பெரியாரும் அம்பேத்கரும் இந்து மதத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து ஒரே நேர்கோட்டில் பயணித்து களமாடியவர்கள். இந்து மதம் ஒழியாமல் சாதி ஒழியாது என்று பிரகடனம் செய்த புரட்சியாளர்கள் என்பது வரலாறு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை – வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல். (நூலின் அறிமுகத்திலிருந்து)

பெருங்குடி மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்படும் நீங்கள் இன்று சமூகத்தில் கடை ஜாதி மக்களாக, கீழ்மைப் படுத்தப்பட்ட மக்களாக, உடலுழைப்பு செய்தே வாழவேண்டிய பாட்டாளி மக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். இரண்டாவது, நீங்கள் அத்துணைபேரும் தொழிலாளர்கள். இவை இரண்டைப் பற்றியும் (அதாவது கீழ்ஜாதி – பாட்டாளி மக்கள் என்பது பற்றி) பேசுதல் இந்தச் சமயத்தில் மிகப் பொருத்தமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்நாட்டில் எத்தனையோ அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தக்கழகங்கள் இருந்தாலும் எல்லா ஸ்தாபனங்களும், உங்களுக்கு உள்ள இழிவு, உழைப்பு பற்றிக் கவலைப்படுவதில்லை… இவை மாற்றமடைய ஏதாவது மார்க்கமுண்டா? அல்லது இப்படியே தான் நீங்கள் வாழ்ந்து மடிய வேண்டுமா? இதை நன்றாக நீங்கள் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்தால் இவ்விழிவு நீங்கும்? இவ்விழிவு உங்களுக்கு ஏற்பட்டது எதனால்? படிப்பு இல்லாததாலா? அல்லது பணம் இல்லாததாலா? அல்லது அறிவோ, உழைப்போ, ஒழுக்கமோ இல்லாததாலா? எதனால் நீங்கள் இழிமக்களாக்கப்பட்டீர்கள்? உங்களில் பொறுப்புள்ள பெரிய தலைவர்கள் இல்லாததாலா? அல்லது யோக்கியமான மக்கள் இல்லாததாலா? அல்லது உங்களுக்கு என்று ஒரு மகாத்மா, கோவில், குளம், சாமி இல்லாததாலா? இல்லை, இல்லை, முக்காலும் இல்லை. ஏன்? படிப்பு வாசனையற்ற எத்தனையோ பிற ஜாதி மக்கள் உயர் ஜாதியினராக இன்னும் இருக்கிறார்கள் அல்லவா? பணமில்லாத எத்தனையோ அன்னக்காவடிகள், பிச்சையால் பிழைப்பவர்கள் இன்றும் உயர் ஜாதியினராக இருக்கிறார்களே, எத்தனையோ அயோக்கியர்களும், பொறுப்பற்ற சோம்பேறிகளும் ஒண்ணாம் நம்பர் பித்தலாட்டக்காரர்களும் கேடிகளும், மடையர்களும் இன்றும் பெரிய ஜாதியாய் இருக்கவில்லையா?

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

… ஆகவே, இந்த இழிவின் மூலகாரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்து அவ்விழிவு உங்கள் சந்ததிக்கும் என்றென்றுமே திரும்பி வரமுடியாதபடி பரிகாரம் தேடுவதுதான் உண்மைச் சீர்திருத்தவாதியின் கடமை. இதைவிட்டு மந்திரியாகி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ , கவர்னர், சட்டசபைத் தலைவர் ஆகிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ நினைப்பது அசல் பைத்தியகாரத்தனம். மந்திரியாயுள்ள போதும் அவன் இழிஜாதிதான். அவ்வுத்தியோகம் உள்ளவரை அவ்விழிவு கொஞ்சம் மறைக்கப்பட்டு இருக்கலாமே தவிர, அவ்விழிவு அடியோடு நீங்கிவிடாது.

ஒருவனுக்கு மலேரியா காய்ச்சல் வந்திருந்தால் அவனுக்கு கொய்னா மாத்திரை கொடுத்துவிட்டால் மட்டும் அவ்வியாதி நீங்கிவிடுமா? அந்த சுரம் எதனால் வந்தது? என்று சிந்திக்கவேண்டும். கொசுவினால் வந்ததென்றால் அக்கொசுவைப் போக்க மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குக் கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? படுத்துக் கொள்ளும் போதுதான் கொசுவலை போட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் கொசு கடிப்பதாயிருந்தால் அதற்கென்ன செய்வது? கொசுவுக்குப் பயந்து நாள் முழுவதுமே கொசுவலைக்குள் புகுந்து கொண்டிருப்பதா? அல்லது அக்கொசுக் களை விசிறி, விளக்குமாறு கொண்டு விரட்டுவதா? அப்படித்தான் எத்தனை காலம் அவற்றை விரட்டிக் கொண்டிருக்கமுடியும்? ஆகவே, அந்தக் கொசுக்கள் எங்கு, எதனால் உற்பத்தியாகின்றன என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

… ஆகவே, நம் சமூகத்தின் வியாதிக்குக் காரணமான இவ்விழி ஜாதிக் கொசுக்கள் எந்த கசுமால ஜலதாரையில் உண்டாயின என்று நாம் ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இந்து மதம் என்ற கசுமால நீர் வருணாஸ்ரமம் என்ற சாக்கடையில் சென்று கொண்டிருப்பதால் இவ்விழி ஜாதி என்ற கொசுக்கள் தோன்றி நமக்குத் தொல்லை என்னும் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இந்து மத வருணாஸ்ரம தருமத்தை ஒப்புக் கொண்டதால்தான் நீங்கள் இன்று இழிஜாதிகளாய் இருக்கிறீர்கள்.

… நீங்கள் இழிமக்களாய் இருக்க, நீங்கள் இந்து மதத்தை ஒப்புக் கொண்டதுதான் காரணமே ஒழிய, வேறென்ன நீங்கள் செய்து விட்டீர்கள்? நாங்களென்ன பாபிகளா? பாடுபடாதவர்களா? அல்லது நோய் கொண்டவர்களா?

ஆகவே, உங்களுடைய இந்த இழிவு நீங்க வேண்டுமானால் நீங்கள் உங்களை இழி மக்களாக்கிய இந்த இந்து மதத்தை ஒன்று ஒழிக்கவேண்டும் அல்லது அதைவிட்டு நீங்கவேண்டும்.  (தந்தை பெரியார், விடுதலை – 10.12.1947. ) (நூலிலிருந்து பக். 9-13)

… சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்து மதம் மனித நல முன்னேற்றக் கோட்பாடுடையது என்று கூறுவதற்கு முடியாததாக உள்ளது. எனவேதான், பால்ஃபோரின் மொழியில் சொல்வதென்றால் இந்து மதம் ஊடுருவினால் சாதாரண மனித இனத்தின் உள்ளார்ந்த வாழ்வினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகாது. அதனால் ஏதாவது செய்ய முடியுமென்றால், அது அவர்களை முடக்கிவிடக் கூடியது மட்டுமே. சாதாரண மனித உள்ளங்களுக்கு ஊட்டமளிக்கக் கூடியதோ, சாதாரண மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதோ, சாதாரண மனிதர்களின் நலிவுகளுக்கு உதவக்கூடியதோ இந்துமதத்தில் எதுவும் இல்லை. பயனற்ற போராட்டத்திற்குப் பின் மரணமடையச் செய்யக்கூடிய பிறப்பைத் தரும் இயற்கையின் நினைக்க முடியாத சக்தியை நேருக்கு நேராகச் சந்திக்கும் இருளில் நிறுத்துகின்றது. கொடூரமான மதப் புறக்கணிப்பை விட எவ்வகையிலும் கொடுமை யில் குறைவில்லாத வகையில் கடவுளோடு மனிதனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்து மதத்தின் தத்துவம் இத்தகையதுதான். அது உயர்ந்த மனிதனின் சொர்க்கம். சாமானிய மனிதனின் மீளமுடியாத நரகம். – அம்பேத்கர். (நூலிலிருந்து பக்.16)

நூல் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
ஆசிரியர் : தந்தை பெரியார் – அம்பேத்கர்

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தொலைபேசி எண் : 94438 22256 | 94421 28792

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooksudumalai

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க