நாளொன்றுக்கு 5000 என்று கொரோனா தொற்று நோய் தமிழகம் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு தெருவிலும் கொரோனாவைக் காணாத அண்டை வீட்டாரைக் பார்ப்பது அரிதாகவே உள்ளது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் அடுத்த வேளை உணவுக்காக சாலைகளில் வேலை தேடி இலக்கில்லாமல் அலைகிறார்கள். ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே நிரந்திரமில்லை. சிறு கடை வியாபாரிகளும் கொரோனாவுக்கு மத்தியில் – ஊரடங்கு தளர்வுக்கு மத்தியில் சென்னை நகரத்தில் மக்களோடு மக்களாக பயணித்தபோது கண்ட தெருவோரத் தொழிலாளார்களின் நிலைமைகள் இது.
***
சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் இருக்கும் மாண்டியத் சாலை. உயர்தர வகுப்பினர் புழங்கும் பகுதி. நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு நுகர்பொருட்கள் விற்கும் வணிக வளாகங்கள். மதிப்பு மிகுந்த கார்களின் அணிவரிசை என்று இயல்பு நிலையில் இருந்தது அந்தப் பகுதி. அந்தச் சாலையின் ஓரத்தில் குணிந்த தலை நிமிராமல் பழைய செருப்புகளுக்கு மத்தியில் துவண்டு போய் சாலையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் செருப்புத் தைக்கும் தொழிலாளி.
எங்கள் பாதத்திலிருந்த செருப்பைப் பார்த்துக் கொண்டே ஏதாவது ரிப்பேரா சார்? என்றார்.
அவர் அருகில் அமர்ந்து ஏன் முகத்தில் மாஸ்க் போடாமல் இருக்கிறீர்கள். ஊரெல்லாம் நோயாக இருக்கிறதே என்றோம்.
அவர் சிரித்துக் கொண்டே, அதைப் போட்டுகிட்டா ஃப்ரியா வேலை செய்ய முடியல சார். மூச்சு முட்டுது, கசகசன்னு எரியுது என்று சொல்லிக் கொண்டே தனது டூல் பாக்ஸ் மூலையிருந்த அழுக்கடைந்த முகக்கவசத்தை எடுத்துப் போட்டுக்கொண்டே, சார் நான் பக்கத்துல இருக்குற சிந்தாதிரிப்பேட்டை ஆத்தங்கரை கூவத்துலதான் பொறந்தேன்.
எங்க அப்பா இதே இடத்துலதான் 30 வருசமா செருப்பு தச்சாரு. அவரு கொடுத்துட்டுப் போன சொத்துதான் இது. அதே பொருள வச்சுதான் பொழப்ப ஓட்டுறேன். இப்போ கொரோனா வந்து என் வயித்துல மண்ணள்ளி போட்டுருச்சு சார்.
இங்கே கார்ல வர்றவங்கல்லாம் பை நிறைய ஷூ எடுத்து வந்து ரிப்பேர் பண்ணுவாங்க. ஸ்போர்ட்ஸ் ஷூ, வாக்கிங் ஷூ, ஜாக்கிங் ஷூ, ஆபீஸ் ஷூ, சில்றன்ஸ் ஷூ… இன்னும் என்னென்னமோ சொல்வாங்க. வீட்டுல இருக்குற தாத்தா ஷூ, இது. அவர் மூட்டு வலிக்கு போடுறது, கால் வலிக்குப் போடுறது பத்துறமா பாத்து தை என்பாங்க.
அதுல சின்ன சின்ன ரிப்பேர்தான் செய்வேன். ஐம்பது நூறுன்னு கொடுப்பாங்க, நல்ல வேலை கெடச்சா ஒரு நாளைக்கு 1000 ரூபா கூட சம்பாதிப்பேன். இந்த கொரோனாவுல எல்லாம் அழிஞ்சு போச்சு. நாலு மாசமா வருமானம் இல்ல. யாரும் ரோட்டுல நடக்குறதே இல்ல. கடைசியில பசியில நாங்கதான் இப்ப தேஞ்சி போறோம். ஒரு நாள் போறது ஒரு யுகமா இருக்குது. இப்ப இருநூறு முன்னூறுகூட சம்பாதிக்க முடியல.
வீட்டு பக்கத்துல இருக்குற உப்பு மிளகா சாமான் கடையில சிறுகச் சிறுக பொருள் வாங்குனதுல 7000 ரூபா வரை கடனாயிடுச்சு. இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக்கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான். என் பொண்டாட்டி அந்தக் கடைக்குப் போறதுக்குக்கூட பயப்புடுது. அதனால விடியகால எழுந்து சொம்பு தூக்கி போயி டீ வாங்கி வர்ற வேலைய செய்யிறேன். அதுக்கே குறைஞ்சது 50 ரூபா வேணும். பேரப்பசங்களுக்கு பிஸ்கெட், பண்ணு, பொறைன்னு ஏதாவது வாங்கணும். கண்ணு முழுச்சாங்கன்னா எங்கே தாத்தான்னு கேப்பாங்க. இல்லையேன்னு போனா மனசுக்கு கஷ்டமாயிடும். பேரன் அழுவுறத பாத்தா எம் பொண்டாட்டி திட்டி தீத்திடுவா. நான் யாரைப் பாக்குறது, எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல, மனசு வெறுத்துப் போகுது.
இங்கே வந்து உக்காந்தா, சாயாந்திரம் வரைக்கும் ஒரு 200 ரூபா கூட தேற மாட்டேங்குது. இதுலவேற வேலை முடிஞ்சு 40 கி.மீ தாண்டி கண்ணகி நகர் பக்கத்துல இருக்குற பெரும்பாக்கத்துக்குப் போகணும். அங்கதான் எங்கள கெவர்ன்மெண்ட் தூக்கிட்டுப் போயி போட்டுருச்சு. இங்கே கூவம் ஆத்தங் கரையில 40 வருசமா இருந்தோம். கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியா இருந்தோம். இப்போ மூனு பஸ் ஏறி இறங்கி தொழில் செய்யுறோம். இப்போ பஸ்ஸும் இல்ல, வேலையும் இல்ல. எப்படி சாப்பிடுறது? நீங்களே சொல்லுங்க சார் என்றார்.
***
பக்கத்துல செருப்பு தைக்கிறவருதான் என் அப்பா. இங்கேயே பஞ்சர் கடை வச்சி பொழைக்கிறேன். எட்டாவது வரை படிச்சேன், அதுக்குமேல பள்ளிக்கூடம் போறத விட்டுட்டேன். படிப்பு வந்தாதானே சார் பள்ளிக்கூடம் போக முடியும். பள்ளிக்கு போகலன்னு டெய்லி எங்கம்மா என்ன அடிச்சிட்டு அதுவும் அழுவ ஆரம்பிக்கும்.
நான் ஸ்கூல் போகாம இருக்குறத பார்த்து, பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்புல வேலைக்கு விட்டுருச்சு. அங்கே அஞ்சு வருசம் வேலை கத்துகிட்டேன். இங்கே வந்து நாலு வருசம் ஆகுது. அதுல சம்பாதிச்சுதான் இந்த டூவிலர வாங்கினேன். இந்த வண்டியிலதான் டெய்லி எங்கப்பாவை வேலைக்கு கூட்டிட்டு வர்றேன். பிரேக் ஷூ மாத்துறது, செயின் டைட் பண்றது, ஸ்பார்க் பிளக் கிளீன் பண்றதுன்னு சின்னச் சின்ன வேலை வரும். இப்ப, அதுவும் குறைஞ்சு போச்சு.
வந்து போற பெட்ரோல் செலவே 150 ரூபா ஆகுது. டீ, டிபன், பான்பராக்குன்னு பாத்து பாத்து செலவு பண்ணுனாக் கூட ரெண்டு பேருக்கும் சேர்த்து 200 ரூபா ஆகும். இந்த செலவுக்குக்கூட சம்பாதிக்க வழியில்லாம இருக்கோம். வெறுமனே உக்கார்ந்திருந்தா வீட்டுல சண்டைதான் வருது. அதுக்கு பயந்துதான் இங்கே ஓடிவந்துடுறோம்.
சாயாந்திரம் வெறுங்கையோட வீட்டுக்குப் போனோமுன்னா கஷ்டமாயிடும். மறுநாளு எப்படிப் போகப்போகுதோன்னு கவலையாயிடும். அதுலேயே தூக்கம் வராது… என்று கொரோனாவினால் சிதைந்த வாழ்க்கையை ரணத்தோடு விவரித்தார். 22 வயதுக்கு உண்டான துடிப்பு துளியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சும் உடல் மொழியும் விபத்தில் நொறுங்கிய வாகனம் போல் உருக்குலந்து காணப்பட்டது.
அவரைப் பார்த்து இங்கே உங்க வயசு பசங்க கேர்ள்ஸ் பிரண்டுகிட்டே பேசுறத பார்த்திருப்பீங்க. அப்ப உங்களுக்கு என்ன தோணும்… .
நிமிர்ந்து கூர்ந்து பார்த்தார். நானும் லவ் ‘பண்றேன் சார். அந்தப் பொண்ணு வீட்டுல, நான் செருப்பு தைக்கிறவரு பையன்னு அசிங்கமா பேசுறாங்க. அந்தப் பொண்ணுக்காக நான் பொறுத்துகிறேன் சார். ஒரு பங்க் கடை இந்த கெவர்ண்மென்ட் வச்சிகொடுத்தா அத வச்சி பெரிய ஆளா ஆயிடுவேன். கடை ஓனருன்னு அவங்க கிட்டே போயி நிப்பேன் சார், என்று தளர்ந்த குரலை மேலும் தாழ்த்திக் கொண்டே, பங்க் கடை போடுவதற்காக பலமுறை கவுன்சிலரிடம் கொடுத்த மனுக்களின் பிரதிகளை நம்மிடம் எடுத்துக் காண்பித்தார்.
மக்களின் வாழ்நிலையே அவர்களின் சிந்தனைகளை தீர்மானிக்கிறது என்ற மார்க்ஸ் பெருமானின் வாக்கை மெய்ப்பிக்க வந்த பதிவுகள்… இவர்களின் உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் பக்குவமும்… நானிருக்கும் கையறு நிலையை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும் போலுள்ளது ஆனால் மானமும் ஞானமும் எதையும் சந்திக்க துணையிருந்து வருகிறது…