறுமையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது. அரசியல் வெளியில் இதற்கான மாற்றுக்களோடு அமைப்புகள் போராட வேண்டும்.


– கலைமதி
செய்தி ஆதாரம் : எகனாமிக்ஸ் டைம்ஸ்.

  1. சுயசார்புடன் சுதந்திரமாக உழைத்து வந்து, ஏதோ கால்வயிற்று கட்சிக்காக வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் சமூகத்தை முடக்கி,வருமுன் காப்பாற்ற துப்பற்ற உலக சுகாதார நிறுவனம் (who),உபரிமதிப்பையே மூலதனமாக வைத்து வளர்ந்துள்ள உலக வங்கி,அதன் நேரடி முகவராக உள்ள உலக வர்த்தக மையம் (WTO), இவர்கள் இணைந்து நடத்தும் கபடநாடக அறிவிப்புகள், மேலும் அடிமைசாசன சூதாட்டத்திர்க்கு உதிரி மக்களை தயார்படுத்தி க்கொள்ளும் நோக்கம் என அறிதல் வேண்டும்.’ஆடு நினைத்தே என ஓநாய் அழுத்தாமல்…’நண்டை சுட்டு நரியை காவல் வைத்த கதைப்போல், மறுக்காலனியாதிக்க ஏகாதிபத்திய நடவடிக்கை களை ஏற்று மக்களின் மீது திணிக்கப்படும் மூலைசலவை மனோவசியமேயான கருத்துமுதல்வாத திணிப்பு…!!!

  2. திருத்தம்;கால்வயிற்று கஞ்சிக்காக/ஆடு நனைந்ததே என்று ஓநாய் அழுததாம் என முறையே தட்டச்சு செய்து பதிவிட்டதில், தங்களின் மட்டறுத்தலுக்கு காண்பிக்கும் பிரதியில் பல்வேறு எழுத்து பிழைகள் தோன்றுகின்றன,இவை சில நேரங்களில் சொல்ல வந்த பதிவுகள் தடைப்பட்டு கருத்துப் பிழையை உருவாக்குகிறது.,ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து எழுத்துப் பிழைகள் கருத்து வேறுபாடுகள் ஆகா வண்ணமாக திருத்தி கொள்ளவும்…நன்றி…செவ்வணக்கத்துடன் வாழ்த்துக்கள்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க